பாதி

பாதி
குறுங்கதை



அந்தக் குடிவிடுதி நகரின் மூலையில் மரங்கள் சூழ இயற்கைத் தோரணையுடன் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டிருந்தது. சுவர்களில் உறுத்தாத ஓவியங்கள். எங்கோ தூர ஆழத்திலிருந்து கசியும் மெல்லிசை. தேவைப்படுகிற இடங்களில் மட்டும் சன்னமான விளக்குகள். குடிப்பவர்களுக்கு அதுவரை கிட்டாத சொர்க்கமாக அந்த இடம் விளங்கத் தொடங்கியிருந்தது. நகரின் யுவர்கள் பேசிக் கொண்டால் அந்தக் குடிவிடுதிக்கு போயிருக்கிறாயா என்று தான் கேட்டுக் கொண்டார்கள். அத்தனை ரம்மியம்.

அன்றைக்குக் காலையிலிருந்தே குடித்துக் கொண்டிருக்கிறான் ஜோ. முன்பெலாம் அவனுக்குக் குடிப்பதற்குக் காரணங்கள் தேவைப் பட்டன. இப்போது அப்படியில்லை. தோன்றினால் குடிக்கத் தொடங்கிவிடுவான். அதனால் என்ன..? அவனோடு அமர்ந்து குடிப்பதற்கான ஆட்கள் குறைந்துகொண்டே வந்தார்கள். இல்லையில்லை.யாரும் செத்துவிடவில்லை. இவன் செய்யும் தொந்தரவைப் பொறுத்துக் கொள்ள மாட்டாமல் பிய்த்துக் கொண்டோடியவர்கள் பலர். ஒரு கட்டத்தில் தனக்குத் தானே போதுமானவன் என்கிற முடிவுக்கு வந்து சேர்ந்த ஜோ தனியாய்க் குடிக்க ஆரம்பித்தான். தன் வீட்டின் வழக்கசெவ்வகத்துக்குள் அமர்ந்து குடித்தால் அவனுக்குப் பிடித்தமில்லை. எதோ ஒன்று குறைகிறதே. அப்போது தான் இந்தக் குடிவிடுதி தொடங்கப்பட்டது. இதன் முதல் தினத்திலிருந்து அங்கே வந்து செல்கிற நித்ய வருகையாளர்களில் அவனும் ஒருவன். ஹ என்னைப் போல் வேறு யாராவது உண்டா என்ன?

நேற்று வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றைக்கு என்னவோ குடிக்க ஆரம்பித்ததில் இருந்தே மனம் ஒட்டுப் பசையின்றி உதிர்ந்தவண்ணம் இருந்தது. இன்றைய தினம் என்னவோ நிகழப் போகிறது. அவனுக்கு எதிரே மேசையில் அவனைப் போலவே ஒரேயொருவன் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். அந்த இருளின் சிறு ஒளியில் அப்படி ஒருவன் இருப்பது மட்டும் தான் தெரிந்ததே ஒழிய அவன் தோற்றம் முழுவதுமாகக் கலங்கடிக்கப் பட்ட சித்திரத்தைத் தூரத்தில் இருந்து நோக்குகிறாற் போலத் தான் மங்கலாய் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனாலும் ஜோவுக்கு உள்ளே எதோ தொந்தரவாயிற்று. அவனருகே சென்று “ஏன் என்னைப் பார்த்தாய்” என்றான் ஜோ. இதை சாத்வீகமான குரலில் தான் கேட்டான்.

