தங்கச்சுரங்கம்
_________
டி.ஆர்.ராமண்ணா இயக்கம். சிவாஜி பாரதி வைட் ட்ரெஸ் நிர்மலா நாகேஷ் மற்றும் பலர் நடித்தது.
1969 ஆம் வருடம் எடுக்கப் பட்ட ஸ்டைலான படம். ஒன் ஆஃப் தி மெல்லிசை மன்னர்ஸ் டிகே.ராமமூர்த்தி இசை. பாட்டெல்லாம் கண்ணதாசன்.
வசனம் படத்தின் முக்கிய வெளிச்சம்.
**
உன்னை யாருப்பா சுட்டது..ஏன்ப்பா சுட்டாங்க….இது ராஜனின் அம்மா காமாட்சி
நான் பார்க்கிற வேலைக்கு என்னை யார் வேணா எப்ப வேணா சுடுவாங்கம்மா இது சிபி.ஐ ராஜன்
**
ஆண்கள் அழகில்லாமல் ஊரைசுத்தலாம். ராஜனிடம் விமலா
**
வாழ்க்கையில எதாவது குற்றம் செஞ்சிருக்கியா..? இது ராஜன்
குறும்பு செஞ்சிருக்கேன் குற்றம் செய்ததில்லை இது விமலா
இல்லை நீ பொய் சொல்றே…
**
பர்மாவிலிருந்து இந்தியா திரும்பும் கப்பலில் பாதிரியாரிடம் தந்தனுப்பப் படுகிற ஆதரவற்ற சிறுவன் ராஜன் வளர்ந்து தேர்ந்து சீபீ.ஐ அதிகாரி ஆகிறான். பல நாடுகளுக்குப் போய்த் திரும்பும் ராஜன் வசம் ஒரு வினோதமான கேஸ் தரப்படுகிறது. நிஜம் போலவே தோன்றும் போலித் தங்கத்தை ஒரு கும்பல் புழக்கத்தில் விடுகிறது. அந்தக் கூட்டத்தை அடியோடு அழிக்க வேண்டிய பொறுப்பே அது.
சிவாஜி அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறார். பாரதி முகபாவங்களின் அத்தனை வகைகளையும் தோற்றுவிக்கிறார். எஸ்.வரலட்சுமி, ஓ.ஏ.கே தேவர் நாகேஷ் ஆர்.எஸ்.மனோகர் பாதிரியார் ஜாவர் சீத்தாராமன் மேலதிகாரி டபுள் லாங்க்வேஜ் மேஜர் சுந்தர்ராஜன், எனப் பலரும் பாத்திரங்களில் நிரம்பி நடித்திருந்தனர். விஞ்ஞானி சுப்பையாவாக வருபவர் மலையாள நடிகர் டி.எஸ்.முத்தையா பல்லத பகயான் என்ற மலையாளப் படத்தை இயக்கியுமிருக்கிறார். தனித்த குரலும் உடல்மொழியுமாக சிறப்பித்திருக்கிறார் முத்தையா.
குற்ற கும்பலுக்கு உடந்தையான டாக்டர் ஒருவர். அவரை பேஷண்ட் போலச் சென்று சந்திப்பார் ராஜன். அவரிடம் தன்னை வெளிப்படுத்துகிற காட்சியில் ஐம் ராஜன் சிபி.ஐ என்று ஸ்டைலாக சொல்வார். இந்தக் காலத்தின் ஸ்டைல் அது. மனசுமாறி உண்மையை சொல்ல நினைச்சா இந்த நம்பருக்கு ஃபோன் செய்யுங்க என்று கனிவோடு சொல்லிவிட்டுக் கிளம்புவார். அடுத்த கணமே மறுபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து டாக்டர் உங்க கிட்டேருந்து உண்மையை வரவழைக்கிறதுக்கு நான் ரொம்ப பயங்கரமா நடந்துக்க வேண்டியிருக்கும் என்று நெருப்புத் தொனியில் எச்சரிப்பார்.
வயர்லெஸ் ஃபோன் டெடனேடர் மயக்க மருந்து மூளைச்சலவை அடிக்கடி இடம் மாறும் வில்லன்கள் ரேஸ்கோர்ஸ் தங்கம் தயாரிக்கும் ஃபார்முலா விஞ்ஞானி கடத்தல் விஷ ஊசியை தூரத்திலிருந்து ஊதியெறிந்து கொல்வது காரில் மயக்கப் புகை முகமூடிகளுடனான இன்ப நிலைய டான்ஸ் மாறுவேடத்தில் போய்ப் பிடிபடும் நாயகன் தீம் ம்யூசிக் எலெக்ட்ரிக் ஷாக்கர் கொண்டு கைகொடுக்கும் வில்லன்{புனைப் பெயர் மிஸ்டர் “பை” (நிஜப்பெயரான “கனகசபை” என்பதன் கடைசி எழுத்து)} நவ நாகரீக வில்லன்கள் கூட்டம் எனப் பல அம்சங்களும் கண்ணைக் கவர்கின்றன.வில்லன் குழுவைச் சேர்ந்தவர்களை ஒவ்வொரு புகைப்படமாக ஸ்லைட் ஷோவில் அறிமுகம் செய்கிற காட்சி எல்லாம் அதிரி புதிரி. விவேகானந்தர் தெரு துபாய் குறுக்குச் சந்து துபாய் மெயின் ரோடு என்கிற வெற்றிக் கொடி கட்டு வடிவேல் காமெடியின் லீட் இந்தப் படத்தில் இருக்கிறது என்பது துவங்கி ரஜினி பிரபு நடித்த குருசிஷ்யன் படத்தின் மொத்தக் கதையுமே தங்கச்சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்து பட்டி பார்த்த டிங்கரிங் தான் என்பது வரை ஏகப்பட்ட சுவாரசியங்கள். நாகேஷ் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அவிநாசியாக வருவாரே அப்போது பேசுகிற தொனி முழுவதுமே இந்தப் படத்தில் மணியாக அவர் வரும்போதே பேசியதன் அடுத்த இருக்கையில் இருந்தாற் போல் தான்.
எல்லாவற்றுக்கும் மேல் ரஜினிகாந்தின் ஸ்டைல் சிவாஜியின் உத்தமபுத்திரன் படத்து விக்ரமன் கதாபாத்திரத்தின் வேகம் மற்றும் வெளிப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டது என்பது அவரே பகிர்ந்து கொண்ட தகவல் தான். மேலதிகமாய்ச் சொல்ல இந்தப் படத்தில் பல காட்சிகளில் சிவாஜியின் ஸ்டைல் பிற்பாடு ரஜினி கைக்கொண்டது.
பாரதியின் தோள் பட்டையில் தீக்குச்சியை உரசி சிகரட் பற்ற வைப்பார். பிற்கால ரஜினியின் டீஸராகவே சிவாஜி தெரிவார்.
வண்ணமுழுதாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காணொளிப்பாதையில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.
உய்யவும்.