சுஜாதாவும் சினிமாவும்
ஜனனி கிருஷ்ணா
தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார். சிறுகதை தொடர்கதை கட்டுரை நாடகம் எனப் பல வடிவங்களினூடாகத் தன் படைப்போட்டத்தை நிகழ்த்தியவர். பல கலாவடிவங்களின் மீது அவரது பற்று கவனிக்கத் தக்கது. தொடர்ந்து தன்னை வாசிப்போருடன் அவர் நிகழ்த்திய துண்டிக்கப்படாத மானசீக உரையாடல் அவர் காலமாகும் வரை தொடர்ந்தது. அவரைப் பின் பற்றிப் பல வாசல்-சாளர வெளிச்சங்களைத் திறந்தடைந்தவர் பலர் இருக்கக் கூடும்.
சுஜாதா எழுதிய படைப்புக்கள் ஒரு தொட்டியில் சேர்ந்து வாழ்ந்திடும் சமாதான மீன்கள் அல்ல. அவரை வணிக எழுத்தாளர் என்று ஒரு முகாந்திரத்தினுள் அடைப்பது ஆகாது. அவரது நாடகங்கள் அனேகமாகப் பல முக்கியமானவை. சிறுகதை என்பதன் வடிவம் உள்ளடக்கம் ஏன் அவற்றின் தலைப்பில் துவங்கிப் பலவற்றையும் சுஜாதா பரீட்சித்துப் பார்த்தார். மொழியை அவர் கையாண்ட விதம் முக்கியத்துவம் வாய்ந்தது. சுஜாதாவின் தமிழ் என்று தனியே சொல்கிறாற் போல் ஒருவித உலர்ந்த நேர் செறிவான மொழியாடல் அவருடையது.மாபெரும் செதுக்குதலுக்கு அப்பாலான பிரயோகமாகவே மொழியை அணுகினார். துப்பறியும் கதைகள் அறிவியல் புனை கதைகள் சரித்திரக் கதைகள் கூட எழுதினார். எல்லாவற்றிலும் அவரது முதல் தேர்வென்றே மொழியினூடான அவரது சிக்கன-கச்சித-பிடிவாதம் தொடர்ந்தது. அவர் எழுதியளித்த நாவல்கள் சுவாரசியமானவை. கணேஷ் வசந்த் என்று அவர் படைத்துப் பார்த்த தொடர்/நாயக பிம்பங்கள் எழுபது எண்பதுகளின் தென் இந்திய நவீன-யுவ-மாந்தர்களின் இருமுனை குணாம்ச விரிதல்களாக அமையப் பெற்றன. ஒரு வித குரு- சிஷ்யக் கூட்டாளிகளாக கணேஷூம் வஸந்தும் சேர்ந்து துப்பறிந்தார்கள். நிரந்தரக் கதாநாயகி என்று யாரும் இல்லாமல் அந்தந்தக் கதைகளில் தென்படுகிற யுவதிகளில் சிலரைப் புன்னகையுடன் சந்தித்துக் கடந்தார்கள். வில்லன்களை வென்றார்கள். சென்ற நூற்றாண்டின் தமிழ்ப் பொது மனதின் பெரும்ப்ரிய ஆவலாதிகளில் ஒன்று புதிரைத் திறந்து விடையறிதல். அவற்றுக்கான தொடர்க் கிறக்கத் தீனியாகவே துப்பறியும் கதைகளின் பொது அலங்காரம் அமைந்தது. அதைத் தாண்டி சுஜாதா தன் துப்பறியும் கதைகளினூடாகப் படர்க்கையில் பல்வேறு மன வினோதங்களை மனிதப் பிறழ்ச்சிகளை நோய்மையை எழுத முனைந்தவர்.செல்வந்தத்தின் தீதும் நன்றும் காரணமாக விளையவிருந்த கெடுதல்களைக் களையத் துடிக்கும் நல்-நாயக-பிம்பங்களைக் கட்டமைப்பதன் மூலம் “எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது” எனும் ஆழ்மனத் தோன்றுதலைப் பிறப்பிக்க முனையும் கேளிக்கை எழுத்துக்களாகவே சுஜாதாவின் துப்பறியும் கதைகள் அமைந்தன.
சுஜாதாவின் எழுத்துக்களை எடைபோடுகையில் தோன்றுகிற துலாபாரம் இவை மாத்திரம் அல்ல.
சுஜாதாவின் பல கதா மாந்தர்கள் வித்யாசமானவர்களாக இருந்தார்கள். பலவித குணவிநோதங்களை சுஜாதா தன் பாத்திரங்களின் மூலமாய்க் கதைப்படுத்திப் பார்த்தவர். ‘நல்ல கெட்ட’ எனும் பொதுப் பிரிகளைத் தாண்டி நம்பச் சிரமமான உலகத்தை அதன் இருளும் நிழலுமாய் வெப்பமும் நெருப்புமாய்ப் படைக்க முயன்று பெரிதும் வென்றார் சுஜாதா. அவர் தோற்றுவித்த பல கதாபாத்திரங்கள் தன்னளவில் நேர்மையான நேர் மற்றும் எதிர் மாந்தர்களாய்ப் பலம் மிகுந்து வலம் வந்தார்கள். ‘மூளை மனம் ஆன்மா’ என்ற மூன்று சதுக்கங்களிலும் அடைபட்டும் பிறழ்ந்தும் கதைகளாய்ப் பெருகினார்கள். நுட்பமான துணைக்-கதைகளும் அவற்றில் தனித்த உப-மாந்தர்களும் வாசகனுக்குள் மெலிதான புன்னகையாகவோ சிறு ஆச்சர்யமாகவோ உறைந்தார்கள். பிரதி பிம்ப விளையாடல்களாகவே சுஜாதாவின் பல கதாபாத்திரங்கள் உயிர்த்தபடி வாசகனை நிரப்பினர்.
