சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்


                   சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்


எழுத்திலிருந்து சினிமாவுக்குக் கதையை இடம் மாற்றுவது கடினவித்தகம். வசந்த் அப்படியான தேடல் தீராமல் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர். இந்திய அளவில் அந்தாலஜி எனப்படுகிற கதைத் தொகைத் திரைப்படங்கள் நெடுங்கதை வணிகத்துக்கு எதிரானவையாகவே பன்னெடுங்காலமாகப் பார்க்கப் பட்டுவருபவை. தமிழில் மௌனப் படக் காலத்திலிருந்து 1950 வரைக்குமான முதற்திரைக் காலத்தில் கணிசமான படங்கள் கதைத் தொகைப் படங்களாக முனையப்பட்டிருக்கின்றன. அந்த ஆர்வத்தை அப்படியே அவ்வண்ணமே வளர்த்தெடுத்து வந்திருந்தால் இன்றைக்குக் கதை என்பதன் சகல சாத்தியங்களுக்கும் சினிமாவில் இடமிருந்திருக்கும். எழுபதுகளில் புட்டண்ணா கனகலின் கதாசங்கமாவும் 90 ஆமாண்டில் வெளியான ஒரு வீடு இருவாசலும் இன்னமும் நினைத்துப் பார்க்கப்படுகிற அந்தாலஜி உதாரணங்கள்.

இந்தப் படம் பல விதங்களில் முக்கியமானது. அசோகமித்திரன் ஆதவன் ஜெயமோகன் மூவரின் சிறுகதைகள் இந்தத் தொகையுட் பூக்களாகியிருக்கின்றன.அசலான உறுத்தாத காட்சியனுபவத்தை இதன் கதைகள் நல்குகின்றன. உட்கதைகள் எல்லாமும் இயங்கித் தணிகிற மைய இழைதல் பொதுவானது. எடுத்துச் சொல்லாமல் உணர்த்திச் செல்கிற திரைப்படங்கள் அரிதானவை. இந்தப் படம் அப்படியானது என்பதும் முழுவதுமாகவே காட்சிமொழியினூடாக நகர்ந்து நிறைவதும் கூறத் தக்கது. சினிமாவைக் கற்றுக் கொள்பவர்களுக்குக் கதையும் காட்சியுமாய்க் கற்றுத் தருவதற்கான பாடப்பொருளாகவே இந்தப் படம் பலவிதங்களில் மிளிர்கின்றது.

Vasanth S Sai movies, filmography, biography and songs - Cinestaan.comகதைகளைப் படமாக்கும் போது எழுத்தாளர்கள் ஏற்கனவே செய்து தந்த சத்தியத்தை மறு-நிகழ்வு செய்வது போல் படமாக்குவது அதன் காண் அனுபவத்தின் மீது வெளித்தெரியாத கனமாக மாறிவிடுகிற அபாயத்தைக் கொண்டது. வஸந்த் இந்தப் படத்திற்கெனத் தேர்வெடுத்த மூன்று கதைகளிலும் கூடுதலாய்ச் செய்திருக்கிற நகாசு வேலைகளில் பலவும் ஏற்புக்குரியவை மட்டுமல்ல திரைத் தேவையின் பிரகாரம் முன்னெழுபவை.  இக்கதைகளின் வாசகானுபவத்தை மனத்திலேந்திக் கொண்டு காண விழையும் போது நிகழ் அனுபவத்தின் பரிமாண விரிதல்களாக அத்தகைய மாற்றங்கள் விளங்குவது ரசம். ஏற்கனவே தக்கையின் மீது நான்கு கண்கள் சமீபத்தில் நவரசா என்று எழுத்திலக்கியத்தைக் காட்சிப் படுத்தி வருவதன் தொடர் பூத்தலாக இந்தப் படத்தில் வஸந்த் தொட்டடைந்திருப்பது இன்னும் வலுவான நெடிய கலைப்பேழைகளைச் சாத்தியம் செய்வதற்கான எதிர்கால அனுகூலத்தின் மீதான நம்பகமாகத் தோற்றமளிக்கிறது.

இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்குத் தந்திருக்கும் பின்னணி இசை உலகத் தரமானது. எனக்கென்னவோ தொடர்பற்ற தொடர்பாக அவரது பல படங்களின் பின்னிசையின் பொக்கிஷமொத்தத்தைத் திறந்து தருகிற சாவி ஒன்றாகவே இந்தப் படத்தின் பிற்பகுதி இசைத்தல்களின் போது நெகிழ நேர்ந்தது.மரித்து மரித்து உயிர்க்கத் தலைப்படுகிற சன்னமான இழைதல்கள் நெடுநேரம் மனத்தினடியில் அதிர்ந்துகொண்டே இருக்கின்றன. ராஜா தான் ராஜா என்பதை இந்தப் படம் அழுத்தந்திருத்தமாய் மெய்ப்பிக்கிறது.

காளீஸ்வரி சீனிவாசன் பார்வதி லக்ஷ்மிப்ரியா மாரிமுத்து கருணாகரன் சுந்தர்ராமு என இந்தப் படம் இதில் நடித்த எல்லோர்க்குமே வாழ்காலப் பெருமிதமாகவே இந்தப் படம் விளங்கக் கூடும்.யாருமே நடிக்கவேயில்லை. ஒளிந்திருந்து படமாக்கிய நேர்த்தியோடு கலைப்பட சாத்தியம் மகிழச்செய்கிறது. கதைகளின் கூறல் காலத்தை ஆனமட்டிலும் நேர்த்தியாகப் படமாக்கியிருப்பது பெரிய விஷயம். இந்தப் படத்தில் அதிகம் பேசாத பாத்திரங்களும் எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் இடம்-பொருள்-பின்புலம்- என்கிற நேர்-மாறல்-நிகழ்தல் படத்திற்கான பெருமதிப்பாக எழுகின்றது. சரஸ்வதி பேசும் ஒரு சொல் அவளது கதையைப் பிளந்து விடுகிறது. தேவகி எழுதுகிற அவளது டைரி அவள் கதையை உடைக்கிறது. மூன்றாவது கதையில் சிவரஞ்சனி எப்போதோ தன் உயர்த்திய கரங்களில் சில கணங்கள் ஏந்திய கோப்பை அவளுடைய காணாத் தேடலாக மாறி அலக்கழிக்கிறது.

பெண் மனத்திற்கான சாட்சிய-வாதத்தை கதைகளெங்கும் படர்த்துகிறார் வஸந்த். சரஸ்வதி தேவகி சிவரஞ்சனி இவையெல்லாம் வெறும் பெயர்களல்ல. சுயமும் தவிப்பும் நிரம்பிய ஆழ்-மன மையங்களை ஒடுக்கும் குடும்பம் என்கிற காலகால அமைப்பின் அத்தனை நிர்ப்பந்தங்களையும் யதார்த்தத்தின் கண்களால் காணச்செய்கின்றன இந்தக் கதைகள் இந்தக் கதைகளின் மனிதர்கள் அசலானவர்கள். துல்லியமானவர்கள் அவர்களது உலகம் நுட்பங்களாலானது. பட்டாம்பூச்சியின் கண்களால் தோட்டத்தைப் பார்ப்பது போல் மானுட மனத்தின் சின்னச்சின்னத் தருணங்களை வீழ்தலும் அடைதலுமாய்த் ததும்புகிற வாழ்வெனும் கதையின் விருப்பமற்ற வீழ்தல்களை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்படுகிற திசைமாற்றங்களை இன்னபிறவற்றை எல்லாமும் கண்முன் தோன்றத் தந்த வகையில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் முக்கியமான திரைப்படமாகிறது.

தேவையான படம்