நடை உடை பாவனை 6
தேநீர்த் தூறல்
டீக்கடை என்றாலே அது சினிமாவுக்கு நெருக்கமான இடம் என்பது புரிந்து விடும். நூறாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிற சினிமா உருவாக்கத்தில் எத்தனையோ மாற்றங்கள் வளர்ச்சிகள் புற உலகத்தைப் போலவே கதைகளுக்கும் காட்சிகளுக்கும் உள்ளேயும் பிரதிபலிக்கப் படுவது இயல்புதான். ஆர்ட் டைரக்டர் என்று அழைக்கப்படுகிற கலை இயக்குனர் தன்னிடம் எதைக் கேட்டாலும் அதை நிசம் போன்ற தத்ரூபத்துடன் கொண்டு வந்து கண்முன் நிறுத்துவதையே முயலுவார். அவருக்கான கைத்தட்டல் அதற்கானது தானே யாருடைய வாழ்விலும் மனசுக்கு நெருக்கமான டீக்கடை ஒன்று இல்லாமல் இருந்திடாது.
ஆரண்ய காண்டம் படத்தில் நிச ஒளி அதாவது ரியாலிட்டி லைட்டிங்குடன் ஒரு டீக்கடை இடம்பெறும்.கஜேந்திரன் மற்றும் கஜபதியின் கொடூரங்களைப் பற்றி விளக்குவார் பசுபதி சகாக்களிடம் கஜேந்திரன் தன்னிடம் வேலை பார்த்த உறவுக்கார இளைஞன் ஒருவனைக் கொன்று அவனது மனைவியை யார்ட்டயும் இதை வெளில சொல்லிடாதே என்று அவளது வலது கட்டைவிரலைக் கடித்துத் துப்பி விட்டதாக சொல்வார் . அதைக் கேட்டுவிட்டு நக்கலடிப்பார் அவர்கள் குழுவைச் சேர்ந்த அஜய்ராஜ்.அப்போது எல்லோருக்கும் டீ க்ளாஸ்களை வைத்து விட்டு நகர்வார் அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் ஒருவர். அவருக்கு வலது கையில் கட்டை விரல் இருக்காது. பின்னணி இசையும் இருளுமாக பார்ப்பவர் மனமெல்லாம் அரளும். அந்தப் படத்தில் ரியல்டைம் சவுண்ட்ஸ் மட்டுமே கொண்டு பின்னிசை அமைத்திருப்பார் யுவன். பின்னணியில் ரேடியோ பாடல்கள் தொடர்ந்து ஒரு தினத்தின் வெவ்வேறு நேரங்களுக்கான மாற்றங்களோடு ஒலிப்பதெல்லாம் நுட்பமான சங்கதி.
பசி படத்தில் ஒரு டீக்கடை வரும். விஜயனுக்கும் ஷோபாவுக்கும் இடையிலான பரஸ்பர சந்திப்புகள் அந்தக் கடையில் தான் நிகழும். ஒருவரை ஒருவர் நெருங்கி மனம் பரிமாற தேநீர் குவளைகள் தூது செல்லும். ஷோபாவைத் தன் இயல்பான மற்றும் யூகிக்க முடியாத உபசரிப்பின் மூலமாக மெல்ல வசப்படுத்துவார் விஜயன். கதையின் பிற்பகுதியில் அவர் எத்தனை கொடியவராக மாறப் போகிறார் என்பதைத் துளியும் யூகிக்கமுடியாத யதார்த்தத்தின் குரலும் முகமொழியுமாக அசத்தியிருப்பார் விஜயன்.
சமீபத்தில் வெளி வந்த ரஜினி முருகன் படத்தில் நாயகியைக் காதலிக்கும் நாயகன் ரஜினிமுருகன் அவளை அடிக்கடி தரிசிப்பதற்காகவே அவள் வீட்டுக்கெதிரே ஒரு டீக்கடையை நிர்மாணிப்பார். உயிரையே தருவதற்குத் தயாரான நண்பர் சூரியும் சிவகார்த்திகேயனும் யார் கல்லாவில் அமர்வது யார் டீ ஆற்றுவது என்பதில் மாறி மாறி கடித்துக் கொள்வார்கள். ஒரே ஒரு பழம் கேட்டு வருவார் நல்லவர் ஒருவர். அதைத் தானே பிய்த்துக் கொள்வதாகவும் சபதமேற்பார். அவர் பழத்தை அணுகும் போது அங்கே கடை இருக்கும். அந்த ஒரே ஒரு பழத்தைப் பறித்து முடிக்கும் போது கடையே தரைமட்டமாகி இருக்கும்.
