9 மென்மலர் மேல்பனி
1934 ஆமாண்டு த்ரவுபதி வஸ்த்ராபரணம் என்ற படத்தில் நடிகராகத் தன் கலைக்கணிதத்தைத் தொடங்கிய அப்பாவு என்கிற இயற்பெயரைக் கொண்டவரான கம்பதாசன் எழுதிய பல பாடல்கள் தமிழ்த் திரைப்பா வரலாற்றில் நீங்காத இடம் பெறுபவை. ஆரம்ப கால கானங்களில் தனித்துவம் மிகுந்த பாட்டுக்கள் பலவற்றை எழுதியவர் கம்பதாசன். நடிகர் கதாசிரியர் வசனகர்த்தா எனப் பல முகங்களைக் கொண்டவரான கம்பதாசன் தனது 56 ஆவது வயதில் 1973 ஆமாண்டு இயற்கையிற் கலந்தார். கம்பதாசன் எழுதிய வசனங்களும் பாடல்களுக்கு இணையாகப் புகழ் பெற்றவையே. சாலிவாஹனன் படத்தில் ரஞ்சன் நாயகனாக டி.ஆர்.ராஜகுமாரி நாயகியாக நடித்தார்கள்.அந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜி.ராமச்சந்திரன். நாயகனாகப் புகழ் பெறுவதற்கான காலப்பாதையில் எம்ஜி.ஆர் 1945 ஆமாண்டு நடித்த படம் இது. ப்ரியசகி ஷ்யாமளா அன்பு அவன் யார் தந்தை மாமன் மகள் எனப் பல படங்களில் கம்பதாசன் எழுதிய பாடல்கள் புகழோடு ஒலித்தன. கவிதைகள் நாடகங்கள் எனப் பல படைப்புகளையும் செய்தளித்த கம்பதாசன் இன்றைய தமிழ்ச் சந்ததி நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய நற்கவி
டி.ஆர் மகாலிங்கம் மற்றும் பானுமதி ராமகிருஷ்ணா இருவருமே பாடி நடிக்கும் வல்லமை கொண்ட நடிகர்கள்.தங்களுக்கான பின்புலக் குரலையும் தாமே தருகிற வாய்ப்பு திரைவாழ்வில் ஒரு வரம் போன்றது. இருவருமே பல படங்களில் பல்வகைப் பாடல்களைப் பாடியிருப்பவர்கள். 81 வயது வரை வாழ்ந்தவரான தசாவதானி பானுமதி ராமகிருஷ்ணா பலவித விருதுகள் பெருமைகளுக்கெல்லாம் உரியவர். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பானுமதியின் கானவரிசை உண்டு. இசையறிவும் பாடும் திறனும் மிக்கவரான பானுமதி திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமையும் உடையவர். திருநீலகண்டர் படத்தில் அம்பலவாணனை நம்பிய — எத்தனை பேர் உனக்கு நடராஜா — எனும் இரண்டு பாடலும் கண்ணதாசன் எழுதி டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பெரும்புகழ் பாடல்கள். டி.ஆர்.மகாலிங்கம் பேரைச் சொன்னதுமே உப-ஞாபகமாக வந்து விடுவது செந்தமிழ்த் தேன்மொழியாள் என்கிற மாலையிட்ட மங்கை படப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற இசைத்தமிழ் நீ செய்த என்ற பாடலுமே காலத்தால் அழியாத இன்னுமோர் பாடல் தான். திரையில் உச்சத்தையும் வீழ்தலையும் அடுத்தடுத்து கண்ட பிறகு மீண்டும் உச்சம் ஏறிய நட்சத்திரம் டி.ஆர்.மகாலிங்கம் தனது 54 ஆம் வயதில் 1978 ஆமாண்டு காலமானார்.
பானுமதியும் டி.ஆர்.மகாலிங்கமும் பாடிய இந்தப் பாடல் 1959 ஆமாண்டு வெளியான மணிமேகலை என்ற படத்தில் இடம்பெற்றது இசைமேதை ஜி.ராமநாதன் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல் காலம் பல கடந்த பிறகும் ஒலித்துக் கொண்டிருக்கிற நல்லதோர் மெல்லிசைப் பாடல்.இந்தப் பாடல் முழுவதும் மேல்வரி மாறிக் கொண்டே வரவர அடிவரி கானம் பாடிடும் வானம்பாடி நாம் அலைபோலே இணைவோம் என்ற ஒரே வரி திரும்பத் திரும்ப ஒலிக்கிற வகையில் அமைந்திருந்தது.காதல் காட்சியோடு இயைந்து ஒலிக்கிற டூயட் பாடலுக்கான சூழலும் தேவையும் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து வருவது. ஒரு பாடலை எங்கனம் வித்யாசம் செய்வது என்பதில் அதன் வெற்றிகரமும் அடங்கி இருக்கிறதல்லவா..? இந்தப் பாடலும் பலவித சிறப்புக்களைத் தனதே கொண்ட மாமதுர கானம் தான்
மெட்டுக்குள் சென்றமர்ந்து கொண்ட பிறகு எந்தவகையிலும் வெளித் தோன்றாத கச்சிதம் கவிதைக்கும் பாடலுக்குமான பிரதான வேற்றுமை. மரபுக்கவிதை போல் இசைத் தன்மைக்கு இயைந்து செல்வது புதுக்கவிதையின் இயல்பல்ல. நவீன கவிதை தன்னிலிருந்து இசையை வெளியேற்றுவதையும் பெரும்பகுதி நிராகரிப்பதையும் தன் இயல்புகளாக்கி இருப்பதும் கவனிக்கத் தக்கது.
