புதிய மொழி
குறுங்கதை
அவனுடைய வாத்தியார் அவனைப் பார்த்ததும் அப்படிச் சொல்வார் என்று கூடப் படிக்கும் யாருமே எண்ணிப் பார்க்கவே இல்லை. முகத்தில் பேப்பரை வீசி அடித்து விட்டுக் கத்தினார்.
“நீ தயவு செய்து இந்த மொழியை அவமானப் படுத்தாதே. உனக்கு சுட்டுப் போட்டாலும் மொழி வசப்படவே போவதில்லை.நீ ஆங்காங்கே எதையோ கிறுக்கி விட்டு வாங்கியிருக்கும் சொற்ப மதிப்பெண்கள் உனக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. ஒன்று செய். படிப்பிலிருந்து விலகிவிடு. வேறு எதாவது படிக்க முடிந்தால் படி. இல்லா விட்டால் கூட இல்லாவிட்டால் கூட ஒன்றும் குடி முழுகி விடாது இந்த உலகம் சுற்றிக் கொண்டே தான் இருக்கும் உனக்கு ஒரு பெரிய கும்பிடு”
அவர் கோப சுபாவம் கொண்டவர் என்பது அந்த யுனிவர்சிட்டிக்கே தெரியும் அவன் வகுப்பில் முதலாவது வருபவனிலிருந்து கடைசியாக வருபவன் வரைக்கும்
இதே வசவு தான் இதே வார்த்தைகள் தான் இதே சிகிச்சைதான் இதே கசப்புதான் எல்லோரையும் போலத்தான் அவனையும் வசை பாடுவதாக அந்த பேராசிரியர் நினைத்திருக்கக்கூடும்.
அவனால் அதை மறக்கவே முடியவில்லை மறுநாளிலிருந்து அவன் வகுப்புக்கு வரவில்லை. வகுப்புகளை தொடர்ந்து புறக்கணித்தவனுக்கு யுனிவர்ஸிடி நினைவூட்டல் கடிதங்களை அனுப்பிக் கொண்டே இருந்தது எதற்கும் பதிலில்லை. அவனோடு படித்தவர்களில் ஒரு சிலர் அவனைத் தேடி வீட்டுக்கு போனார்கள் அவன் வேறு ஊருக்கு போய்விட்டதாகவும் தொடர்ந்து படிக்கவில்லை எனவும் மாத்திரம் சொல்லப்பட்டது. அந்த வருடத்தின் இறுதியில் அவனோடு படித்த அனைவரும் படிப்பை முடித்துவிட்டு விடைபெறும் தருணம் வந்தது அப்போது ஒருவன் அவனைப் பற்றி தேவையில்லாமல் நினைவூட்டி விட்டான். அந்தப் பேராசிரியருக்கு அவனை நினைத்து லேசாக கவலையும் தன் மீது குற்ற உணர்வும் அப்போதுதான் முதல் முறையாக வந்தது “யாராவது அவன் வீட்டுக்குச் சென்று பார்த்தீர்களா?” என்று கேட்டார் போனோம் அவன் இந்த ஊரை விட்டே சென்று விட்டான் எனக் கேள்விப்பட்டோம் என பதில் வந்தது. அவருக்கு மேலும் குற்றவுணர்வு கூடியது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய சில மாதங்களில் அவர் ஓய்வுபெற்றார். அந்த ஒருவனைத் தான் திட்டியதால் படிப்பை விட்டுப்போய்விட்டானே என்ற குற்ற உணர்வு பெரிய மரம் போல் வளர்ந்து விட்டிருந்தது. தான் படைத்த மிருகத்துக்குத் தானே இரையாவதைத் தவிர்க்க ஓடிக் கொண்டே இருந்தார். உறக்கமற்ற இரவுகளும் நெடிய கனவுகளும் மாறி மாறி அவரைத் துன்புறுத்தின.
உறவுக்கார இளைஞன் ஒருவன் அவருக்கு உதவிக்கென்று வரத் தொடங்கினான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் தான் திட்டிய மாணவனின் நினைவு அவருக்கு வந்து வந்து போயிற்று. ஒரு கட்டத்தில் அவனிடம் மன்னிப்புக் கோர ஆரம்பித்தார். அவனுக்கோ எதற்குத் தன்னிடம் மன்னிப்புக் கோருகிறார் என்பது புரியாமல் திகைப்பாக இருந்தது. ஒரு நாள் மெல்ல மனம் கசிந்தவாறே தான் ஒரு மாணவனைத் திட்டியதைப் பற்றி அவனிடம் சொன்னார். அவர்கள் இருவரும் ஊர் ஊராக அந்த மாணவனைத் தேடத் தொடங்கினார்கள். நெடுங்காலத்துக்கப்பால் அவன் தொலைதூரத்தில் இருக்கும் மாநிலத்தின் ஒரு ஊரில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கே இருவரும் சென்றனர்.
உறவுக்காரன் மெல்ல மாணவனிடம் சினேகிதத்தை ஏற்படுத்திக் கொண்டான். அவனோ அந்த மாநிலத்தைச் சேர்ந்தவனாகவே தோற்றமளித்தான். அந்த மாநிலத்தின் மொழியைத் தான் வந்தவனிடம் பேசினான். உறவுக்காரனுக்கு அந்த மாநிலத்தின் மொழியும் நன்கு தெரியும் என்பதனால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவனிடம் உரையாட முடிந்தது.
பேராசிரியர் அவனிடம் பேச விரும்புவதாகவும் அவனிடம் மன்னிப்புக் கேட்க விரும்புவதாகவும் சொன்ன உறவினனிடம்
“நீங்கள் தேடி வந்த ஆள் நானில்லை என்று என்னால் மறுத்திட முடியும். இப்படி நீங்கள் தேடுவீர்கள் என்றெல்லாம் கூடத் தெரியாமல் தான் இத்தனை தூரம் வந்து வேறொரு மொழியைக் கற்று நான் இன்னொருவனாகவே மாறியிருக்கிறேன். என்னால் அன்னிய மொழியை இத்தனை எளிதாகக் கற்றுக் கொள்ள முடிந்ததற்குக் காரணம் பேராசிரியர் உமிழ்ந்த வெறுப்பின் சொற்கள் தான். இப்போது மன்னிப்புக் கேட்க இத்தனை தூரம் என்னைத் தேடி வந்தது குறித்து மகிழ்ச்சி. ஒன்றே ஒன்று செய்தால் போதுமானது. இந்தப் புதிய மொழியில் மன்னிப்பை வேண்டினால் போதும். நானும் மகிழ்வோடு மன்னிக்கிறேன்” என்றான்.
உறவினன் பேராசிரியரிடம் அந்தப் புதிய மொழியில் மன்னிப்புக் கோருவதற்கான சொல்லைப் பயிற்றுவிக்கச் சென்றான்.