சுடரும் சூறாவளியும்

சுடரும் சூறாவளியும்
***************************
கன்னட சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவர் எஸ்.ஆர். புட்டண்ணா கனகல். சிறந்த படமாக்கத்துக்கு இவருடைய பல படங்கள் நல் உதாரணமென நிற்கின்றன. இயக்குநர் இமயம் பாரதிராஜா கனகலிடம் சினிமா பயின்றவர். பாரதிராஜாவின் திரைமொழியில் கனகலின் அனேக பாதிப்பு தென்படும். உணர்வுகள் குவிந்து உறைந்து பின் மெல்லக் கலைவது வரையிலான சன்னத நுட்பங்களை இந்தியத் திரைவானில் பெரிதும் நிலைநிறுத்தியவர் புட்டண்ணா. இந்திய இயக்குநர்களில் பாடல்களைப் படமாக்குவதில் கனகல் பல விதங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தார். ஒவ்வொரு பாடலுமே ஒரு படம் என்பதாக அவருடைய மெனக்கெடலும் ஈடுபாடும் இருந்தது. உதாரணமாக ஒன்று சொல்வதானால் முதன் முதலில் நாகரஹாவு 1972 என்ற படத்தில் இடம்பெற்ற பாரே பாரே என்கிற முழுப்பாடலையும் ஸ்லோமோஷனில் எடுத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்ட படமுறையாக அது திகழ்ந்தது.
ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான கதாசங்கமா படத்தின் இயக்குனர் புட்டண்ணா. மூன்று கதைகளை ஒரு படத்தில் தொகுப்பாக எழுபதுகளில் எடுக்கப் பட்ட படம் “கதா சங்கமா”. அதில் ஒன்றான முனிதாயி அதில் ரஜினி எதிர்மறைப் பாத்திரம் ஏற்றிருந்தார். அந்த அதே முனிதாயி கதையின் வளர்த்தெடுத்த வடிவம் தான் பிற்காலத்தில் அவர் நாயகனாக வேடமேற்ற கை கொடுக்கும் கை படம்.
இரண்டு தமிழ் படங்களை இயக்கி உள்ளார் புட்டண்ணா. ஒன்று தன் படத்தையே தமிழில் ரீமேக் செய்த டீச்சரம்மா. இன்னொன்று ஏவிஎம் விசி.குகநாதனின் சித்ரமாலா கூட்டுத் தயாரிப்பான சுடரும் சூறாவளியும். இந்தப் படத்தில் ஜெமினி கணேசன் முத்துராமன் எம் ஆர் ஆர் வாசு முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஜெயா குகநாதனும் சந்திரமோகனும் அறிமுகமானார்கள். இந்த சந்திரமோகன் ஆந்திராவைச் சேர்ந்தவர்.பிற்காலத்தில் கே.விஸ்வநாத் இயக்கிய சீதாமாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்றவர். சில வருடங்கள் கதாநாயகனாகவும் பிறகு இன்று வரைக்கும் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் தொடர்ந்து வருபவர். இந்தப் படத்தில் ரகு என்கிற முக்கியப் பாத்திரத்தில் சந்திரமோகன் நடித்தார். அவருக்குப் பின் குரல் தந்திருப்பது கமல்ஹாஸன் தி கிரேட்.
பால்ய நடிகராக 6 படங்களில் நடித்த கமல் 1963 ஆமாண்டுக்கப்பால் 7 வருடகாலம் எந்தப் படத்திலும் தோன்றவில்லை. மீண்டும் 1970 ஆம் ஆண்டில் மாணவன் படத்தில் விஸிலடிச்சான் பாடலுக்குத் தோன்றி ஆடினார். அந்தக் காலகட்டத்திலிருந்து 1974 ஆமாண்டு வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை வரை பலவித ரோல்களில் சுமார் 10 படங்களில் நடித்தார். இதே காலத்தில் நடன உதவி இயக்குனராக தங்கப்பன் மாஸ்டரிடமும் பெயர் வழங்காமல் நட்பு ரீதியாக உதவி இயக்குனராக சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் கனகலின் இந்தப் படத்தில் கமலின் குரல் நடித்திருக்கிறது. இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் ரகுவாக நம் மனத்தின் திரையில் சந்திரமோகனுக்குப் பதிலாகத் தோற்றம் தருவது கமலின் முகமே.
