டாணாக்காரன்
இயக்குனர் தமிழின் முதற்படமான டாணாக்காரன் பார்த்தேன். தமிழில் உப நுட்பத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கதாவுலகத்தைக் கட்டமைக்கும் படங்கள் முன்பு அரிதினும் அரிதாய் இருந்தவை. இப்போது அந்த நிலைமை மாறத் தொடங்கியிருப்பது ஆறுதலுக்குரிய மாறுதல். காணாவுலகம் ஒன்றை அருகே சென்று காணத் தருவது இலக்கியம் உள்ளிட்ட மௌனக் கலைகளின் பின்னே உள்ளுறையக் கூடிய நோக்க இயல்பு. காண் கலைகளில் குறிப்பாக சினிமாவில் அப்படி முயலும் பொழுது அதன் வீரியம் பன்மடங்கு அதிகரிக்க முடிகிறது. காவல் துறையில் பயிற்சிக் காலம் என்பதை இதுகாறும் திரைப்படங்கள் குண நீக்கம் செய்யப்பட்ட ஒரே தன்மையிலான வழங்கப்பட்ட சித்திர பிம்பங்களாகவே எப்போதும் கடக்கப் பார்த்திருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் தமிழ் எடுத்திருக்கும் டாணாக்காரன் படம் பலவகைகளில் முக்கியத்துவம் மிகுந்ததாகிறது. பயிற்சிக் காலத்தைப் பற்றிய மிகச்சிறப்பான கவனத் தொடக்கத்தை அறிவாழ்தலை சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் முடிவு சற்றே தொய்கிறாற் போலத் தோற்றமளித்தாலும் இதை விடச்சிறப்பான முடிவைக் கண்டறிவது கடினம் என்றே தோன்றுகிறது. படத்தில் தன்னியல்பாக எழக் கூடிய சின்னச்சின்ன வசனங்களாகட்டும், நடிகர்களின் முகபாவங்களாகட்டும் செயற்கையான பூடகமான எதுவுமின்றி வெகு இயல்பாக நிகழ்ந்திருப்பது சிறப்பு. படத்தின் இசை ஒளிப்பதிவு உட்படப் பலவும் நேர்த்தியை அதிகரித்துக் கொடுத்திருக்கின்றன. முக்கியமாக இதில் பங்கேற்ற நடிகர்கள். விக்ரம் பிரபு எம்.எஸ்.பாஸ்கர் லால் அஞ்சலி பாவெல் நவகீதன் போஸ்வெங்கட் மற்றும் மதுசூதன் ராவ் எனப் பலரும் ஒருங்கே தோளிற்சுமந்த பல்லக்கெனவே இந்தப் படம் மிளிர்கின்றது.
அவசியம் பார்க்கவேண்டிய படம்.