நாளைய தினம் நவம்பர் 4. தீபாவளித் திருநாள் இந்த வருடம் வருவதற்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இந்த 4 ஆம் தேதியைத் தான். எனக்கு நவம்பர் 4 இன்னும் ஸ்பெஷலான தினம். இதே நவம்பர் 4 ஆம் தேதி தான் 2016 ஆம் ஆண்டில் புகைப்பழக்கத்தை நிறுத்தினேன். ஐந்து வருடங்களை நிறைத்து ஆறாவது வருடத்தின் உள்ளே தடம் பதிக்கிறேன்.
அம்மாவின் ஞாபகங்கள் தீரவே தீராது.அம்மா என்னிடம் மிகுந்த சன்னமான குரலில் எப்படியாவது இந்த சிகரட் பழக்கத்தை மட்டும் விட்டுவிடச் சொல்லிக் கேட்டுக் கொண்டது நினைவுக்கு வருகிறது. என்னாலான அன்புத் திருப்புதலாக அவளுக்கு எதையேனும் செய்திருக்கிறேனா என்று யோசிக்கையில் இந்தக் புகையைக் கைவிடல் எனும் ஒன்று நிச்சயமாய்த் தோன்றுகிறது. புகைப் பழக்கத்திலிருந்து வெளியேறிய பிறகு வாழ்க்கை வண்ணமயமாக மாறிவிட்டிருக்கிறது. புகைப்பழக்கத்தைக் கைவிடுவது வாழ்வின் ஆகச்சிறந்த காரியங்களில் ஒன்று.
எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
வாழ்தல் இனிது