நடை உடை பாவனை 3

 நடை உடை பாவனை

3 அதிதி தேவோ பவ



உணவருந்த வாருங்கள்
 என்பது விவிலியத்தின் பொன்மொழிதல். விருந்தோம்பல் நமது நெடுங்கால வழக்கம். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் உடனே டீ சாப்பிடலாம் என்று குறைந்த பட்சத் தேநீர்த் துளிகளைப் பகிர்வது நம் பண்பாடு. தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஓட்டல் அதாவது உணவகம் எனும் தலத்தைச் சுற்றி உள்ளும் புறமும் நிறைந்து வழிகிற உபகதைகள் ஏராளம். பசி ருசி இரண்டும் ஒருங்கிணைகிற இடம் தான் ஓட்டல் என்பது.திரைப்படங்களில் சாதாரண ரோட்டுக்கடை முதற்கொண்டு நட்சத்திர விடுதிகள் வரை காட்சிப்படுத்தப் படாத இடமே இல்லை எனும் அளவுக்கு கதைகளின் ஊற்று என்றே தாராளமாய்ச் சொல்லலாம். விதவிதமான உணவுவகைகளை உண்ணுவது போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு மனதுக்கு நெருக்கமான உணர்தலை நிகழ்த்தித் தருபவை. திரைப்படமும் அது சார்ந்த மனோபாவங்களும் தேர்வுகளும் பண்பாட்டின் முக்கியமான கட்டுமானத்தை கலைவழியாக நிகழ்த்தின என்பது உணவு மற்றும் பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியதே. அந்த வகையில் தமிழ்த் திரைப்படங்களில் கதை ஊடாடும் களங்களில் முக்கியமானதும் ஞாபக மணம் கமழ்வதுமான இடம் தான் உணவு விடுதி எனப்படுகிற ஓட்டல். சினிமா தான் எத்தனை ஓட்டல்களைத் தோன்றச்செய்திருக்கிறது

    அழகன் திரைப்படத்தில் மம்முட்டியின் பாத்திரப் பெயர் அழகப்பன். அவர் ஒரு வெற்றிகரமான ஓட்டல் அதிபராக வருவார்.ஓட்டல் அதிபர் என்றாலே சர்வர் சுந்தரம் படத்தில் வருகிற மேஜர் சுந்தர்ராஜன் தான். மகள் மீது கொண்ட பாசத்தையும் சுந்தரத்தின் வெற்றி மீது கொள்கிற பூரிப்பையும் அனாயாசமாக வெளிக்காட்டி இருப்பார்.அண்ணாமலைக்கும் அஷோக்குக்கும் சண்டை சாப்பாட்டு ஓட்டல் நடத்துவதில் அல்ல. அவர்களது ஏரியாவே வேறு. தங்குகிற 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவதற்காக அண்ணாமலையின் வீட்டை இடித்தது அஷோக்கின் அப்பா செய்த இமாலயப் பிழை/அதற்குப் பழியெடுக்க அஷோக்கை எதிர்த்து ஓட்டல் ஓனர் அசோசியேஷனுக்கே தலைவராக வந்து சபதத்தில் ஜெயித்து கடைசியில் அவருக்கு விட்டுக் கொடுக்கிற அண்ணாமலை ஒரு கமர்ஷியல் புதிர்.நாயகன் கமல் கேரக்டரை விட அந்த வசனம் அவருக்குத் தான் பொருத்தம், அண்ணாமலை நீங்க நல்லவரா கெட்டவரா..?

