பாப்கார்ன் படங்கள் 2
மற்றவை நேரில்
எழுபதுகளில் இந்தியத் திரையின் பல்வேறு நிலங்களில் கோபக் கார இளைஞனை மையமாகக் கொண்ட திரைக் கதைகள் எழுதப்பட்டன. முதன் முதலில் சலீம் ஜாவேத்தின் ஜஞ்சீர் அப்படி ஒரு இளைஞனை முன் நிறுத்திற்று. அமிதாப் பச்சன் அந்தக் கதாபாத்திரத்தில் பேருருக் கொண்டார். அப்படியான கதைகள் எழுபதுகளின் இறுதியில் அன்றைய பிரச்சினைகளில் தலையாயதான வேலை இல்லாத் திண்டாட்டம் என்பதை மையப்படுத்திப் படங்கள் உருவாகின. கதையின் ஆரம்பமோ அல்லது முக்கியப் பிளவோ வேலை இன்மை என்பதை மையப்படுத்திப் பல மொழிகளில் படங்கள் வந்தன. படிப்பை முடிக்கும் தருணத்தில் வேலை இன்மை காரணமாக வீட்டிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிற இளைஞனாகப் பல படங்களில் நாயகன் உருக்கொண்டான். எண்பதுகளின் பல படங்களில் அவனுக்கு ஆறுதல் சொல்லி ஊக்கம் தந்து அவன் சோர்ந்து விழும் போது அவனை மீண்டும் உறுதிப்படுத்தி போராட்டத்தில் அவனை ஜெயிக்க வைப்பவளாக நாயகி மாற்றம் கொண்டாள். எழுபதுகளின் மத்தியிலிருந்து எண்பதுகளின் பாதி வரைக்கும் சோகச்சாய்வுடன் துக்கத்தை வெறுமையை தோல்வியை முன் வைக்கிற எதிர் மனோபாவக் கதைகள் அதிகமும் எடுக்கப்பட்டன.
பாஸிடிவ் முடிவுகளைக் கொண்ட படங்களிலும் அதற்கு முந்தைய இழை ஒன்றில் நெகடிவ் ஆன சிதறலோடு ஒரு அல்லது சில பாத்திரங்கள் படைக்கப்பட்டன. இப்படியான படங்களுக்கு அப்பால் நாயகனும் அவன் நண்பர்களும் விடா முயற்சியோடு வாழ்க்கையை வென்றெடுக்கும் படங்கள் வரத் தொடங்கின.
1980 ஆமாண்டு வேலை இல்லாத வெறுமையில் உழல்கிற இளைஞன் பாத்திரத்தை முன்வைத்து 3 படங்கள் வந்தன.
பாரதிராஜாவின் நிழல்கள் இளையராஜா இசையில் நிழல்கள் ரவி-ராஜசேகர்-சந்திரசேகர் நடிப்பில் வெளியானது. பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு கமல்ஹாஸன்-எஸ்.வி.சேகர்-திலீப் நடிப்பில் உருவானது. இவற்றின் மகா நிழலடியில் இன்னொரு படமும் இதே களத்தை மையமாகக் கொண்டு வெளியானது.
பொன்மலர் மூவீஸ் வழங்கிய மௌலி இயக்கிய மற்றவை நேரில் அந்த 3 ஆவது படம்.
மௌலி 34 படங்களை இயக்கியவர். தேர்ந்த இயல்பான நடிப்புக்காகவும் தனித்த குரலுக்காகவும் அறியப்படுபவர். ஏற்பது சின்னஞ்சிறு பாத்திரம் என்றாலும் கூடத் தன் இருப்பைத் தெரியச்செய்து விடும் வித்தகம் கைவரப் பெற்றவரான மௌலி மேடை நாடக உலகத்திலும் பேர் பெற்றவர். ஹிட்லர் உமாநாத் பெண் ஒன்று கண்டேன் ஆகிய படங்களின் எழுத்தாளர்.
