பீஹாரி – ஆத்மார்த்தி

1.

இந்த வருடத்தின் ஆகஸ்ட் 12 அன்றைக்கு அரசரடியில் இருந்து பெரியார் நிலையத்துக்கு செல்லும் பாலத்தின் சைட் ஆர்ச் மீது நின்றுகொண்டு மூன்றரை மணி நேரமாக இறங்காமல் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் யாராவது பாலத்தின் எந்த முனையிலாவது ஏற முயன்றால் குதித்து விடுவதாகத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தான்.தீயணைப்புப் படை வீரர் ஒருவர் சாமர்த்தியமாக அவன் பார்வையில் அடைபடாத வேறோரு விளிம்புவழியாக ஏறி கிட்டத் தட்ட பாலத்தின் மேல் விதானத்தை அடைந்துவிட அவரைப் பார்த்ததும் அந்த வடமாநிலத்தவன் பாலத்துக்கு வெளிப்பக்கம் குதித்ததில்  power line எனச்சொல்லப்படுகிற உயர் அழுத்த மின்கம்பி மீது உடம்பு உரசிப் பிணமாகக் கீழே விழுந்தான்.அவனுக்கு வயது சுமார் இருபத்தி ஐந்து இருக்கலாம். அப்போது சரியாக மணி 05.20.14
பார்த்துக் கொண்டிருந்த க்ரவ்டில் ஒருசிலர் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் பிழைத்திருப்பானென்று உச்சுக் கொட்டினார்கள்.மதுரை போன்ற செமி நகரங்களில் இதுபோன்ற சிச்சுவேஷன்களை சமாளிக்கத் தேவையான வலை இத்யாதிகள் அவ்வளவாய் இருப்பு இருப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார் ஒரு வயோதிகர்.
பாலத்தின்மேல் தங்கள் டூ வீலர்களை பார்க் செய்துவிட்டு நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த பலரும் மெல்லக் கலையத் தொடங்கினர். 3GB RAM Duocore processor lolipop version கொண்ட android 2.1.1 3G/4G cell phoneல் அந்த பீஹாரியின் மிகச்சரியான கடைசி இரண்டேகால் நிமிட விடியோ பதிவு வாட்ஸாப்பில் தனது பயணத்தைத் தொடங்கியது. “If you dont mind” எனக்கும் அதை அனுப்ப முடியுமா” என்று கேட்டு வாங்கிக் கொண்டவன் “I am Aravind. Nice to meet you” என்று கைகொடுத்தான். பதிலுக்குத் தன் பெயர் சொன்ன வீடியோ எடுத்தவனிடம் “நீங்க எங்க ஒர்க் பண்றிங்க?” என்று கேட்க அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். டூ வீலர்களும், கார்களும், நடைமாந்தர்களும் குழுமியபடியே கலைந்து செல்வதில் ஏற்பட்ட நெரிசலை அதட்டி அதட்டி ஒழுங்குபடுத்த ஆரம்பித்தார்கள் ட்ராஃபிக் போலீஸார்.
“ரொம்ப ரொம்ப ட்ரை பண்ணோம் சார். பட் எல்லாம் வேஸ்ட். ஆளு போயிட்டான்” என்று யாரோ யாருக்கோ தகவல் சொன்னார்கள்.
அங்கே குழுமியிருந்தவர்கள் எடுத்த வீடியோக்களில் மேற்சொன்ன வீடியோ தான் ஆகச்சிறந்த resolution உடனும் விழுந்தவனைக் கொஞ்சம் நெருக்கமாகக் காட்டுகிறதாகவும் இருந்தது.அந்த வீடியோ வாட்சப்பில் அந்த மாலைப் பொழுதில் மாத்திரம் மொத்தம் ஆயிரத்து எண்ணூற்று பதினேழு பேர்களுக்கு ஷேர் செய்யப் பட்டது.லோகல் சானல் ஒன்று அதை சம்பவத்தைக் கண்ணுற்ற ஒருவர் எடுத்த வாட்ஸப் பதிவு என்று சொல்லி ஆறு மணி ந்யூஸில் காட்டியது.
அவன் ஒரு பீஹாரி.பாதி மடித்த எக்ஸ் போல சரளைக் கற்களுக்கு அருகாமையில் கிடந்த அவன் எழுந்துகொள்ளப் போகிறான் என்று நம்பிய சிலர் காத்திருந்தார்கள்.அவன் எழுந்திருக்கப் போவதில்லை.சொல்லப் பட்டு வரவழைக்கப்படுகிற ஒரு வாகனத்தில் சற்று நேரத்தில் அவனது பிரேதம் ஏற்றப் படும்.அதுவரை மேலுங்கீழுமாய் சற்று அலையலாம் அவனது ஆத்மாவைப் போல.

அந்த பீஹாரியைப் பற்றிய அனுமான ஊகத் தீர்மானங்கள், சத்திய சாட்சியப் பிரமாணங்கள்,அவதான துல்லிய அபிப்ராயங்கள் இவ்வாறாக ஆரம்பித்தன.
1. அந்த பீஹாரி ஒரு குடிகாரன். அவன் குடிபோதையில் தன்னை ஒரு மாபெரும் சிலந்தி என்று கற்பனை செய்துகொண்டு ஆகாய மார்க்கமாகப் பாதாளம் சென்று நரகத்துக்குள் புகுந்துகொண்டான் என்றார் ஒருவர்.அவருக்குக் குடிப்பழக்கம் கிடையாது.பாக்குப் போடுவார்.உடன் வேலைபார்க்கிறவர்களிடம் தன் கல்லூரிக் காலத்தில் தனக்கொரு காதலி இருந்ததாகவும் அவள் பார்க்கிறதற்கு நடிகை சுமலதா போல இருப்பாள் என்றும் தொடர்ந்து நம்ப வைப்பவர்.சுமலதா நடித்த படங்கள் சில தான் பார்த்திருக்கிறார்.ரசிகர் இத்யாதி எதுவும் கிடையாது.என்றாலும் தனக்கென ஒரு ரகசிய பாவ இச்சையால் இவ்வாறு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பவர்.