பரந்த வாசிப்பைக் கைவிடாத மனதை அவருடைய ‘சுய-சகா’ என்றே சொல்ல முடியும்.எழுதுவதன் பின்னார்ந்த கலை மற்றும் திறன் ஆகிய இரண்டையும் ஒருங்கே கையாண்ட வெகுசிலர்களில் சுஜாதாவும் ஒருவர். தேவைக்கு எழுதிய படியே தன்னை அகழ்ந்தும் அவரால் எழுத முடிந்தது. எழுத்தின் நுட்பங்கள் கைவரப் பெற்றவரான சுஜாதாவிடம் அதன் ஆழத்தை அனுமானித்து நீர்ப்பரப்புக்குள் மூழ்கித் திரும்புகிற வல்லமையும் இருந்தது. எழுதுவதைத் தன் தொடர் போதாமையாகவே கருதுவதன் மூலமாய் நிரந்தரமாய்த் திறந்திருக்கும் சவாலாகவே கடைசி வரை தன் எழுத்தை அணுகினார். அவரது ‘நிறமற்ற வானவில்’ , ‘பூக்குட்டி’ , ‘பெண் இயந்திரம்’ , ‘காகிதச் சங்கிலிகள்’ ஆகியவற்றைத் தவிர்த்து விட்டுச் சென்ற நூற்றாண்டின் எழுத்து உன்னதங்களைப் பேசவே முடியாது. இதற்கு அடுத்த இழையில் ‘நிலாநிழல்’ கிரிக்கெட் விளையாட்டையும் , ‘கனவுத் தொழிற்சாலை’ சினிமாவையும் , ‘பதவிக்காக’ அரசியல் காய் நகர்த்துதல்களையும் சென்ற நூற்றாண்டின் பதின்ம மனங்களுக்குப் பயிற்றுவிக்க முயன்ற பாடத் திட்டங்களைப் போலவே செயலாற்றின. அறிவியலைக் கதைவழி வழங்கியதன் மூலம் சுஜாதா ஏற்படுத்தித் தந்த நவீனம் மீதான ‘ஒவ்வாமைக் குறைப்பு’ முக்கியமானது. வருங்காலம் குறித்த அவரது எழுத்துகள் சுவாரசியமானவை. எதிர்காலத்தை அதன் வெகுதூரத்தை சமீபித்துப் பார்க்கும் கதைகளை விடாமல் முன்வைத்த விதத்திலும் சுஜாதா பல இல்லாமைகளை நிரப்பித் தந்த ஓருரு.
தோல்வியை துரோகத்தை ஆழ்மன விகாரங்களை நோய்மையை மரணத்தை என சுஜாதா ஒரு எழுத்தாளராகக் கையாண்ட பல மதிப்பீடுகள் துல்லியமானவை. மானுட வாழ்வின் துக்கத்தை மிகச் சொற்பமாகவே தன் கதைகளினூடாகக் காட்சிப் படுத்தினார். இதனை சுஜாதா எழுத்துக்களின் மீதான குற்றச்சாட்டாகவோ அல்லது அவர் தன் எழுத்து மீது செலுத்த முயன்ற தன்ப்ரிய- தவிர்த்தல் என்றோ புரிந்து கொள்ளலாம். எப்படியானாலும் ஒரு எழுத்தாளன் தன் எழுத்துகளினூடாக ஏற்படுத்துகிற சித்திரமுழுமை என்பது அவன் அதைக் கொணர்ந்து நிறுத்துகிற புள்ளியோடு நிறைந்து விடுகிறது. அவனுக்கப்பால் வேறோரு கரம் கொண்டு அதனைத் தொடர முயலுவது அனர்த்தம். சுஜாதா சென்ற நூற்றாண்டில் தோன்றிய தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை என்பதில் இரண்டாவது கருத்துக்கு எள் நிழலளவும் இடமே இல்லை.
சினிமாவில் சுஜாதா என்னவாக இருந்தார் என்னவெல்லாம் செய்தார் தமிழ்த் திரை உலகத்திற்கு வரவேற்கப் பட்ட நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களில் மேலும் ஒருவர் தான் சுஜாதா என்று பொதுவாகக் கடந்து விடலாமா..? சுஜாதாவால் சினிமாவில் என்ன நிகழ்ந்தது அல்லது அவரால் செய்யவியலாமற் போனதேதும் உண்டா என்பதையெல்லம் பேசலாம் எனத் தோன்றுகிறது.
சினிமா எப்போதுமே வெற்றிகரமான எழுத்தாளர்களை மிகவும் மதித்து வரவேற்கும்.சுஜாதா புகழின் சிகரத்தில் இருந்து சினிமாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப் பட்டார். பின் நாட்களில் தனது சினிமா உலக அனுபவங்களைப் பற்றி அவரே பதிவு செய்திருக்கிறார்.பட்டாபிராமன் இயக்கத்தில் 1977 ஆமாண்டு சுஜாதா எழுதிய காயத்ரி என்ற கதை படமாக்கப் பட்டது. ராஜரத்தினம் என்ற கொடியவன் பாத்திரத்தை அதில் ஏற்றவர் ரஜினி காந்த். சுஜாதாவின் தொடர் துப்பறியும் நாயகன் கணேஷாகத் தோன்றினார் ஜெய்சங்கர். படம் வெற்றி பெற்றாலும் வாசகர்களின் ஹேண்ட்ஸம் எதிர்பார்ப்புக்களை அறியப்பட்ட நடிகரான ஜெய்சங்கர் முழுவதுமாகப் பூர்த்தி செய்யாமற் போனதாகவே காயத்ரி குறித்த எதிர்வினைகள் உணர்த்தின.அடுத்த வருடமே அதே பட்டாபிராமனின் இயக்கத்தில் சுஜாதாவின் அனிதா-இளம் மனைவி என்ற தொடர்கதை ‘இது எப்படி இருக்கு’ என்ற பெயரில் படமானது. அதிலும் ஜெய் தான் கணேஷ்.
