நெடுங்காலத்தின் கனிதல்
வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூலை முன்வைத்து
துப்பறியும் நாவல் படிக்கிற அதே கண்களையும் மனதையும் வைத்துக் கொண்டு ஒரு அறிவியல் நூலைப் படிக்க முடியுமா?வெ.இறையன்பு எழுத்தில் உருவாகி இருக்கக் கூடிய மூளைக்குள் சுற்றுலா எனும் நூலை அப்படித் தான் வாசித்தேன்.இத்தனைக்கும் பத்தாம் வகுப்புக்கு அப்பால் அறிவியல் என்பதற்கும் எனக்குமான தொடர்பு மிகவும் சொற்பமே எனது மனைவி ஒரு மருத்துவர் என்றபோதும் அபாரமாக அறிவியலில் இருந்து விலகி இருக்கிற வாழ்க்கையே எனக்கு வாய்த்ததாக நம்புகிறேன்.அப்படி இருக்கையில் இந்தப் புத்தகத்தை வாங்கி எனது நூலகத்தில் இருத்திய போதே இதனை நான் படிப்பதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகும் என்றே நம்பினேன்.
நம்ப முடியாத ஆச்சரியங்களாகத் தான் வாழ்வெங்கும் சுவாரசியங்கள் மலருகின்றன.அப்படித் தான் உறக்கம் வராத நள்ளிரவில் இந்தப் புத்தகத்தை எடுத்து அன்றைய உறக்கத்தை உடனே எனக்கு வழங்குமென்ற நம்பிக்கையில் வாசிக்கத் தொடங்கினேன்.சரித்திரக் கதைகளையும் சுஜாதாவின் சில துப்பறியும் நாவல்களையும் மாத்திரமே எடுத்த கரம் கீழே இருத்தாமல் வாசித்திருக்கிற எனக்கே என்னை நம்ப முடியாமல் கிட்டத் தட்ட முன்னூறு பக்கங்களை வாசித்த பிறகே அன்றைய தினம் உறக்கம் வாய்த்தது. அடுத்த நாள் இந்த நூலை வாசித்து முடித்தேன்.
இது வெறும் கணக்காய்ச் சமர்ப்பிக்கிற கூற்றல்ல.எதுவெல்லாம் ஒரு மொழியில் இல்லையோ அவைகள் நுழைதலே அம்மொழி வளப்படுவதற்கான வழிமுறை என்பதில் இருவேறு கருத்தாக்கங்கள் இருக்க முடியாது.கல்விப்புலம் சார்ந்த அறிவியல் நூல்களைத் தவிர அறிவியலை எளிய முறையில் எடுத்து இயம்புகிற நூல்கள் தமிழில் வெகு குறைவே.இதனை ஒரு ஏக்கமாகவே சொல்ல முடியும்.அந்த விதத்தில் இறையன்பு எழுதி இருக்கிற மூளைக்குள் சுற்றுலா எனும் நூல் எல்லோருக்கும் இணக்கமான மொழியில் அறிவியலைப் பரிச்சயம் செய்து தருகிறது.
அடுத்த இருக்கையில் வந்தமர்கிற பயண கால நண்பன் ஒருவனின் அதே அனுசரணையான மொழியோடு அறிவியலைப் புகட்ட முடியும் என்பது கனா.அதனைத் தன் ஒவ்வொரு வாக்கியத்திலும் சாதித்திருக்கிறார் ஆசிரியர்.எளிய மொழியில் தரவுகளையும் சம்பவங்களையும் சான்றுகளையும் உதாரணங்களையும் தனக்கே உண்டான சுவை குன்றாத மொழி நடையில் விவரித்துச் செல்கிறார்.கண்டிப்பான ஆசானின் எழுத்தாக்கத்தோடு இதனை மேற்கொண்டிருந்தால் இந்த நூல் மாபெரும் தோல்வி கண்டிருக்கும்.மாறாக தான் பெரிதும் விரும்புகிற ஒரு விஷயத்தை அதன் நிமித்தம் உள்ள மற்றும் எந்த நிமித்தமும் அற்ற எல்லோருக்கான பண்டமாகவும் மாற்ற முனைகிற அறிவித்தலின் அன்போடு இதனைக் கையாண்டிருப்பது தான் இந்த நூலை அர்த்தமுள்ளதாக்குகிறது.
