Post Views:
204
தேன் மழைச்சாரல் 2
நியாய தயாநிதி
பேரொளிச் சூரியனும் புலரியின் போழ்தில் சிறுபுள்ளியாய்த் தானே தன்னைத் துவங்கிக் கொள்கிறது அப்படிப் பார்க்கையில் தமிழ்த் திரைப்பா சரிதத்தை எழுத முனையும் யார்க்கும் தொடக்கப் புள்ளியாகத் தென்படுகிற முதற் பெயர் பாபநாசம் சிவன் என்பதாய்த் தான் இருக்க முடியும். 1890 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் போலாகம் கிராமத்தில் ராமாமிர்தம் யோகாம்பாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்த சிவனுக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் ராமைய்யா என்பது. தன் ஏழு வயதில் தந்தையை இழந்த ராமைய்யா தஞ்சையிலிருந்து கேரளம் பெயர்ந்து திருவனந்தபுரத்தில் தாய்மாமன் வீட்டில் வளர்ந்தார். கர்நாடக இசையை முறையாகக் கற்றுத் தேர்ந்த ராமையா பாபநாசம் சிவன் என்ற பேருக்கு மாறினார். தமிழ் மற்றும் கன்னடத் திரை உலகின் ஆரம்ப கால இசையமைப்பாளர்களில் முதன்மையும் பெரும்புகழும் பெறத் தொடங்கினார் . இசையமைப்பிலும் பாடல்களைப் புனைவதிலும் ஒருங்கே திறன் கொண்டவரான சிவன் தியாகராஜ பாகவதர் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரது திரைவாழ்வு ஒளியேற முக்கியக் காரணமாக இருந்தார். 1962 இல் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்ற சிவனுக்கு 1972 ஆமாண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. அக்டோபர் 1 ஆம் தேதி 1973 ஆம் வருடம் தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார் இந்த சங்கீத மாமேதை.
1941 ஆம் ஆண்டில் உருவாகி வெளியான திரைப்படம் அசோக் குமார். எம்.கே.தியாகராஜபாகவதர் பிரதான பாத்திரத்தில் தோன்றிய இந்தப் படத்தில் மகேந்திரன் என்கிற சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்த எம்ஜி.ராம்சந்தர் தான் பாகவதருக்கு அடுத்து பட்டத்துக்கு வந்த சூப்பர் ஸ்டார். தன் சொந்தக் குரலில் பாடி நடித்த தலைமுறையின் உச்சபட்சப் புகழை அறுவடை செய்தவர் எம்.கே.டி. அவரைப் போல் வாழ்ந்தவரும் இல்லை வீழ்ந்தவரும் இல்லை என்று கூறத் தக்க அளவில் சாதனைகளும் சோதனைகளும் நிரம்பிய நட்சத்திரத்துவ அவருடையது. சிறைச்சாலைக்கு முன்னும் பின்னுமாய் இரண்டாகப் பிளந்தது சரித்திரம். பெரு நெடுங்காலம் பாகவதரின் குரலில் தமிழ்த் திரை ரசிக உலகம் மயங்கிக் கிடந்தது. அவர் நடிப்பில் 1944 ஆமாண்டு திரைகண்ட ஹரிதாஸின் சாதனை அளப்பரியது. ஹரிதாஸ் படத்தில் பாபநாசம் சிவனும் ஜி.ராமநாதனும் இணைந்து இசைத்து சிவன் எழுதிய பாடலான “மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற பாடல் விண் தாண்டிய பிரபலத்தை விளையச்செய்தது. பாகவதரின் கர்ணாமுத கானங்களுக்காகவே பல படங்கள் பணவேட்டை புரிந்தன .
1910 ஆமாண்டு மண்ணில் பிறந்த மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் என்கிற தியாகராஜ பாகவதர் தன் 24 ஆம் வயதில் கதாநாயகனாக மிளிரத் தொடங்கியவர். இரு வேடங்களில் நடித்த ஒரே படமான சத்யசீலன் திருநீல கண்டர் புதுவாழ்வு ஆகிய 3 படங்களைத் தயாரித்திருக்கிறார். புதுவாழ்வு அவர் இயக்கிய ஒரே படம் அவரது கடைசிப் படமான சிவகாமி அவரது மரணத்திற்குப் பிறகு தான் வெளியாயிற்று. காலமான போது பாகவதருக்கு வயது வெறும் 49 மட்டுமே. நடிப்பில் எம்ஜி.ஆரும் பாடுவதில் டி.எம்.சவுந்தரராஜனும் பாகவதரைத் தமது முன்னோடியாக பேரொளியாக எண்ணிப் பின்பற்றியவர்கள். அவரையே தமது ஆதர்ஸமாகக் கொண்டவர்கள். அந்த இருவரும் அவரவர் துறையில் முதலிடம் பெற்றதையும் இணைந்து காலத்தால் அழியாத பல பாடல்களை உருவாக்கியதையும் தியாகராஜ பாகவதரின் சரித நீட்சியாகச் சொல்லும் போது வரலாற்றின் கனம் கூடிவிடுகிறது.