2. அந்த பீஹாரி ஒரு காதல் தோல்வியாளன். இதற்குமேல் வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது என்றார் ஒருவர்.அவர் முன்பொரு சாமியாரின் தீவிர பக்தராக இருந்தவர்.அந்த சாமியார் ஓரிரவு இறந்து போன பிற்பாடு மெல்ல அந்த ஆன்மீக அமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர்.இப்போது திடகாத்திரமான இன்னொரு சாமியாரை ஆண்டவன் அவதாரம் என்று நம்பத் தொடங்கி இருக்கிறார்.
3. 34 வருடங்களாக ஒரே ஆஃபீஸில் ஒரே இடத்தில் ஒரே நாற்காலியில் வேலை பார்த்துக் காற்று பிரித்துக் கொண்டிருக்கும் ஒருவர் (இல்லற ஞானி) (3+3=6 குழந்தைகள்)= அவன் ஒரு பைத்தியக்காரன் என்றார்.
உண்மையில் அந்த பீஹாரி ஒரு பீஹாரி. மற்றபடிக்கு அந்த பீஹாரி ஒரு கூட்டிக் கொடுப்பவன், ஒரு திருடன், ஒரு பிள்ளை பிடிப்பவன், ஒரு கொள்ளைக்காரன், ஒரு பித்தலாட்டக்காரன், ஒரு கஞ்சா வியாபாரி, ஒரு சாராயம் காய்ச்சுபவன், ஒரு போதகன், ஒரு கெட்டவன், ஒரு ரொம்பக் கெட்டவன், ஒரு கற்பழிப்பவன், ஒரு வசியக்காரன், ஒரு சூனியக்காரன், ஒரு பயங்கரவாதி, ஒரு தீவிரவாதி, டாஷ் மதத்தை டாஷ் ஜாதியைச் சேர்ந்த அவன் மொத்தத்தில் ஒரு டாஷ்.என்றெல்லாம் கருத்துக்கள் அலையத் தொடங்கின.
“உண்மையில் மதம் என்பது ஒரு சுருக்குக் கயிறு. ஜாதி என்பது உயிர் உறிஞ்சும் திரவம். பேராசை என்பது சரிக்குச் சரி விஷம். மொழி என்பது சகலபுறங்களிலும் கூர்தீட்டப்பட்ட, கைப்பிடியற்ற கத்தி. ஆம் மொழியென்பது கத்தி.”

2.

மிகச்சரியாக 25 மீட்டர்கள் தள்ளி இது நடந்திருக்குமேயானால், தன் ஸ்டேஷன் லிமிட்டில் இது வந்திருக்காது என்று குறைபட்டுக் கொண்ட SSI (மூன்று மாதங்களுக்கு முன்னால் ஏட்டாக இருந்தவர், நான்கு மாதங்களில் ரிட்டையர் ஆகப் போகிறவர்) “இந்த எளவெடுத்தவன் இங்கதான் வந்து குதிக்கணுமாக்கும்” என்று தொப்பியைக் கழற்றி கர்ச்சீஃபால் வழுக்கைத் தலை வியர்வையை முழுவதுமாகத் துடைத்துக் கொண்டார்.
தன் ஹெல்மெட் வெய்சரைக் கழற்றியபடியே “what happened actually?” எனக் கேட்ட லூஸ் ஹேர் யுவதி சற்றுமுன் மரித்த அவனுக்காக “உச் உச் உச்” என்று மூன்று தடவை பரிதாபப்பட்டு மீண்டும் சாக்ஸ் போன்ற உறை அணிந்த கையால்  முறுக்கிக் கொண்டு விருட்டென்று கிளம்பிப் போனாள். எதற்கும் இருக்கட்டுமென்று அவளுக்கு பதில் சொல்லுமளவு ஆங்கிலம் தெரியாத மருந்து விற்பனைப் பிரதிநிதி (பெயர் – சீனிவாச ராகவன், ஃபேஸ்புக்கில் விளாச்சேரிக்காரன் என்ற பெயரில் இருப்பவர்) முன் சென்ற யுவதியின் வண்டி நம்பரை மனப்பாடம் செய்து கொண்டே அவள் சென்ற எல்லீஸ் நகர் பாலத்தின் வழியாக வழிவிடாதவர்களைச் சபித்தபடி இன்னும் 8 மாதம் ட்யூ பாக்கி இருக்கும் தனது ஸ்டார் சிட்டி பைக்கில் துரத்திக் கொண்டு போனார்.
முழங்காலுக்கு மேல் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, கட்டைப் பை நிறையக் காய்கறியை முன்புறம் வைத்து கைனட்டிக் ஹோண்டாவை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாத, சட்டையின் மேல் பொத்தான் திறந்து பனியனுக்கும் மேலாக துருத்திக் கொண்டிருக்கும் பூணூலை ரியர்வ்யூ கண்ணாடியில் பார்த்தவுடன் அதை உடம்பாழத்தில் தள்ளி மேல் பட்டனைப் போட்டுக் கொண்ட அந்த காலத்து ராஜேஷ் கன்னா ஜாடையில் தான் இருப்பதாக நம்பும், அதற்காகவே கடந்த முப்பது வருடங்களாக டெய்லி ஷேவிங்கும் கட்டாய மீசை மழித்தலும் செய்து கொள்ளுகிற அந்த மனிதர் “கொஞ்சம் வழிவிட்டா நான் போய்டுவேன்..கொஞ்சம் வழிவிட்டா நான் போய்டுவேன்…” என்று சகல திசைகளிலும் ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்த மாலைப் பத்திரிகையின் ரிப்போர்ட்டர்(ஆரம்பத்தில் விற்பனைப் பிரதிநிதி ஆக வேலைபார்த்தவர்.பிறகு சர்க்குலேஷனில் ஆறு வருடங்கள்.அதன் பிற்பாடு மதுரை ஏரியா ரிப்போர்ட்டர் வேறு வாரப்பத்திரிகைக்குப் போய்விட ஏற்பட்ட வெற்றிடத்தை இவரைக் கொண்டு நிரப்பிக் கொண்டார்கள்.அவர் வேலைபார்க்கும் பத்திரிகையும் வேறு நல்ல ஆளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.இவரும் வேறொரு நல்ல வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.வண்டியில் ப்ரெஸ் என்று கொட்டை எழுத்தில் முன்னும் பின்னுமாய் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்.) கூட்டத்திலிருந்தவர்களிடம் “லவ் ப்ரச்சனையா? கடன் தொல்லையா? வேறெதுமா? சூஸைடா? ஆள் காலியா? உயிர் இருக்கா? ரெஸ்க்யூ பண்ண முடியலியா? எத்தன நேரம் ஆச்சு?ஃபயர் டிபார்ட்மெண்ட் வந்தாங்களா..?போலீஸ் எதும் த்ரெட்டென் பண்ணிச்சா.?” என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கேள்விகளை டூப்ளிகேட் சாவி தயாரிக்கும் பூட்டு ரிப்பேர்க்காரனைப் போல கேட்டபடி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.
