தேன் மழைச்சாரல் 4

 தேன் மழைச்சாரல் 4
 காட்டுக்குள்ளே கண்ட பூ


சவுந்தரராஜனின் குரல் அலாதி. அதன் பொதுத் தன்மை மிகவும் கனமாக ஒலிப்பதானாலும் எத்தனை மென்மையான பாடலையும் பாடுகிற வல்லமை மிகுந்தவர் டி.எம்.எஸ். எந்த ஆழத்திற்கும் உயரத்திற்கும் பறந்து திரும்பக் கூடிய குரல்பறவை. இணையற்ற கணீர் பாடல்களையும் மிருதுவான கானங்களையும் பாடித் தந்த மேதை அவர். தொகுளுவா மீனாட்சி சவுந்தரராஜன் என்ற முழுப்பெயரைக் கொண்ட அவரது தாய்மொழி சவுராஷ்ட்ரா. அவரளவுக்குத் தமிழை அழகுற உச்சரிப்பவர் இல்லை என்று மெச்சத் தக்க மொழிமாண்பு கொண்டிருந்தார். சோகப் பாடல்களுக்கும் உற்சாகப் பாட்டுக்களுக்கும் ஒருங்கே வசமான ஒரே குரலாக அவரது காலமெல்லாம் ஒலித்தார். அவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் என்றும் அழியாக் காவியத் தன்மை மிகுந்தவை. ஐம்பதாண்டுகாலங்கள் பத்து மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் டி.எம்.எஸ். தானே இயற்றிப் பாடுகிற வல்லமை கொண்ட அவர் அவ்விதம் பாடிய பல பக்திப்பாடல்கள் குறிப்பிடத் தக்கவை. 91 வயது வரை வாழ்ந்த டிஎம்.எஸ் எம்ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் என்கிற இரு உச்ச நட்சத்திரங்களுக்கான முதல்-குரல்-பாடகராக அவர்களது நடிகவாழ்வெல்லாம் தனித்து விளங்கியவர். இந்தியப் பாடல் வானில் தனியுயர் துருவநட்சத்திரம் டி.எம்.எஸ்.
Shaji: T M Soundararajan – Singer of The People
1956 ஆமாண்டு வெளியான “நான் பெற்ற செல்வம்” படம் கே.சோமு இயக்கியது. சிவாஜி கணேசன், ஜி.வரலட்சுமி, எம்.என்.நம்பியார்,எம்.என்.ராஜம், சிடி.ராஜகாந்தம்,வீகே.ராமசாமி,கே.சாரங்கபாணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சமூகப்படம். இதற்கு இசையமைத்தவர் இசைமேதை ஜி.ராமநாதன். பாடல்கள் எழுதியவர் கவி.கா.மு.செரீப்.
காமு செரீப் இயல்பான தமிழில் அழகான பாடல்களைப் புனைந்தவர். சூழலுக்கான பாடலாகச் சொல்ல வந்த கருத்தைத் துல்லியமாகவும் அதே நேரம் எளிமையாகவும் சொல்லிச் சென்றவர். மெட்டு எத்தனைக் கடினமானதாக இருந்தாலும் சிடுக்கு முடுக்கான ஒரு சொல்லைக் கூட எழுதாதவர் செரீப் என்பது அவரது பெருமை. மக்களைப் பெற்ற மகராசி படத்தில் ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்ற பாடல் எக்காலத்திலும் நிலைத்து ஒலிப்பது முதலாளி படத்தில் குங்குமப் பொட்டுக்காரா கோணக் கிராப்புக் காரா எனத் தொடங்கும் சிலேடை மிளிரும் பாடலை டி.எம்.எஸ் எம்.எஸ்.ராஜேஸ்வரி இணைந்து பாடினார்கள். அந்தப் பாடலும் செரீப்பின் பெயரை உரக்க ஒலிக்கும்
கவி கா. மு. ஷெரீப் – Smart Tamil News

குழந்தமை போற்றும் திரைப்பாடல்களின் வரிசையில் முதல் சில இடங்களுக்குள் எப்போதும் இடம்பிடிக்கக் கூடிய பாடல் இது. நான் பெற்ற செல்வம் என்ற வரியை ஆரம்பிக்கையிலேயே மனமெல்லாம் குளிருணர்ந்து நெகிழும். எத்தனை கேட்டாலும் தீராத வேறொன்றாய்த் தன்னைப் புதுப்பித்தபடியே செல்லும் வல்லமைகானம் இது. இதனைத் தன்னிகரில்லாத் தன் பொன் குரலால் வருடத் தந்தவர் டி.எம்.எஸ்.

