நெல்லையில் மழை
பொருநை 5ஆவது புத்தகத் திருவிழாவில் பேசுவதற்காக அழைக்கப் பட்ட போதே ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்தது நான் தான். பாடல்கள் பற்றிய தலைப்பையும் நானே எடுத்துக் கொண்டேன்.நானும் மூவேந்தனும் மட்டும் தான் நெல்லை சென்று வரலாம் என்று இருந்தது. இளம்பரிதி நானும் வருகிறேன் என்று சொல்லியபோது இளங்கோவன் முத்தையா வரப்போவது யாருக்கும் தெரியாது. நேற்றுக் காலையில் தான் பரிதி தன்னால் வர இயலவில்லை என்று தெரிவித்தார். சரியாகப் 11 மணிக்குக் கிளம்பினோம். இளங்கோவும் மூவேந்திரனும் நேற்றுத் தான் அறிமுகமாகிக் கொண்டனர். பேசிக் கொண்டே செல்வதற்காகத் தானே பயணம்..? பாடல்பெட்டியைத் திறந்து இளையராஜாவிடம் காற்றை ஆளச்சொன்ன பிறகு நேரம் செல்வதே தெரியவில்லை. விழாக்குழுவின் சார்பாக நெல்லை ராஜேஷ் விடுதி வாசலிலேயே காத்திருந்தார். ஊருக்குள் நுழைகிற வழியில் ரயில்வே ஸ்டேஷனை சுற்றிப் பழைய புத்தகக் கடைகள் இருக்குமே என்றேன் இளங்கோவிடம் இதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்குமே என்று கிண்டலடித்தார். சந்திரா ஸ்வீட்ஸில் ஆளுக்குக் கொஞ்சம் அல்வா வாங்கிப் பதுக்கிக் கொண்டோம்.
காரை ஓட்டிக்கொண்டு வந்த முத்துவாகட்டும் இளங்கோவாகட்டும் முன்னர்ப் பல வருடங்கள் நெல்லைவாசிகளாக இருந்திருந்தபடியால் இங்கே இது இருக்குமே அங்கே அது சிறக்குமே இதெல்லாம் மாறிட்டதே அதெல்லாம் அப்டியே இருக்கே என்று கண்கள் விரிய நெல்லைபுராணம் படித்தனர். நானும் மூவேந்திரனும் எல்லாவற்றையும் ஆமோதித்துக் கொண்டே இருந்தோம். பழைய புத்தகக் கடைகளுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுப்பு என்பதை அங்கே சென்று பூட்டிய கதவுகளைப் பார்க்கும் போது தான் அறிந்துகொள்ள முடிந்தது. உன்னை நெக்ஸ்ட் மீட் பண்றேன் என்றவாறே விடுதிக்குச் சென்றோம். ஆனந்த பவனில் சைவ உணவு சிறப்பாக இருந்தது. சரியான கூட்டம். பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ரெண்டு கிண்ணங்களை வழங்கினார் பரிமாறுகிறவர். மூவேந்திரன் அப்போது சம-ரசம் செய்துகொண்டிருந்தான். அது என்ன எனப் பார்த்தால் பருப்புப் பொடியும் நெய்யும். ரசத்துக்குப் பிறகும் பருப்புப் பொடி சாப்பிடலாம் என்பதைக் கண்டுணர முடிந்த நாளாக அமைந்தது.
வேடியப்பன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்ததை மூவேந்திரன் சுட்டிக்காட்டினான். நெல்லை புத்தகத் திருவிழா பகுதியில் சற்று முன்பு மழை கொட்டியதன் காட்சி அது. நான் இளங்கோவை அர்த்தப்பூர்வமாகப் பார்த்தேன். அவர் உடனே நல்லோர் ஒருவர் உளரேல் என்றார் யெஸ் யெஸ் என்றான் மூவேந்திரன்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா..?
மாடியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றோம். மிக மிகச் சிறிய அறை. நேற்று மழையாலா அல்லது வேறு தொழில் நுட்பக் காரணமா என்று தெரியவில்லை மின்சாரம் அடிக்கடி தடைப்பட்டு வந்த வண்ணம் இருந்தது. இளங்கோ அரைத்தூக்கத்தில் பாருங்க பிரபு தான் வந்திருக்கறதை உணர்த்துறதுக்காக சுவிட்சை ஆஃப் செய்திட்டிருக்கலாம் என்றார். பிரபுதர்மராஜ் வருகைக்காகக் காத்திருந்த நேரத்தை வீணாக்காமல் மூவேந்திரனும் இளங்கோவும் முடிந்த அளவுக்கு மதியத் தூக்கம் ஒன்றை முயன்று கொண்டிருக்க நானும் மலரும் ஒரு நெடிய உரையாடலில் இருந்தோம். குதிரைவால் படத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிப் பேச்சு பல தளங்களில் பரந்து விரிந்து கொண்டிருந்த போது தான் தென் திசையின் புகழ் எள்ளல் எழுத்தின் புகல் பிரபுதர்மராஜ் நண்பர்கள் சகிதம் நகர் நுழைந்து விடுதி அறைக்கு வந்து சேர்ந்தார். அவரோடு ஃபைஸல் மற்றும் எழுத்தாளர் பாவெல் சக்தி வேறொரு நண்பர் என மூவரும் வந்திருந்தனர். சற்று நேரம் அளவளாவி விட்டு புத்தகத் திருவிழாவுக்குக் கிளம்பினோம்.
அந்த விடுதியின் வாசலில் சிலபல படங்களை எடுத்துக் கொண்டோம். ஒரு பயணம் என்பதன் சான்றாவணங்கள் சிலபல படங்கள் அல்லவா..?
பிரபு தர்மராஜின் கார் அரசியல் தலைவரின் காரைப் போல் முன்னால் செல்ல தொண்டர்கள் நிரம்பிய பின் தொடரும் வண்டி ஒன்றைப் போல் எங்கள் வாகனம் பின்னால் சென்றது. வழியில் வழி விசாரித்துக் கொண்டு ஒருவழியாக நிகழ்விடமான வ.உ.சி மைதானத்தைச் சென்றடைந்தோம். அரசின் தொல்லியல் துறை அரங்கங்கள் மற்றவற்றை எல்லாம் பார்வையிட்ட பின் புத்தக அரங்கினுள் நுழைய முடிந்தது. டிஸ்கவரியில் வேடியப்பன் இல்லை. புலம் அரங்கில் லோகநாதன் இல்லை. உயிர்மையில் விஜய்குமாரை சந்தித்த போது யாரிடமோ சிறுகதை நூல் ஒன்றின் சிறப்புக்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். முன்னேற்றப் பதிப்பகத்தில் பிரபுதர்மராஜ் எழுதிய நூல்கள் யாவற்றையும் வாங்கிக் கொண்டேன். மலர்வண்ணன் எழுதிய அட்டவிகாரம் தொகுப்பையும் வாங்கிக் கொண்டு தமிழினி அரங்குக்குச் சென்றோம். அங்கே கலகத் தளபதி கோகுல் பி.கு மற்றும் இராயகிரி சங்கர் மற்றும் கால.சுப்ரமணியம் ஆகியோர் இருந்தனர். வசந்தகுமார் அண்ணாச்சியும் இளங்கோவனும் தேநீர் அருந்தச் சென்றனர். கோகுலோடு பேசிவிட்டு அங்கே சென்னையில் வாங்க மறந்த புத்தகங்களை வாங்கினேன்.
நேரம் செல்வதே தெரியாமல் இருந்த போது புத்தகங்களை வாகனத்தில் சேர்த்து விடலாம் என்று வெளியே வந்தோம். மூவேந்திரன் காருக்குச் சென்று வருவதற்குள் எதிரே இருந்த ஈகிள் புத்தக நிலையம் எனும் பெருங்கொண்ட கடைக்குள் நுழைந்து அலசினேன். அங்கே இருந்து ரெண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது மூவேந்திரனும் வந்து விட்டான். பக்கத்தில் ஸ்டேட் பாங்க் அருகே ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தலாம் என்று அழைத்துப் போனான். வழியில் இருவராக கேவி மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஓரிடத்தில் தென்பட்டாற் போல் வேடியப்பனும் ஜீவகரிகாலனும் தென்பட்டனர். அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டுத் தேநீர்க் கடைக்குச் சென்றோம். அங்கே உயிர்மை விஜய் ஏற்கனவே வந்திருந்ததைப் பார்த்தாயிற்று. பேசிக் கொண்டிருக்கும் போதே நாறும்பூ நாதன் செல்பேசியில் அழைத்தார். நிகழ்வு தொடங்கவிருப்பதைச் சுட்டவே தேநீர்க் கணத்தை நிறைவித்துக் கொண்டு அரங்கம் சென்றோம்.