     சின்னத் தம்பி பெரிய தம்பி படத்தில் கல்லாவில் இருக்கும் உசிலை மணி சகோதரர்கள் பிரபு சத்யராஜ் இருவரும் சாப்பிடுகிற அழகைப் பார்த்து ரசிப்பார். பாவம் பசங்க ரொம்ப பசியில இருக்காங்க போல இருக்கு என்றெல்லாம் சொல்வார். நான் தான் பில் தருவேன் நான் தான் பில் தருவேன் என்று ஆரம்பித்து அந்த ஓட்டலையே சூறையாடிவிட்டு உசிலையிடமிருந்து ஆளுக்கு 50 ரூபாய் கிஸ்தி வாங்கித் திரும்புவார்கள்.எண்பதுகளில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பில் தராமல் சண்டையிடுவது அல்லது மாவாட்டுவது மாதிரியான அதிகதிக காட்சிகள் வந்தன.ராஜாதி ராஜா படத்தில் வெங்காய பஜ்ஜிக்குள் வெங்காயம் எங்கே எனத் தகாராறு செய்யும் ரிக்சா ட்ரைவர் சேதுபதி கேட்பது நியாயம் தானே என்று அவருக்கு சரஸ்வதி விலாஸ் ஓனரே சப்போர்ட்டுக்கு வருகிறார். ஆனால் சப்ளையர் இடிச்சபுளி அவரிடம் முதலாளி இன்னைக்கு வெங்காய பஜ்ஜிக்குள்ள வெங்காயம் எங்கேன்னு கேக்குறான்.நாளைக்கு மைசூர் போண்டாவுக்குள்ள எங்கடா மைசூர்னு கேட்பான் அவ்ளோ பெரிய போண்டாவுக்கு எங்கே போறது எனக் கேட்க அவரோ சர்ரென்று தலைசுற்றிக் கீழே சரிவார்.பஜ்ஜியைப் பிய்த்துத் தின்று கொண்டே போங்கடா நீங்களும் உங்க பஜ்ஜியும் சொஜ்ஜியும் என எழுந்து நடையைக் கட்டுவார் ஜனகர்.

janagaraj comedy in idhaya thamarai by navin vikramஆண்பாவம் படத்தில் கனகராஜூக்கு ஓட்டல் நடத்தித் தன் அண்ணன் தியேட்டர் அதிபர் ராமசாமியை விடப் பெரிய செல்வாக்கை அடைந்துவிட வேண்டும் என்று ஒரே லட்சியம். ஓட்டலைத் திறக்கும் அன்றைக்கே பந்த் நடக்கும்.பிரம்மாண்ட மாஸ்டர் உசிலை மணி யாரும் வராத அந்த ஹோட்டலில் நூற்றுக்கணக்கில் பதார்த்தங்களைச் செய்து குவித்து வைத்திருக்கிறார் எப்படியாவது முன்னேற்றி விட மாட்டோமா என்கிற கனகராஜின் முயற்சிகள் எல்லாமே பலனளிக்காமல் போகின்றன அதிலும் ஒரு துன்பியல் தினம் வருகிறது.சக்கரை பட்டியின் மொத்த ஜனத்தொகை 400 பேர்தான் ஆனால் ஒரு கஸ்டமர் வந்து ஆயிரம் லட்டு ஆர்டர் தருகிறார்.அட்வான்ஸ் 50 ரூபாயை நீட்டுகிறார். நீங்க தயார் செய்யுங்க வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்லிச் செல்கிறார்.சுக்ரதிசை அடித்ததாக நம்பி அந்த ஆர்டரை செயல்படுத்த முனைகிறார் கனகராஜ்.துணிக்கடையில் 1000 ரூபாய்க்கு துணி வாங்கி அங்கே பணம் தராமல் கடைக்காரத் தம்பியைக் கூட்டி வந்து கனகராஜிடம் ஆயிரத்தை இவர்ட்ட தந்துருங்க என்று எஸ்கேப் ஆகிறார் ப்ராடு கஸ்டமர்.சற்றைக்கெல்லாம் எனக்கு லட்டு ஆயிரம் எனக்கு துட்டு ஆயிரம் என்று இரு தரப்பும் முட்டிக் கொள்கிறது. லட்டு உதிர்ந்தால் பூந்தி என்று எளிதாக எடுத்துக் கொள்ள முடியுமா என்ன.? கடைசி வரை கனகராஜால் ஒரு ஓட்டல் அதிபராக வெற்றிக் கொடி நாட்டவே முடியாமல் போகிறது.

