மூன்று குறுங்கதைகள்

 


1 மேன்சன் பூனை


நகரத்தின் மிக முக்கிய வீதியில் அந்த மேன்ஷன் இருந்தது. ஐநூறுக்கு மேற்பட்ட அறைகள் இருந்தன. அதன் உரிமையாளர் இளம் வயதில் நாலைந்து ஊர்களில் வேலை நிமித்தம் தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப் பட்டவராம் அதனால் தனக்கு பெரும் செல்வம் கிடைத்தால் இப்படி ஒரு மேன்ஷன் கட்ட வேண்டுமென அப்போது நினைத்துக் கொள்வாராம். நிஜமாகவே செல்வமும் கிடைத்து அவர் கட்டியதுதான் இந்த மேன்ஷன். அங்கே இடம் கிடைப்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் குறைவான முன்பணம் நியாயமான வாடகை நல்ல விசாலமான அறைகள் அறைக்குள்ளேயே நல்ல தண்ணீர் வசதி கழிவறைகளில் வெள்ளமென உப்புத்தண்ணீர் காற்றோட்டம் “ப” என்ற எழுத்தின் வடிவத்தில் அந்த மேன்ஷன் அமைந்திருந்தது. நடுவில் இருக்கும் புல் மேவிய இடத்தில் சாயந்திரம் ஆனால் வேலை முடித்து வருபவர்கள் கல் பெஞ்சில் அமர்ந்து கொள்வதும் நடை பயிற்சி செய்வதும் என கொடுக்கும் காசுக்கு மிக அதிகமான வசதிகளோடு அந்த மேன்ஷன் இருந்தது. அந்த மேன்ஷன் அதைக் கட்டியவர் பெயரில் அழைக்கப்படவில்லை அவர் அந்த மேன்சனுக்கு சூட்டிய பெயரும் அதற்கு நிலைக்கவில்லை எல்லோருமே அதை “பூனை மேன்ஷன்” என்று அழைத்தார்கள். இத்தனைக்கும் அந்த மேன்ஷனில் வந்து தங்கி இருக்கும் ஒருவருக்குக் கூட ஏன் அதற்கு “பூனை மேன்ஷன்” எனப் பெயர் என்பது தெரியாது.ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணங்களை கதைகளாக சொல்ல ஆரம்பித்தார்கள் அந்த மேன்ஷன் பெயரில் இருக்கும் பூனையின் பெயரில் பல கதைகள் இருந்து வருகின்றன துப்பறியும் கதைகளில் தொடங்கி தத்துவக் கதைகள் வரை ஆன்மீக கதைகளில் தொடங்கி அரசியல் கதைகள் வரை அந்த “மேன்சன் பூனை” பற்றிய கதைகள் எண்ணிலடங்காதவை. அதில் ஒன்று இந்தக் கதை.


2.பூனையும் பாம்பும்


அந்தக் குடியிருப்பு பகுதிக்கு முதல் முறையாக அசோசியேஷன் தேர்தல் நடந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஐந்தாறு பேர் அதன் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அவர்கள் அந்த பகுதிக்கு தேவையான சட்ட திட்டங்களை வகுத்தார்கள். அதில் ஒன்று வீட்டில் செல்ல மிருகங்கள் எதையும் வளர்க்கக்கூடாது என்பது ஆரம்பத்தில் எல்லாம் பிரச்சனை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது ஒரு வீட்டை வாங்கியவர் வெளியூர்க்காரன் ஒருவருக்கு விற்றுவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விட்டார் புதிதாக வாங்கிய நபர் தன் வீட்டில் ஒரு பூனையை வளர்ப்பதாக முதன்முதலில் ஒரு கமிட்டி மெம்பர் வந்து சொன்னபோது நிர்வாகிகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை  ஆலோசகரிடம் கேட்டபோது அவர் “விதிமுறைப்படி மிருகங்களை வீட்டில் வளர்க்க கூடாது ஆகவே எல்லோரும் சென்று புதிதாக வாங்கி இருப்பவரிடம் இந்த விதிமுறையை சொல்லி அந்தப் பூனையை உடனே வெளியேற்றும் படி அறிவுறுத்தலாம்” என்று சொன்னார். அப்படியே செய்வதற்காக அந்த வீட்டை நோக்கி நிர்வாகிகள் சென்றார்கள் வீட்டின் கதவு திறந்திருந்தது வீட்டினுள்ளே சப்தம் குறைவாக தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது ஈசி சேரில் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு அந்த பூனை டிவி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டை வாங்கிய புதிய நபர் நிர்வாகிகளை அன்போடு வரவேற்றார். அவர்கள் விஷயத்தைச் சொன்னதும் கையை பிசைந்தபடி “வாங்க வெளில வாங்க பேசிக்கலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். “எனக்கு முன்னால் இந்த வீட்டின் உரிமையாளர் வளர்த்து வந்தது இந்த பூனை. முக்கால்வாசி பணம் புரட்டி கொடுத்ததும் அவர் வெளிநாடு சென்று விட்டார் மீதி பணம் கிடைத்ததும் அதை இந்த பூனையிடம் செட்டில் செய்வேன். அடுத்த கணமே தான் கிளம்பி விடுவதாக அதுவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. எனக்குத்தான் இன்னும் பணம் கிடைக்கவில்லை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் ஸார்” என்று தாழ்ந்த ஸ்தாயியில் கூறினார். கமிட்டி மெம்பர்கள் ஒருவர் “எப்படி சார் ஆஃப்டர் ஆல் அது ஒரு பூனை” என ஆரம்பிக்க தன் விரலை உதட்டின் குறுக்கே வைத்த வண்ணம் “சார் இன்னொரு விஷயம் இந்த பூனையால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஒன்றே ஒன்று அதற்கு யாராவது  தன்னை பூனை என அழைத்தால் பழியாய்க் கோபப்படுகிறது, தன்னை பாம்பு என்று தான் அது சொல்லிக் கொள்கிறது” என்றார்.