பெரியார் நிலையத்திலிருந்து எல்லீஸ் நகர் போகும் ஒரு பாலம், அரசரடியிலிருந்து மாப்பாளையம் வந்து, மாப்பாளையத்திலிருந்து பெரியார் பஸ் நிலையம் ஏறும் மறு பாலம், இவ்விரண்டுக்கும் நடுவில் ஜாயிண்ட் ஆகும் இணைப்பு அந்தப் பக்கம் side archல் ஏறிக் குறுக்கே நடந்து இந்தப் பக்கம்  side arch வரைக்கும் வந்து கிட்டத்தட்ட 3 மணிநேரங்கள் ஏழெட்டு முறை செல்ஃபோனில் அந்த மனிதன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான் என்றும், அதில் ஓரிரண்டு முறை கோபமாக அவனே கட் செய்தான் என்றும், இடையில் ஒரு முறை அழுதான் என்றும், திரும்பத் திரும்ப செல்லை எடுத்து “கால்” செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான் என்றும், கடைசிவரை பேசித் தோற்றதினாலேயே அவன் தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்பட்டிருந்தான் என்றும், கொஞ்சம் முயன்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் “மூங் தால்” பாக்கெட்டின் ஓரத்தைப் பிரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டே சொன்னவரிடம் “தேங்க்ஸ்ங்க.. தேங்க்ஸ்ங்க…” என்றபடி சுருக்கெழுத்தில், படவிழாக்களில் திரையிடுவதற்காக நாலைந்து பேர் கைக்காசு போட்டு எடுக்கும் “ஆத்ம திருப்தி” குறும்படம் ஒன்றின் திரைக்கதை வசன பேப்பர் போல குழப்பிக் குழப்பிக் குறித்துக் கொண்டார் நிருபரானவர்..
அவன் பேசியது ஹிந்திதான் என்று ஒருவர் சொல்ல முற்பட “அ…” என்றபடியே இப்போது முழுவதுமாக வழி கிடைத்துவிட்ட முருங்கைக்காய் முழங்கால் வேஷ்டி அம்பிமாமா “எல்லாத்தையும் ஹிந்தின்ருவீங்களா?67க்கப்புறம் ஹிந்தியே வேணாம்னு சொன்னதோட வினை ஸார் இது.. நான் ஹிந்தில ப்ரவீன் (பச்சைப் பொய்.அவரல்ல அவர் வீட்டு அம்மாள்தான் ப்ரவீன்.நெடுங்குடும்பஸ்தத்தில் மொத்தம் நூறு ஹிந்தி வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியும் மாமாவுக்கு). அது கண்டிப்பா ஹிந்தி கிடையாது” என்றவாறே புறப்பட்டுப் போனார்.

3.

“ஹிந்தியோ எதுவோ அவனுக்கு சுத்தமா தமிழ் தெரியல. அவன் பேசுனது எதுவும் ரெஸ்க்யூ பண்ண வந்தவங்களுக்குப் புரியல.ஆனாலும் சைகையிலயே பேசுனதெல்லாம் அவனுக்குப் புரிஞ்சுது. அவனக் கீழ எறங்குன்னு எத்தனையோ சொல்லியும் அவன் கேக்கல. அந்த மொத்தப் பாலத்தோட ஆர்ச்சோட எந்தப் பக்கத்துலயும் யாராவது ஏறி வராங்களான்னுதான் அவன் கவனிச்சுட்டே இருந்தான். ஏற ஆரம்பிச்ச உடனே அவன் யார் கைலயும் மாட்டிறக் கூடாதுன்னு கீழ குதிச்சிருக்கணும்”, தன் வலது கையை நீட்டி “இப்டி குதிச்சதுக்குப் பதிலா” இன்னொரு பக்கம் நீட்டி, “இப்டி குதிச்சிருந்தா தப்பிச்சிருப்பான். இது ப்யூர் ஆக்ஸிடெண்ட் சார். பவர் லைன்ல பட்டதுனாலதான் அவன் செத்துட்டான். இதுவே சாதாரண லைன்னா கூட பொழச்சிருப்பான்.” என்று எட்டிப்பார்த்து “இதுதான் பவர் லைன்” என்று சொன்னவர் தமிழ்நாடு ஈபியில் குமாஸ்தாவாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். “இங்க எதுக்கு சார் பவர் லைன் போகுது?” என்று தனக்கு அருகாமையில் எட்டிப் பார்த்தவர் கேள்வியிலிருந்த அறியாமையை ரசித்துக் கொண்டே “என்ன சார் இப்படி கேக்கறீங்க? இந்தப் பாலமே கீழ போற தண்டவாளத்துக்கு மேல ட்ராவல் பண்ணத்தான். கூப்புடற தூரத்துல ரயில்வே ஸ்டேஷன்.எவ்ளோ பவர் நீட் உள்ள இடம்..?வீட்டுக்கு குடுக்கிற கரண்டு போதுமா..? பவர் லைன் வேணாமா?” என்று technical know how தானம் செய்து திருப்தியடைந்தார்.