பஞ்சு அருணாச்சலம் சுஜாதாவின் எழுத்துகள் மீது மாறாப்ரியம் கொண்டிருந்தார். வெவ்வேறு கதைகளை சினிமாவாக்கும் ஆவல் அவரிடம் இருந்தது. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் சுஜாதா எழுதிப் பெரிதும் புகழப் பட்ட ப்ரியா என்ற கதை திரைக்கு வந்தது. முன் படத்தில் வில்லனாக இருந்த ரஜினி இந்தப் படத்தில் கணேஷ் பாத்திரத்தை ஏற்றார். சுஜாதா எழுத்தின் தோற்றுவித்த கணேஷ் என்ற பிம்பத்தை முழுவதுமாக நிராகரித்து சினிமாவுக்கான வேறொரு கணேஷ் ஆகவே அவரது பாத்திரமேற்றல் அமைக்கப் பட்டிருந்தது. படம் தொடங்குகையில் கடத்தப் பட்ட சிறுவன் ஒருவனை தனி ஆளாகச் சென்று வில்லன்களை உதைத்து காப்பாற்றி மீட்டு வருபவராக கணேஷின் நுழைவுக் காட்சி பில்ட் அப் செய்யப் பட்டிருந்தது. ரஜினி அப்போது தீயாய்ப் பரவும் புகழோடு இருந்த புதிய நட்சத்திரம் என்பதால் கணேஷ் பாத்திரத்தின் எழுத்துப் பின்னணி குறித்தெல்லாம் பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. கதையின் நாயகி நடிகை ப்ரியா பாத்திரம் ஸ்ரீதேவி ஏற்றார். அவருடைய காதலனாக கன்னட நடிகர் அம்பரீஷ் தோன்றினார். எல்லாம் சரிதான் திடீர் கன்னையா என்றொரு நடிகர் அந்தப் படத்தில் வஸந்த் ஆகத் தோன்றினார். சுஜாதாவின் தீவிர வாசகர்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத துக்கமாகவே அந்தத் தோன்றல் மாறியது. கணேஷூக்கு ஒரு மலாய் காதலி அவரோடு டூயட் பாடல்கள் சீன வில்லன்களோடு சண்டைக் காட்சிகள் என எழுத்திலிருந்து நெடுந்தூரம் அழைத்துச் சென்றது திரைப்படம். இருந்தாலும் ப்ரியா ஒரு திரைப்படமாக மும்மொழிகளிலும் பெற்ற பெரும் வெற்றி அதன் கதை மீதான பற்றுதலைக் குறித்தெல்லாம் பேசவிடவில்லை. பிற்காலத்தில் தொலைக் காட்சிக்காக சுஜாதாவின் நாடகங்கள் தயாரிக்கப் பட்ட போது நடிகர் ராஜீவ் கணெஷ் ஆகவும் ஒய்ஜி மகேந்திரா வஸந்த் ஆகவும் தோன்றியதாக ஞாபகம்.சுஹாஸினி தொலைக்காட்சிக்காக கணெஷ்Xவசந்த் என்று தொடர் ஒன்றை உருவாக்கும் போது நடிகர் சுரேஷ் மற்றும் விஜய் ஆதிராஜ் ஆகியோர் அந்தப் பாத்திரங்களை ஏற்றனர்.நடிகர் விவேக் கூட எதோவொரு தொலைக்காட்சித் தொடரில் வஸந்த் ஆக வந்தார் என்று ஞாபகம்.
பாலச்சந்தருடன் சுஜாதா இணைந்த படம் நினைத்தாலே இனிக்கும் கமல்ஹாசன் ஜெயப்ரதா ரஜினிகாந்த் ஆகியோர் பிரதானமாய்த் தோன்ற இந்தக் கதையும் சிங்கப்பூர் மலேயா நாடுகளில் நடைபெறுவதாக அமைந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் வெகுவாய்ப் பிரபலம் ஆகின.இந்தப் படத்தில் “எழுதியவர் சுஜாதா” என்று பெயர் வந்தது.திரைக்கதை இயக்கம் கே.பாலச்சந்தர் என்று இடம்பெற்றபடியால் கதை வசனம் ஆகியவற்றை சுஜாதா எழுதினார் என்று ஊகித்துக் கொள்ள முடியும்.இந்தப் படமும் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது.
நாட்டுப் பாடல்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட ஊருக்கு வந்து சேரும் கதாநாயகன் என்று கதையில் தனக்கிருந்த சுதந்திரத்தை திரைப்படத்தில் அப்படியே பெயர்த்து எழுதினார் சுஜாதா சுஜாதா தொடராக எழுதிய மற்றொரு கதை கரையெல்லாம் செண்பகப்பூ சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் சேர்க்கத் தக்க இந்தக் கதையை ஜி.என்.ரங்கராஜன் படமாக்கினார். பிரதாப் போத்தன் ஸ்ரீப்ரியா சுமலதா மனோரமா தங்கவேலு பாண்டு சுந்தர்ராஜ் என நடிக நடிகையர் தேர்வும் பெருமளவு கச்சிதமாகவே அமைந்தது. காதல் இசை தேடல் துரோகம் தவிப்பு மரணம் பேராசை எனப் பலவித நுட்பமான மனித வாழ்வின் மதிப்பீடுகளை இந்தக் கதை கையாண்டிருக்கும். இளையராஜாவின் இசை பெரும் பலமாக அமைந்தது ஐந்து பாடல்களில் ஒன்று கதையை சுஜாதா தொடங்கும்போது ஒரு நாட்டுப் பாடலை குறிப்பிட்டிருப்பார் அதே
காடெல்லாம் பிச்சி
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல
நல்ல மகன் போற பாதை
என்கிற பாடலை பல்லவி வரிகளாக கொண்டு தொடங்கப்பட்டது.