ஒரிஜினல் சுத்தவிலாஸ் டீஷாப்பின் வாசகம் என்ன தெரியுமா..? தனித்திரு பொறுத்திரு பசித்திரு சுகித்திரு எப்படி..? அதன் ஓனர் கம் மாஸ்டர் யார்..? நம் எம்.ஆர்.ராதா
டேய்…அனாவசியமா அரசியல் பேசாதே
டீ சாப்டுற எடத்துலே கட்சி தெரியாத பயலுவள்லாம் கட்சியப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டான்யா என்று அசரடிப்பார் அவரிடம் வந்து “அண்ணே 38 நயாபைசாவ என் கணக்குல வச்சிக்கங்க” என்றபடியே நழுவப் பார்ப்பவரின் சட்டையைப் பிடித்து
“ரொக்கமில்லாம சாப்டுற பசங்களை வெக்கமில்லாதவன்னு சொல்றவன் நான் நாளைக்கி குடுக்கிறியா நாளைக்கி இந்தக் கடைப்பக்கமே வரமாட்டியேடா” என்றபடியே அவர் தோள் துண்டை எடுத்துக் கையகப்படுத்திக் கொள்வார் “நாளைக்கித் தாரேன் அண்ணே..” என்று முனகுபவரிடம் “நாளைக்கி துட்டைக் குடுத்துட்டு துண்டை வாங்கிக்க போ” என்று விரட்டியே விடுவார்.
“அண்ணே கொஞ்சம் டிகாஷன் குடுங்கண்ணே” என்று தம்ப்ளரை நீட்டுபவனை விரட்டிக் கொண்டே “போடா இவன் குடுக்கிறது ஒரு கப்புக்கு காசு அதை ரெண்டு கப்பு ஆக்குவானுங்க” என்று சலித்துக் கொள்வார்
“அண்ணே ஒரு டீ போடுங்க” என்று வரும் கஸ்டமர் வாங்கி ஒரு ஸிப் அருந்தியதும் “ஆகா இதில்ல டீ” என்று பாராட்டுவார். “பின்னே என்ன நாம போடுற டீ என்ன சாதாரணம்னு நினைச்சிக்கிட்டியா..?
மூணு சிங்கிளுக்கு ஒரு டீ பொட்லத்தை ஒடச்சி ஊத்துறேன்.
மத்தவன்லாம் காலம்பற ஒரு பொட்லம் ஒடச்சான்னா சாயந்திரம் வரைக்கும் வென்னீர் எடுத்து வெளாவுவான்.அதிக லாபமும் வேணா ஆனா உழைக்கிறதுக்குத் தகுந்த காசு வரணும் நம்ப கிட்டே” என்று கறார் காட்டுவார். உண்மையாகவே டீத்தூள் மாற்றுகிற கணத்துக்காகக் காத்திருந்து உடனே டீ சொல்லி அருந்திச் செல்வதற்கென்றே சூசகபூடகபுத்திஜீவிகள் பலரும் உலா வந்தனர் என்பது தொன்று தொட்டுத் தொடர்ந்துவருகிற உண்மை.