சின்னராசா மார்த்தாண்டன் தன் ஜமீனிலிருந்து மனசுக்கு பிடித்த பெண்ணைத் தேடி சென்னை வந்து சேர்வார்.அவரோடு துணைக்கு கேஷியர் மூட்டை நிறைய பணத்தோடு உடன் வருவார். மனசுக்கு பிடித்த குஷ்பூவின் அப்பா HOT BREADS BAKERS AND CONFECTIONARIES எனும் பேக்கரி ஓனர் அவரிடம் வேலை கேட்டுப் போவார்கள்.முதலாளி காலில் விழுந்தெழுந்து பயங்கர கஷ்டம் வேலை வேணுமென ஆரம்பிப்பார் சின்னராசா.“முதலாளி ஓட்டல் வேலையில எங்களுக்குத் தெரியாத நெளிவு சுளிவே கிடையாது. ஒருபக்கம் ஆக்குன சாப்பாடு அப்டியே கெடக்கும் இன்னொரு பக்கம் கல்லாப்பெட்டி நெறஞ்சுக்கிட்டே இருக்கும் என்பார் செங்கோடனோ ஆமாம் சாம்பார் குறையக்குறைய ரசம் சாம்பாராகும் ரசம் குறையக் குறைய சுடுதண்ணி ரசமாகும் சட்னி குறையக் குறைய புண்ணாக்கு தேங்காயா மாறும்” என ஃபைனல் பஞ்ச் தரும் சின்னராசாவைப் பார்த்து  மூர்த்தியின் முகம் வினோதபரிமாணங்கள் பலவற்றை அடைந்து மீளும்.என்னது சாம்பார் சட்னியா இதென்ன உடுப்பி ஓட்டல்னு நினைச்சிட்டிருக்கீங்களாHOT DOG HAMBURGERS SANDWICH PIZZAS நான் இண்டர்நேசனல் லெவல்ல ஐட்டங்களைப் போட்டு ஜனங்களை தாக்கிட்டிருக்கிறேன் இங்க வந்து சாம்பார் சட்னி வடகறின்னு அசிங்கமா முதல்ல எடத்தை காலி பண்ணுங்கப்பா என்று விரட்டுவார்.

Goundamani Sathyaraj Food Comedy || Goundamani Sathyaraj Rare Comedy || Tamil Comedy - YouTube  எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் ஒரு எம்ஜி.ஆர் கட்டு கட்டென்று தின்று எழுந்து சென்றபிறகு அங்கே அப்பிராணி எம்ஜியார் நம்பர் டூ வந்து உட்காருவார். முன்னவர் தின்றதற்கெல்லாம் சேர்த்து தண்டம் கட்டும் காட்சி ஏற்கனவே பாவமாய்த் தோன்றும் ராமு எம்ஜி.ஆர் மீது இன்னும் பரிதாபம் வரும். என்ன சாப்பிடலாம் என்று எஸ்.வி.சேகர் toss போட்டு தலைக்கு மேலே இருக்கும் பல்பை உடைத்து அதற்கு பில் தந்து விட்டுத் திரும்பும் காட்சி இன்னொரு துன்ப நகைச்சுவைக் காட்சி தான். முரளியும் எஸ்.வி.சேகரும் ஒரு முழு சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்கி விட்டு ஒரே இலையை அடுத்தடுத்து இழுத்து இழுத்து சாப்பிட்டு முடிக்கும் வரை அவர்கள் மாட்டிக் கொள்வார்களோ என்ற பதைபதைப்பு பார்வையாளர்களுக்கும் வராமல் இல்லை.பங்காளி படத்தில் நல்லி எலும்புகளைக் கடித்து மலை மாதிரி குவித்து வைத்து விட்டு “இன்னும் ரெண்டு ப்ளேட் நல்லி எலும்பு” எனக் கேட்பார் சத்யராசர். “இதுக்கு மேல என் காலு தான்யா இருக்கு” எனக் கதறுவார் சப்ளையர்.எப்படி பில் தருவது என்ற யோசனையில் என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்று கூச்சலிடுவார் சத்யராஜ்.அங்கே ஆபத்பாந்தவராய் தோற்றமளிக்கும் கவுண்டமணி நானிருக்கிறேன் என்று ஆஜராகி துரை என்ன இன்னிக்கு இவ்ளோ கம்மியா சாப்டு இருக்கிறே உடம்புக்கு சரியில்லையாம்மா என்று ஆரம்பிப்பார்.பல்வலிக்காரனைக் கூடப் படாரென்று சிரிக்க வைக்கும் மந்திரம் கவுண்டமணியின் அங்கதம்.
Understand and buy prabhu and goundamani> OFF-63%ஒட்டல் காதம்பரி பரபரப்பான உணவகம் இல்லை என யாருமே மறுக்க மாட்டார்கள். அதன் உரிமையாளர் பாந்தமானவர் என்றாலும் சப்ளையர்களில் ஒருவரான தமிழ்மணிக்கு வாய் நிறையவே நீளும்.தன்னை யாரும் சர்வர் என்று அழைக்கக் கூடாது என்று அவர் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் சூடா என்ன இருக்கு என்று கேட்கும் கஸ்டமரிடம் இப்பத்திக்கு சூடா நான் தான் இருக்கேன் என்று தான் ஆரம்பிப்பார்.அவர் டேபிளைப் பார்த்து அமரும் பேங்க் செக்யூரிட்டி வேலுமணிக்கும் தமிழ்மணிக்கும் முதலில் முட்டிக் கொள்கிறது. வேலுமணியை செக்யூரிட்டி என்று கண்டுபிடித்து விடுகிறார் தமிழ்மணி.அவர்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய சீட்டுக்கு ஒரு கோடி பரிசு விழுந்து விடுகிறது.நேரே வேலுமணியை அழைத்து வந்து தன் முதலாளியை மீட் செய்வார் தமிழ்மணி . முதலாளியிடம் மிக பவ்யமாகத் தன் வேலையை ராஜினாமா செய்வதற்கான வாய்மொழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பார் தமிழ்மணி