கரையெல்லாம் செண்பகப் பூ படமாக்கப் பட்டபோது திரைவடிவம் என்ற பேரில் செய்து கொண்ட சில சமரசங்களும் கூறத் தக்கவையே. படத்தில் கல்யாணராமனுக்கும் வெள்ளிக்கும் எந்த உறவும் இருப்பதில்லை. கதையில் வெள்ளி மீது ஈர்ப்போடும் ஈடுபாட்டுடனும் தெரிவான்.அதை அனேக முறைகள் அவளிடம் தெரிவிக்கவும் செய்வான் அவளோ அவனைக் கண்டுகொள்ள மாட்டாள்.கதையின் முடிவில் அவளுக்கும் கல்யாணராமன் மீது அனுசரணை முகிழும். உயிரைப் பணயம் வைத்து தன்னைக் காப்பாற்றியவன் என்ற விஸ்வாசத்தினூடான மனமாற்றம் அது. இதெதுவும் படத்தில் இல்லை. கதையில் இருந்தாற் போலவே மருதமுத்துவுக்கும் ஸ்னேகலதாவுக்கும் இடையிலான நெருக்கம் இடம்பெற்றாலும் கதையில் அவர்களிடையே உடல் ரீதியான இணைவு இடம்பெற்றிருக்கும் அது திரைப்படத்தில் கத்தரிக்கப் பட்டது. சிலபல உப கதா பாத்திரங்கள் கதை நெடுக இடம்பெற்ற முக்கியமான சில உரையாடல்கள் படத்தில் இல்லாமற் போனது. எழுதியதற்கும் எடுத்ததற்கும் இடையே எதாவது கூடிக் குறைவது தான் இயல்பு என்றாலும் கரையெல்லாம் செண்பகப்பூ எழுத்தாக வாசிக்கையில் கிடைத்த மனோபாவ ஓர்மையும் நிதானமான பூர்த்தியும் படமாய்க் கண்டபோது ஏற்படவில்லை.
சுமன் அம்பிகா ஆகியோரைக் கொண்டு பஞ்சு அருணாச்சலம் தொடங்க இருந்த படம் கைவிடப் பட்ட பிறகு சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள் கதையைப் படமாக்கும் உரிமையை இயக்குனர் சீவீ ராஜேந்திரன் வாங்கினார். ஏற்கனவே தமிழில் ஒரு ரவிச்சந்திரன் அறியப்பட்ட நடிகராக இருப்பதனால் தன் பெயரை ராகேஷ் என்று மாற்றிக் கொண்ட நாயகன் சுலக்ஷணா ஒய்ஜி மகேந்திரா வீ கோபால கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் காகிதச் சங்கிலிகள் கதை சங்கர் கணேஷ் இசையமைப்பில் பொய் முகங்கள் (1985) என்ற பேரில் படமானது.
பாடல் என்கிற வஸ்து படத்துக்கு நன்மையா தீமையா என்பது காலங்காலமாய்த் தொடர்கிற விவாதப் பொருள் தான். காகிதச் சங்கிலிகள் போன்று எழுதப்பட்டு எடுக்கப் பெறுகையில் நிச்சயமாய்ப் பாடல்களைக் குறித்த மிக நுட்பமான அவதானம் அவசியம். கதையின் நாயகனுக்கு சிறுநீரகம் பழுதாகி விடும். அதைத் தொடர்ந்து அவன் வாழ்வு என்னவெல்லாம் ஆகிறது உறவு குடும்பம் நட்பு போன்ற யதார்த்தத்தின் மதிப்பீடுகள் எங்கனம் கதைமாற்றிகளாக உருப்பெறுகின்றன என்பதையெல்லாம் கொண்டு அழகான முரண்மாலை ஒன்றை எழுதியிருந்தார் சுஜாதா. படமாக மாறும் போது அவர் எழுத்தில் வார்த்த பல வைரங்கள் ஒளிராக் கற்களாக முடக்கம் அடைந்தன. ஒரு உதாரணமாகச் சொல்லவேண்டுமானால்
“இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்”
என ஒரு பாடல் இடம் பெற்றது. சுஜாதா எழுதிய கதையை நாலு வரியில் சொல்ல முயன்றதன் விளைவு இது. சினிமாவின் அமைப்பு கதையை உட்கொண்டே பாடல்கள் வசனங்கள் என எல்லாமும் அமையும். இத்தனை தீர்க்கமாக கதையைச் சொன்னபடி நிகழ்ந்தேறுகின்ற பாடல் இந்தப் படத்துக்குத் தேவை இல்லை என்ற தைரியம் தான் இப்படியான படங்களை முற்றிலுமான கலைத்தன்மை கொண்ட படமாக உருவாக்க முடியும். வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமே மனமுதல் காரணியாக்கி எங்கேயும் எப்போதும் அதிலிருந்து சிறிதும் பிறழ்ந்திடாமல் பார்த்துக் கொள்கிற வியாபாரப் பதற்றம் சினிமாவுக்கு வழங்கப் பட்ட உத்தம சாபம். பொய் முகங்கள் படம் அப்படித் தான் அமைந்தது.
1986 ஆமாண்டு வெளியான ‘விக்ரம் படம்’ கமல்ஹாஸனின் சொந்தப் படம். தான் படமெடுப்பதற்காகவே சுஜாதாவை இந்தக் கதையை எழுதச் செய்தார். ஒரு புறம் படப்பிடிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கையிலேயே குமுதம் இதழில் அந்தக் கதை தொடராக வெளியானது. ‘மையம்’ , “விக்ரம்- கமல்ஹாஸனின் ஒரு கோடி ரூபாய்க் கனவு” என்ற தனி குறும் புத்தகத்தைப் பதிப்பித்தது. கமல்ஹாஸனுக்கு இருந்த தேசியப் பிரபலத்தை முன் முதலாக்கி டிம்பில் கபாடியா அம்ஜத் கான் லிஸி அம்பிகா சத்யராஜ் ஜனகராஜ் சபுஸிரில் சாருஹாசன் எனப் பல்வேறு நிலங்களின் முகங்களை உட்படுத்தித் தயாரானது விக்ரம் திரைப்படம்.
