புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்ற பேருக்குச் சொந்தக்காரரான பி.யு.சின்னப்பா தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் இணையில் ஒருவர். எம்கே.தியாகராஜ பாகவதரின் சமகால சகா. எம்ஜி.ஆரை விட 6 மாதங்கள் மட்டுமே மூத்தவரான சின்னப்பா மண்ணில் வாழ்ந்த வருடங்கள் வெறும் 36 மட்டுமே. பாடி நடிக்கும் முதல் தலைமுறை நடிகர்களில் இனிய குரலும் சங்கீத ஞானமும் நன்கு கைவரப் பெற்றவர். இவரது மகன் ராஜபகதூர் எண்பதுகளின் தொடக்கத்தில் கோயில்புறா உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தார்.
பி.யு.சின்னப்பாவின் குரல்வளம் அலாதியானது. அவரது தந்தை ஒரு மேடைக்கலைஞர்.சின்னப்பாவின் ஆரம்பகாலம் வறுமை நிறைந்தது. மதுரை பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞராக விளங்கிய சின்னப்பா தனது 20 ஆவது வயதில் நாயகனாக நடிக்கத் தொடங்கி பதினைந்து வருடங்களில் 25 படங்கள் நடித்தவர். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய சின்னப்பா பாடிய பல பாடல்கள் அழியாப் புகழோடு ஒலிப்பவை. இளம் வயதில் திடீர் மரணத்தினால் தன் லட்சக்கணக்கான ரசிகர்களை துயரவியப்பில் ஆழ்த்திச் சென்ற சின்னப்பா, நடித்த படங்களுக்காகவும் பாடிய கானங்களுக்காகவும் என்றென்றும் நினைவிலிருப்பவர். அனாயாசமான முகபாவங்களுக்கு உரிய சின்னப்பாவின் வசன உச்சரிப்பு அவருடைய பெரிய பலம். சட்டுச் சட்டென்று குணவுருவை மாற்றிக் கொள்கிற முகவெட்டும் அரிய குழைதலும் கலைதலும் கொண்ட அவரது குரல்வளமும் அவரது செல்வந்தங்கள். வாழ்ந்த காலத்தில் குன்றாவைரமெனப் பரிபூர்ண நடிகராக சின்னப்பா திகழ்ந்தார். அவருடைய நடிப்பில் உருவான ரத்னகுமார். கிருஷ்ணன் பஞ்சு இரட்டை இயக்குனர்கள் இணைந்தியக்கி 1949 டிசம்பர் 15 ஆம் தேதி வெளியான படம். இன்றளவும் காண்கையில் சுவை குன்றாத காவியத் தன்மையோடு விளங்குகிற திரைப்படம் இது.
கேலி மிகச் செய்வாள் கேட்டதெல்லாந்தான் தருவாள்
என்று புலம்பி உருகிக் கலைந்து நசிகிறான் ரத்னகுமார். இந்தப் பாடல் முடியும் போது எத்தனை பெரிய கல்மனதையும் அயர்த்தி விடுகிறது. காதலின் சாட்சியவாதம் இது. முழு மனத் திறப்பு அல்லவா இந்தப் பாட்டின் சாரம்..? மனம் திரும்புதலின் ராஜகானம் இது. ஒப்புக் கொடுத்தலின் உச்சபட்ச இயரத்திலிருந்து தன்னையே மெழுகாய்த் திரியாய் ஒளியாய் மாற்றிய இதயத்தின் கேவல் இது. இத்தனை அழகாக இதனைத் திரைப்பாடலில் கொண்டு வந்து மிளிர முடியும் என்பது சாகசம். பி.யு. சின்னப்பாவின் உயரிய குரல் மேதமைக்கொரு சான்றாவணம்.காதலின் கேவலை நசிவை கலக்கத்தை இழப்பின் பெருவாதையை இதை விடத் துல்லியமாக வெளிப்படுத்தி விட முடியாது என்றாற் போல் பாடினார் சின்னப்பா.
ராஜதண்டனை வழங்கப்பட்ட ரத்னகுமார் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். மன்னரை சந்தித்து கெஞ்சுகிறாள் ரத்னகுமாரின் மனைவி மாலதி