மழை ஆகமம் 2

                                                  குழந்தைகளை ஏமாற்றுகிறவன்

குழந்தைகளை
ஏமாற்றத்தெரியாதவன்
பாடலொன்றைப் பாடியபடியே நடக்கிறான்
மழை
எப்போதெல்லாம் பொழியும் என்று
ஆருடம் சொல்வது தன்னால் முடியும்
எனத் தொடங்குகிறது அப்பாடல்.
இலையுதிர்காலத்தின் முதல் இலை வீழ்வதை
மிகச்சாதாரணமாக எடுத்துக் கொண்ட
வனங்களின் கண்ணீர்த்துளிகள் தான்
மழையானதாகப் புனைகிறான்
அடுத்தவரியில்
கடவுளரின் மீது நம்பிக்கையற்றவர்களின்
கோரிக்கைகள் தான்
காகிதக் கப்பல்களாக
மழைநதியில் மிதக்கின்றன
என்றவன் சொல்வது
நம்பகம் மிகுந்து தொனிக்கின்றது.
மழையில்
நடமாடுகிறவர்களுக்கும்
ஒதுங்கி நிற்பவர்களுக்குமான
வித்யாசங்களின் பட்டியல் சுவாரஸ்யமானது
என்று குறிப்பொன்றை விவரிக்கிறான்
தன் பாடலினூடே
அந்தப் பாடல்
துள்ளலிசையின் அம்பாரியில்
முனகிக் கிடக்கும் அணிற்குஞ்சென
அம்புகளுக்கு
குருதிக்கொடை செய்வதற்கென்றே
பிறப்பெடுத்ததாய் ஒலிக்கிறது.
நிராகரிக்கப்பட்டவர்களின்
உண்ணா நோன்பு
முடிவுறு தருவாயில்
விருப்பமில்லாமல் காத்திருக்கிற மரணம்
தன் இயல்புக்கு மாறாய்
விகசிக்கிறதைப் போல
அபூர்வமான
இடையிசை குறிப்புக்களோடு
அப்பாடல் ஒலிக்கிறது.
தற்கொலை முடிவொடு
பாதி இரவில் வெளியேறுகிறவன்
சப்தமிடும்
வாசல்கதவுக்கு எண்ணெய் போடவேண்டும்
என நினைக்கிற
அபத்தத்தைப் போன்று
அப்பாடலின் சில வார்த்தைகள் விலகுகின்றன
ஒரு நேர்கோட்டைப் போல நடக்கிறவனை
எந்த மழையும்
எதுவும் செய்துவிடுவதில்லை என்ற
தொன்மத்தின் சாட்சியமாக
அவன் அந்தச்சாலையின்
மஞ்சள் கோட்டில் பாடியபடி நடக்கின்றான்.
மழை ஒரு ராஜவாத்தியமாக
இசைக்கேடுகளை
உள்வாங்கிச்செரித்து
சரிவரப் பழகாத பாடலையும்
ரசிக்கும்படி செய்துவிடுகிற
மாயவேலையைக் காட்டிக்கொடுத்தபடி
அவனது பாடல் வரிகள் சப்திக்கின்றன
வெளியூருக்குப்
பயணித்திருக்கிறவர்களின் வீட்டுவாசலில்
பயனற்றுக்கிடக்கிற
முந்தைய தின செய்தித்தாட்களை
தான் முழுவதுமாக நனைத்தது
ஒரு பாவச்செயலன்று என
உரக்கச்சொல்லியபடியே
மழை
அவ்வீடுகளின் தொட்டிச்செடிகளுக்குத்
தண்ணீர் வார்த்துக்கொண்டிருப்பது
அப்பாடலின் வரிகளில் நிரம்பி வழிகின்றது.
குழந்தைகள்
கேட்டனுப்பிய பொருட்களை
வாங்கித்தர இயலாதவர்களின்
வசிப்பிடங்களிலெல்லாம்
இயலாமையின் நிர்வாணத்தை மறைக்கிற
முதலாடையாகப் பொழிகிற
மழைக்குத்
தன் கண்ணீர்த்துளிகளால்
நன்றி சொல்லியபடியே
அப்பாடலின் கடைசிவரியை முடிக்கிறான்.