பருத்திவீரனாலும் அவனது சித்தப்பா செவ்வாழையாலும் பலவிதங்களில் பாதிக்கப் பட்டுக் கடைசியில் அந்த ஊரில் ஒரு டீக்கடையில் மாஸ்டராகச் சேர்ந்திருப்பார் மிஸ்டர் டக்ளஸ். அந்த வேலையில் அவரது இரண்டாம் நாளே பருத்தியும் செவ்வாழையும் டீ குடிக்க வருவதைக் கண்டு மனம் கலங்குவார். தன் மாமாவை சாடையாகக் கிண்டலடிக்க அவர் கிளம்பிச் செல்வதை ரசித்தபடி “டீயைப் போடுறா|” என்று வேகம் செய்வார் பருத்தி. “ஏண்டா என்னதான் சொந்தமா இருந்தாலும் இப்பிடியா பொது இடத்துல பெரிய மனுசன்னு கூடப் பார்க்காம லந்தக் குடுக்குறது” என பருத்தியைக் கண்டிக்கும் டீக்கடை ஓனர் “கூடவே சுத்துறியே செவ்வாழை நீயாச்சும் கொஞ்சம் புத்தி சொல்லக் கூடாதா” என்றதும் “எங்கண்ணே கேக்குறான் கண்ட நாயும் புத்தி சொல்லும்னா எங்க கேக்குறான். இப்ப நீ சொல்லிட்டேல்ல” என்று அவரை ஒரு வாரு வாரிவிட “நீ கலக்கு சித்தப்பா ” என்று செவ்வாழையை அப்ரிஷியேட் செய்வான் பருத்தி.”எங்கிட்டயே உங்க வேலையைக் காட்டுறீங்களா ஒழுங்கா டீயைக் குடிச்சிட்டு எடத்தை காலி பண்ணுங்கடா” என்று அதட்டும் ஓனரிடம் “அதை உன் ஓனர் சொல்லட்டும்யா” என்பான் பருத்தி.”ஓனரா எங்கடைக்கு யார்றா அவன் ஓனரு” என வெகுண்டெழுபவரிடம் “டக்ளஸ் அண்ணே அவர் தானே பாவப்பட்டு உன்னைய வேலைக்கு வச்சிருக்காரு” என்று சரமாரியாக அடிக்க “ஓனர்னா சொல்லிட்டு திரியுறே வெளியே போடா” என்று டக்ளஸை விரட்டுவார் ஓனர். இன்னும் மிச்சமிருக்கும் கடைசி வாய் டீயை உறிஞ்சும் பருத்தி மற்றும் செவ்வாழையைப் பார்த்து “சந்தோசமா” என்றபடியே வெளியேறுவார் பாவப்பட்ட டக்ளஸ்.
போக்கிரி படத்தில் ஒரு டீக்கடை.அதன். வாசலில் இருக்கும் சம்பிரதாய மர பெஞ்சியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார் ஸ்ரீமன். அவரது நண்பர் வையாபுரியோ கடை வாசலில் கம்பி கட்டி தொங்கும் வார இதழ்களில் ஒன்றைப் புரட்டி “கொலைகாரன் துணிச்சல் பேட்டி போலீஸ் தூங்குகிறதா என்னய்யா இப்பிடி பண்றாங்கிய” என்றபடியே ஸ்ரீமனை நெருங்கி அமர்ந்து டீயை அருந்தத் தொடங்குவார். அப்போது தான் பாடிஸ்டுடா வடிவேலு ரோஸ் கலர் அங்கியோடு எண்டர் ஆவார். ஸ்ரீமனின் மடியில் அமர்ந்தபடி அந்தப் பேப்பரைப் பிடிங்கிப் படிப்பார். எழுந்து செல்லும் வழியில் வையாபுரி கையில் இருக்கும் டீயைத் தன் சுயம் கொண்டு சிதறடித்தபடி கடைக்குள் செல்வார். அப்போது தன் காதலி கெளறி (கௌரியைத் தான் அப்படி சொல்கிறார்) தன் காதலை ஏற்றுக்கொண்டு லெட்டர் தந்துவிட்டதாக ஆத்மதிருப்தியோடு ஸ்ரீமன் மற்றும் வையாபுரியிடம் மகிழும் கராத்தே ராஜா அந்தக் கடிதத்தை ஆசையோடு வாசிக்க ஆரம்பிக்கும் போது உள்ளே இருந்து வரும் வடிவேலு அதைப் பிடுங்கிக் கொண்டு போய் அதில் ஒரு ஃபோன் நம்பரை எழுதி சிறு துண்டாய்க் கிழித்துக் கொண்டு மிச்சக் கடிதத்தை சுருட்டித் தன் காதில் செருகி அதைக் குடைந்து கொண்டே நிமிர்வார். அங்கே கோபத் தீயில் முகமெல்லாம் சிவக்க சுற்றி நிற்பார்கள் ஸ்ரீமன் வையாபுரி மற்றும் காதல் கடிதத்தை இழந்த கராத்தே ராஜா மூவரும். அப்போது ஸ்ரீமனைப் பார்த்துக் கேட்பார் “வடிவேலு தம்பி டீ இன்னும் வர்லை” என்று. கடைக்காரர் வாழைக்காயைத் துண்டு துண்டாக நறுக்கி சூடான எண்ணெயில் பஜ்ஜி போட்டு முடிப்பதற்குள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பாடிஸ்டுடாவை பஜ்ஜி போட்டு முடித்திருப்பார்கள் மூவரும்.