“டேய் தோசைக்கல் தலையா…இன்னிக்கு மொத்தமா உங்கிட்ட தகராறு பண்ணப் போறேண்டா” என்று ஆரம்பிப்பார். தமிழ்மணி எனக் குமுறும் முதலாளியிடம் “நான் தமிழ்மணி இல்லடா இங்கிலீஷ் மணிடா MONEY டா எங்களுக்கு லாட்ரில ஒரு கோடி விழுந்திருக்குடா” என்றதும் வாய் பிளக்கும் முதலாளி உனக்குத் தெருக்கோடியே தெரியாது அப்பறம் ஒரு கோடி எப்டிரா தெரியும் டப்ஸா கண்ணா என்று முதலாளிக்கு ரெண்டு ரூபாய் தந்து உன் ஓட்டல்ல காஃபி நல்லா இருக்காதுடா எதுத்த ஓட்டல்ல சாப்டு வந்து பில்லை கம்பியில குத்துடா” என்று கிளம்பிச் செல்வார் ரெண்டு மணிக்கும் சேர்த்து அங்கே அல்வா காத்திருக்கும். அவர்கள் கையிலிருப்பது டூப்ளிகேட் லாட்டரி என்று தெரியவரும்.காற்றை அடக்கி வைக்க முடிந்தாலும் கவுண்டமணியை அடக்கி வைக்கவே முடியாது என்பதை நிரூபித்திருக்கும் தேடினேன் வந்தது படம்

எதிரில் சிக்குகிறவர்களை எல்லாம் ஏமாற்றுகிற திருட்டு வாசு வழக்கம் போல் ஊட்டிக்கு வந்து சேரும் ராஜசேகரிடம் டீட்டீஆர் வேடத்தில் 2000 ரூபாய் பறித்துவிடுகிறார். அதை அவரிடமிருந்து திரும்ப வாங்காமல் போவதில்லை என்று கங்கணம் கட்டும் ராஜசேகரிடம் இருந்து தப்பிக்க வாசு ஒரு உபாயம் செய்கிறார். அதென்னவென்றால் ஊரின் காஸ்ட்லி நான்வெஜிடேரியன் ஓட்டலுக்கு ராஜசேகரை அழைத்துச் சென்று அமரவைத்து சாப்பிடச்சொல்லி பெரும் உபசரிப்பு செய்வார்.” ப்ரதர் எம்டி ஸ்டொமக்ல தண்ணி சாப்டா அப்பறம் சாப்பிட முடியாது ” .நீங்க சாப்பிடலையா எனும் ராஜசேகரிடம் ” மத்தவங்களை சாப்பிட வச்சி பார்க்குறதுல எனக்கொரு ஆனந்தம் பசின்னு ஒருத்தன் வந்துட்டா என்னால தாங்க முடியாது”என்று ரவுசு காட்டுபவரிடம் அசராமல்” நானும் அப்டி தான் பணத்தை தொலைச்சிட்டேன்னா பொறுத்துக்கவே மாட்டேன் “என்பார் ராஜசேகர்.