அசோக் குமார் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் தமிழ்த் திரைப்பா சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியத் திரைப்பாடல்களில் தத்துவத் தாக்கத்தோடு உருவாக்கப் பட்ட பாடல்களின் முதல் வரிசையில் இடம்பெறத் தக்க பாடல் இது. எளிமையும் செறிவும் சிவனின் வல்லமைகள். சொல்ல வந்ததை யூக-பேத-மாச்சரியங்களுக்கு எள் நுனியளவும் இடம் தராத துல்லியத்தோடு சொல்லிச் செல்வது பெருங்கலை. ஆலத்தூர் சகோதரர்களில் இளையவரான சுப்ரமணியத்தின் மெட்டமைப்பில் பாகவதர் குரலில் பாடுவதற்காகப் பாபநாசம் சிவன் எழுதிய இந்தப் பாடல் எத்தனை எளிமையாகத் தோற்றமளிக்கிறதோ அத்தனை கடுமையான அர்த்தசத்தியம் மிக்கது. ஒரு சொல்லைக் கூட மாற்றி ஏன் இடம் மாற்றிக் கூட யோசிக்க முடியாத அளவுக்கு மாபெரும் வார்த்தை செல்வாக்கு கொண்டு இன்றளவும் ஒலித்து வருகிற இறவாப்புகழ் பாடல் இது.பத்தே வரிகளில் இரட்டித்து ஒலிக்கிற இரத்தினப் பாடல் பல நூறாண்டுகள் தாண்டியும் ஒலிக்கத் தக்க ஞானவல்லமை மிகுவது எழில்.
—
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
உத்தம மானிட ராய்ப் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய நியாய தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே…
மண் மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
—
இதன் இறுதி வரியில் தொடரிசைச் சொற்கூட்டாக இடம்பெறுகிற “பாழ்மரமே வெறும் பாமரமே” என்ற வரியை மட்டும் கடந்து வருவதற்குக் காலம் போதாது. எத்தனை எளியதோ அத்தனை அரியது பாபநாசம் சிவன் எழுதிப் பாகவதர் பாடிச் சென்ற பாடற்தமிழ்
தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் பாடல்கள் ஆரம்ப காலத்தில் அரிதாகவே ஒலித்தன. காதல் என்ற சொல்வாக்கு செல்வாக்குப் பெறுவதற்கு முந்தைய காலம் அது. காமம் பாவம் என்று பொருள்படுகிற பாடல்களே அதிகதிகம் இடம்பெற்றன. மாயமந்திரக் கதைகள் இதிகாச புராணக் கதைகள் அதிகமும் சினிமாவில் படமாக்கப் பட்டன. அப்படியான காலத்தில் காதலை பக்தியோடு குழைத்துத் திளைத்த பாடல்களும் திரைப்பாடல்களில் இடம்பெற்றன. நாயகனும் நாயகியும் சேர்ந்து இறை பக்தியோடு அன்பை காதலை பகிர்ந்து கொள்ளும் பாடற்காட்சிகள் அனேகம். அப்படியான பாடல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது.
1950 ஆமாண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான பாரிஜாதம் டி.ஆர்.மகாலிங்கம் பி.எஸ்.சரோஜா எம்.வி.ராஜம்மா ஆகியோர் நடித்த படம். சி.ஆர்.சுப்புராமன் எஸ்.வி வெங்கட்ராமன் இணைந்து இசையமைத்த இதில் இடம்பெற்ற “வான் நிலவே மனமோகன நாதன் கண்ணன்” எனத் தொடங்கும் பாடலானது பாபநாசம் சிவன் எழுதி டி.ஆர்.மகாலிங்கம் டீவீ ரத்தினம் இருவரும் பாடியது.
இதனொரு விள்ளலைப் பார்க்கலாம்.
“வேய்ங்குழல் நான் இசை கீதமும் நீயே
மாதவா முகுந்தா
காதல் கடலினில் எந்நாளுமே அலை போலாடி
ஆனந்த வாழ்வுறுவோம்”
என்று காதலில் உருகும் நாயகியிடம் பதிலுக்கு நாயகன்
“கனிவாய் பேசும் கிளியே உந்தன்
காதல் அடிமை நானே”
மெட்டாலும் சிவன் எழுதிய சொற்செட்டாலும் மனம் கொய்கிறது இந்தப் பாடல் பாடிய குரலாலும் கொஞ்சுமொழியாலும் தன்னை மறக்க விடாமல் செய்து விடுகிற ராஜ கானம்.