தேன் மழைச்சாரல் 14
க ண் ம ணி சு ப் பு
பூவிலங்கு இளங்கன்று புதியவன் நெஞ்சத்தை அள்ளித்தா தர்மபத்தினி புதிர் மிஸ்டர் கார்த்திக் வா அருகில் வா போன்ற படங்களின் வசனம் கண்மணி எழுதியது. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற தமிழ்ப் படமான நம்மவர் படத்துக்கும் சுப்பு தான் வசனம் எழுதினார்.
இளையராஜா இசையில் தர்மபத்தினி படத்தில் இடம்பெற்ற நான் தேடும் செவ்வந்திப் பூவிது பாடல் வான் தொட்ட வெற்றிப் படைப்பு. இதில் இளையராஜா திரையில் தோன்றியது பாடலுக்கான கவன ஈர்த்தலாகவே மாறியது. அந்த வருடம் வெளியான பாடல்களில் அத்தனை வெற்றி அடைந்த இன்னோர் பாடலில்லை என்று சொல்லத் தக்க அளவுக்கு வெற்றியின் உச்சியில் சென்று நின்றது இந்தப் பாடல். ராஜா கைய வச்சா படத்தில் மருதாணி அரைச்சேனே பாடல் மனோவுடன் ராஜாவும் சேர்ந்து பாடவும் செய்த பாடல். இதுவும் கண்மணியின் பாமணி தான். புதிய ராகம் படத்தில் வாடுமோ ஓவியம் பாடுமோ காவியம் பாடல் தெளிவான நீரோடை போன்ற பாடல். நல்ல பிரபலம் அடைந்ததும் கூட. மனோ மலேசியா இணைந்து பாடிய மருதாணி வச்ச பொண்ணு என்ற பாடலைக் களத்தூர் கிராமம் படத்துக்காக எழுதினார் சுப்பு.
கண்மணி சுப்பு இயக்கிய சித்திரைப்பூக்கள் படத்தில் எம்.எஸ்.முராரி இசையில் சங்கீதம் கேட்டால் என்ற பாட்டையும் அவரே எழுதினார். காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை இயக்கிய ஆர்.பாலுவின் அன்பே உன் வாசம் படத்துக்காக தீனா இசையில் உதித் நாராயண் பாப் ஷாலினி பாடிய எங்க போறா எங்க போறா என்ற பாடல் சுப்பு எழுதியது தான். முந்தைய சோலைக்குயில் படத்தில் முராரி இசையில் சுப்பு எழுதிய கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து ஒலித்த ரேடியோ ஹிட் பாடலாக அமைந்தது.மிஸ்டர் கார்த்திக் படத்தில் சொர்க்கம் போக வேண்டுமா என்ற பாட்டு சுப்பு எழுதியது.இதனை எஸ்பிபி பாடினார். தேவா இசையில் மாண்புமிகு மாணவன் படத்தில் டிசம்பர் மாதத்துப் பனித்துளியே உள்ளிட்ட சில பாடல்களை எழுதினார்.
இதைப் பாடியவர் ஜேசுதாஸ். தாஸேட்டன் பாடிய மொத்தப் பாடல்களிலும் தனித்துவமான பாட்டுக்களை மட்டும் வகைப்படுத்த விழைந்தால் அவற்றுள் இந்தப் பாட்டுக்கொரு நிச்சய இடமிருக்கும். ரசிக்க வைக்கும் பாடலிது
கிட்ட வந்து நெருங்குறப்போ கோபமென்ன பூங்குருவி
கண்மணி சுப்பு எல்லா வகைப்பாடல்களையும் எழுதவல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் பாடலிது. சங்கர் கணேஷ் இசையில் ராஜ்யம் இல்லாத ராஜாக்கள் என்றோர் படம். வெளிவந்திருந்தால் பல கதைகள் மாறியிருக்குமோ என்னவோ. இந்தப் படத்தில் சுப்பு கண்ணதாசன் என்ற பேரில் கண்மணி சுப்பு பாடல்களை எழுதினார். அவற்றுள் ஒன்று சுகம் தரும் பொன்மாலைக் காற்றே வா என்ற பாடல். ஜேசுதாஸூம் வாணி ஜெயராமும் பாடிய டூயட் பாட்டு இது. இன்றெல்லாம் கேட்கலாம். அப்படி இனிக்கும்.
இதுதான் திருநாள் இவள் அதை அறிந்தது
இடையிசைத் தூவல்கள் மனசைப் பிழிந்தெடுத்து ஓவியம் வார்த்தாற் போல் இழைத்திருப்பர் இசையிருவர். வாணியும் தாஸூம் பாடிய பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறத் தகுந்தது. இசையா பாடிய குரல்களா அல்லது வரிகளா என்று பிரித்தறிய முடியாத வசீகரமாய் பாடல் முழுமையும் விரியும்.
பார்வை சுவைமாறும் நேரம் பூக்கள் இதமாக மோதும்