வாசக பர்வம் 2
பா வெங்கடேசன் கவிதைகள்
(1988-2018)
கவிதை என்பது வெறுமனே ஒரு முறை வாசிப்பதற்கோ அல்லது மறந்து கடப்பதற்கோ உண்டான பண்டம் இல்லை என்பது எனது எண்ணம். மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமாக மனனம் செய்து சில பலர் மத்தியில் ஒப்பித்து மகிழும் வாய்ப்பு அதற்கில்லை. ஒரு நல்ல வாசகன் மறந்து போக முடியாத வரிகளை தன் மனமும் தானுமாய் ஏந்தி திரியும் கலயமாகவே வாழ்நாளை கடந்து போகிறான். அவனுடனே உறைந்து அவனோடு அழிந்து முடிவிலியாய் தொடர்வது நற்கவிதை லட்சணம்.
30 வருட காலம் எழுதிய கவிதைகளை தொகுப்பது மிக முக்கியமான ஒரு விஷயம் தான் என்று எனக்குப்படுகிறது. எண்களின் பின்னால் அலைந்து கொண்டிருப்பதை விடுத்து வேறு திசையில் பயணிக்கும் வெகு சிலரில் வெங்கடேசனை சேர்த்துச் சொல்ல முடியும். சன்னமும் உறுதியும் ஒருங்கே தொனிக்கும் கூறல் மொழி, சொல்ல வந்ததை மிக நேராக சொல்லிப் பார்க்கும் லாவகம், எளிய மேலோட்டங்களை தாண்டி வேறொரு ஆழத்துக்கு வாசகன் கைப்பற்றி அழைத்துச் செல்லும் ஏற்பு, அன்றாடங்களில் இருந்து அரிதினும் அரிய தரிசனங்களை சாத்தியப்படுத்துகிற காட்சி மொழி இவற்றை எல்லாம் வெங்கடேசன் கவிதைகளின் வழி கட்டமைக்கிற உலகத்தின் வாசல் சாளரம் மற்றும் விதானங்கள் என்று சொல்ல முடியும்.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துபவை குழந்தைகளின் உலகத்தில் இயங்க தலைப்படுகிற அவரது கவிதைகள். காலம் காலமாக குழந்தைகளின் அகம் சார்ந்த கவிதைகள் பலவும் ஒரு விதமான போற்றித் தன்மையுடன் முடிந்து விடுபவையாக இருக்கின்றன. ஆழச்சென்று திரும்புகிற நீச்சல் அனுபவம் மேலோட்டமாக மூழ்கி திரும்பும்போது கிடைப்பதற்கில்லை. ஆழ்ந்த நீராடல்களை சாட்சியப்படுத்துகிற கவிதைகளை மிக அரிதாகவே காண வாய்க்கிறது.
சிறார் உலகத்தின் நுட்ப- முழுமை- கவிதைகளை பட்டியலிடும் போது வெங்கடேசனின் கவிதைகளில் சில அவற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.
இங்கே இரண்டு கவிதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்க கிடைக்கின்றன. அவை இரண்டும் நமக்கு ஏற்படுத்தித் தரும் அனுபவங்களின் கூட்டுத்தொடர்ச்சி நுண்மையானது.
1 ஜாடை
குழந்தை அம்மாவின் குரலில்
பேசுவதைப் போல் இருந்தது
அம்மா தான்
குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள்
****
2 பிள்ளை விளையாட்டு
மற்றும்
வழி தவறி
உள்ளே நுழைந்துவிட்ட
ஒரு பட்டுப்பூச்சி
என் பிள்ளை துரத்தி விளையாட
திரைப்பூ
காலண்டர்
கண்ணாடி
முட்டை விளக்கு எதிலும்
நிலைக்க முடியாமல் தவித்து
தரை மூலையில் ஒட்டிக்கொண்டு
சிறகு துடிக்க
ஊர்ந்த போது
பிஞ்சு விரல்கள் என்னும் சலுகையுடனேயே
அதைக் கொன்றான்
பொதுவாக நெடுந்ததையாடலின் முடிவில் ஒரு பாத்திரம் நேர்த்துகிற பெருவாழ்வு சாட்சியம் அதன் விளைதலாக வாசகன் வந்தடைகிற அனுபவஸ்தானம். அதனோடு- அவற்றோடு தன்னை ஆழ்த்தியும், விலக்கியும் அவன் பெறுகிற உணர்வு ஊக்கம் இவை எல்லாவற்றையும் ஒற்றைக் கவிதையில் அதன் இறுதியில் ஒரு சொல் கொண்டு ஏற்படுத்துவது யூகிக்க முடியாத சாகசம். இந்த கவிதையின் கடைசி இரண்டு வரிகள் இப்படி அமைவதை தவிர வேறு எந்த அமைவும் அவற்றுக்கு இல்லை. நம் மொழியிலும் வேறு எந்த மொழியிலும் என்பது என் முடிவு.
3 மரணப் பறவை
பூக்களை சேதப்படுத்தும்
நிழலென்று நான்
விரட்டி விட்ட கழுகு பறக்கிறது
ஆற்றின் குறுக்காக
வெகு உயரத்தில் அதன்
பிம்பம் மீன்களை
கொத்தி பிடுங்குகிறது
வெங்கடேசனின் கவிதைகளை எளிமை என்று கடப்பது மடமை. மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்து தான் மட்டுமே உணர்ந்தறிந்த சமிக்ஞைகளை
உட்படுத்தி மொழிக்குள் மொழியாக வேறொன்றை அறிவித்து எல்லா பொழுதுகளிலும் வாசகனோடு விளையாடி பார்க்கிற சொல் வழி ஆட்டம் இந்த கவிதைகள்
இன்னும் இந்தத் தொகுதியில் ஒரு புத்தகம் அல்ல அவள் கேட்பது- என் காதல் மட்டுமா நான்- அணிலாடும் அறை- கடலை வரைதல்- இல்லை போல ஆவேன்- கதைகளின் காடு- ஜென்மச்செடி போன்ற எடுத்துப் பேச வேண்டிய பல கவிதைகள் உள்ள போதிலும் வாங்கிப் படிப்பவருக்கான பகிர் பாகமாக அவற்றின் பெயர் மட்டும் சொல்லிக் கடக்கிறேன்.
தமிழில் எப்போதாவது நிகழ்கிற நிகழ்ந்து கொண்டிருக்கிற கவிதை இயக்கங்களில், நிச்சயம் பொருட்படுத்த வேண்டிய கவிதைகளின் தொகுதி இந்த புத்தகம்.
காலச்சுவடு இதனை வெளியிட்டு இருக்கிறது
224 பக்கங்களுடன் 280 ரூபாய் விலையுடன்
முதல் பதிப்பு ஜூலை 2023.