டிவி.ராஜாராமனின் ஒளிப்பதிவும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நல்லிசையும் படத்தின் விளக்குகள். எழுபதுகளில் எடுக்கப் பட்ட சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்றென சுடரும் சூறாவளியும் திகழ்கிறது.
மாணிக்கம் கண்ணால் பார்க்கிற யாருடைய கையெழுத்தையும் அப்படியே போடுகிற வல்லமை படைத்தவன். இதைத் தெரிந்து கொண்ட துரை அவனை செக் ஃபோர்ஜரி செய்வதற்கு தூண்டுகிறான். அவர்கள் வேலை பார்க்கிற நிதி நிறுவனத்தின் உரிமையாளர் திரட்டிய பணத்தோடு ஓடிவிடுகிறார். வேலை போகிறது. மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளைச் சிரமப்பட்டு வளர்த்து வருகிற மாணிக்கம் வேறு வழியே இல்லாமல் முதல் முறையாகப் போலிக் கையெழுத்துப் போட்டு அத்தியாவசியங்களைக் கையாண்டு கொள்கிறான். இது தான் கடைசி என்று ஆரம்பிக்கிற களவுத் தொழில் என்றுமே தீர்வதில்லை அல்லவா
தொடர்கிறது. அடுத்த முறை இருபதினாயிரத்துக்கு களவாடிய செக்கைக் கையெழுத்திட்டுக் கொண்டு வங்கிக்குச் செல்லும் மாணிக்கத்தின் மோசடி தெரிந்து ஊரே துரத்த ஓடி ஒளிகிறான். செங்கல்பட்டு வந்திடு சந்திக்கலாம் என்று தகவல் தந்து மறைகிறான் துரை. ட்ரெய்னில் குழந்தைகளொடு பயணிப்பவன் பாதி வழியில் போலீஸில் மாட்டுகிறான். குழந்தைகள் எதோ ஒரு பக்கம் சென்று சேர்கின்றனர். மாணிக்கம் சிறை சென்று மீள்கிறான். தொடர்ந்து துரையின் துர்வழியில் செல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழிகள் தென்படுவதில்லை. துரை அவனைக் குடிப்பழக்கத்துக்கு ஆளாக்குகிறான். கள்ளப் பணம் தயாரிக்கும் தொழிலாக அவர்களது தீமையோட்டம் பெருகுகிறது. காலம் வளர்கிறது.
குடும்பம் என்ற சொல் சிதைந்து போகிறது. மாணிக்கத்தின் மகனும் மகளும் பெரியவர்களாகின்றனர். அண்ணனும் தங்கையும் ஒருவருக்கு மற்றவர் உயிர் . வசதிக்கோ குறைவில்லை. அண்ணன் ஒருத்தியை விரும்பத் தொடங்க தங்கைக்கு ரகு என்பவன் மணவாளனாகிறான். ரகு படித்தவன் அவனுக்கு வெளியூரில் வங்கியில் கேஷியராக வேலை கிடைக்கிறது. வேலையில் சேர்கிறான்.
துரையின் கள்ளப் பணத் தொழிலில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த கேஷியருக்கு பதிலாகத் தான் ரகு அந்த இடத்தில் வந்து சேர்கிறான். ரகு தங்கள் வழிக்கு வருவானா என்று துரை மாணிக்கத்தை விட்டு முயற்சி செய்கிறான். ரகு நாணயவாதி. மறுக்கிறான். அங்கே நடக்கும் தள்ளு முள்ளு குடிபோதையின் ஆழத்திலிருக்கும் மாணிக்கம் துரையை ரகு அடித்ததைப் பார்த்து மதியழிந்து அவனை பாட்டிலால் தாக்கி விடுகிறான். மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ரகுவைக் கொன்றே ஆகவேண்டி அங்கே துப்பாக்கியோடு செல்கிறான் துரை. அதற்குள் ரகு இறந்து விடுகிறான். ரகுவின் ஊரைத் தேடி வருகையில் தான் மாணிகக்த்துக்கு ரகு தன் மகள் மீனாவின் கணவன் என்பதே தெரியவருகிறது.