அவரை இட்லி சாப்டுங்க எக் சாப்டுங்க சிக்கன்  எடுத்துக்கங்க சப்பாத்தி சாப்டுங்க என்றெல்லாம் நன்றாக கமிட் செய்து விட்டு தனக்கு வயிறு சரியில்லை என்று போலியாய் துடித்து ஓட்டலிலிருந்து பின் வழியாக எகிறி உடைந்த குட்டிச்சுவர் ஏறி பாபுவின் ராகம் டெய்லர்ஸ் என்ற கல்வெட்டுக்குப் பக்கவாட்டில் குதித்து புற்கள் நிரம்பிய பாதையில் ஓடி மேட்டில் ஏறி சிறுசிறு  சந்துவழியெல்லாம் தாண்டி பன்னெண்டு பதினாலு வழிகள் மாறித் தான் குடியிருக்கும் பரந்து விரிந்த இடத்துக்கு வந்து வீடு சேர்ந்தால்……….அங்கே வீட்டுக்குள் பேப்பர் படித்துக் கொண்டு அவருக்காகக் காத்திருப்பார் ராஜசேகர். அயர்ந்து அவர் அருகே அமரும் வாசுவுக்கு ஒரு குவளை நீர் தருவார்.அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.இவ்வாறாக கபடமணியின் ஊட்டி நாடகம் உள்ளத்தை அள்ளித்தா பலிக்காமற் போயிற்று

சின்னச்சாமி என்கிற சின்னு தான் ரவிவர்மாவின் அன்னக்கரம். இவனின்றி அவனில்லை.ஒரு ஓட்டலில் பசிக்கு உணவு தேடிச் சென்று அமர்கிறார்கள். “எஸ்..என்று ஸ்டைலாக வந்து கேட்கும் சர்வரிடம் “இந்த ஓட்டல்ல என்னடா இருக்கு” எனக் கேட்பதற்கு “பேப்பர் ரோஸ்ட்” என்று பதில் சொல்கிறார் சர்வர். ரெண்டு பேப்பர் ரோஸ்ட் கொண்டு வா என்பார் கவுண்டர் அதற்கு டூ பேப்பர் ரோஸ்ட் எனக் கேட்கும் அதே சர்வர் கொத்தமல்லி சட்னி கொண்டா என்பதற்கு டூ கொத்தமல்லி சட்னி என்று உயிரை வாங்க டே போடா எனச்சொல்லி அவரை அனுப்பி விட்டு அளக்க ஆரம்பிப்பார் சின்னச்சாமிGoundamani comedy Brahma movie - YouTube
“ரவீ…நீ இந்த ஓட்டல்ல பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டதில்லையே?”
“நல்லாருக்குமா”
எனும் ரவியிடம் “அட சூப்பர் நாக்குல பட்டா அப்டியே கரஞ்சி போயிடும்” என்று புகழும் சின்னு “அவ்ளோ மெல்லிசுப்பா தினம் ரெண்டு பேப்பர் ரோஸ்ட் சாப்டம்னா லிவருக்கு ரொம்ப நல்லது” என்றதுமே களுக்கென்று சிரித்தபடி யோவ் பேப்பர் ரோஸ்ட் வேணும்னா வாங்கி சாப்டு அதை விட்டுட்டு லிவருக்கு நல்லதுன்னு எவஞ்சொன்னது என வெடிக்கும் ரவியிடம் பக்கத்து டேபிள்ல சாப்டவங்க சொன்னாங்க என்று அப்ராணியாய் பதிலுவார் கவிழ்ந்த சின்னு என்னான்னு என்று விடாமல் கேட்கும் ரவியிடம்  பேப்பர் ரோஸ்ட் சாப்டா ரொம்ப நல்லதுன்னு என்று திருப்ப அவரிடம் விடாக்கண்டன் ரவி யாருக்கு என்பதற்கு ஓட்டல் நடத்துறவங்களுக்கு என்று முத்தாய்ப்பாக முடித்து வைப்பார்.இவ்வளவுக்கு அப்பால் உள்ளே சென்று திரும்புகிற அந்த சப்ளையர் தம்பி இருவருக்கும் தட்டுகளில் ஊத்தப்பத்தை விட சிரிதான அப்பளம் சைஸில் இரண்டிரண்டு தோசைக்குட்டிகளை வைப்பார்.இதென்னடா என்றால் திஸ் பேப்பர் ரோஸ்ட் என்கிற சர்வரிடம் டேய் இதென்ன பேப்பர் ரோஸ்டாடா பேப்பர் ரோஸ்ட்னா எப்டி இருக்கணும் தெரியுமா கண்ணாடி மாதிரி இந்தப் பக்கம் இருக்கிறவன் அந்தப் பக்கம் தெரியணும் அந்தப் பக்கம் இருக்கிறவன் இந்தப் பக்கம் தெரியணும் அதாவது பேப்பர் மாதிரியே என்றபடியே உதாரணத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பித்து விளக்கலாமே என்ற நல்லெண்ணத்தில் அப்போது தான் வந்து எதிர் நாற்காலியில் அமர்ந்திருப்பர் எதையோ நாளிதழில் சுற்றி அருகே வைத்திருப்பதைப் பார்த்ததும் அதை எடுக்க முயல அவர் தடுக்க இவர் விடாமல் பறிக்க அந்தப் பேப்பரிலிருந்து இரண்டு பிய்ந்த செருப்புகள் விழும்.என்னய்யா இது என்று அதிரும் சின்னுவிடம் எங்க அண்ணனோட செருப்புங்க தைக்கிறதுக்காக எடுத்திட்டு போறேன் என்பார். ஆமா இவரு பரதரு இவங்கண்ணன் ராமரு அப்டியே ஊர்வலம் போறாரு இதுவே நான் நிதானத்துல இருந்தங்காட்டி பரவாயில்லை போதையில இருந்து இதை தந்தூரி சிக்கன்னு கடிச்சிருந்தா என்னாவுறது  என்று தாங்கமாட்டாமல் விரட்டுவார்.பிரம்மா சின்னுவின் கதை இப்படியானது.