இன்னும் ஒரு செல்ஃபோன் நுகர்வோர் தனக்கு வந்த callலை attend செய்த மாத்திரத்தில் “செத்தே பூட்டான்” என்றவாறே “சும்மாவா சொன்னார் பட்டினத்தார் நட்ட குழி தொட்ட முலைன்னு.. இவன் லவ் பண்றேன்ருக்கான்போல….. அவ மாட்டேன்ருக்கா போல….இவன் நீ லவ் பண்லேன்னா செத்துருவேன்ருக்கான் போல..,, அவ என்ன சொன்னாளோ? செத்துட்டான்போல..” என்றார்.
பாலத்துக்குக் கீழே மதுரை ஸ்டேஷனிலிருந்து அழகப்ப நகர், பைகாரா, பசுமலை, திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் நீளும் இருப்புப் பாதைக்குப் பக்கவாட்டில் தரையில் முகம் மோதிக் கிடந்த பிரேதம் தற்போது புரட்டப்பட்டு, துணியால் போர்த்தப்பட்டிருந்தது. மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிற குளிர்சாதன ப்ரேதப் பரிசோதனை அறையுடன் கூடிய செயல்முறை ஆய்வகத்தின் பக்கவாட்டில் இருக்கக் கூடிய பிணவறைக்குக் கொண்டு செல்வதற்கான ஆரம்பகட்ட முஸ்தீபுகளில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வாகனம் நிற்கும் இடம் வரைக்கும் ப்ரேதத்தைக் கொண்டு சென்றவர்கள் கழன்றுகொள்ள  வாகனத்தை ஓட்டி வந்தவனிடம் stretcherல் பிணத்தை ஏற்றிய உதவியாளன் “இன்னிக்கு காலைலேருந்து இது நாலாவதுபா” என்றான். “இந்திக்காரனா?” எனக் கேட்ட ட்ரைவரிடம், “இருக்கும். மூஞ்சி ரொம்பக் கருத்துருச்சு..” என்றவனிடம் அடுத்தவன் கரண்டு தின்னா கருக்காதா.?என்றவாறு கதவைப் பூட்டிக் கொள்ள அந்த வாகனம் யூ அடித்துக் கிளம்பியது.
இறந்துபோன பீஹாரியின் உடலில் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர இடுப்பில் ஒரு கருப்புக் கயிறு, வலதுபுற பாக்கெட்டில் பாதி உபயோகித்து மீதி இரண்டாக மடிக்கப்பட்ட ஹான்ஸ் புகையிலை (இந்தியாவில் சிகரெட்டைத் தவிர மற்ற அனைத்து வகையான புகையிலைப் பொருட்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.), நான்கு 10 ரூபாய் நோட்டுகள், இரண்டு 20 ரூபாய் நோட்டுகள், இரண்டு 100 ரூபாய் தாட்கள், மற்றும் ஒரு 500 ரூபாய் நோட்டு ஆகியன கைப்பற்றப் பட்டன. Bank of Baroda வங்கியின் ATM கார்டு ஒன்றும், தேசம் முழுவதிலும் பெரும்பாலும் வழங்கப்பட்டுவிட்ட ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஒன்றும் இருந்தன. அந்த ஆதார் கார்டுப்படி அவன் ஒரு பீஹாரி. மதுரைக்குப் பிழைப்புத் தேடி வந்தவன். மற்றும் சாவதற்காக வந்தவன்.
பாலத்துக்கு மேலே இப்போது பெரும்பாலும் கூட்டம் கலைந்து சென்றுவிட பாக்கி இருந்த நாலைந்து பேர்களில் “வேற ஸ்டேட்காரங்களால ஆயிரம் ப்ரச்சனை சார்.. பானி பூரி விக்கறவன், பெயிண்டரு, சலூன்ல வேல பாக்கறவன், ஹோட்டல்ல சர்வரு, இப்டின்னு நாலு பொழப்புக்காக வராங்க. நாமளும் யாதும் ஊரே யாவரும் கேளிர்னு எடம் குடுத்துடறோம். நாளடைவுல லோக்கல் க்ரிமினல்ஸோட சேர்ந்துகிட்டு, செயின் அறுக்கறது, கொள்ளை அடிக்கறது, கொலை பண்றது ஃபுல்லா இவங்கதான் பண்றாங்க. நாமளும் கர்நாடகாகாரங்க மாதிரி உருத்தா ஒற்றுமையா இருந்திருந்தோம்னா இவிங்களால வந்திருக்கவே முடியாது. நமக்குள்ள ஒற்றுமை இல்ல..இல்லியா சார்” என்று சொன்னவர், “எதோ கொள்ளை டீலிங்லதான் இவன் செத்திருக்கணும்” என்று சொல்லிக் கொண்டார்.

4.

பீஹார் இந்தியாவுக்குள்தான் இருக்கிறதா? பீஹாரிகள் கூலிகள். எல்லாக் கூலிகளும் பீஹாரிகள் அல்ல. தமிழகத்தில் பெரும்பாலான வடமாநிலத்தவர்கள் பல படிநிலைக் கூலிகளாக பற்பல தொழில்களில் ஈடுபடுகிறார்கள், தேவைப்படுகிறார்கள்.தேவை உருவாகிற இடம் நோக்கி வரவழைக்கிற பெருங்கூட்டம் பெயரற்றதும் சில சமயங்களில் உயிரற்றதுமாகிறது.எண்ணிக்கையிலேயே இயங்குகிற வியாபாரகணிதம் அது.