அவர் இயக்கிய படங்களில் நள தமயந்தி பம்மல் கே சம்மந்தம் அஷ்வினி (தெலுங்கு) அண்ணே அண்ணே வா இந்தப் பக்கம் போன்ற படங்கள் அடங்கும். பின்னணிக் குரல் கலைஞராக தொலைக்காட்சி நடிகராக எனப் பன்முகம் காட்டுபவர் மௌலி. நடிகராக 50க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியிருப்பவர். திருவிளையாடல் ஆரம்பம் பொய் சொல்லப் போறோம் நளதமயந்தி அள்ளித் தந்த வானம் பெண்ணின் மனதைத் தொட்டு உன்னைத் தேடி போன்ற படங்களில் சிறப்பான வேடங்களை ஏற்றிருப்பார்.
கமலஹாஸனோடு காதலா காதலா அபூர்வ சகோதரர்கள் நிழல் நிஜமாகிறது போன்ற படங்களில் நடித்து ஈர்த்தார் மௌலி. இவருடைய வா இந்தப் பக்கம் படம் ஷ்யாம் மாஷே இசையில் நல்ல பாடல்களுக்காகவும் பிசி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு இன்னபிற விசயங்களுக்காகவும் இன்றளவும் குறிப்பிடத் தக்கது.
மற்றவை நேரில் பாஸ்கர்-ராணி பத்மினி இருவரும் ஜோடியாக நடித்த படம்.
விஜயன்-ஜெயதேவி-பூர்ணம் விஸ்வநாதன்-அனுமந்து- எஸ்.என்.லக்ஷ்மி-நேபாலி-அன்பாலயா பிரபாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களை நிறைத்தனர்.
பாடல்கள் கண்ணதாசன் இசை ஷ்யாம்
எக்கச்சக்கமான இண்டர்வ்யூக்களில் வேலை கிடைக்காதவன் நாயகன். அவனுக்கு ஒரு தம்பி. அப்பா பூர்ணம் விஸ்வநாதன் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதைத் தொடர்ந்து அவனிடமிருந்து விலகி விலகிப் போகிறார். தந்தை மகன் உறவின் நெருக்கம் மற்றும் விரிசலைக் கையாண்ட முக்கியமான படங்களில் ஒன்றாக மற்றவை நேரில் படத்தைச் சொல்வேன்.
“அப்பா விலகி விலகிப் போகத் தொடங்கினார். அவரோட பழைய சிரிப்பு அலுப்பா மாறி வெறுப்பா முடிஞ்சிருச்சி.கொஞ்சம் கொஞ்சமா எங்கப்பா என்னை ஒரு சுமையா நினைக்க ஆரம்பிச்சிட்டார். அதிகம் அவரோட பேச மாட்டேன். வீட்ல சாப்பிடறதையே நிறுத்திட்டேன்”
வீடு விட்டால் இண்டர்வ்யூ விரக்தி நேரம் கழிப்பதற்கு மணி சைக்கிள் கடை என்று நகர்கிறது நாயகன் கிருஷ்ணாவின் வாழ்க்கை.
அந்த ஊருக்கு பம்பாயிலிருந்து வேலை மாறி வருகின்றனர் விஜயன் ஜெயதேவி தம்பதியினர். ஜெயதேவியின் பாத்திரத்தின் பெயர் மஞ்சு. மஞ்சுவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இயல்பாக ஒரு நட்பு முகிழ்கிறது. விஜயனுக்கும் மனைவிக்கும் இருக்கும் நெருக்கமும் பரந்தமனமும் அந்த நட்பு நல்ல முறையில் வளரக் காரணமாகிறது.
இன்னொரு பக்கத்தில் மணிமாலாவின் தங்கை ராணி பத்மினி. பேசும் திறனைப் பாதியில் இழந்தவர். அதற்குக் காரணம் அக்காளின் கணவரான அன்பாலயா பிரபாகரன். குடியின் பிடியில் உழல்பவர். பிரபாகரனின் மோசமான நடத்தையால் தான் தன் தங்கைக்குப் பேசும் திறன் போய்விட்டது என்பதை அறிந்ததும் கணவனை விட்டு விலகித் தங்கையின் மருத்துவத்தையே லட்சியமாய்க் கொண்டு வாழ்கிறார் மணிமாலா.