பாடல் என்பது பல நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு எழுதப்பட வேண்டிய எழுத்துப்பண்டம். எத்தனை காலமானாலும் எந்த ஓர் பாடலும் திருத்தங்கள் மாற்றங்கள் என்கிற சுடுவளையங்களைத் தாண்டி நிலைபெற வேண்டி இருப்பதில் யாதொரு மாற்றமும் இல்லை. கம்ப தாசனின் பாட்டுத் திறம் மெட்டுக்குச் சற்றும் தப்பியும் பிசகியும் ஒலிக்காத சந்த ஒழுங்கும் சப்த ஓர்மையும் கொண்டொலித்த பாடல் புனையும் திறன் தான்.அவரது இந்தப் பாடல் இவற்றை அற்புதமாக மெய்ப்பித்துத் தன்னை ஒலிக்கும் மாயாமுதம்.
பாட்டெழுதுவதன் முதற்பாடம் எது தெரியுமா..? ஒரு பொன் வரியைக் கொண்டு எந்தவொரு பாடலும் தொடங்கப் படவேண்டும். இரண்டாம் வரிக்குத் தருவதற்கு கேட்பவரிடம் எந்தவொரு வியப்பின் துளியையும் மிஞ்சுமென்று எதிர்பார்க்கக் கூடாது. அப்படி மிஞ்சினால் அது பாடலல்ல பழுது. ஒரே அடியை ஓங்கி அடித்தாக வேண்டியது பாட்டாசிரியனின் கடமை. வரலாற்றில் தனக்கென்று தனி இடம் பற்றிய சாஸ்வத கானங்கள் எதை எடுத்து நோக்கினாலும் இந்த விதிக்கு உட்பட்டதாகவே இருக்கும். பொன் நிகர் முதல் வரி பல்லவி என்பதையே பொன் வரிப் பூக்களின் பூக்கூடை என்று புரிந்தவர் மட்டும் தான் பாடல்வானில் பேரொளி தந்தவர்கள். பிறரெல்லாம் சிறுகாலப் பிரகாசர்களாய் சிலகண மின்மினிகளாய் வந்து போனவர்கள் மட்டுமே.
கண்களின் வெண்ணிலவே உல்லாச
காதல் தரும் மதுவே
சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்
எத்தனையோ பேர் எழுதிய இரண்டு கவிப்பொருட்கள் கண்களும் வெண்ணிலவும் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. ஆனாலும் காவியமாகிற காரணம் எளியது தானே கண்களின் வெண்ணிலவே என்று எழுதிய ஒரே கவி கம்பதாசன். இந்தப் பாடலெங்கும் உருவகித்துத் தருகிற தமிழமுதத் தேன்சொற்கள் இன்றைய இந்தக் கணத்தையும் திறந்து குன்றாப் புதுமையோடு ஒலிப்பது தான் அவரைக் காவியக் கவியாக நிலை நிறுத்துகின்றன.
காவிரி ஆழ்கடல்போல் கண்காணா காற்றொடு
மென் குளிர்போல் ஒன்றாக என்றெழுதும் கம்பதாசன்
என்னுயிர் மாமணியே இப்பாரில் யாதுமில்லை தனியே
என்றெழுதும் போது ஈர்க்கிறார்.காதலில் கசியும் யாரொருவர் கவனத்தையும்
விண் சேரும் கார்முகிலே ஒன்றாக ஒன்றுதல் நின் எழிலே என்ற வரியெழுதிக் களவெடுக்கிறார்
இளமையின் தேன் நகையே விண்மீது ஒளிதரும் தாரகையே மென்மலர் மேல்பனியே
என்றெல்லாம் வருடியே கொல்லும் வாடைக் காற்றையெல்லாம் வார்த்தைப் படுத்தினாற் போல் எழுதிய வகையில் கம்பதாசனின் கவித்திறம் முழுமைக்கும் சாட்சியம் பகிர இந்த ஒருபாடற் பதம் போதுமாகிறது அல்லவா?