அந்த நாலைந்து பேர்களில் ஒருவன் சொன்னாற் போல் எங்கெங்கும் வடமாநிலத்தவர்கள் பலரும் நிரம்பித் தான் இருக்கிறார்கள்.எங்கெல்லாம் கூலி குறைவாக வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்கிறதோ அங்கெல்லாம் இருப்பதிலேயே சமரசம் அதிகம் செய்து கொள்கிறவர்கள் தேவைப்படுகிறார்கள்.பெரிய பிராண்டிங்குகள் லேபர் ஆக்ட் மற்றும் லோக்கல் அரசியல் தொல்லைகளுக்காகத் தங்களுக்கு இணக்கமான தொழிலாளர்கள் இருப்பது தொழிலாதாரம் என்று எண்ணத் தொடங்கியது தொண்ணூறுகளின் பிற்பகுதியில்.கடந்த இருபது ஆண்டுகளில் கெட்டிக்கார முதலாளிகளின் பொறுமையான காய் நகர்த்தல்கள் கொஞ்சமும் கொடி தூக்காத மனிதர்களாகப் பார்த்துப் பார்த்துத் தங்கள் வியாபாரத் தலங்களில் அமர்த்திவிட்டது என்னவோ நிஜம்.ஒருபுறம் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மறுபடி திறக்கப்படவே இல்லை.ஆலைகள் லேண்டுகளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டன.விளை நிலங்களை விடவும் நல்லவிலைக்குப் போன ரியல் எஸ்டேட் வியாபாரம் மூடப்பட்ட ஆலைகளைச் சரித்து உருவாகியது.மறைமுகமாக ஒரு தொழிலாளர் சமூகம் வெவ்வேறாக சிதற்றப் பட்டபிற்பாடு நிகழ்ந்தேறிய சூட்சும வியாபாரம் அது.இன்னொரு பக்கம் ஒவ்வொரு நகரமும் தன்னால் செரிக்கமுடியாத மேலதிக மானுட நுழைதலை தனக்கடுத்தாற்போல் இருந்த நிலத்தின் பால் தள்ள முயன்றபடியே தனக்கடுத்த நகரத்தை நகரங்களை நோக்கியும் திருப்பிவிடப் பார்த்தது.
பனியாக்களும் ராஜஸ்தானி மார்வாடிகளும் குஜராத்திகளும் தங்கள் குடும்ப வியாபாரங்களுக்கான கடைக்கோடி டீலர்ஷிப் வரைக்கும் தங்கள் இனம் சார்ந்த டீலர்களையே எதிர்பார்த்தார்கள்.அப்படியான மிதசெல்வந்தர்கள் கன்னியாக்குமரி வரைக்கும் அந்தந்த வியாபாரங்களின் டீலர்களாக அந்தந்த வட்டாரத்திலேயே மூன்று தலைமுறை தாண்டி வாழ்ந்து வருவது சாதாரணம்.ஆண்டுக்கொருமுறை ராஜஸ்தானுக்குச் சென்று வருவதும் கூடப் படிப்படியாகக் குறைந்து போய் இழவுக்கும் கலியாணத்துக்கும் மாத்திரம் அந்தத் திசையை ஒதுக்கி விட்டவர்களும் நிறையப்பேர்.இந்தத் தொழில்கள் எல்லாம் கனகாம்பரம் மல்லிகை போல் ஒழுங்கான மனிதர்கோர்த்த மாலைகள் போன்றவை.இப்படியானவர்களின் சகல பணியாளர்களுமே சொந்தபந்தங்கள் அல்லது சுயசாதிக் காரர்கள் குறைந்த பட்சம் சொந்த நிலத்தில் இருந்து தருவிக்கப் பட்டவர்கள்.அவர்கள் பாடெல்லாம் சுபிட்சமாகத் தான் இருந்தது.தென் நிலத்தின் ஏதோ ஒரு தேவையைத் தொடர்ந்து நிர்வகித்துத் தீர்த்துத் தருகிற தொழில்களைப் புரிந்த எல்லோரும் தொடர்ந்து இங்கேயே வாழ்ந்து இந்த நிலத்தைத் தத்தெடுத்துக் கொண்டார்கள்.தப்பும் தவறுமாய்த் தமிழ் பேசினாலும் கெட்ட வார்த்தைகளும் குளிர்விக்கக் கூடிய நல்ல வார்த்தைகளும் தனித்தனியே உபயோகிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.
பிரச்சினை பாலம் போடுகிற பெரும் காண்டிராக்ட் நாடு முழுமைக்குமான ஃபோர்வே சிக்ஸ் வே காண்டிராக்ட்கள் தொடங்கியதில் அதிகமானது.நாட்டின் மாநிலங்கள் அத்தனையிலும் வேறுவேறாய்த் தெரிகிற சாலைகள் அனேகமும் பீகாரிகள் மற்றும் மிஜோரம் சதீஸ்கர் நாகலாந்து  மணிப்பூர் போன்ற சில வளரா மாநிலங்களைச் சேர்ந்த கூலிகளாலேயே மெத்தப்பட்டவை என்பது தெரியத் தேவையற்ற ரகசியம் போல ஆகிப்போனது.பானி பூரி விற்பவர்கள் சலூன் ஸ்பாக்களில் வேலை பார்ப்பவர்கள் என பிற தொழில்களில் ஈடுபடுகிறவர்கள் அந்தந்த தொழிற்தலங்களில் நேர்கிற காலியிடங்களைப் பெரும்பாலும் தத்தமது ஊர்க்காரர்கள் அல்லது உறவுக்காரர்களைக் கொண்டே ஃபில் அப் செய்ய விரும்புவது ஒருபுறம்.டோல்கேட் பாலம் கட்டுவது ரயில்வே சப் காண்டிராக்ட் சுரங்க வேலை எல்லாவற்றுக்கும் மேலே ஒரே பாரதம் அகண்ட பாரதம் என்று நாற்கர சாலைகளின் உருவாக்கத்தில் பெரும்பாலும் எதிர்ப்பேச்சற்ற கூலிகள் வாழ்வகை அற்றவர்கள் தான் தேவைப்பட்டார்கள்.கட்டிடங்கள் நொறுங்கிச் செத்தவர்கள் பலர்.பாலத்திற்கான மண் அகலப் படுத்துகிற போது காணாமற் போனவர்கள் பலர்.இவர்கள் யாரும் எண்ணிக்கை அளவில் கூட செய்திகளில் இடம்பெறுவதில்லை.தங்கள் நிலத்தில் தேடுவதற்கும் திரும்புவதற்கும் அனேகமாக யாருமற்ற கூட்ட அனாதைகள் என்றே இவர்களை சொல்லவேண்டியிருக்கிறது.அப்படியானவர்கள் வந்த இடத்தில் நொறுங்கியோ புதைந்தோ செத்தால் கூட வெளியே தெரியாமல் போய்விடுவார்கள்.