பேராசிரியர் டி.தர்மராஜ் மற்றும் கவிஞர் மகுடேஸ்வரன் ஆகியோருடன் எனது உரையும் நிகழவிருந்ததைச் சுட்டிக் காட்டி வரவேற்புரை நிகழ்ந்தேறியதும் முதலில் நான் திரைப்பாடல்கள் வரிகளிலிருந்து வாழ்க்கைக்கு {உரையின் காணொளிக்கு இங்கே க்ளிக் செய்யவும்) என்ற தலைப்பில் பேசினேன். ஏற்கனவே விழா நிறைவு வரை என்னால் இருக்கவியலாததை அறியப்படுத்தி இருந்தேன். நாறும்பூ நாதன் என்னை கண்காட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து நினைவுப்பரிசை அளித்தார். அங்கேயிருந்து ஆறரை மணிக்குக் கிளம்பினோம்.
இளங்கோவன் பயணக் களைப்பு தெரியாமல் இருக்க நான் தேர்ந்தெடுத்த பாடல்களை ஒலிக்கச் செய்கிறேன் என்று ப்ளூடூத்தில் தன் செல்பேசியை இணைத்து வரிசையாகப் பாடல்களை ஒலிக்கச் செய்தார். நல்ல மனிதர். இவர் பொருட்டுத் தான் இன்றைய மழை என்றெல்லாம் முடிவுக்கு வந்திருந்தேன். யதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தால் மனிதர் தன் செல்பேசியில் எதையோ விடாமல் பார்த்தவண்ணம் இருந்தார். சரி எதாவது சேதி வந்திருக்கலாம் அல்லது முகப்புத்தகம் பார்க்கிறாராக்கும் என்று எண்ணினேன். அடுத்த பாடலின் போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய நேர்ந்தது.
1. மனிதர் எதையோ பார்த்துக் கொண்டு வரவில்லை. உன்-குழாயில் காணொலிப் பாடல்களை தரிசித்துக் கொண்டிருக்கிறார்.
2.அவர் காண்-இன்பம் அடைந்துகொண்டிருக்கக் கூடிய அந்தப் பாடல்களின் கேட்பு-இன்பம் தான் எங்கள் மூவருக்கும் ப்ளூ டூத் புண்ணியத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
3.வரிசையாக ஒலித்தவை அனைத்தும் நடிகை சிவரஞ்சனி நடிப்பில் உருவான டூயட் பாடல்கள்.
4. மூவேந்திரனும் வாகனத்தை ஓட்டி வந்த முத்துவும் கூட சிவரஞ்சனியின் ரசிகர்கள் எனத் தெரிந்துகொண்ட நாள் நேற்று
நாயகனில் அந்த சின்னப் பய்யன் கேட்பானல்லவா நீங்க நல்லவரா கெட்டவரா என்று கமல் கூட தெரியலையேப்பா என்பாரே…,அந்த ஸீனை நினைவுபடுத்திக் கொள்ளலாம். அல்லது குருதிப் புனலில் பிடிபடும் காட்சியில் சட்டென்று கரங்களை மேலே தூக்கியபடி எனக்கொண்ணும் தெரியாது நான் ட்ரைவர் என்பாரே நாஸர் அப்படியான முகபாவத்தோடு யூட்யூப் பார்ப்பதெல்லாம் ஒரு கலை. இளங்கோவன் அந்தக் கலையில் தேர்ந்தவர்.
ஒருவழியாக சிவரஞ்சனியின் பாடல்கள் தீர்ந்து போன பிறகு நாங்கள் மறுபடியும் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். மதுரை நகருக்குள் மறுபடியும் புயல் போல் நுழைந்த போது மணி 9.
நெடு நாட்களுக்குப் பின்பாக ஒரு உலாவல் மனதில் நிறைய ஒரு அளாவல்.
வாழ்தல் இனிது