Post Views:
291
தேன் மழைச்சாரல் 5
கற்பனைக் கண் காணி
அருமை மகள் அபிராமி படம் 1959 ஆம் வருடம் வெளிவந்தது. வீ.கிருஷ்ணன் எழுதி தயாரித்து இயக்கிய படம். ப்ரேம் நஸீர் எஸ்வி சாரங்கபாணி டி.எஸ். துரைராஜ் ராஜசுலோச்சனா ஜெயந்தி முத்துலக்ஷ்மி ஆகியோர் நடித்த வெற்றிப்படம்.
தன் 62 ஆம் வயதில் சென்னையில் காலமான மலையாளத்தின் எவர்க்ரீன் சூப்பர்ஸ்டார். 1979 ஆமாண்டு ப்ரேம் நஸீர் நடிப்பில் 41 படங்கள் வெளியானது கேரள சாதனை. எழுநூறுக்கும் அதிகமான படங்களில் நடித்த நஸீர் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை வண்ணக்கிளி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜியுடன் பாலும் பழமும் பாவை விளக்கு போன்ற படங்களில் கவுரவத் தோற்றங்களை ஏற்ற நஸீர் மலையாளத்தின் திரை கம்பீரம்.தமிழில் பிசகின்றி ஜொலித்த நல் நடிகர் நஸீர். அருமை மகள் அபிராமி படத்தில் அவரது நடிப்பு காண்விழிகவரும் யதார்த்தம்.
இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசைமேதை வீ.தக்ஷிணாமூர்த்தி அவர்கள்.93 வருட காலம் புவிவாழ்வு வாழ்ந்த அவர் மலையாளம் தமிழ் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். இசையொழுங்கு விலகாத நேர்த்தியான பாடல்களையே இவர் இசைத்தளித்தார். நெடிய ஆலாபனையுடனான பாடல்கள் இவரது தனித்துவம் என்று சொல்லத் தகும். அருமை மகள் அபிராமி படத்தின் பாடல்கள் தேனைவிடவும் தித்தித்தவை. பல தலைமுறைக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றியவர். தீர்க்கமான பின்னணி இசையும் யூகத்திற்கு அப்பாற்பட்ட மென்மை மிகுந்த பாடலிசையும் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகளின் பெயர்மொழிந்து நிலைப்பவை.
கு.சா.கிருஷ்ணமூர்த்தி 1914 ஆமாண்டு கும்பகோணத்தில் பிறந்தார். மொழிப்பற்றும் அரசியல் ஆர்வமும் கொண்டவராக விளங்கினார் கவிஞர்.கு.சா.கி. உள் நாட்டில் மட்டுமல்லாது அயல்நாடுகளிலும் இசை நாடக நிகழ்வுகள் பலவற்றில் பங்கேற்ற பெருமை இவருக்கு உண்டு. தமிழகம் என்ற பேரில் பதிப்பகம் ஒன்றை நடத்தியிருக்கிறார். கதை கட்டுரை நாவல் எனப் பல்வகை நூல்களைப் படைத்த கு.சா.கி எழுதிய பல பாடல்கள் காலத்தால் அழியாமல் கானவாரிதியாய் நிலைத்திருப்பவை. அந்தமான் கைதி படத்திற்குக் கதை வசனம் மற்றும் பாடல்களை எழுதினார். ராஜாம்பாள் பெண் மேனகா எது நிஜம் மந்திரவாதி வாழ்விலே ஒருநாள் அவன் அமரன் தை பிறந்தால் வழி பிறக்கும் ஆளப்பிறந்தவன் திருடாதே உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். ரத்தக்கண்ணீர் படத்தில் இடம்பெற்ற குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்ற பாட்டு இவரது புகழை விண்ணளவச் செய்தது.நிலவோடு வான்முகில் விளையாடுதே என்ற பாடல் ராஜராஜன் என்ற படத்தில் இன்றளவும் கவர்வது.கலைமாமணி பட்டம் பெற்ற கு.சா.கி தனது 75 ஆம் வயதில் சென்னையில் காலமானார்.
முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டவரான சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பல பாடல்கள் தனித்து ஒலிப்பவை ஒரு பாடலை முழுவதுமாகத் தனதாக்கிக் கொள்கிற வல்லமை சீர்காழியிடம் இருந்தது. சீர்காழி கோவிந்தராஜனின் குரல் எல்லாப் பாடல்களுக்குமானது அல்ல. கண்ணான கண்ணனுக்கு அவசரமா என்ற பாடலை ஆலயமணியில் கேட்டிருப்போம் நல்லவன் வாழ்வான் படத்தில் இடம்பெற்ற குற்றாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா என்ற பாடல் இன்னோர் சான்று.அதே படத்தில் சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்ற பாடலைக் கேட்டவர் மயங்குதல் நிச்சயம். மணியோசை படத்தில் தேவன் கோயில் மணியோசை பாட்டை மறக்கமுடியுமா..? நீர்க்குமிழியில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடல் கரைத்துவிடாதா யாரையும்? உயிரா மானமா படத்தில் குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே என்ற பாட்டு வேறோர் ரகம்.ஸ்கூல் மாஸ்டரில் இடம்பெற்ற அகர முதல எழுத்தெல்லாம் என்ற் பாட்டு மனம்வருடும். ஒவ்வொரு பாடலும் சவால் என்றே பாடிக் கடந்தவர் சீர்காழியார். எத்தனை பாடினாலும் தேயாத பொற்குரல் அவருடையது. அருமை மகள் அபிராமி படத்தில் இடம் பெற்றிருக்கும் இணை செய்ய முடியாத எழிலோவியம் என்கிற பாடல் சீர்காழியார் பாடிய மிகச் சிறப்பான பாடல்களில் ஒன்று இந்த பாட்டில் இடம்பெறக்கூடிய துவக்க இசை மற்றும் இசைக் கோர்வைகள் சீர்காழியின் குரலில் மிளிர்வது நிஜம்.
இணை சொல்ல முடியாத எழிலோவியம்
இன்பக் கனவெல்லாம் நினைவாக்கும் கலை காவியம்
கணைப் போன்ற விழியும்
செங்கனி போன்ற மொழியும்
கற்பனை கண் காணியில் கவி மாரி பொழியும்
இதழமுதம் தனை பருகும் புதுமலர்
தேன் அதரம்
அதன் சுவை பெருகும்
இதழமுதம் தனை பருகும் இதயமுடன் நாடி வரும்
வந்து தரும் இசையினிலே தனை மறந்தே மகிழும் இவள்
இணை சொல்ல முடியாத எழிலோவியம்
கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியிருக்கும் இந்த பாடல் இசை எத்தனை தீர்க்கமானதோ
அதற்கேற்ப மொழியால் பாடலை வசீகரம் செய்ய முடியும் என்பதை மெய்ப்பிக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டிருக்கும் இந்த பாடல் இதன் வரிகள் தமிழ் திரைப்படங்கள் உச்சபட்ச தேன்தமிழ் இன்பத்தை சாட்சியும் செய்கின்றன. காதல் பாடல் என்று மேலோட்டமாக கடந்துவிட முடியாது . கற்பனை கண்காணியில் கவி மாரி பொழியும் என்கிற வரி கொள்ளை இன்பமாய் பெருகுகிறது அல்லவா
மின்னலை குழம்பாக்கி வார்த்தெடுத்த வடிவம்
வில்லை இரு கூறாக்கி வளைந்த செம்புருவம்
விண்ணில் தவழும் முழுமதி போல் முகவுருவம்
அதன் வித்தையெல்லாம் இத்தரை மேல்
வித்தரிக்கும் பருவம்
பண்பு சேரன்புடன் பழகுவதில்
என்றுமே இன்பமே பொங்குமே
என் மனச் சோலையில் என்றுமே இன்பமே
என் மனச் சோலையை உரிமையுடன்
தன்வசம் ஆக்கியே கனிவுடன்
விரைந்தே வளைந்தே சுழன்றே
திறமையுடன் நடனமிடும் வனிதை இவள்
அழகிலே
இனிமை மிகும் இசையிலே
மழையே தமிழ் கலையிலே
புனித நிலை
இணை சொல்ல முடியாத எழிலோவியம்
முற்றிலும் மாறுபட்ட செறிவும் தொடர்ந்து நில்லாதோடும் மொழி நதிப்பெருக்குமாய் எத்தனை முறை கேட்டாலும் இந்தப் பாடல் நம்மை மயக்கத் தான் செய்கிறது. சீர்காழியாரின் குரலில் கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் எழுத்தோவியத்தை மின்னச் செய்திருப்பது இசையறிஞர் தக்ஷிணாமூர்த்தியின் நாதவெள்ளம்.
என்றும் அழியாத கானமாலை இந்தப் பாடல்