5.

மதுரை மேம்பாலத்தில் இருந்து குதித்த பீகாரி அந்தக் கொடுப்பினை இல்லாதவன்.

6.

அவன் பெயர் ஸோ அண்ட் ஸோ.அப்படியே இருக்கட்டும்.அவன் மதுரைக்கு வந்து மிகச்சரியாக எண்பத்தியேழாவது நாள் செத்துப் போனான்.அவன் செத்ததற்குக் காரணம் சாவதற்கு முந்தைய கணம் வரைக்கும் விடாமல் செல்பேசியில் பேச முயன்றுகொண்டே இருந்த ஒரு பெண்.அவளும் பீகாரைச் சேர்ந்தவள் தான்.மதுரையில் இருக்கிற ஒரு மல்டி சிடி பிராண்டட் ஸ்பா ஒன்றில் அழகுக்கலைஞியாக வேலைபார்ப்பவள்.அந்த ஸ்பாவின் ஃப்ராஞ்சைசை நடத்தி வருபவர் பேர் சர்வதத்தன்.அவரொரு புத்திஸ்ட்.மதுரையில் இருக்கக் கூடிய சொற்ப புத்திஸ்டுகளில் அவரும் ஒருவர்.அவரது கொள்ளுத் தாத்தா நூற்றி முப்பத்தி எட்டு வருடத்துக்கு முன்னால் மதுரையில் ஒரு ஸ்வீட் ஸ்டாலில் வேலைக்கு சேர்ந்தவர்.அவரது தாத்தா இரண்டாம் உலகப் போரின் போது தொழிலில் நொடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஊரை விட்டு ஓடிப்போனார் என்றும் இரண்டு கதைகள் சொல்லப்பட்டு வளர்ந்தவர் அவரது தகப்பனார்.எல்.வீ.எஸ் கம்பெனியில் காண்டீன் உரிமை கிடைத்து ஓஹோ என்று உயர்ந்தவர்.சர்வதத்தனுடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர்.அவரைத் தவிர மற்ற அனைவரும் வடக்கேயும் அமெரிக்கா ஆஸ்திரேலியா என்றும் ஸெட்டில் ஆகிவிட்டார்கள்.சர்வதத்தன் மாத்திரம் மதுரையை விட்டுப் போக மனமில்லாமல் நெடுங்காலம் ஒரு பிஸ்கட் கம்பெனியின் ஸ்டாக்கிஸ்டாக இருந்தவர் ஒன்றரை ஆண்டுகளாகத் தான் இந்த ஸ்பாவை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.கையைக் கடிக்கவில்லை.பெரிய சம்பாத்யம் இல்லாவிட்டாலும் முதல் கெடாத தொழில்.எப்படியும் நாளை மறுநாள் பெரிதாக ஜெயித்துவிடலாம் என்கிற லாகிரிவாசனையை எப்போதும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் தொழில்.பரவாயில்லை.அவருக்கு நிம்மதியான தொழிலாக அது தான் இருக்கிறது.
எஸ்.எஸ்.காலனியில் பெரிய வீடு சர்வதத்தனுக்கு சொந்தமாக இருக்கிறது.அவரது மனைவி ஒரு டாக்டர்.அரசாங்க மருத்துவர்.தனி பிராக்டீஸ் கிடையாது.டோக் டோக்காக அவரது சம்பளம் குடும்பத்தை செழிக்க செய்தது.சர்வதத்தன் இந்த ஸ்பாவை பைபாஸ் ரோடில் நடத்துகிறார்.ஒத்தி கட்டிடம்.வாடகை பிரச்சினை இல்லை.வேலை பார்க்கிற ஸ்டைலிஸ்டுகளை பிராண்ட் கம்பெனியே ட்ரெய்ன் செய்து அனுப்பி வைத்து விடுகிறது.அவர்கள் தங்குவதற்கு இரண்டு வீடுகள் வெவ்வேறு இடங்களில் நாலு பெண்கள் நாலு ஆண்கள் எனத் தங்கி வேலை பார்க்கிறார்கள்.அவர்களில் ஒருத்தி தான் ஸோனாஷி என்னும் பீகார் பெண்.வந்து ஒரு வருடமாயிற்று.நல்ல வேலை தெரிந்த கரங்கள் கொண்டவள்.மசாஜ் செய்வதில் சமர்த்து.பெண்கள் பெண்களுக்கும் ஆண்கள் ஆண்களுக்கும் மசாஜ் செய்வது தான்.அதில் அவளுக்கென நிறைய கஸ்டமர்களை உருவாக்கி இருந்தாள்.அப்படியான சோனாஷியை ஒரு முறை முடிவெட்ட வந்த போது தான் கண்டு கொண்டான் நம் நாயகன் ஸோஅண்ட்ஸோ.
காதல் என்று அவன் கற்பனை செய்து கொண்டானா இல்லை நிஜமாகவே அவளும் காதலித்தாளா என்பதில் ஒரு சின்ன குழப்பம் இருந்தது.உண்மையில் இரண்டு பேரும் வேலை பார்த்த இடங்களின் இடைதூரம் மூன்று கிலோமீட்டர்கள் மாத்திரமே.வரப்போகும் ஒரு நெட்வொர்கிற்காக ஃபைபர் ஆப்டிகல் கேபிள் பதிக்கும் காண்டிராக்டில் பள்ளம் தோண்டப்பட்ட பிற்பாடு கேபிளைப் பதிக்கிற வேலையில் ஹெல்பராக வேலை பார்த்து வந்தவன் ஸோ அண்ட் ஸோ.ஒரு நாளைக்குப் பத்து டு பன்னிரெண்டு மணி நேர வேலை.கொஞ்சம் சம்பளம் பரவாயில்லை.தங்குமிடங்களும் ஆங்காங்கே டெண்ட் அடித்து இருக்கும்.பெரு நகர மையங்களில் ஹோட்டலில் அறை இருக்கும் என்றாலும் வாரம் ஒரு நாள் ரெஸ்ட்.அன்றைக்கு மாத்திரம் தான் ரூமுக்குப் போகவர முடியும்.இவர்கள் வேலைபார்க்கிற பசங்கள் அட்ஜஸ்ட்மெண்டில் பஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரங்கள் அதிகம் பார்த்துப் பார்த்து ஐந்து நாள் வேலை ரெண்டு முழு நாள் ரெஸ்ட் என்று ஆக்கிக் கொள்வார்கள்.அப்படியான அட்ஜஸ்ட்மெண்டில் கிடைக்கும் இரண்டு தினங்களில் இரண்டாவது தினம் முழுவதும் குடித்துவிட்டோ குடிக்காமலோ தூங்கி வழிவதற்காக உடம்பு ஏங்கும்.