டுபாக்கூர் ஓட்டல் என்று இருக்கும் அந்தப் பேரைப் பார்த்திருந்தால் ஒருவேளை அங்கே நுழையாமல் திரும்பியிருப்பாரோ வடிவேலு..?
அவர் ஆர்டர் செய்யும் அழகைப் பாருங்கள். “ஒரு செம்புத் தண்ணி எடுத்துக்கங்க.அதை தோசக்கல்லுல ஊத்தி அதுக்குன்னு வழக்கமா ஒரு வெளக்கமாறு வச்சிருப்பீங்கள்ல அதை அடிப்பக்கமா திருப்பி வரட்டு வரட்டு வரட்டுன்னு நாலு இழுப்பு இழுத்து நல்லாக் கழுவி விட்றுங்க. ஒரு கிண்ணம் நெறைய்ய மாவ எடுத்து பெரிய ரவுண்டாவும் இல்லாம சின்ன ரவுண்டாவும் இல்லாம பொதுவா ஒரு ரவுண்ட ஊத்தி தன் கையாலேயே அந்த ரவுண்டை பாவனை செய்து காட்டுவார் நாலஞ்சு வெங்காயத்த நறுக்கி பொடிப் பொடிப் பொடியா மேலாப்புல பரபரபரபரன்னு தூவி விட்டு ஒரு நீளமான காரட்ட எடுத்து அதையும் பொடிப் பொடிப் பொடியா நறுக்கி அப்டியே மேலாப்ல பரபரபரப்பன்னு தூவி விட்டு ஒரு பதினாறு கரண்டி நெய்யை எடுத்து சரிங்க அதுல ஆறுகரண்டி நெய்ய உள் சைடு அப்டியே லேசா வெளாவி விட்டு சரிங்க பத்து கரண்டி நெய்யை தோசைக்கு வெளி சைடு அப்டியே மேலாப்ல வெளாவி விட்டு சரிங்க இட்லிப் பொடி இருக்கு பார்த்தீங்களா அதை அபடியே  அள்ளி மழைச்சாரல் மாதிரி அதையும் மேலாப்ல அப்டியே பேயவிட்டு பொத்துனாப்ல அப்டி ஒரு பெரட்டு இப்டி ஒரு பெரட்டு அப்டியும் பெரட்டி விட்டு அப்டியே ரெட்டுக் கலர்ல முறுகு முறுகுன்னு முறுக விட்டு அழகா மடிச்சி கமகமகமன்னு ஒரு ஊத்தப்பத்த எடுத்திட்டு வாங்க” என்று முடிப்பார்.
விசேஷம் இதுவல்ல. அப்படி சில பல தோசைகளை நாமும் வாழ்க்கைகளெங்கும் பார்த்தும் சாப்பிட்டும் இருப்போம்.குறைந்த பட்சம் ஒன்றிரண்டாவது இல்லாமற் போயிருக்குமா..?அந்த சர்வர் அத்தனை ஈடுபாட்டோடும் ரசனையோடும் புன்னகைமுகத்தோடும் அதுவரை வடிவேலர் வியாக்கியானம் செய்ததத்தனையையும் கேட்டு முடித்து விட்டு தன் ஒரே பற்பிரகாச முகத்தோடு உள்ளே சமையற்கட்டைப் பார்த்து அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று மட்டும் சொல்லியபடி தன் முதுகுப் புறத்தை லேசாய் சொறிந்தபடியே உள்ளேகுவார்.வடிவேலுவின் முகம் வேலை பார்க்காமல் ரிடையரானாற் போல் அப்படி ஒரு தினுசாய் மிளிரும்
“அட பிக்காளிப் பலே…அரைமணி நேரமா கதையா சொல்லிருக்கேன் அம்புட்டையும் சரிங்க சரிங்கன்னு சொல்லிட்டு ஒரே வார்த்தையில ஊத்தாப்பம்னு போயிட்டானே..?வரட்டும்…” என்று மறுகுவார்.