ஆயுத பூஜையில் டீக்கடையின் உள்ளே மாவரைத்துக் கொண்டிருப்பார் கவுண்டமணி. அப்போது வந்து டீ கேட்பவர் “டே எனக்கு ஸ்ட்ராங்கா ஒண்ணு போடுறா இவனுக்கு லைட்டா ஒண்ணு போடுறா” என்றதும் ஓடி வந்து மாவுக்கையாலே ரெண்டு பேரையும் அப்பி “.கசாப்பு கடையில போயி எனக்கு தலையப் போடுறா இவனுக்கு காலைப் போடுறான்னு கேட்பியா…அப்பறம் முண்டமாத் தாண்டா அலையணும். கேக்குறதை மரியாதையாக் கேட்டுப் பழகணும் புரியுதா” என்று விரட்டுவார். என்ன தான் ஓங்கிப் பேசினாலும் அவர் சொன்னது தானே சரி. அதே படத்தில் டீ போடத் தெரியாமலேயே தன் கடையை ஊர் எல்லையில் வைத்துக் கொண்டு திணறிக் கொண்டிருக்கும் ஊர்வசியை நகரச்சொல்லி விட்டு அர்ஜூனை டீ அடிப்பா நீ டீ அடிச்சி எவ்ளோ நாளாச்சு என்று ரசனையோடு அழைப்பு விடுப்பார் கவுண்டமணி. அர்ஜூனின் அப்போதைய செல்வந்த நிலை அறியாத ஊர்வசி அவரை டீமாஸ்டராக வேலைக்கு அழைப்பதும் அவர் மறுக்கவே அர்ஜூனையும் கவுண்டமணியையும் திட்டி அனுப்புவதும் அட்டகாசம்.
பகவதி டீக்கடையின் ஓனர். அவரிடம் மாஸ்டராக வேலை பார்க்கும் வடிவேலுவை அவ்வப்போது வந்து டீ கேட்டுவிட்டு அதை வாங்குவதற்குள் எங்காவது ஓடிச் செல்வது வைப்ரேஷனின் வழக்கம்.வந்துட்டான்யா வைப்ரேஷணு என்று சிணுங்குவார் கோர்ட்டு வளாகத்தில் டீக்கடையில் மாஸ்டர் என்றால் தனி கவுரவம் தானே..? அங்கே தன் சொந்த ஊர்க்காரரான சிங்கமுத்துவைப் பார்த்ததும் வாண்ணே டீ சாப்டு என்று அன்போடு அழைப்பார். அவர் மறுக்க அப்ப சாப்பாடாச்சும் சாப்டுட்டு போங்க என்று உபசரிப்பார். விருந்தோம்பல் தானே வெள்ளந்தி மனிதர்களின் குணம் அதற்கும் மறுக்கும் சிங்கமுத்துவை மேலும் கட்டாயப் படுத்த டே அங்க என்னடா செய்றீங்க நம்மூர்க்காரப் பய ஓட்டல் வச்சிருக்கான் வாங்கடா வந்து சாப்டுங்கடா என்று அழைத்ததும் மொத்த ஓட்டலின் எல்லா நாற்காலிகளிலும் ஆட்கள் வந்து நிறைவார்கள் ஊருக்குள் ஒரு கொலையை செய்து விட்டுக் கேஸ் பார்க்க லாரி நிறைய ஆளோடு வந்திருக்கிற வஸ்தாது தான் சிங்கமுத்து என்பது அப்போதுதான் வடிவேலுவுக்கு உறைக்கும். இனி ஆய்சுக்கும் உனக்கு சம்பளமே கிடையாது என்று விழிகளாலேயே உருட்டுவார் ஓனர் பகவதி.