ராணிபத்மினிக்கும் கிருஷ்ணாவுக்கும் காதலாகிறது.
அப்பாவோடு முரண் பட்டு அவர் தம்பிக்கு தருகிற அனாவசிய முக்கியத்துவத்தால் சீண்டப்படுகிறான் கிருஷ்ணா. மஞ்சு அவனை மையப்படுத்தி சிறுதொழில் ஏஜன்ஸி ஒன்றைத் தொடங்குகிறார். சோப் பவுடர் கிலோ 7 ரூபா. மாத சம்பளம் 300 ரூபாய் தினமும் படி 7 ரூபாய். ட்ரை சைக்கிளில் பவனி வருகிறான் கிருஷ்ணா. ஆர்வத்தோடு வேலையில் மும்முரமாகிறான். மணி கடையில் அவனது சினேகிதர்கள் தொடர்ச்சியாம மஞ்சுவையும் கிருஷ்ணாவையும் இணைத்துப் பேசி வெறுப்பேற்றுகின்றனர். அப்படிப் பேசுவதை ஆட்சேபித்துக் கொண்டே இருக்கிறான் கிருஷ்ணா
மஞ்சு கிருஷ்ணா நட்பு அதைப் பற்றிய விஜயனின் புரிதல் கிருஷ்ணாவின் தந்தை பூர்ணம் தன் இளையமகனின் விடலைத் தனத்தைக் கண்டு கொதித்துப் போவதை ஒட்டி மூத்த மகனைப் புரிந்து கொள்ளுவது என அழகான கவிதையாக நிலை பெறுகிற திரைக்கதையின் இரண்டாம் பகுதி தேவையற்ற திருப்ப நெளிதல்களோடு திக்கித் திணறுகிறது
போகப்போகத் தன் நண்பர்கள் ஏற்றி விடுவதற்குப் பலியாகிறான் கிருஷ்ணா. தன்னை மஞ்சு காதலிப்பதாக பிரமையாகிறான். அப்படி எந்த எண்ணமும் இல்லாத மஞ்சுவுக்கு கிருஷ்ணாவின் பித்தைப் பற்றிக் கூறுகிறார் விஜயன். அதிர்ந்து போகிறாள் மஞ்சு. மீண்டும் பம்பாய்க்கே திரும்ப நேர்கிறது அவர்களுக்கு. கிளம்பிச் செல்லும் வழியில் விஜயனும் கிருஷ்ணாவும் பேசிக் கொள்கின்றனர். கிருஷ்ணா தன் முட்டாள்தனத்தை எண்ணி வெறுப்பாகிறான். அவனுக்கு முன்பாகக் கடல் விரிந்து கிடக்கிறது. தற்கொலை செய்து கொள்ளப் போகிறானோ என்று பார்வையாளர்களுக்கு படமுடிவு அச்சமொன்றை ஏற்படுத்திக் கொடுத்து விட்டுக் கடைசியில் ஒருவழியாகத் தன்னையே மனத்தில் சுமக்கும் ராணி பத்மினியுடன் கிருஷ்ணா சேர்வதாக முடிந்தது படம்.
வேறுவடிவில் திரைக்கதை அமைத்திருப்பின் நிழல்கள் மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு ஆகிய படங்களோடு சேர்த்து காலத்தால் அழியாத மற்றோர் இடத்தைப் பெற்றிருக்க வேண்டிய படம்.
ஒரு பாடல் நினைத்திருந்தது நடந்து விட்டது எனத் தொடங்குவது எஸ்பிபாலசுப்ரமணியமும் கௌசல்யாவும் சேர்ந்து பாடிய டூயட் கேட்க இனிப்பான பாடல்.
{இங்கே க்ளிக் செய்யவும்}
மௌலியின் இயல்பான கூர்மையான வசனங்கள் கவர்பவை.