பந்தயம் கட்டி புரோட்டா சாப்பிட ஆரம்பிக்கும் சூரி பொய்க்கணக்கு எழுதி அவரை வீழ்த்த நினைக்கும் சப்ளையர் ஒரு கட்டத்தில் நீ எல்லா கோட்டையும் அழி நான் முதல்லேருந்து சாப்டுறேன் என்று நீதி பரிபாலனம் செய்த காட்சியில் தமிழகமே அதிர்ந்தது.அடுத்த காலத்தின் நகைக்க வைக்கும் கலைஞனாக புரோட்டா சூரியாக எழுந்தார் சூரி.

பூங்காவனத்தின் செல்ல மகன் கவுரவம்.கவுரவமான சமையல் காண்டிராக்டராக தொழில் செய்பவருக்கும் கடா முருகன் என்ற ரவுடிக்கும் முட்டிக் கொண்டு அவனுக்கு பயந்து ஊரை விட்டு திருச்சிக்கு செல்கிறார். கூடவே சரவணன் அன் கோ ஆகிய சப்ளையர்கூட்டமும் செல்கிறது. திருச்சியில் ஓட்டல் ஒன்றை வாங்கி நல்பிழைப்பு பிழைக்கலாம் என்று செல்கிற பூங்காவனம் ஸ்ரீரங்கத்தில் ஒரு ஓட்டலில் சாம்பிள் சாப்பிட்டு அப்படியே அந்த ஓட்டலை விலைக்கு வாங்கும் முடிவோடு சென்று ஸ்ரீரங்கத்தில் ஒரு ஓட்டலில் நுழைந்து கல்லாவில் அமர்ந்திருக்கும் ஓனரைப் பார்த்த மட்டில் எவண்டா அவன் காடைய வறுத்து கல்லாவுல உக்கார வச்சாப்ல என்று ஆரம்பிக்கிறார். சப்ளைக்கு வருகிற சிங்கமுத்துவைப் பார்த்து பன்னிக்கு பனியன் போட்டாப்ல என்று தொடர்ந்து நாலு இட்லி நாலுவகை சட்னி என்று ஏக கலாட்டா செய்து சாப்பிட்டு விட்டு பில் தரக் காசு இல்லாமல் திகைப்பார்.

