பாலகுமாரன் விருது 2


   

                                           பாலகுமாரன் விருது 2

           


 

விழா திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் தொடங்கிற்று. எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் விழாவில் கலந்து கொண்டது மகிழ்வைப் பன்மடங்கு பெருக்கிற்று. பாலகுமாரனின் குமாரத்தி கௌரி நிகழ்வைத் தொகுத்துத் தந்தார். ஒவ்வொருவர் பேசும் முன்னும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பைத் தந்த கௌரி பேசி முடித்ததும் அந்தப் பேச்சிலிருந்து சில துளிகளைக் குறிப்பிட்டு விட்டு அடுத்த சிறப்பு விருந்தினரைப் பேச அழைத்தது ரசிக்கத் தகுந்த வகையில் இருந்தது.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அறக்கட்டளையும் பொற்றாமரை கலை இலக்கிய அரங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மூன்றாம் ஆண்டு பாலகுமாரன் இலக்கிய விருது வழங்கும் விழா தேசிய கீதம் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் இறை வணக்கப் பாடல் ஆகியவற்றோடு இனிதே தொடங்கிற்று.

ஆத்மார்த்திக்குபாலகுமாரன்விருதினை மேதகு மணிப்பூர் ஆளுநர் திருமிகு இல.கணேசன் அவர்கள் வழங்கிய போது சாந்தாம்மா கமலாம்மா சூர்யா பாலகுமாரன் ஸ்ரீகௌரி கணேஷ் எழுத்தாளர் சிவசங்கரி பட்டுக்கோட்டை பிரபாகர் ஷெல்வி சுகிசிவம் பொற்றாமரை இலக்கிய அரங்கத்தின் நிர்வாகி சந்திரா கோபாலன் முதலானவர்கள் உடனிருந்தார்கள்.

முதலில் வழக்கறிஞர் சுமதி பேசினார். தன்னை எழுத்தாளராக உருவாக்கியதில் பெரும்பங்கு திரு பாலகுமாரனுக்கு உண்டு என்பதை அவர் விவரித்த விதம் அருமையாக இருந்தது. பாலகுமாரன் குடும்பத்தாருக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தைக் குறித்து விரிவாக எடுத்துரைத்த சுமதி மிட்டாய்பசி நாவலில் தன்னைக் கவர்ந்த அம்சங்களைப் பட்டியலிட்டது நுட்பமாக இருந்தது. வழக்கறிஞர் ஷெல்வி அவர்களின் பேச்சு ரத்தினச் சுருக்கமாக அமைந்தது. பேச்சாளர் சுகிசிவம் பேசும் போது தனக்கும் பாலகுமாரனுக்கும் இடையிலான நட்பின் துளிகளைப் பற்றிப் பேசினார்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பாலகுமாரனுக்கும் தனக்கும் இடையிலான சந்திப்புகளை எல்லாம் அழகாக எடுத்துச் சொன்னார். மிட்டாய்பசி நாவலிலிருந்து தன்னைக் கவர்ந்த வரிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டிய பிகேபி அவர்களின் முழு உரையுமே சிறிய பிசகும் இல்லாத துல்லியத்துடன் நறுக்குத் தெறிக்கும் மொழியில் அமைந்தது.

தலைமை உரை நிகழ்த்திய மேதகு மணிப்பூர் ஆளுநர் திரு இல கணேசன் அவர்கள் பாலகுமாரனுடனான தன் அறிமுகம் நட்பாக மாறிய விதம் குறித்தெல்லாம் விரிவாக உரையாற்றினார். ஆத்மார்த்தியின் ஏற்புரை நிகழ்ந்தது. சூர்யா பாலகுமாரனின் தேர்ந்த உரைக்கு அப்பால் தேசியகீதம் முழங்க விழா இனிதே நிகழ்ந்தேறியது.

ஸ்ருதி டிவி இந்த நிகழ்வின் காணொளித் தூவலைக் காணத் தருகிறது.