கர்ப்பவதியாக இருக்கும் மீனாவும் பிரசவத்தில் இறந்து விடுகிறாள். அவள் காலடியில் தலைசாய்த்து அமர்ந்திருக்கிற மாணிக்கத்திடம் அவர் மகன் ராஜா இனிமேலாச்சும் சொல்லுங்கப்பா ரகுவைக் கொன்னது நீங்களா என்று கேட்பதற்காக அவரைத் தொடுகிறான். எப்போதோ இறந்திருக்கிறார் மாணிக்கம்.
நேரான கதை. நேர்மையிலிருந்து விலகும் சிறு-புள்ளி-சலனம் எப்படி ஒருவனது வாழ்க்கையை மொத்தமாகச் சிதற அடிக்கிறது என்பதைத் தெளிவுற முழங்கிய படம் சுடரும் சூறாவளியும். இந்தப் படத்தின் கதைமையமும் 23 வருடங்களுக்குப் பிறகு தமிழின் மகா உன்னதமாக வெளிவந்த மகாநதி படத்தின் கதை மையமும் ஒருமித்தவை. மனைவியை இழந்து குழந்தைகளைப் பரிவோடு வளர்த்து வருகிற கிருஷ்ணசாமி என்கிற வெள்ளந்தியின் வாழ்க்கையை நண்பன் போர்வையில் உடன் பழகும் தனுஷ் என்பவனின் தூண்டுதலும் மாணிக்கத்தின் அதே சிறிய சலனத்தைத் தொடர்ந்து கிருஷ்ணசாமியின் வாழ்க்கையும் மொத்தமாய்ச் சிதறிக் கலைந்து பெரும் போராட்டத்துக்கப்பால் மீண்டும் மாறுவதாக நிறையும். சுடரும் சூறாவளியும் படத்தின் நிறைவுப்புள்ளி சோகமயமாய் முடிந்தது. மகாநதியில் கடைசியில் கொடியவர்களை வதம் செய்த பிறகு எஞ்சிய கால மகிழ்வை கிருஷ்ணசாமி அடைவான். அது இரண்டு படத்துக்குமான வேறுபாடு.
காதல் மன்னன் என்று அறியப்பட்ட ஜெமினி கணேசனின் நடிப்பு வாழ்வில் முக்கியமான மடைமாற்றத்தை நிகழ்த்திய படம் சுடரும் சூறாவளியும். நடிப்புச் செல்வம் என்று டைட்டில் வரும். உண்மையாகவே நடிப்பால் மிளிர்ந்தார் ஜெமினி. அதற்கடுத்து ஸ்கோர் செய்வது எம்.ஆர்.ஆர் வாசு. படத்தின் வசனங்கள் அபாரமாய் ஒலிப்பவை.
எடுத்த எடுப்பிலேயே எங்கோ பறக்கத் தொடங்கும் கதை.
மாணிக்கத்தைப் பார்த்து துரை சொல்வான்
“முட்டாள்…மனுஷனோட பலவீனம் தாண்டா அவன் வாழ்க்கையில முன்னேறுறதுக்கு முதல் படி.
ஆசைங்கிற பலவீனம் மனுஷனுக்கு ஏற்பட்ட உடனே தாண்டா அவன் பணத்தையே கண்டுபிடிச்சான்”
பிற்காலத்தில் பத்திரிகை ஒன்றில் தொடர்கதையாக கமல் எழுதிய தாயம் கதையைப் படமாக்கும் போது அதற்கு முதலில் தேர்வு செய்த பெயர் “சுடரும் சூறாவளியும்”. பிறகு ஆளவந்தான் என்று மாறினாலும் படத்தின் எடுத்துக்கூறலின் போது நடுநடுவே நீ சுடர் அவன் சூறாவளி என்று ஒரு பாத்திரம் அடிக்கடி சொல்லும். இந்தப் படம் மீது கமலுக்கு இருக்கிற நிரந்தர ஈர்ப்பை உணரமுடிகிறது.
உணர்ச்சிக்கலவையாய் ஒரு படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காணொளிப்பாதையில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.
உய்யவும்.
வகைமை சினிமா உபவகைமை தமிழ் சினிமா குறிச்சொற்கள் புட்டண்ணா கனகல் கமல்ஹாஸன் ஜெமினி கணேசன்