தாலி கட்டிய ராசா படத்தில் சிக்கன் டீக்கடை ஓனரால் அந்தக் கடையை நடத்த முடியாமல் கவுண்டமணியிடம் நடத்தத் தருகிறார். அவர் அசிஸ்டெண்ட் வழக்கம் போலவே செந்தில் அந்தக் கடை ஓனரின் வளர்ப்பு மகள் ஷர்மிலியை எப்படியாவது காதலித்து விடவேண்டுமென்று செந்தில் முயலுகிறார். ஓனர் கொலை ஒன்றை செய்துவிட்டு 14 வருடம் ஜெயில் கழித்து விட்டு வந்தவர் என்று அறிந்து ரெண்டுபேருமே அலர்ட் ஆகி விடுகிறார்கள்.தன் இடுப்பிலேயே நவபாஷாணக் கத்தியோடு அலைந்ததை அறிந்து பதுங்கினாலும் எப்படியாவது ஷர்மிலியை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் குறையாமல் அவரிடம் கோயிலில் பேச முயல “எதுவா இருந்தாலும் வீட்ல வந்து பேசிக்குங்க” என்று சொல்ல அன்றைய இரவே செந்தில் தனியாகவும் கவுண்டமணி தனியாகவும் ஷர்மிலியைப் பார்க்கப் போக அவர் “திருடன் திருடன்” எனக் கத்த ஓனர் எழுந்து துரத்த ஓடும் கவுண்டமணியின் காலில் குழவியை எடுத்து போடுவார் செந்தில். அவர் “ஆ” என்று கத்தும் சப்தம் மட்டும் மிக நன்றாக மனதில் பதிந்து விடும் சித்தப்பா அலையஸ் ஓனருக்கு. ஒரு வழியாக எல்லாம் சுமூகமாகி ஷர்மிலியை கரம்பற்றுவார் கவுண்டமணி.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் ஊருக்குள் ரவுசு விட்டுக் கொண்டு திரியும் படித்துறைப் பாண்டி மற்றும் அவரது அசிஸ்டெண்டுகளுக்கு அடிவாங்கியாவது அடுத்தவன் காசை ஆட்டை போட்டாக வேண்டும். இந்த நேரத்தில் தான் ஊருக்குள் புதிய டீக்கடை ஒன்று திறந்திருப்பதைப் பார்க்கிறார் பாண்டி.அங்கே சென்று டீ கேட்கும் பாண்டியின் அசிஸ்டெண்டிடம் டோக்கன் வாங்குங்க என்று சொன்ன ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்த அலப்பறையில் கடையை மூடி விட்டு ஓடுகிறார் கடை ஓனர் கிருஷ்ணமூர்த்தி. “டேய் அவன் கடையை மூடிட்டு ஓடினான்னா நமக்கு அவன் அடிமை அதுவே தில்லா தெறந்து வச்சிருந்தா நாம அவனுக்கு அடிமை” என்று ஃபார்முலாவை ஒப்பித்தவாறே தூரத்தில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் பாண்டி மற்றும் அல்வா வாசு இருவரும் கடை ஓனர் கிருஷ்ணமூர்த்தி ஓடுவதைக் கண்டு “டேய் நமக்கொரு அடிமை சிக்கிட்டாண்டா அவனை துரத்திப் பிடிடா “என்று துரத்துவதும் வேறொரு ஊர்க்காரரை கிருஷ்ணமூர்த்தி என்று தப்பர்த்தம் செய்து கொண்டு மண்டையை உடைத்து விட்டு ஊரெல்லையைத் தாண்டி ஒளிவதுமாக அதகளம் செய்திருப்பார் வடிவேலு.
செல்வி டீஷாப் ஓனராக கிருஷ்ணமூர்த்தி அவர் கடை கஸ்டமராக வடிவேலு மீது காக்கா எச்சம் போட அதை பொறுக்க மாட்டாத அசிஸ்டெண்ட் க்ரேன் மனோகர் கல்லை எடுத்து எறிய அது வடிவேலு மண்டையை பிளக்க அந்த ரத்தத்தை பார்த்துவிட்டு பெயிண்டரை பிடித்து கீழே தள்ள அவர் மண்டை உடைந்து அலறுவார்.வடிவேலு உடனே க்ரேன் மனோகர் மீது கல்லை விட்டெறிய அவர் எஸ்கேப் ஆனதில் சைக்கிளில் வரும் வெங்கல்ராவ் மண்டையை அந்தக் கல் பிளக்கும். வெங்கல்ராவ் தன் சைக்கிளை அலேக்காகத் தூக்கி வடிவேல் மீது எறிவார் அவர் நகர்ந்து கொண்டதில் கடைக்காரர் கிருஷ்ணமூர்த்தி மண்டை எகிறும்.அவர் சுடுகிற எண்ணைச்சட்டியை எடுத்து வடிவேலு மீது வீசுவார் வடிவேல் எஸ்கேப்பாக கடைக்கு டீ குடிக்க வரும் இரண்டு கஸ்டமர்கள் மேல் அந்த எண்ணெய் சிதற கிருஷ்ணமூர்த்தி கடைக்குள்ளே இருக்கும் தண்ணியை எடுத்துக் கொட்டுடா என்று வடிவேலுவை அதட்டுவார். உள்ளே சென்று எது தண்ணீர் கேன் என்று தெரியாமல் மண்ணெண்ணைக் கேனை எடுத்து வந்து ஊற்றி சுபம் செய்து வைப்பார் வடிவேலு. சற்றுத் தள்ளி நின்று கொண்டு கடையே பற்றி எறிவதைப் பார்த்தபடி “காக்கா கொஞ்சூண்டு எச்சம் போட்டதுக்காடா இவ்ளோ பெரிய அலப்பறை” என்று அவரே கேட்பது தான் ஹைலைட்.