சொல்லாத கதை ஒன்றைச் சொல்லிப் பார்க்கும் கனவை எப்போதும் பகிரச் சம்மதிப்பவர் கமல்ஹாசன். அந்த வகையில் விக்ரம் கதை தன்னளவில் பல வித்யாசங்களைக் கொண்டிருந்தது மறுப்பதற்கில்லை. விக்ரம் ஒரு சிபி.ஐ அதிகாரி. மனைவியை இழந்தவன். தேசத்துக்குச் சொந்தமான ராக்கெட் ஒன்று களவு போய் தேசம் தாண்டுகிறது. சலாமியா என்கிற இல்லாநிலத்திற்குச் சென்று அதனை விக்ரம் மீட்டு வருவது தான் கதைச்சரடு. எண்பதுகளில் எடுக்கப் பட்ட சுவாரசியமான படங்களில் ஒன்று தான் விக்ரம் என்றாலும் படத்தின் இரண்டாம் பகுதி சலாமியா என்ற நாட்டில் நடப்பதாகக் காட்ட முனைந்தது முன் பகுதி அளவுக்கு ஒட்டாமற் போனது கூறவேண்டியதாகிறது. இன்னும் மெனக்கெட்டிருந்தால் உன்னதமான படமொன்றாக உறைந்திருக்க வேண்டியது.
சுஜாதா சின்னச்சின்ன அழகான காட்சிகளை எழுத முடிந்த படமாக விக்ரம் அமைந்தது. அம்பிகா கொல்லப் படுவதும் தொடர்ச்சியான மாபெரும் சண்டைக்காட்சியும் படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் கோர்ட் ஸீன் பின்னதாக சுகிர்தராஜாவை அரசாங்கமும் விக்ரமை சுகிர்தராஜாவும் அனலைஸ் செய்கிற இடம் தங்கராஜ் வீட்டுக்கு விக்ரம் ஐயமுற்று சென்று துளாவுகிற இடம் தங்கராஜ் விசாரிக்கப் படுகிற காட்சியினூடாக தற்கொலை செய்து கொள்வது வரை சின்னச்சின்ன அபாரங்கள் தொடர்ந்தன. இரண்டாம் பகுதியில் அப்படியான காட்சிகள் இல்லை என்றே சொல்லலாம்.விக்ரம் படத்தின் கூர்மையான சிக்கனமான வசனங்களும் சுஜாதாவைத் தனித்துத் தோன்ற வைத்தன.
முதலில் இதனை இயக்குவதற்காக மணிரத்னம் தேர்வு செய்யப் பட்டு பிறகு நிராகரிக்கப் பட்டு ராஜசேகர் தேர்வானதாக ஒரு சேதி உண்டு. ஒருவேளை மணிரத்னம் எடுத்திருந்தால் அந்த விக்ரம் எம்மாதிரிப் படமாக இருந்திருக்கும் என்று நிகழா நிகழ்வொன்றை அசைபோடுகிறது மனம். மணிரத்னத்துடனான சுஜாதாவின் முதல் இணைப்பக விக்ரம் அமையாமற் போனது. மணியுடனான கமலின் ஒரே இணைவு நாயகன் அடுத்த வருடமே சாத்தியமாயிற்று. சுஜாதாவுக்கு அடுத்த ஐந்தாண்டுகள் கழித்தே அது கவிதாலயா தயாரிப்பில் ரோஜா என்ற படத்தில் நிகழ்ந்தது.மூன்று தேசிய விருதுகள் எண்ணற்ற பிற விருதுகளைப் பெற்று தேசிய கவனத்தை ஈர்த்த படம் ரோஜா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
ரோஜா படத்தில் வசனகர்த்தாவாக சுஜாதா மிளிர்ந்தார்.
முதல் சதுக்கத்தில் பிள்ளையாரிடம் மதுபாலா பேசுகிற இடம் வைஷ்ணவியும் அர்விந்த்ஸ்வாமியும் முரண்படும் இடம் அடுத்து பாட்டிகள் வந்து அர்விந்த்ஸ்வாமியிடம் பேசிச் செல்லும் இடம் பிறகு அர்விந்த்ஸ்வாமி மதுபாலாவை திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவிக்கிற இடம் இவை எல்லாமே கனகச்சிதமாக கூர்மையான சொற்களால் நிரம்பியிருந்தன. எல்லாவற்றையும் விட மதுபாலாவின் அப்பா அவரது அன்னையாரிடம் நொந்துபோய்ப் பேசுவதும் அவர் அதுவரையிலான பிரச்சினைகளைத் தீர்க்கத் தன் மகனுக்கு வழி சொல்வதுமான காட்சியில் வசனம் நறுக்குத் தெறித்தது. சிறு துகளும் அதிகரித்துவிடாமல் அத்தனை நுட்பமாய் வசனத்தை அமைத்தார் சுஜாதா. மணிரத்னம் பெரும்பாலும் காட்சிவழியே கதை நகர்த்துவதில் ப்ரியமுள்ள இயக்குனர் என்பதும் இங்கே சாதகமானது.
ரோஜா திருமணமாகி தன் கணவனுடன் முரண்பட்டு பிறகு புரிந்து கொண்டு காதலாகிற வரையிலான காட்சி நகர்தல்களில் எந்தவொரு சிறு சோர்வும் இல்லாமல் வசனங்களும் படத்தின் வேகத்துக்குத் துணை செய்தது.
மணி ரத்னம் சுஜாதா கூட்டணியில் உருவான படங்கள் திருடா திருடா 1993 உயிரே 1998 கன்னத்தில் முத்தமிட்டால் 2002 ஆயுத எழுத்து 2004.
