பீலி சிவம்
சிவனப்பன் அலையஸ் பீலி சிவம் சிறந்த நடிகர். இயக்குனராகக் கே.பாலச்சந்தரும் சிவாஜிகணேசனும் இணைந்த ஒரே படமான எதிரொலி படத்தில் அறிமுகமானவர். நல்ல குரல்வளம் கொண்டவர். வசீகரமாய் சிரிப்பவர். கிடைத்த வேடம் அது எத்தனை சிறியதென்றாலும் வேட ஒழுங்கு மீறாமல் அதனை நிகழ்த்துவதில் வல்லவர். எழுபதாம் ஆண்டுக்கப்பால் எம்ஜி.ஆர் நடித்த அனேகமாக எல்லாப் படங்களிலும் சிறு வேஷமாவது கிடைக்கப் பெற்றார் சிவம். துணிவே துணை படத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வருவார். கேவாக் கலரில் மர்மப் புன்னகை என்று பெயரிடும் அளவுக்குப் பாந்தமாகத் தோன்றுவார். நாடகப் பங்காற்றியதற்காகக் கலைமாமணி விருது வழங்கப் பெற்றவர்.
பீலி சிவத்தின் முகம் நடிகனுக்கென்றே சொல்லிச் செய்தாற் போன்ற முகம். அத்தனை வகைவகையான முகபாவங்களையும் பொருத்தமாய்த் தோற்றுவிக்க வல்ல முகம் அவருடையது. வேறார்க்கும் அமைந்திடாத மந்தகாசத்தை நிரந்தரமாகக் கொண்ட தோற்றம் சிவத்தினுடையது. நம்பகமற்ற நயவஞ்சகத் தன்மையைத் தன் சிரிப்பில் தோன்றச் செய்வது நடிகர்களுக்கு மிகவும் அத்யாவசியமான ஒன்று. ஆனால் அந்தத் திறன் ஆறாம் விரலைப் போல் ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் வாய்ப்பது வழக்கம். சிவம் அந்தத் திறனிலும் சிறந்து மிளிர்ந்தவர். ஆயிரமாயிரம் ஒப்பனைகளுக்கப்பாலும் சலிப்பைத் தோற்றுவிக்காமல் புத்தம் தன்மையை எஞ்சச் செய்த நடிகர் சிவம். அவருடைய திறமைக்கேற்ற வேடங்களைத் தமிழ்த் திரையுலகம் அள்ளித் தந்ததா என்றால் இல்லை என்பதே சோகம் தடவிய நிஜம்.
ரிஷிமூலம்-தூரத்து இடி முழக்கம்-முந்தானை முடிச்சு-பிள்ளை நிலா-மோகம் முப்பது வருஷம்- ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்-புலன் விசாரணை- சிவம் நடித்தவற்றில் குறிப்பிடத் தகுந்த சில படங்கள்.
எண்பதுகளில் பல சினிமாக்களில் நடித்திருக்கும் சிவம் சிலபல படங்களில் போலீஸ் வேடத்திலும் தென்பட்டிருக்கிறார்.
கரையெல்லாம் செண்பகப்பூ படத்தைத் தொடர்ந்து பீலி சிவம் புலன் விசாரணையில் இன்ஸ்பெக்டர் சிவகுருவாக வருவார். ஹானஸ்ட் ராஜிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுக் கதைமுடிவார்.
சிங்காரவேலனில் போலீஸ் ஸ்டேஷனில் கமலை மீட்க வந்து “தேங்க் யூ வெறிமச்” என முழங்கும் வடிவேலுவின் ஆங்கிலத்தைக் கேட்டு திடுக்கிட்டு மனோ இனிமே ஸ்டேஷன் பக்கம் வந்தா நீங்க மட்டும் வாங்க…இவனைப் பார்த்தாலே பயமா இருக்கு என்று மனோவிடம் ஆட்சேபம் தெரிவிப்பார்.
அவர்கள் நீங்கியதும் சிவத்திடம் வரும் கான்ஸ்டபிள் கூப்டீங்களா ஸார்..?
நான் இல்லையா..
பெல் சப்தம் கேட்டுதே..இது கான்ஸ்டபிள்
இப்ப வந்திட்டு போச்சே ஒரு ஜந்து..அதோட வேலைய்யா என்பார் கடுப்பாக.
தட் ஜந்து இஸ் அவர் வைகைப்புயலு வடிவேலு
பெரியமருது படம் வரை இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய நெடுநாள் அனுபவத்தின் பலனாக (கேப்டன் புண்ணியத்தில்) வல்லரசு படத்தில் கமிஷனராகப் பதவி உயர்ந்தார். கேப்டனே இயக்கிய விருதகிரியில் அவருடைய தந்தையாக வருவார் சிவம். பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் சிவத்துக்கு வாய்ப்பளித்தார் விஜயகாந்த்.
அவருடைய பெயரில் இருக்கக் கூடிய பீலி எனும் சொல் அவரைத் தனித்துக் காட்டுவதற்கு முகாந்திரம் செய்தது.
ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் படத்தில் சின்னஞ்சிறு வேடமென்றாலும் நினைவில் நின்றார்.
இயக்குனர் விஜயன் இயக்கித் தயாரித்த தூரத்து இடிமுழக்கம் படத்தில் பீலிசிவம் விஜயகாந்த் இரண்டு பேர்களும் சமமாக டைட்டில் வரும். மாரி என்பது சிவம் வகித்த பாத்திரத்தின் பேர். படத்தில் விஜய்காந்த்-பீலி சிவம்-பூர்ணிமா மற்றும் வில்லனாக வரும் மந்திரவாதி என நான்கு பாத்திரங்களுமே கடைசியில் மரித்துவிடுவதாகக் கதை. ஒருவிதமான வசியம் மந்திரவாதம் செய்வினை என்பதையெல்லாம் முன்னிறுத்திக் கதையின் நகர்வு நிகழும். இதன் பாடல்களைப் புனைந்தவர் பழம்பெரும் கவி கு.மா.பாலசுப்ரமணியம். சலீல் சவுத்ரி இசையமைப்பில் உள்ளமெல்லாம் தள்ளாடுதே என்ற பாடல் இன்றளவும் காற்றலை தீரா கானவலம் கண்டு வருகிறது. படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு வருடம் கழித்துத் தான் இதன் ரிலீஸ் தேதி அமைந்தது. அதே தினத்தில் நகைச்சுவை வேந்தர் சுருளிராஜன் மறைவுற்றார். இந்தப் படம் இந்திய மற்றும் சர்வதேசப் பட விழாக்களில் திரைவலம் கண்டது.
பீலிசிவம் நவரசத்தையும் பிரதிபலிக்கத் தெரிந்தவர்.
தனக்குக் கிடைத்த சன்னலின் வழியாக வான் பார்க்க முடிந்த போன்சாய்க் குறுமரம் என்றாலும் அதன் விருட்சமுழுமை போற்றுதலுக்குரியது தான் இல்லையா..?
பீலி சிவத்தினுடையது அப்படியான குணச்சித்திர முழுமை தான்.