ஒரு கட்டத்தில் வீராவேசனாக யாரு கிட்டே பூங்காவனம் பைய்யண்டா என்று ஆவேசம் காட்டி அங்கே இருந்து ஒருவழியாக எஸ்கேப் ஆகி தெருக் குப்பைத் தொட்டியில் தன் அப்பா பூங்காவனத்தின் படத்தை பார்த்துக் கலங்கிய கண்களோடு “எல்லாரும் குழந்தையைத் தான் குப்பைத் தொட்டியில போடுவாங்க.எங்கப்பாவை குப்பைத் தொட்டில போட்டுட்டானுங்களே” என்று அழுதபடி அடுத்த சீனுக்குள் புகுவார். கடைசியில் ப்ளாட்ஃபாரக் கடையில் 15 ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட வருமாறு கஸ்டமர்களைக் கூவி கூவி அழைப்பவராக பிழைப்பு ஓட்டுகிற கவுரவத்தைத் தேடி வந்து சந்திக்கும் சரவணன் அன் கோ இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்று நிசமாகவே கண்கலங்கும் கவுரவத்தை அழைத்துப் போய் அவர் இஷ்டப்பட்ட படியே ஓட்டல் கவுரவத்துக்கு ஓனராக்கி இன்ஸ்பெக்டர் மருமகனாக்கி ஆனந்தசாம்பாரில் அவரைக் காய் போலாக்கி மகிழ்வது பட்டத்து யானை படத்தின் காமெடி ட்ராக்.

World Food Day: 15 howlarious, food-related comedies in Tamil Cinema- Cinema expressஅலர்ட் ஆறுமுகம் திருடன் என்று தெரிந்தும் அவன் மீது கண்காமிராக்களை ஃபோகஸ் செய்து கொட்டாமல் பார்த்திருந்து சாப்பிட்டு முடிக்கும் வரை அலர்ட்டாக இருந்து சமாளித்து விட்டோம் என்று திருப்தியாகும் ஒட்டுமொத்த சவுண்ட் சாப்பாட்டுக்கடை டீமையும் தன் வெளாட்டால் அலறவைப்பார் ஆறுமுகம். இடம் பார்த்துத் தான் அமர்ந்திருப்பார் என்பதால் தன் இரண்டு கரங்களையும் ஒயிலாக மேலே தூக்கி வளைத்து நெளித்து ஒரு அபிநயம் செய்வார் பாருங்கள் உலகளவில் எந்த ஒரு நடன மேதையாலும் அப்படி ஒன்றை நல்கவே முடியாது. அடுத்த கணம் ஃப்யூஸ் கட்டையைப் பிடுங்கி இடத்தை இருட்டாக்கித் தன் கைவரிசையைக் காட்டிவிட்டு எஸ்கேப் ஆகியிருப்பார்.

சென்ற நூற்றாண்டின் மனிதர்கள் உலாவிய பொது இடங்களில் அலாதியான கதைகளை நாளும் கண்டுகொண்டிருந்த ஸ்தலம் தான் ஓட்டல் என்பது. சப்ளையர் ஓனர் மாஸ்டர் சாப்பிட வரும் கஸ்டமர் என எல்லா தரப்புகளுமே நகைச்சுவை ஊற்றுக்களாகத் திகழ்ந்தார்கள். நூற்றுக்கணக்கான படங்களும் சம்பவங்களும் ஓட்டல் என்ற மையத்தைச் சுற்றிச் சுழன்றன. தீரா இன்பமாக இன்றும் நினைத்து நினைத்து சந்தோஷிக்கக் கூடிய விஷயதானங்களில் ஒன்றாகவே தனிக்கிறது ஓட்டல்.என்ன ஒன்று முன்பிருந்த காலமும் அந்த மனிதர்களும் இல்லை என்கிறாற் போலவே சீசிடீவீ பொருத்தப் பட்ட ஓட்டல்கள் வழுவழு மெனு கார்ட்கள் பில்லிங் மெஷின் கேடரிங் கற்று வந்திருக்கும் புத்துலகத்தின் பணியாளர்கள் என்று ஞாபகத்தில் வேறாகவும் தற்கால நிஜத்தில் வேறாகவும் மாறி இருப்பது நிஜம். சினிமாக்களில் காண வாய்க்கும் ஓட்டல்  அதெல்லாம் எப்படி ஒரு காலம் என்று கொண்டாடுவதற்கான ஞாபகாலயம்.

வாழ்க சினிமா