அந்த மனிதன் எதுவுமே பேசவில்லை. அது ஜோவுக்கு ஆத்திரம் ஊட்டிற்று. உன்னைத் தான் சொல்கிறேன். “நீ என்னை வேண்டுமென்றே பார்த்தாய்” என்றான். அவனும் அதையே திரும்பச் சொன்னான். அவன் சொன்னதில் சிறு பரிகாசத்தை உணர்ந்தான் போலும் “அப்படிச் செய்யாதே.நான் சொல்வதையே என்னிடம் சொல்லிக் கேலி செய்யாதே ப்ளீஸ்” என்று குரலைத் தாழ்த்தினான் ஜோ. அவன் அதையே சொல்லாமல் இருப்பானா என்ன..? தன் கையிலிருந்த  குவளையை அவன் மீது எறிந்தான். அது அவன் மீது படவில்லை வேறெங்கோ பட்டுத் தெறித்தது.

அந்தக் குடிவிடுதியின் காப்பாளன் ஓடி வந்தான்.

“அவன் என்னைப் பரிகசிக்கிறான்” என்று மூக்கொழுக அழுதான் ஜோ. அவன் ஜோவைப் பக்குவமாய்க் கையாண்டான். தன் தோளோடு அணைத்தபடி “வாங்க ஸார் வாங்க ஸார்” என்றவாறே அவனை நகர்த்திக் கொண்டு முன்புறம் சென்றான். “அவனை என்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்.இன்னும் நான் குடிக்கவேண்டும்” என்றான். “அங்கே யாருமில்லை ஸார். அது வெறும் கண்ணாடி.நீங்க தான் அது” என்று சமாதானமான குரலில் சொன்ன பரிமாறுபவனை நம்பாமல் பார்த்தான் ஜோ. “நீ பொய் சொல்கிறாய். அது நானில்லை.அவன் வேறாரோ அன்னியன். நிசமாக சத்தியமாக என்னைப் பார்த்துப் பரிகசித்தான். அவனை ஒரு மன்னிப்பாவது கேட்கச் செய்யாவிட்டால் இந்த விடுதியை சும்மா விடமாட்டேன் நான்” என்றான்.

இப்போது அவன் அணிந்திருந்த கோட்டின் ஸைட் பாக்கெட்டிலிருந்து லாவகமாய்ப் பர்ஸை எடுத்த சிப்பந்தி பில்லுக்கான பணத்தை மெஷின் வாயால் உறிஞ்சிவிட்டு மறுபடி காந்த அட்டையை பர்ஸில் திணித்தான். வாசலில் தயாராக இருந்த ஆட்டோவில் ஜோ ஏற்றிவிடப் பட்டான். பத்திரம் என்று என்னவோ விருந்துக்கு வந்து திரும்புகிற உறவினரை வழியனுப்புகிற அதே பாந்தத்தோடு அனுப்பி வைத்தான் சிப்பந்தி. ஜோ மீண்டும் ஒரு முறை அவன் தான் வேண்டுமென்றே என்னை வம்புக்கிழுத்தான் என்றான். ஆட்டோ அவனுக்குப் பதிலற்ற இருளில் திசையில் விரைந்தது.

விடுதியைப் பூட்டுகிற நேரம் வந்தது. கணக்கு வழக்குகளை எல்லாம் சரிபார்த்து விட்டு சிப்பந்தியும் மேலாளரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஜோ வீசியெறிந்த குவளை பட்டுத் தெறித்ததில் சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடிப் பரப்பில் பாதி உடைந்து விட்டிருந்தது. அதனைப் பழுதுபார்க்கிறதற்கான தொகையையும் சேர்த்துத் தான் ஜோவின் கணக்கிலிருந்து எடுத்திருந்தான் மேலாளன். நாளை இந்தக் கண்ணாடியை சரிபார்த்து விடவேண்டும் முதல் வேலையாக என்று சொல்லிக் கொண்டே கடைசி விளக்கை அணைத்து விட்டுக் கதவை இழுத்துப் பூட்டினான்.

“எல்லோரும் போய் விட்டார்கள் ” என்றவாறே தன் நாற்காலியில் வந்தமர்ந்து விட்ட இடத்திலிருந்து குடிக்க ஆரம்பித்தான் பாதி ஜோ.