மழை ஆகமம் 3

 கானல் ஆயம்



நீயற்ற
தனிமை இருளில்
வீசுகிற காற்றைத்
தாங்கவியலாது
என் மலர்மேனி
சில்லிடுதே
உன் தாமதத்துக்கான
காரணம் எதுவென்றிருந்தாலும்
என் வியர்வைத்துளிகளுக்கான
சமாதானங்களல்லவே
இதுவே பகலெனில் ஒரு குறையுமில்லாத் தனிமை.
வந்து செல்கிற வழக்கப்பொதுவிடம்.
என்றபோதும்
கண்ணாளன்
வாராமற்போனாய்
ஏனென்றறியத் தேவையில்லை
வீடு மீளும் வழியெல்லாம்
இறைத்துச்செல்கிறேன்
என் கண்ணீர்த்துளிகளை
நீ பின்பற்றி வருவதற்கல்ல
இணையானே
அறிந்துகொள் என் வதங்கலை.
இனியொரு சந்திப்புக்கு
முன்னதான
உன் கெஞ்சுதல்களுக்கு
அவ்வளவு சீக்கிரமாய் இரங்கிவிடப்போவதில்லை
சின்னதாய் ஒரு குழப்பம் தான்.
நீ
வருவதற்குள்
இருளைப் பின் தொடர்ந்து
சரியான நேரத்திற்பெய்யும்
மழை அழித்துச்செல்லுமோ
நான் உதிர்த்த
பலவீனக் கண் துளிகளை
வரவேண்டாம்
எனச்சொல்லி
எப்படிப் புரியவைப்பேன்
செவியற்றுக் கூச்சலிடும்
மடக்குழந்தை
மழைக்கு
என்னை