முதல் நாள் மாத்திரம் டிப் டாப்பாக ட்ரெஸ் செய்து கொண்டு அதிகபட்சம் ரெண்டு பேராகக் கிளம்பி நடந்தே அந்தந்த நகரங்களைக் கொஞ்சம் தெருக்களையாவது பழக்கம் செய்துகொள்வார்கள்.கோயமுத்தூர் விழுப்புரம் கடலூர் பாண்டிச்சேரி இப்போது மதுரை.ஸோ அண்ட் ஸோவுக்கு நெருக்கமான நண்பர்களே கிடையாது.அவனொரு மனிதப்பூச்சி.எதற்கெடுத்தாலும் பயம்.ஊர் விலகி இத்தனை தூரம் வந்தது பேரச்சம்.அவனுக்குக் கிடைத்த முதல் தோழமை ஸோனாஷி தான்.அவள் கொஞ்சம் மாடர்ன் டைப்.இதே வேலையைத் தன் சொந்த ஊர்ப்பக்கம் செய்தால் கிடைப்பதைப் போல இருமடங்கு சம்பளமும் கை நிறைய டிப்ஸூம் சதா ஏஸி குளிர் வீறிடும் அழகு நிலையமும் கைக்கு வழங்கப் பட்டுவிடும் சுவையான தின்பண்டங்கள் மற்றும் மூன்று வேளை சாப்பாடும் என திருப்தியாக இருந்தாள்.அவள் வேலை பார்க்கும் ஸ்பாவின் சர்வபலம் கொண்ட ப்யூட்டீஷனாகவும் அதிகாரத்தில் தலைக்கு அடுத்த கழுத்தாகவும் அவள் இருந்தாள்.இன்னும் செல்வதற்குரிய தூரம் குளிரூட்டப்பட்ட கனவு என அவள் வாழ்க்கை இதமாய் இருந்தது.
ஸோ அண்ட் ஸோ தான் கேபிள் பதிக்கிற விசயத்தை அவளிடம் மாற்றி தானொரு டெக்னீஷியன் என்றும் இஞ்சினீரிங் படித்தவன் என்றும் பொய் சொன்னான்.அவளை என்ன செய்தாவது தக்கவைத்துக் கொண்டு தன் உடமையாக மாற்றியே தீர்வதென்று விரும்பியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.அதிகம் குழும வாய்க்காத அவனது சுபாவம் முதற்காரணம்.இத்தனை தூர மதுரையில் அவனது தாய்மொழியான பீகாரியில் பேசித் தீர்ப்பதற்குக் கிடைத்த எதிர்பாலின தேவதை அவள் என்பது இரண்டாவது காரணம்.ஒப்பிட ஏதுமற்ற ஒற்றை அவள் என்றபோதும் அவனுக்குப் போதுமானவளாகவும் அவள் இருந்தாள் வேண்டியே தீரும் தெய்வவரமாக அவன் காதல் ஆனது.
விடுமுறை தினங்களில் ஷோக்கான ஆடைகளில் ஸ்பாவுக்கு வரும் ஸோ அண்ட் ஸோ எஞ்சினியர் என்பது அவளைக் கிறங்க வைத்தது.எதிர்காலத்தில் வேறெங்கேயும் போகாமல் மதுரையிலேயே ஸோனா ஸ்பா கூல் ஃபார் கேர்ல் என்று ஸ்லோகன் வரை கனவு கண்ட அவளுக்கு கை நிறைய சம்பாதிக்கும் எஞ்சினியர் பொண்டாட்டி ஆவதில் கசப்பேதுமில்லை.இரண்டு மாத பரிச்சயத்தில் ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நாலு மணி நேரம் ஃபோனில் பேசிக்கொண்டே இருப்பதும் வாரக் கடைசிகளில் கால்டாக்ஸி புக் செய்து விஷால் மால் அல்லது மில்லினல் மால் அம்மா மெஸ் அல்லது கோனார் கடை என்று சுற்றிக் கொண்டே இருந்தார்கள்.நாலு சினிமாக்கள் நாலு சில்மிஷத் தீண்டல்கள் என இனிக்கவே இனித்தது அவனுடனான அவள் ஸ்னேகம்.
உடன் வேலை பார்க்கும் மணிப்பூர்க்காரி பூர்த்தி என்பவள் ஒரு நாள் அவளிடம் கேட்டாள் “உன் ஆடவன் என்ன வேலை பார்க்கிறான்” என்று.ஸோனாஷி சொன்னாள் இஞ்சினியர் என்று.படபடவென சிரித்த பூர்த்தி உன் ஆளைப் பார்த்தேன்.சொக்கலிங்க புரத்தில் பள்ளத்தில் கேபிள் பதித்துக் கொண்டிருக்கிறான் என்று.இவள் ஒரு ஆட்டோவில் சென்று ஒரு இடத்தில் மறைந்து கொண்டு எங்கே இருக்கே என்று கேட்க அவன் ஸைட்டில் இருக்கேன்.பசங்க வேலை பாக்கிறாங்க நான் சூபர்வைஸ் பண்ணிட்டிருக்கேன்.பத்து நிமிஷத்ல பேசறேன் என்று கட் செய்தான்.
