திருச்சிற்றம்பலம் படம் பார்த்தேன்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு மறுபடியும் முழுசாக ஒரு படம் பிடித்தது.
எடுத்துக் கொண்ட கதையைப் பிரச்சார வாசனை ஏதும் இல்லாமல் சொல்ல முயன்று வென்றிருக்கிறார் மித்ரன்.
தனுஷ், ப்ரகாஷ்ராஜ், பாரதிராஜா மூவரும் ஒரு அழகான க்ரூப் ஃபோட்டோ தருணத்தின் நினைவைப் போல் ரசிக்க வைக்கின்றனர்.
மூவருடைய பாத்திரப் படைப்பும் அருமை. எந்த விதத்திலும் ஒன்றை மற்றொன்று வெட்டவும் செய்யாமல் மேலாதிக்கமும் செய்யாமல் ஒன்றோடொன்று பொருந்திச் செல்வது திரைக்கதையின் பலம். சின்னச்சின்ன நுட்பமான இடங்களைக் கடந்து செல்லும் போதே அட என்று தோன்ற வைக்கிறார் இயக்குனர்.
நித்யாமேனன் அப்படியே எண்பதுகளின் ரேவதியை ரெப்ளிகா செய்திருக்கிறார். ரேவதியை ரசித்துக் கொண்டாடியவர்களுக்கு நித்யாவின் இந்த வேடவழங்கல் இன்பதுன்ப துன்ப இன்பமாகத் தோன்றக் கூடும். அவருடைய அப்பா அம்மா மற்றும் தம்பியாக வருபவர்களும் இயல்பின் வரையறைக்குள் நடித்திருப்பது ரசம். சட்டென்று கடந்து விடுகிற முன் கதை கூறல் காட்சி உட்பட படத்தில் பல விஷயங்கள் உறுத்தவே இல்லை
வந்தாக வேண்டுமே என்றொரு குதிரைவால் குடுமி வில்லன் அவர் பெயர் ஸ்டண்ட் சில்வா என நினைக்கிறேன். ஆனாலும் படம் முடிவதற்கு முன் வில்லனுக்கும் தனுஷ் மற்றும் ப்ரகாஷ்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்படுகிற மோதல் முடிந்தவரை சினிமாவழக்கம் இல்லாமல் படமாக்கி இருப்பது ஆறுதல்.
பாட்டி ஊர் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டி இருக்கலாம். நகைச்சுவைக் காட்சிகளுக்கான நல்ல இடைக்களம் அந்தக் காட்சிகளைத் தவற விட்டிருக்கிறார்கள்.
டெக்னிகல் சமாச்சாரங்களில் குறையேதுமில்லை.
பொயட்டு தனுஷ் மற்றும் அனிருத் பாடல்களைப் பார்வையாளர்கள் மிகவும் ரசிக்கிறார்கள். கத்துகிறார்கள். வரவேற்பெல்லாம் சரிதான். பாடல் என்பது படம் வரும் முன் அதற்கான முதற்கட்டியம். படத்தின் போது அது ஒரு மிகச்சிறந்த உடனாளி. படம் ஓடி முடிந்த பிறகான காலகட்டத்தில் பாடல் தான் விசுவரூப விசுவாசி. அடுத்தடுத்த காலத்துக்குப் படத்தைப் பற்றி மேலெழுதிச் செல்வது அனேகமாக பாடலாய்த் தான் இருக்கும். அந்தப் பொறுப்பேற்றலும் கொண்டு பாடல்களை உருவாக்குவது சிறப்பு.
பின்னிசையில் படத்தின் முக்கிய செக்மெண்ட் ஒன்றின் போது அபூர்வ சகோதரர்கள் படத்தின் அப்பு கமல் மனம் உடைந்து உன்ன நினச்சேன் பாடலை நோக்கிப் போகும் அந்த இசைச் சரடினை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது நாஸ்டால்ஜியா.
பார்வையாளனைத் திரைக்குள் இழுத்துக் கதையின் ஒரு உப-தோன்றலாக மாற்றிக் கொள்கிற படங்கள் சிறந்தவை.
திருச்சிற்றம்பலம் அந்த வரிசையில் வரும்.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.