மழை ஆகமம் 4

                                               மழை ஒரு பிரார்த்தனை

மழை என்பதொரு பிரார்த்தனை
மழைபொழியும் நிமிடங்கள்
இந்த உலகை
ஒரு பிரார்த்தனைக் கூடமாக
மாற்றிவிடுகின்றது.
நனைகிற அனைவரையும்
நனைக்கிற மழை
தன்னை ஒரு ஆசீர்வாதமாக
மாற்றிக்கொண்டு விட்ட கடவுளாகிறது.
மழையின் உடனொலி
இசைமய வேண்டுதலுக்கான
சாத்தியமாய் நிகழ்ந்தேறுகிறது.
மழை என்பது
இரவு நேரத்தின் மீது
ஒரு போர்வை போலத்
தன்னைப் போர்த்தவல்லது.
பகல் பொழுதை
ஆலிங்கனம் செய்து
ஆற்றுப்படுத்துகையில்
மழை
தன்னை ஒரு செவிலித்தாயென
முன்வைக்கின்றது.
மழை
தன்னை நம்பியவர்களைத்
தரையில் விழுந்த மீனொன்றை
வலிக்காமல் வேகமாய்
நீர்ப்பரப்பிற்குள் தப்புவிக்கிற
தாய் பதற்றத்தோடு மீட்க வருகிறது.
மழை நிற்கிற பொழுதுகளில்
சாலைகள்
ஊருக்குச்செல்லுகிற அன்னையைப்
பிரிந்து அழுதுதீர்த்த குழந்தையின்
கண்ணீர் உறைந்த
கன்னங்களைப் போல் தெரிகின்றன.
மழை ஆரம்பிக்கிற பொழுதுகளில்
அதே குழந்தை
வீடு மீள்கிற அன்னையை
முகங்கொளாப் புன்னகையை வீசி
வரவேற்கின்றன.
மழை என்பது
மனிதனுக்குக் கிடைத்த
முதல் புதையலாகவோ அல்லாது
முதல் சாதனையாகவோ
கருதுவது பிழை.
அது மனிதனுக்கு வழங்கப்பட்ட
முதல்
பொதுமன்னிப்பு.
மழை
மாற்றம் ஒன்று தான் மாறாதிருப்பது
என்கிற
வாசகத்தின் மீது
ஒரு புன்னகையோடு பொழிந்துவருகிறது.
ஒவ்வொருமுறையும்.