அவளும் பத்து நிமிஷத்தில் மறுபடி அழைக்க அவன் இன்னொரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுகிறேன் என்று சொன்னவன் சூபர்வைஸரிடம் தலை வலிக்கிறது என்று சொல்லி டைம் வாங்கிக் கொண்டு எதிரே இருக்கும் பெட்டிக்கடைக்குச் சென்று நிழலில் நின்றவாறே இவளை அழைத்து எப்போதும் போல் “சொல் அன்பே..” என்று தொடங்க “இப்ப எங்க இருக்க?” என்று கேட்டாள்.”ஸைட்லேருந்து ரெஸ்ட்ரூம் வந்திட்டேன்.இனி லஞ்ச் ப்ரேக் தான் பேசலாம்” என்று இயல்பாகக் கொஞ்சத் தொடங்க “எனக்கு இப்பவே உன்னைப் பார்க்கணும்” என்ற ஸோனாக்ஷியிடம் “நோ பேபி..ரொம்ப அவசரம்னா சொல்லு ஒரு ரெண்டு அவர்ல பர்மிஷன் போட்டுட்டு வரேன்” என்றதும் “ஏன் மண்ணு போகக் குளிக்கணுமா..?” எனக் கேட்க இயல்பாக “ஆமாம்” என்றவன் திணறி “என்ன என்ன..?” எனக் கேட்க அவன் முதுகைத் தொட்டாள்.திரும்பியவனை செருப்பால் அடித்து “நீ பிச்சை கூட எடுத்திருக்கலாம்.ஆனா எங்கிட்டே உண்மையா இருந்திருக்கணும்ல..?”என்று கேட்க ஊர் பார்த்த ஆத்திரத்தில் “நான் இந்த வேலை பார்க்குறவன் தான்.இதொண்ணும் பிச்சை எடுக்கிறது இல்லை.இதை சொல்லியிருந்தா நீ என்னை ஒத்துக்கிட்டு இருப்பியா..?” என்று கேட்க அவள் “சத்தியமா வேணாம்னு சொல்லிருப்பேன்.இப்ப என்ன..?இனி நீ என் லைஃப்ல வேணாம்.மூஞ்சிலயே முழிக்காத” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போயே விட்டாள்.
சொக்கலிங்க நகரத்தில் பீகாரி பாஷை தெரிந்த ஒருவர் கூட அப்போதைக்கு அந்தத் தெருவில் நடமாடாத காரணத்தால் வேற்றுமொழிப் படத்தை சப் டைடில் இல்லாமல் பார்த்து விட்டு சானல் மாற்றுவதைப் போலக் கடந்து போனார்கள்.மறந்து போனார்கள்.
ஸோ அண்ட் ஸோ அதற்குப் பின் வந்த ஒரு முழு மாதமும் அவளோடு ஃபோனில் பேச நேரில் பார்க்க எத்தனையோ முயற்சி செய்து முடியாமற் போனது.அந்த மாதத்தில் அவன் மொத்தம் பதின்மூன்று நாட்கள் லீவு போட்டு ஊர்த்தெருவெல்லாம் திரிந்தான்.எங்கேயும் தென்படாத அவளை ஸ்பாவுக்கு சென்று சந்திக்க ஏழு முறை முயற்சித்து ஆறாவது முறை சர்வதத்தனால் கடுமையாக எச்சரிக்கப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டான்.ஏழாவது முறை அந்த ஸ்பாவின் பின்பக்க சுவர் ஏறிக் குதிக்க முயலும் போது ஏரியாவாசிகளால் பிடிக்கப்பட்டு எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டு நையப்புடைக்கப் பட்டு அவனுடைய கம்பெனி சூபர்வைஸரும் லோகல் வக்கீல் ஒருவரும் வந்து மீட்டுக் கொண்டு போனார்கள்.
அதற்கடுத்த ஐந்து நாட்கள் சமர்த்தாக வேலைபார்த்தவன் அடுத்து வந்த விடுமுறை தினத்தில் வேறோரு ஸ்பாவுக்கு சென்று முடிவெட்டிக் கொள்ள அமர்ந்தான்.அவனுக்கு முடிவெட்டியவன் இன்னொரு பீகாரி.பரஸ்பரம் அறிமுகம் ஆகிக் கொண்டு நம்பர் மாற்றிக் கொண்டார்கள்.அவனிடம் ஸோ அண்ட் ஸோ தனக்குத் தமிழ்நாடு பிடிக்கவில்லை என்றும் திரும்பவும் பீகாருக்கே சென்றுவிடப் போவதாகவும் பேச்சுவாக்கில் சொன்னான்.
.அன்றைக்கு மாலையே அவர்கள் இன்னொரு தடவை சந்தித்துக் கொள்ள நேரிட்டது.யதேச்சையாக பானிபூரிக் கடையில் ஒரு ப்ளேட் மசாலா பூரி ஆர்டர் செய்து விட்டுத் திரும்பிய ஸோ அண்ட் ஸோவைப் பார்த்து சிரித்தபடியே வந்த அந்த பீகாரி ஸ்டைலிஸ்ட் இதான் என் வருங்கால மனைவி என்று சோனாக்ஷியை அறிமுகம் செய்துவைக்க மனசு நொறுங்கிய ஸோ அண்ட் ஸோ மறு நாள் மதியம் பாலத்தின் மேற்புற விதானத்தில் ஏறி அவள் நம்பருக்கு விடாமல் ஃபோன் செய்து ஆறேழு முறை பேசி “நீ இல்லாவிட்டால் நான் செத்துப் போவேன்..” என்று எத்தனையோ சொல்லி கூடிய கூட்டத்தைப் பார்த்து வேறு பதற்றம் அதிகரித்துக் கொண்டே போய் வேறு வழியே இல்லாமல் ஐந்து மணி இருபது நிமிடம் பதினாலாவது செகண்ட் போலீஸ் கையில் மாட்டிவிடாமல் அந்தப் பக்கம் குதிப்பதற்குப் பதிலாக இந்தப் பக்கம் குதித்..