ப ந் த பா ச ம்
சீர்காழி கோவிந்தராஜனுக்கு கனமான குரல். எடுத்தாளும் போது சின்னதொரு சோகச் சாய்வினை ஏற்படுத்துவார் பாருங்கள், அது வேறார்க்கும் வாய்க்காத வித்தகம். அத்தனை பெருங்கொண்ட நகர்தலோடு யூகிக்கவியலாத தோல்வியின் சிறு கலக்கத்தைக் கலந்து தருவது தான் சீர்காழி ஸ்பெஷல். சில பாடல்களை வேறு யாராலும் பாடவே முடியாது என்று சூதுகட்டும் அளவுக்கு பின்னியிருப்பார். பந்தபாசம் படத்தில் இடம்பெறும் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ பாடல் ஒரு சகாப்தகானம்.
பீம்சிங் சிவாஜி கூட்டணி எத்தனையோ வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறது. எனக்கு இந்தப் படம் ரொம்பவே மனத்துக்கு நெருக்கமாய் உணரச்செய்வது. இந்தப் பாடலுக்கு இடையில் வரக் கூடிய கூட்டுக்குரல் தொகையாகட்டும் பாடலுக்கான பின்னிசையாக இருக்கட்டும் வாத்தியங்களின் தேர்வும் நகர்தலுமாய் இருக்கட்டும் எல்லாமே கச்சித அற்புதம் எனத் தக்க மேன்மையில் இயைவது. மாயவநாதன் எழுதிய இந்தப் பாடல் நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் ஒன்றாக எப்போதும் நிலைப்பதற்கான குணாம்சங்களைத் தனதே கொண்டிருப்பது. சிவாஜியின் அபிநயமும் இதில் சொல்லித் தீராத பிரமித்தலை உருவாக்கவல்லது.
காதலெனும் பூ உலர்ந்து கடமை வென்றது
என்றும் மேடுபள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது
என்று முடிந்தடங்குகிற இடம் கடக்க முடியாத வாலைக்காற்றின் வருடல்.
இன்றெல்லாம் கேட்கலாம்
{ஆண்டு 1962 } {படம் பந்தபாசம்} {இயக்கம் ஏ.பீம்சிங் }
{பாடல் மாயவநாதன் } {இசை எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி }
{பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் } {நடிப்பு சிவாஜி கணேசன்}