சுஜாதா பணியாற்றிய அனேகப் படங்கள் உயர் மத்திய வர்க்க மற்றும் செல்வந்த மாந்தரின் வாழ்க்கை சார்ந்த திரைக்கதைகளாகவே அமைந்தன. வழமையிலிருந்து விலகிய கதைகளாகவோ நிஜ வாழ்வில் சாமான்யரால் அருகே சென்று பார்க்கவியலாத களன்களில் பின்னப் பட்ட கதைகளாகவோ தனித்த வெகு சிலருக்கு மட்டும் நிகழக் கூடிய வெகு சிலர் தங்களுக்குள் நிகழ்த்தக் கூடிய கதைகளாகவோ அவை அமைந்தன. தன் எழுத்தில் எப்படியோ அப்படியே தன் திரை சார் எழுத்துக்களிலும் கூர்மையான தேர்வெடுத்தலைத் தன் கொள்கையாகக் கொண்டே இயங்கியவர் சுஜாதா ஒரு உதாரணமாகச் சொல்வதானால் மணிரத்னத்தின் இருவர் பிரதேச அரசியலைப் பின்புலமாக்கி எடுக்கப் பட்ட திரைப்படம் நிஜத்துக்கு அருகே கற்பனை சென்றதாகப் பெரிதும் விதந்தோதப் பட்ட இந்தப் படமாகட்டும் தேசிய கவனத்தை ஈர்த்த பம்பாய் படமாகட்டும் சுஜாதா தொண்ணூறுகளில் மணிரத்னத்தோடு இணையாமற் போனது தற்செயலா தன் விருப்பமா சூசகமா அல்லது இயல்பாக நடந்ததா என்பனவற்றையெல்லாம் தாண்டி அவர் அவற்றை எழுதவில்லை என்பதை மட்டும் கவனம் கொண்டு பார்த்தால் நமக்குத் தேவையான கோலத்தை அமைப்பதற்கான ஒழுங்கான முன் நகர் புள்ளிகள் கிடைக்கக் கூடும்.
ரோஜா ராணுவ பின்னணி சார்ந்த இளம் கணிப்பொறி வல்லுனர் வாழ்வில் நிகழும் அசாதாரண சம்பவக் களனில் இயங்கியது. ஆயிரம் கோடி கரன்ஸி தொடர்பான கதையாக திருடா திருடா அமைந்தது. சிவாஜியில் அமெரிக்காவில் அதிகம் சம்பாதித்து இந்தியாவுக்கு வந்து மாபெரும் கல்வி நிறுவனங்களை கட்டமைக்க முயலும் தொழிலதிபராக ரஜினிகாந்த் தோன்றினார். மூன்று வெவ்வேறு மனிதர்கள் வாழ்க்கையில் ஒருங்கிணைகிற புள்ளிகளைக் கதையாக்கிய படம் ஆயுத எழுத்து. அமுதாவும் அவனும் என்ற பேரில் சுஜாதா எழுதிய சிறுகதையை விவரித்து எடுக்கப் பட்ட படம் கன்னத்தில் முத்தமிட்டால் படம் இந்தியாவில் தொடங்கி இலங்கைக்குப் பயணித்து அங்கே நிகழ்ந்தேறும் கதைப் பின்புலம் கொண்ட படம்.
முதல்வன் படத்தின் வசனம் சுஜாதா. அந்த நாட்களில் புகழ்பெற்ற தொலைக் காட்சி ஆளுமையான ரபி பெர்னார்டின் சாயலில் ஒரு டீவீ பேட்டியாளனுக்கும் மாநிலத்தின் மகாவல்லமை பொருந்திய முதல்வருக்கும் ஒரு பேட்டியின் இடையில் ஏற்படுகிற முரண்பாடு அதன் விளைவாகத் தமிழக அரசியலில் ஏற்படுகிற மாற்றங்கள் என விறுவிறுப்புக்குக் குறைவில்லாத கதை முதல்வன். (அர்ஜூன்) புகழேந்தி vs (ரகுவரன்) அரங்கனார் என வழக்கமான ஹீரோ வில்லன் எதிரெதிர் ஆட்டம் தான் என்றாலும் சொன்ன விதம் சுவைக்குக் குறைவின்றி அமைந்தது. சுஜாதா எழுதிய பதவிக்காக நாவலில் ஒரு பாத்திரம் அரங்கனார் என்று வரும். நிஜ அரசியலில் ஈடுபடுகிற பல புகழ்பெற்ற தலைவர்கள் பலரது விளிப்பெயர் சாயலில் அரங்கனார் என்று பெயர் தேர்வு செய்யப் பட்டதன் பின்னணி உளவியல் இருந்திருக்கக் கூடும். தனது 24 ரூபாய்த் தீவு பதவிக்காக கதைகளிலிருந்து கலவையாக முதல்வன் படத்தின் கதைக்கான இடுபொருளைத் தயாரித்துக் கொண்டார் சுஜாதா.
சுஜாதா ஷங்கர் கூட்டணி இந்தியன் படத்தில் தொடங்கியது. சுதந்திரத்துக்கு முந்தைய கால இந்தியா வெள்ளையரை எதிர்த்து நேதாஜி வழியில் போராடிய சேனாபதி அவரது போராட்டம் லஞ்ச ஊழலை எதிர்த்து நவ காலத்தில் அமைவதாகக் கதைக்களன். நாம் பிறந்த மண் என்ற சிவாஜி கமல் நடித்த படத்தின் கதைச்சாயலோடு அமைந்திருந்த இந்தியன் கதையைத் திரைக்கதை வசனம் எடுத்த விதம் தொழில்நுட்பம் என சர்வ அலங்காரத்தினாலும் வேறொரு பிரம்மாண்டமான படமாக மாற்றினார் ஷங்கர். அந்தப் படத்தில் சுஜாதா எழுதிய வசனங்கள் பெரிதும் பேசப்பட்டன. ஊழலுக்கு எதிரான நம்பவியலாத கற்பனைப் பாத்திரமான சேனாபதி கைக்கொண்ட வழி முன்வைத்த தீர்வு என எல்லாமே நடைமுறை சாத்தியமற்றவை என்றாலும் எழுபதுக்கு மேல் வயதான நாயகன் என்கிற ஒரே ஒரு அம்சத்தை விரிவாக்கி இந்தியன் படத்தை எழுதினார் சுஜாதா. இந்தப் படத்தில் பல உப-தரவுகள் பாத்திரப் பரவல் வசனங்கள் ஆகியவற்றை 1978 ஆமாண்டு வெளியான சுஜாதாவின் நாவலான நிர்வாண நகரம் கதையின் நாயகனான சிவராஜ் என்ற பாத்திரத்தின் சாயலோடு அமைத்தார் சுஜாதா. யாருமே பார்க்காத ஜீவராசி என்ற அதி-மனித- கதாபாத்திரம் எங்கனம் சென்னை நகரத்தின் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுப் பிரபலமாகிறது ஜீவராசியின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் எவ்வாறு மக்கள் அவனைக் கொண்டாடத் தொடங்குகிறார்கள் ஜீவராசியை எப்படி இளைய தலைமுறை போற்றுகிறது என்பதை எல்லாம் அப்படியே எடுத்தாண்டு ஜீவராசி= இந்தியன் என்று மாற்றிக் கொண்டார் சுஜாதா. இது பெரும் கனம் கொண்டதோ அல்லது கனமற்றதோ அல்ல. இரண்டுக்கும் இடையே தன்-கனம் கொண்ட விஷயமாகிறது.