இன்றைக்கு விஷயதானம் அதன் எதிர்திசையில் நகரத் தொடங்கி இருக்கிறதோ என்று அஞ்சத் தக்க அளவில் யாரைப் பார்த்தாலும் நாலு விதமான கருத்துகளை வைத்துக் கொண்டு அலைவதைக் கண்ணுற முடிகிறது.ஒரு பக்கம் இணையமும் கூகுள் போன்ற தரவிறக்க செயலிகளும் எல்லாம் வல்ல கடவுளின் கதாபாத்திரத்தைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு புன்னகைக்கின்றன.சொந்த சைக்கிளின் சாவியைத் தொலைத்து விட்டு அதனைத் தேடுவதற்குக் கூகுளை நாடுகிற அளவுக்கு மனிதன் மின்னணு பூர்வ சோம்பேறியாக மாற்ற்ப் பட்டிருக்கிறான்.இன்னொரு பக்கம் விஷமத்தனமான இடைமாற்றங்களினால் கணிணியை ஓரளவுக்கு மேல் நம்பக் கூடாது என்ற நிலை வருகையில் அதற்கு மாற்றான திசை அறியாமல் திகைத்து நிற்க நேரிடுகிறது.இப்போது தான் புத்தகங்களின் தேவை அதிகரித்திருப்பதாக என் போன்றவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.எந்த ஒரு நூலும் அதனை எழுதியவனின் சான்றொப்பத்தோடு தான் உலகத்தை வந்தடைகிறது.நூலாசிரியன் எடுத்துக் கோர்த்த மாலைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கிறான்.இசை கற்பதற்கான நூல்களையும் வேதியியலைப் படிப்பிப்பதற்கான பாட நூல்களையும் பட்டியலிட்டால் தெரியும் உலகில் எத்தனை விடயங்கள் கற்றறியக் கடினமானவை என்னும் நிசத்தின் கணிதம்.
எளிமை தான் இறையன்புவின் பேனாமசியாகவே மாற்றம் கண்டிருக்கிறது.பெருநெடுங்காலம் எழுத்தினூடாகப் பல்வேறு கருத்துகளைக் கையாண்ட நிதானமும் அனுபவமும் கலந்த எழுத்து நடையும் புதியதைப் பகிர்கையில் நேர்கிற உற்சாகம் செறிந்த மொழிப்புதுமையும் இந்த நூலாக்கத்தின் முதன்மை சிறப்புகள்.
மூளை என்பது கடல்.கடல் எனும் சொல் சரியா எனத் தெரியவில்லை.மூளை என்பது கடலினும் பெரிது.அதனை விளக்கித் தருவதன் கடினத்தை எளிய பகுப்புகள் மூலமாக கைக்கு அடக்கமான கரும்புத் துண்டங்களாக மாற்றித் தருகிறார் இறையன்பு.
கொஞ்சம் தப்பினாலும் சிதறச் செய்து விடக் கூடிய அதி அபாயமானதொரு தலைப்பாக இதனைச் சொல்ல முடியும்.சொல்ல வேண்டிய யாவற்றையும் சொல்லுவது என்பதே பெருங்கடல் நீரைக் குவளை கொண்டு கவர்வது போலச் சிரமமான காரியம்.அதைச் செய்ய முனைகையில் கடினமான கவிழ்ந்த மொழி கொண்டு செய்வது வெறுமனே ஆய்வேட்டின் கூடுதல் பக்கங்களைப் போல ஆகிவிடக் கூடிய அபாயமும் அதற்குண்டு.புரியவேண்டும்.முழு
மூளையின் தன்மை அதன் உப பாகங்கள் மூளையின் செயல்பாடுகள் விதிகள் விதிமீறல்கள் மூளையின் குறைபாடுகள் விலக்கங்கள் குழந்தையின் மூளை மேதையின் மூளை போராளியின் மூளை கலைத்துறையில் வித்தகம் செய்வோரின் மூளை என்றெல்லாம் விவரித்துத் தருவதன் மூலமாக மெல்ல மெல்ல மூளை என்ற பெருங்கூற்றின் நுண்ணிய இழைகளை எல்லாம் வாசிப்பவரின் மனதுக்கு நெருக்கமான இடத்தில் இருத்தி வைக்கிறது இந்த நூல்.