விஜயன் கதாபாத்திரம் பூர்ணத்திடம் சொல்லும் இந்த வசனம் ஒரு சாம்பிள்
“உலகத்ல பொண்டாட்டியைத் தவிர மற்ற எல்லாரையும் சார் அல்லது மேடம்னு கூப்பிட்டுப் பாருங்க. அதில் கிடைக்கிற சுகமே தனி. இப்போ மணி என்னன்னு கேட்டா தோராயமா 7 அப்டின்னு சொல்றவன் கூட மணி என்ன ஸார் அப்டின்னு கேட்டா 6.52 ந்னு துல்லியமா சொல்வார்.”
மஞ்சு கேட்பது இன்னும் கூர்மை
” ஏன் எக்ஸ்ட்ரீமுக்குப் போறீங்க..? கோழியை எல்லாரும் பொறிச்சு சாப்பிடுவாங்க. நான் வறுத்து சாப்பிடுவேன். டேஸ்ட் டிஃபர்ஸ்…”
என்பார்.
இன்றைக்கும் எளிமையான வசனங்களுக்காகவும் பாத்திரமாக்கலுக்காகவும் பார்க்க வேண்டிய படம் மற்றவை நேரில்
ராணி பத்மினி தமிழில் மற்றவை நேரில் தவிரவும் பட்டம் பதவி கடவுளுக்கு ஒரு கடிதம் அனு பக்கத்து வீட்டு ரோஜா வில்லியனூர் மாதா நிரபராதி போன்ற படங்களில் நடித்தார். ப்ரேமுடன் ராணிபத்மினி நடித்த க்ரோதம் பெரிய வெற்றியைப் பெற்றது.
ராணி பத்மினி சென்னையில் பிறந்தவர். அவருடைய அம்மா இந்திரா சௌத்ரிக்குச் சிறுவயதிலிருந்தே சினிமாக் கனவு. கனவை மெய்ப்பிக்க வந்த திருமகளாகவே தன் மகளை வளர்த்தார். ராணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. சங்கர்ஷம் படத்தில் பிஜி.விஸ்வாம்பரன் இயக்கத்தில் மலையாளத்தில் நடிக்கத் தொடங்கிய ராணிக்குத் தமிழ் மற்றும் கன்னடத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் வேகமாய் வளர்ந்து வந்த நடிகையான ராணி பத்மினி 1986 ஆமாண்டு படுகொலை செய்யப்பட்டார்.
ராணிபத்மினி கொலை வழக்கு நெடு நாட்கள் நடந்தேறி நிறைவைக் கண்டது. கை நிறையப் படங்கள் வீடு நிறையப் பணம் என்பதான வாழ்க்கையில் இந்திராவும் ராணியும் சென்னை அண்ணா நகரில் 18ஆம் அவென்யூவில் ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்தனர். தங்களுக்கு ட்ரைவர் உட்பட 3 வேலையாட்கள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர். ஜெபராஜ் என்பவர் ட்ரைவராக வேலைக்கு சேர்ந்தார். அவர் சேர்ந்து ஒரு மாதம் கழித்து பல சில்லறை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவரான லக்ஷ்மி நரசிம்மன் சமையல்காரராக வேலைக்கு வந்து சேர்ந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவில்லை. மூன்றாவதாக கணேசன் என்பவர் வாட்ச்மேனாக வேலைக்கு அமர்ந்தார்.