3 விடுமுறைப் பூனை


இரண்டு பூனைகள் நட்போடு பழகின. மூன்றாவதாக ஒரு வயதில் மூத்த பூனை வந்தது. முதலிரண்டும் அன்பும் மரியாதையுமாக அதையும் தங்களோடு சேர்த்துக் கொண்டன. மெல்ல மெல்ல மூன்றாம் பூனை மற்ற இரண்டையும் தன் சொல் கேட்கும் படி பழக்கிற்று. அவையும் மகிழ்ச்சியுடன் அடிபணிந்தன. ஆனாலும் எதோ ஒன்று ரசிக்கவில்லையே என்று யோசித்த மூன்றாம் பூனை ஒரு உத்தியை யோசித்தது. மற்ற பூனைகளிடம் இனி நீங்கள் ஒருவர் சொல்வதை மற்றவர் மறுக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குள் உற்சாகமாக இருக்கும் புதிய புதிய கருத்துகள் கிடைக்கும் என்றது. பெரிய பூனை சொல்கிறதே என்று அதையும் அப்படியே கேட்க ஆரம்பித்தன மற்ற இரண்டு பூனைகளும்.

சிறிது காலம் கழிந்த பிறகு  நட்புப் பூனைகள் எங்கே பார்த்துக் கொண்டாலும் ஒன்றுக்கொன்று பேசிக் கொள்வதே இல்லை அவற்றுக்கிடையே புன்னகை குறைந்து போய் யாரோ போலப் பார்த்தபடி நகரத் தொடங்கின. குறிப்பிட்ட காலத்துக்கப்பால் அவை ஒன்றை ஒன்று பார்க்கும் போதெல்லாம் சப்தமெழுப்பி முறைத்துக் கொண்டன. அவற்றுக்கிடையே பலமான சண்டைகள் நிகழ்ந்தன. முதிர்ந்த பூனையோ இதெதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்றாற் போல் அவ்வப்போது வந்து அதே ஆட்டத்தை ஆடியபடி கிளம்புவதுமாக இருந்தது.

ஒரு நாள் முதிய பூனை விசேஷம் ஒன்றில் கலந்து கொள்ளப் போனதால் வழக்கமான சந்திப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டது.அன்றைக்கு முதல் பூனை வருவதற்கு முன்பு இரண்டாம் பூனை வந்து விட்டிருந்தது.முதல் பூனை கால் விந்தியபடி வருவதைக் கண்டதும் அதற்கு மனது வலித்தது. “என்ன ஆச்சு” எனக் கேட்டதற்கு “உடல்நலம் சரியில்லை இப்போதெல்லாம் முன்னைப் போல சண்டை போட முடியவில்லை” என்று கண் தளும்பக் கூறியது. நாம் எப்படி நட்போடிருந்தோம் என்று அன்றைக்கு அந்த இரண்டு பூனைகளும் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தன. நம்மை எப்படிப் பிரித்தாள்கிறது அந்த முதிய பூனை என்று வருந்திய இரண்டும் ஒரு முடிவுக்கு வந்தன. மறு நாள் முதிய பூனை வழக்கம் போல் வந்து சேர்ந்ததும் இரண்டு பூனைகளும் அதனிடம் பாராமுகம் காட்டின.

அவற்றில் ஒரு பூனை முதிய பூனையிடம் நீ ஆனாலும் நேற்று இப்படிச் செய்திருக்கக் கூடாது என்றது. உடனே அடுத்த பூனை நீ  செய்தது தான் சரி என்றது வழக்கம் போலவே பரிதாபமாக அந்த முதிய பூனை நான் தான் நேற்று வரவே இல்லையே என்றது உடனே நீ வந்தாய் என்றது ஒரு பூனை நீ வரவில்லை என்றது இரண்டாவது பூனை ஒப்புக்கொள்ள வேண்டிய பூனை மறுதலிப்பதையும் மறுதலிக்கும் பூனை ஆமோதிப்பதையும் பார்த்த முதிய பூனை காட்டுக்குள் ஓடிச் சென்று விட்டது