காதல் தொடங்கிக் கடவுள் வரை வம்சாவளி தொடங்கி எதிர்காலம் வரை காமம் தொடங்கிக் கோபம் வரை அன்பு தொடங்கி வெறி வரை மனம் ஆன்மா உடல் யாவற்றையும் இணைத்துத் தருகிற பெருவெளியாகவே மூளை என்ற கலயம் நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது.உள்ளொளி பாய்ச்சி அதனை இத்தனை அருகாமையில் இவ்வளவு பரந்த பார்வை ஒன்றைப் பார்க்கச் செய்வதன் மூலம் பல சின்னஞ்சிறிய தயக்கங்கள் தடைபாடுகளிலிருந்தெல்லாம் ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய பிரச்சினைகளிலிருந்து வெளியேறி அறிவு எனும் ஒளியைப் பற்றிக் கொள்வதற்கும் மூடத்தனமான அல்லது அறிவுக்குப் புறம்பான சிக்குதல்களிலிருந்தெல்லாம் தங்களைத் தாங்களே அறுத்துக் கொண்டு விடுதலை ஆவதற்கு இந்த நூல் நிச்சயமாகப் பயன்படும் என்பது என் தீர்மானம்.
இந்த நூலின் நகர்பாதையெங்கும் நமக்குக் கிடைக்கிற உப சம்பவங்கள் அவற்றின் பின்னேயான அறிவியலாளர்கள் அவர்தம் கண்டறிதல்கள் முதல் நம்பகங்கள் மறுவினைகள் மாற்றங்கள் அறிவியலும் வரலாறும் இணையக் கூடிய புள்ளியிலிருந்து யாவற்றையும் அணுகிப் பார்க்கும் பார்வை தான் கைக்கொண்ட பணியை அதன் முதற் புள்ளியிலிருந்து இறுதி வரைக்கும் எந்த ஒரு நிலையிலும் உளி தவறாமல் செதுக்குகிற சிற்பியின் பொறுமையோடு அணுகினால் மட்டுமே சாத்தியம்.இந்த நூலை விட அபாரமானது ஒன்று இருக்க முடியுமானால் அது இந்த நூலை இழைப்பதற்காக இறையன்பு கொட்டியிருக்கும் உழைப்பு.அந்தப் பின்னணியில் மலரும் அபார மலர் தான் மூளைக்குள் சுற்றுலா நூல்.
தொடர்ச்சியாகத் தமிழ் மொழியில் பல்வேறு எழுத்துவடிவங்களில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய இறை அன்பு இதுவரை எழுதியவற்றுக்கெல்லாம் மேலாக மகுடத்திற்குப் பொருத்தமான ரத்தினம் போல இந்த நூல் விளங்குகிறது.பெரிய காரியம் ஒன்றை ஆகச்சிக்கலான பல்முடிச்சு நூல்கொத்து ஒன்றை கருணையும் பொறுமையும் பொங்க அவிழ்த்துத் தருகிற பண்பட்ட முதிய கரங்களுக்குப் பின்னே வாய்க்கிற நல்மனம் ஒன்றை மொழியினூடாக சாத்தியம் செய்தாலொழிய இத்தனை சிரமமான பெருந்தலைப்பு ஒன்றிற்கு நியாயம் செய்திட முடியாது.அதனை சாத்தியம் செய்திருக்கும் இறையன்பு போற்றுதலுக்குரியவர் என்று சொன்னால் அது மேலோட்டமானது.அவரது நெடுங்காலக் கனிதலின் பலன் இந்த மாபெரும் நூல். மாணவர்கள் தொடங்கி சமூகத்தின் சகல மாந்தர்களுக்கும் இந்த நூலைக் கொண்டு செல்வது மாத்திரமே இத்தகைய மகத்தான வேலைப்பாட்டிற்கு நாம் செய்திடக் கூடிய மறு மதிப்பாக அமையும்.இந்த நூல் நில்லா நதியாக எல்லோர் கரங்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை.மூளைக்குள் சுற்றுலா நூலை அழகுற அச்சிட்டு வெளியிட்டிருக்கும் ந்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்துக்கும் அதற்கான வாழ்த்துகள்.வாழ்தல் இனிது.