ராணி பத்மினி நடிப்பு வாழ்வில் உச்சத்தில் இருந்த நேரம் அது. அவருக்கு வயது 24 அவர் அம்மா இந்திராவுக்கு 42 வயது. தாங்கள் குடியிருந்த வீட்டையே விலைக்கு வாங்கிவிடலாம் என இருவரும் முடிவு செய்து அதைக் குறித்து அடிக்கடித் தங்களுக்குள் ஆலோசித்தவண்ணம் இருந்தனர். அந்த வீட்டை அவர்களுக்கு பேசித் தந்த நண்பர் பிரசாத்தும் வீட்டை வாங்கிவிடலாம் என்று ஊக்கம் அளிக்கிறார். ரொக்கமாகப் பணத்தைத் தயார் செய்துவிடமுடியுமா எனக் கேட்பதற்கு அன்னையும் மகளும் இயலும் என சொல்லுகின்றனர். அன்றைக்கு 15 லட்சம் என்பது இன்று பல கோடிகளைத் தாண்டிய பணவெள்ளம். ஜெபராஜூக்கும் லக்ஷ்மி நரசிம்மனுக்கும் இந்தத் தகவல் தெரியவருகிறது. பெரிய தொகை ஒரே முறை புழங்க இருப்பதை இருவரும் உறுதி செய்துகொண்டு அதைக் களவாட முடிவெடுக்கின்றனர்.
ராணி பத்மினியும் அவருடைய அம்மாவும் 1986 அக்டோபர் 15 அன்றைக்கு ஒரு புதன்கிழமை அதிகாலை அவர்களுடைய வீட்டில் அடித்துக் கொல்லப்பட்டனர். முந்தைய இரவு அவர்கள் இருவரும் மது அருந்தி இருக்கக் கூடும் ராணி பத்மினி சமையலறைக்கு சென்றிருந்தபோது ஜெபராஜ் இந்திராவை பல இடங்களில் குத்தி கொலை செய்தார் அம்மா அலறும் சத்தம் கேட்டு அங்கு வருவதற்குள் ராணி பத்மினியும் கழுத்திலும் வயிற்றிலும் மார்பிலும் 12 முறைகளுக்கு மேல் குத்தி கொலை செய்தனர். அன்று ஏற்கனவே பேசி இருந்த படி வீட்டு வீடு வாங்குவது சம்பந்தமாக சந்திப்பதற்காக புரோக்கர் பிரசாத் வாசலில் நின்றுகொண்டு வெகுநேரம் அழைப்பு மணி அடித்தும் கதவைத் திறக்கவில்லை என்பதால் முதலில் கிளம்ப இருந்தவர் பிறகு வீட்டின் பின்பக்கம் கழிவறைக்கு பக்கத்தில் துர்நாற்றம் வருவதை பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கிறார். பல துண்டுகளாக வெட்டப்பட்ட அவர்களது பிரேத உடற்கூறு பாத்ரூமில் வைத்து நிகழ்த்தப்படுகிறது அவர்கள் இருவரது சடலங்களும் பெற்றுக்கொள்ள ஆளின்றி திரைத்துறையினர் (பிலிம் பரிஷத்) அவர்களுக்கான இறுதிச் சடங்கை சென்னையில் நிகழ்த்தினர்.
அன்றைக்கு 7 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ராணி பத்மினியின் நிசான் கார் காணாமல் போனதை அடுத்து வழக்கு வேகம் பிடிக்கிறது வேலையாட்கள் மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்படுகின்றனர் செங்கல்பட்டு நீதிமன்றம் முதலில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது பிறகு அது சுப்ரீம் கோர்ட்டில் ஆயுள் ஆக மாற்றப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு தமிழக அரசின் அப்போதைய புதிய உத்தரவுபடி ஏழு வருடங்களுக்கு மேல் கடுங்காவல் சிறை தண்டனையை கழித்தவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்கிற அடிப்படையில் லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்யவேண்டுமென அவருடைய மனைவி மேரி தொடர்ந்து வழக்கு நடத்தி ஒருவழியாக அந்தக் கொலைச் சம்பவம் நடந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு லட்சுமி நரசிம்மன் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரும் முன்னரே காலமாகி விட்டனர். இன்றளவும் ராணி பத்மினி கொலைச் சம்பவம் அந்த காலகட்டத்தில் சினிமாவோடு தொடர்பு கொண்டவர்களுக்கு நெஞ்சை பதற வைக்கும் சம்பவமாகவே தொடர்கிறது
{ராணிபத்மினி வழக்கு பற்றிய செய்தி/தகவல் கேரள கௌமிதி இணைய தளத்தின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டது.}