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
(நான் பெற்ற)
தொட்டால் மணக்கும் சவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் நீ

(நான் பெற்ற)

டி.எம்.எஸ்ஸின் குரல் எல்லாப் பாடல்களுக்குமானது என்பதை மெய்ப்பிக்கும் இந்தப் பாடலைக் கேளுங்கள். நாடோடித் தன்மை மிகுந்து ஒலிக்கிறது. வீதியில் ஆடிப்பாடும் ஒரு கலைஞனின் மனவிரிதலாக இந்தப் பாடலின் வருகை நிகழ்கிறது. புத்தம் புதிய நல்லிசையின் விரைதலில் ஒப்பிலா நிரவல்களோடு இதனைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.
காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணை பறிக்குது
எந்தன் கண்ணை பறிக்குது –
அதன்கம கமக்கும் வாசம் வந்துஆளை மயக்குது
சும்மா ஆளை மயக்குது
இன்பம் துன்பம் அனைவருக்கும் ஒண்ணா இருக்குது
உலகில் ஒண்ணா இருக்குது ஆனால்
உணர்ச்சி மட்டும் விதம் விதமாய்மாறிக் கிடக்குது உலகில்
உணர்ச்சி மட்டும்விதம் விதமாய் மாறிக் கிடக்குது.

இந்தப் பாடல் முழுவதையும் அதன் தெம்மாங்குத் தன்மை கூடவோ குறையவோ செய்திடாமல் கச்சிதமான புள்ளியில் ஊசி நுனியில் நிற்கிற வைரத் துகள் போலவே பாடினார் என்றால் தகும்.

இந்தியத் திரைப்பாடல்களில் தத்துவப் பாட்டுக்களைத் தனியே தொகுத்துப் பார்க்கையில் செரீப் எழுதிய பல பாடல்களுக்கு அங்கே இடமிருக்கும். இந்தப் படம் செரீப் எழுத்தின் உச்சம் எனச் சொல்லத் தகும் முத்தான பாடல்களை எழுதினார். எப்போது கேட்டாலும் கேட்பவரைக் கலங்கடிக்கும் பாடல் “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்கிற பாடல். உணர்ச்சி பொங்க சவுந்தர்ராஜனின் குரல் இந்தப் பாடலை வழங்கியவிதம் தக்க தருணத்தில் வந்தொலிக்கும் சத்தியம் தவறாத சாட்சியம் ஒன்றின் வருகையைப் போல் நிகழும். இதுதானடா என்ற சொற்பதத்தைக் கொண்டு செலுத்தி வெவ்வேறு இடங்களை உணரத் தருவது டி.எம்.எஸ்.குரலின் மகிமை.
Fans of Music Director G.Ramanathan. Public Group | Facebook
மேற்காணும் மூன்று பாடல்களுமே கவி செரீப்பின் தமிழ்வல்லமையை நிறுவத் தந்தபடி ஒலிக்கின்றாற் போலவே இசைமேதை ஜி.ராமநாதனின் செவ்வியல் இசைத்திறனையும் அறிந்து கொள்வதற்கான கானசாட்சியங்களாய்க் காற்றில் தவழ்கின்றன.புவி வாழ்வைக் கவி வாழ்வாய்ச் சிறந்து ஒளிர்ந்த செரீப் 1994 ஆமாண்டு தன் 80 ஆம் அகவையில் காலமானார். தமிழ்த் திரையிசையில் முதன்மையான பேரைத் தனதாக்கி இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகப் புகழுச்சியில் இருந்தவரான மேதை ஜி.ராமநாதன் 1963 ஆமாண்டு இயற்கை எய்தினார். நான் பெற்ற செல்வம் படத்தின் பாடல்கள் ராமநாதன் டி.எம்.எஸ் மற்றும் கவி செரீப் ஆகிய மூவர் புகழைக் காலமெல்லாம் பேசும் காவியகானங்கள் நிரம்பியது.