பாய்ஸ் சுஜாதா பதின்மப் பட்டாளத்தின் மனங்களை ஊடுருவி எழுதிப் பார்த்த ஷங்கர் படம் கலவையான விமர்சனத்தையும் அவற்றை விட அதிகமான கண்டனங்களையும் கலாச்சார எதிர்ப்பையும் பெற்றுத் தந்தது. எழுதிய சுஜாதாவுக்கு அதே கல்லும் சொல்லும் பகிர்ந்து கிடைத்தன.
அன்னியன் இந்தியன் படத்தின் நிழலை அடுத்த பாத்திரம் எனலாம். எல்லாவற்றிலும் கடுமையான ஒழுங்கை நேர்த்தியை முன்வைக்கும் பாத்திரத்தில் விக்ரம் அம்பி அன்னியன் மற்றும் ரெமோ என இரண்டு நிழல் மற்றும் ஒரு நிஜம் என மனம் சிதையும் மனிதனாகத் தோன்றினார். மன விகாரத்தை சிதைதலை ஒழுங்கறுதலை நோய்மையை இன்னபிறவற்றை எல்லாம் கதைநிலமாக்கி சுஜாதா பல கதைகளை எழுதியுள்ளார். அப்ஸரா, ஆ, நில்லுங்கள் ராஜாவே எனக் கணிசமான கதைகளைக் கூற முடியும்.
இந்தியன் படத்தைப் போலவே சமூகத்தில் சீழ் பிடித்திருக்கும் நோய்மை ஒன்றைக் குறித்த கண்டனமாகவே அன்னியன் படத்தைக் கொள்ள முடிந்ததே தவிர இந்தப் படமும் தீர்வு என நடைமுறைக்கு சாத்தியமான எதையும் முன்வைக்கவில்லை. இந்தியன் படத்தை விட டெக்னாலஜி என்ற கண்ணாடித் திரையை இன்னும் அழுத்தமாய்ப் பற்றிக் கொண்ட இந்தப் படம் அசாத்தியமான நம்பகமற்ற கண்கட்டு வேலையாகவே பலவிசயங்களைக் கையாண்டது.
சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய இரண்டு கதைகளும் 90களின் ஆரம்பத்தில் ஆனந்தவிகடனில் எழுதப்பட்ட எதிர்காலம் சார்ந்த விஞ்ஞானத் தொடர்கள். இவற்றின் மையப் பாத்திரமாம இடம்பெறுவது ஒரு ரோபோ நாய்க்குட்டி. அந்தக் கதையின் நாய்க்குட்டியை அதே அதன் புத்திசாலித் தனம் உள்ளிட்ட குணாதிசயங்களோடு ரோபோ அதாவது எந்திர மனிதன் என்று சிறு மாற்றம் செய்து வேறொரு கதையாக அதனை விரித்து உருவாக்கிய ஷங்கர் படம் தான் எந்திரன். தமிழ்த் திரை உலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அவருடைய திரைவாழ்வின் உச்சபட்சப் படமாக அமைந்தது எந்திரன். இந்தப் படம் வசூலில் தொட்ட உயரம் மிகமிக அதிகம். இதனை எழுதிய சுஜாதா இப்பட வெளியீட்டுக்கு முன்பே காலமாகி விட்டார்.
காந்திகிருஷ்ணா இயக்கிய செல்லமே படத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரியாக நாயகன் அவர் சோதனை நடத்தச் சென்ற இடத்தில் நாயகியை விரும்புவதாகக் கதையின் அடிநாதம் அமைந்தது. சுஜாதாவின் ஆகச்சிறந்த காதல் கதை என்று வெளியான காலத்தில் பெரும் வாசகப் பரப்பைச் சென்று சேர்ந்த கதை பிரிவோம் சந்திப்போம். இரண்டு பாகங்கள் வெளிவந்த அந்தக் கதை ஒரு கலாசிற்பமாக தமிழ்நினைவுப் பரப்பில் பெற்றிருக்கும் உயரம் பெரிது. அந்தக் கதையை ஆனந்தத் தாண்டவம் என்ற பேரில் திரைப்படமாக எடுத்தார் இயக்குனர் காந்திகிருஷ்ணா. எழுத்தின் உயிர்ப்பு திரையில் எடுபடவில்லை. எத்தனைக்கெத்தனை வாசகர்களால் கொண்டாடப் பட்டதோ திரைவடிவில் முற்றிலுமாக நிராகரிப்புக்கு உள்ளானது. மூலக்கதை சுஜாதா பிரிவோம் சந்திப்போம் என்றும் வசனம் சுஜாதா காந்திகிருஷ்ணா என்றும் டைடில்ஸ் வந்தது. கடைசியாக எழுத்தும் இயக்கமும் காந்திகிருஷ்ணா என்று காண்பித்தனர். இந்தப் படமும் சுஜாதா காலமான பிறகே வெளியானது.
