செழிக்கட்டும் பொன்னுலகு
2021 ஆமாண்டு என் வாழ்வின் மறக்க முடியாத பல சம்பவங்களை நினைவுகளாக்கித் தந்திருக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் எனது நாவல் மிட்டாய் பசி வந்தது. இவ்வாண்டின் முற்பகுதியில் வெறி பிடித்தாற் போல் தொடர்ந்து எழுதினேன். நேற்று வந்த காற்று மற்றும் பாடல் காதல் ஆகிய இரண்டு சீரிஸூம் சேர்த்து 100 அத்தியாயங்கள். தேன்மழைச்சாரல் மற்றும் கண்கட்டி வித்தை கவிதைகள் என எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் இருநூற்றுக்கும் குறையாத பதிவுகள். மிட்டாய் பசி நாவலுக்குக் கிடைத்த எதிர்வினைகள் நம்பிக்கையூட்டின. தமிழினி வசந்தகுமார் அவர்களது ஈடுபாடும் அக்கறையும் அவரளித்த ஊக்கமும் மட்டுமே மிட்டாய் பசி மற்றும் தூவானத் தூறல் இரண்டு நூல்களுக்குமான காரணிகளாயின.
மே மாதம் 5 ஆம் தேதி என் அம்மாவை இழந்தேன். அதற்கடுத்த ஒன்றரை மாதங்களுக்கு மேல் மனமும் உடலும் ஒருங்கே பிறழ்ந்த பொருந்தாமையோடு எழுத்திலும் பெரிதாய் நாட்டமில்லாமல் இருந்தேன். நான் மதிக்கும் எழுத்துலக மூத்தவர்கள் அந்தத் தருணத்தில் என் மீது காட்டிய வாஞ்சையும் தேற்றுதலும் முக்கியமானது. ஊடகத் துறை நண்பர்களும் சக எழுத்தாளர்களும் சில நெருக்கமான சினேகிதர்களும் கரங்களைப் பற்றத் தந்து மேடேற்றி உதவினர்.
மெல்லத் தேறினேன் என்று சொல்லுவதை விட இன்னும் மெல்லத் தேறுகிறேன் என்று சொல்வது தான் பொருந்தும். அப்படி ஒரு மனுஷி சர்வ வியாபியாய் சக பறவையாய் அத்தனை நெடிய காலம் உடனிருந்து விட்டுச் சட்டென்று வேறு வழியேகிக் காணாமற் போனதன் மீதான ஆச்சர்யம் இன்னும் விலகிய பாடில்லை. இதுவும் கடந்து போகும் என்கிற வார்த்தைக் கூட்டைப் பற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்வதை தவிர வழி வேறில்லை.
இந்த ஆண்டின் பிற்பாதியில் சௌமா அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான விருதை மிட்டாய் பசி பெற்றது. மணப்பாறையில் நடந்த இனிய விழாவில் நண்பர்களின் கூடுகையாகவும் அந்த நிகழ்வு சிறந்தது. அடுத்ததாக இந்த வருடத்திற்கான பாலகுமாரன் விருது எனக்கு அளிக்கப் பட்டது.
இந்து தமிழ் திசை பத்திரிகையின் முகநூல் பக்கத்தில் சாக்லேட் ஞாபகம் என்ற தலைப்பில் தினந்தோறும் என் காணொலித் துளி 30 நாட்களைக் கடந்து வெளியாகி வருகிறது.தென்றல் பத்திரிகையில் அழகுற நேர்காணல் ஒன்றை வெளியிட்டார்கள். அதனை சாத்தியம் செய்தவர் அரவிந்த் ஸ்வாமிநாதன் அவர்கள்.
காவ்யா சண்முகசுந்தரம்,முனைவர்.சந்திரன், சத்யா ஜிபி ஆகியோரது கட்டுரை நூல்களுக்கு அணிந்துரை வழங்கினேன்.
சவீதா,ரேகா, நிரல்யா, ஸ்ரீநிரா, ரிஷான் ஷெரீஃப், ஜெயாபுதீன், ஆகியோரது கவிதைத் தொகுதிகளுக்கு வாழ்த்துரை வழங்கினேன்.
நண்பன் நர்ஸிம்மின் சிறுகதைத் தொகுதிக்குப் பின் அட்டைக் குறிப்பு எழுதினேன்.
முன்னோடி எழுத்தாளர் பா.ராகவனின் வழிகாட்டுதலில் எனது இணைய தளத்தை நிர்மாணிக்க முடிந்தது. அதனை அழகுற வடிவமைத்த அன்புச்சகோ. செல்வமுரளியின் ஈடுபாடு அளப்பரியது. பழுதின்றிப் பொழுதுக் கணக்கை சரிசெய்ய இணையம் உதவிகரம்.
என் அடுத்த நாவல் தேவதாஸ் அதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
புத்தகத் திருவிழாவுக்கு வந்திருக்க வேண்டியது இரண்டு நூல்கள் கண்கட்டி வித்தையும் இளையராஜாவின் இசையுலகு நூலும். சற்றே தாமதமாய் மே மாத இறுதியில் வெளியாக உள்ளன.
வாழ்தல் இனிது என்கிற வாழ்கால வாசகம் உடன் வந்து கொண்டே இனிக்கிறது.
வாழ்தல் இனிது
அனைவருக்கும் 2022 புதுவருட நல்வாழ்த்துகள்.
செழிக்கட்டும் பொன்னுலகு.