ஒரு படத்தில் அருகருகே டீ விற்கும் வடிவேலுவுக்கும் ஐஸ் விற்கும் வெங்கல்ராவுக்கும் இடையே முட்டிக் கொள்ளும். அடுத்த நொடி அதகளம் தான்.
மிஸ்டர் பாரத் படத்தில் அப்போது (அனேகமாக 80களின் மத்தி) ரியல் எஸ்டேட் வளர்ச்சியை உத்தேசித்து ஒதுக்குப் புறத்தில் கைக்காசை எல்லாம் செலவழித்து டீக்கடை திறந்திருப்பார் கவுண்டமணி. அந்த ஏரியாவின் வஸ்தாது மைக்கேல் என்கிற ரகுவரன் அந்த இடத்தில் சாராய பார் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பார்.பாரத் ஆகிய ரஜினிகாந்த் அந்த இடத்தைத் தன் பேருக்கு எழுதி வாங்கி வந்து ரெண்டே நாளில் ரகுவரனை க்ளீன் செய்து விரட்டுவார். அதன் பிறகென்ன…? டீக்கடை ஓனர் கவுண்டமணிக்கு வியாபாரம் பிக் அப் ஆகிவிடும்.
பாயும்புலி படத்தில் மனோரமாவும் ஜனகராஜூம் ராதாவின் பெற்றோர். அவர்கள் டீக்கடை ப்ளஸ் ஓட்டல் ஒன்றைத் தான் நடத்தி வருவார்கள். சின்னச்சாமி என்று ஜனகராஜை அதட்டுவார் மனோரமா. அப்படி ஒரு அழகு அந்தத் தொனியில் வழியும்.
திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சைக்கிளில் கேன் வைத்து டீ விற்பார் தனுஷ். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் அப்படி பயிற்சி கிரவுண்டுக்கு அருகே வந்து டீ விற்க வருவார் அப்புக்குட்டி.
உதகை டீ ஸ்டால் குன்னூர் அங்கே அல்வா வாசுவும் சிங்கமுத்துவும் பேசியபடியே டீ ஆர்டர் பண்ணுவார்கள். அந்த நேரம் அங்கே வந்து சேர்வார் வடிவேலு. ஊர்ல ஒருபயலையும் தெரியாது. டீ சாப்பிடணும். காசும் இல்லை என்ன பண்றது என ஒரு நிமிட் கூட யோசிக்க மாட்டார். மெல்ல அல்வாவுக்கும் சிங்கத்துக்கும் நடுவே பேச்சில் சென்று தன்னை செருகிக் கொள்ளுவார். கூடக் கூடப் பேசி ரெண்டு டீயை மூன்றாக்கி அருந்திவிட்டு அவர்கள் இருவரும் படுபயங்கரமாகத் தன் மீது வீசும் அபாய அம்புகளை எல்லாம் நைச்சிய சாதுரிய சாகசமாகக் கையாண்டு அந்த ரெண்டு பேரையும் அல்லு சில்லாக்கி அலறியபடியே ஓடச்செய்வார் வடிவேலு…
எல்லாம் ஒரு கட்டிங் டீக்காகத் தான் பஹ்வான்!!!
தமிழ் சினிமா தேனாய் இனிக்கப் பல காரணங்கள். அவற்றுள் தேநீர்க் கடை மகிழ்ச்சியின் பிறப்பிடம் மட்டுமல்ல நெகிழ்ச்சியின் உறைவிடமும் கூட. தமிழ் சமூகத்தின் வாழ்வை எடுத்துச் சொல்லும் தேன் சுவைத் தேநீரகக் காட்சிகள் காலம் கடந்து மனதில் நிறைகின்றன.
சினிமாவின் சாலையெங்கும் தேநீர்மழைத் தூறல்கள்.