சுஜாதா பெண்டமீடியா என்ற நிறுவனத்தின் சினிமா சார்பு நிறுவனமான மீடியா ட்ரீம்ஸ் என்பதன் தலைமைப் பொறுப்பை வகித்தபோது அந்த நிறுவனம் சில திரைப்படங்களைத் தயாரித்தது. விஸில் என்ற படத்தை ஜேடி ஜெரி இயக்கினர். சுஜாதா அதன் வசனத்தை எழுதினார். காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் சுஜாதா எழுதிய நாவலான அன்று உன் அருகில் நிலாக்காலம் என்ற பேரில் படமாக்கப் பட்டது. இதன் கதை வசனத்தை சுஜாதா எழுதினார். நேரடியாக தொலைக் காட்சியில் வெளியாக்கம் செய்யப் பட்ட திரைப்படம் இது. இந்த இரு படங்கள் தவிர மீடியா ட்ரீம்ஸ் தயாரித்த ஞான ராஜசேகரன் இயக்கிய பாரதி சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய லிட்டில் ஜான் எஸ்வீ சேகரின் கிருஷ்ண கிருஷ்ணா சேரன் இயக்கிய பாண்டவர் பூமி மற்றும் மௌலீ இயக்கிய பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்களின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை சுஜாதா மேற்கொண்டார்.
பாரதிராஜாவுடன் சுஜாதா ஒருங்கிணைந்த இரண்டு படங்களில் ஒன்று பீரியட் படமான நாடோடித் தென்றல். அந்தப் படம் கார்த்திக் ரஞ்சிதா பாண்டியன் நெப்போலியன் நடித்த படம். காலக்குறியீட்டை மெய்ப்பிக்க கடும் பிரயத்தனம் செலுத்தி எடுக்கப் பட்ட படமான நாடோடித் தென்றலுக்குப் பிறகு கண்களால் கைது செய் படத்தில் வசனம் எழுதினார் சுஜாதா. வைரக்களவு ஒன்றை மையமாய் வைத்துப் பின்னப் பட்ட கதை கண்களால் கைது செய். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகித் தோவியடைந்தது.
ரவிச்சந்திரன் இயக்கிய கண்ணெதிரே தோன்றினாள் ப்ரஷாந்த் கரண் நடித்த படம். ஜேடி ஜெரி இயக்கிய விஸில் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே ஆகியவற்றின் வசனங்களை சுஜாதா எழுதினார்.
வசனகர்த்தாவாக சுஜாதா திரைப்படங்களை எழுத அழைக்கப்பட்டார். கதை விவாதங்களில் கதையை மெருகேற்றித் தருவதற்கென்று சில நலம் விரும்பிகள் இருப்பார்கள். படத்தின் இயக்குனர் தொடங்கித் தயாரிப்பாளர் நடிகர் வரை அத்தகைய நலம்விரும்பிகளைப் படத்தின் முன்னோட்ட நிகழ்வுகளில் வரவழைப்பதும் அவர்களும் தங்களாலான கர சலனங்களைக் கதைநதியில் ஏற்படுத்தித் தந்து விலகுவதும் அனேகப் படங்களில் நிகழ்வது தான். இதனை நல்ல அல்லது தீய என்றெல்லாம் பார்ப்பது இயலாது. சினிமாவின் கட்டுமான விசித்திரங்களில் ஒன்று. அந்த வகையில் திரையுலகம் தமது கதைகளுக்குள் ரைட் அண்ட் ராயலாக வரவழைத்து உபகாரம் அடைய முனைந்த அறிவுஜீவி நலம்விரும்பியாகவே பல படங்களில் சுஜாதாவின் பங்கேற்பு அமைந்தது. இயக்குனர் நடிகர் மற்றும் வணிகம் சார்ந்து எது தேவையோ அதை உருவாக்கித் தரவே அவர் பணிக்கப் பட்டார் என்பது கண்கூடாய்த் தெரிகிறது. என்னளவில் சுஜாதா எழுதிய திரைப்படமாக எடுப்பதற்கான இன்ஸ்டண்ட்-மெடீரியல்ஸ் என நிறையக் கதைகளைச் சொல்ல முடியும். மிக முக்கியமாகப் பேசும் பொம்மைகள் நிலா நிழல் சிவந்த கைகள் கலைந்த பொய்கள் மேகத்தைத் துரத்தினவன் எனப் பல உண்டு.
என் கணக்கின் படி அனேகமாக சுஜாதா 29 படங்கள் வரை எழுதியிருக்கக் கூடும். தமிழ்த் திரையுலகில் 80களுக்கு அப்பால் எழுத்தாளர்களுக்கான வாசலைத் திறந்து சற்றே ஒளியதிகம் செய்தவர்களில் சுஜாதா முதன்மையானவர்.டெக்னாலஜி சார்ந்த கண்கட்டு வித்தைகளைப் படமாக்க அவற்றின் பின்புல நேர்மையை உத்தேசித்து உறுதி செய்வதற்கான பங்கேற்பாளராக சுஜாதா சிலபல படங்களில் தேவைப்பட்டார். அதனைத் தவிர்த்து கச்சிதமான செறிவான வசன நேர்த்திக்காக அவரது எழுத்து தேவைப்பட்டது. அதீதங்களை நம்ப வைப்பதற்கான மாயாஜால உடனிருத்தலாகவே அவரது பெரும்பான்மைத் திரைப்படப் பங்கேற்புகள் நிகழ்ந்தன. எழுத்துலகில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். திரைப்பட உலகில் மேற்சொன்னவாறு அவர் ஒரு அறிவுஜீவி நலம்விரும்பி.எழுத்தாளன் என்பவன் கதை வசன கர்த்தாவின் இருக்கையில் அமர்வதும் எழுவதும் சினிமா தனக்கெனக் கோரும் நிமித்தம் என்ற அளவில் அதனைப் புரிந்துகொள்வதில் யாதொரு சிரமமுமில்லை. ஒரு படைப்பாளனாக தன் எழுத்தில் சர்வ அதிகாரங்களையும் கையாளும் சுதந்திரம் சினிமாவில் அவனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று தான். வெற்றிகரமான திரை வசனகர்த்தாக்களில் ஒருவராக மிளிர்ந்த சுஜாதா எழுத்தாளராகத் தான் நினைத்தவற்றை விரும்பியவற்றை ஓரளவுக்கே திரையில் பெயர்த்தவர் என்பதாகவே சுஜாதாவின் திரைவாழ்வைக் குறித்த அலசலை நிறைவு செய்ய முடிகிறது.
பேசும் புதிய சக்தி இதழில் வெளியான கட்டுரை