மூன்று படங்கள்

சமீபத்தில் காண வாய்த்த மூன்று படங்கள் இவை


மலையாளத்தில் புலனாய்வை அடிப்படையிலான குற்றப் பின்புலப் படங்கள் அதிகம் எடுக்கப் படுகின்றன. தமிழில் அத்தி போல் எப்போழ்தேனும் பூக்கும். சமீபத்தில் காணக் கிடைத்த இரண்டு படங்கள் ஒன்று தலவன். இன்னொன்று கோளம். இரண்டுமே தமிழிலும் புழங்கும் சொற்கள் என்பது வசீகரம். தலவனில் பிஜூ மேனன் இன்ஸ்பெக்டராகவும் ஆசிஃப் அலி சப் இன்ஸ்பெக்டராகவும் கச்சிதமான நடிப்பு. ஒரு சின்னப் பொறி தான் ட்விஸ்ட். அதைச் சுற்றிச் சுற்றிப் பின்னப்பட்ட வட்டங்கள் எல்லாமும் சேர்த்து நகாசு மிகுந்த திரைக்கதை ஓட்டம் கவர்கிறது. இந்தப் படத்தில் வருகிற ஒரு பாத்திரத்தைப் போலவே நிஜ வாழ்வில் எனக்கொரு போலீஸ் தகப்பனைத் தெரியும். ஒரே போன்ற நதிகள் எனினும் ஓட்டம் வெவ்வேறு என்பது போல் அவர் முற்றிலும் வேறுவிதமானவர். ஒரு சிறுகதைக்கான தொக்கு அப்படியே எடுத்துப் பதப்படுத்தி வைத்திருக்கிறேன்.

கோளம் படத்தின் திரைக்கதை அதில் உறைந்திருக்கும் ட்விஸ்ட் ஆகியவற்றை எல்லாம் விடவும் உதிரிகளை ஒன்றிணைக்கக் கூடிய பொதுவான இழத்தல் ஒன்றை எடுத்தாண்ட விதத்தை மிகவும் ரசித்தேன். நேரடியாகத் தொடர்பில்லை எனினும் சுஜாதா போபால் சம்பவத்தைக் கதாமுடிவாக்கி முற்றிலும் யூகிக்க முடியாத ஒரு சிறுகதையை எழுதியிருப்பார். அந்தக் கதை வாசிப்பவனுக்குள் பெயர்த்தளிக்கிற தற்செயல் நிகழ்வுகளின் விபரீத விளைதல்கள் குறித்த ஜில்ஜிலீர் பயத்தை இந்தப் படமும் அளிக்கிறது. ரசமான படம்.

பிரசாத் முருகேசன் இயக்கத்தில் எம்.சசிகுமார்-வேல.ராமமூர்த்தி-மு.ராமசாமி-வசுமித்ர இன்னபிறர் நடித்த கிடாரி படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். சன் நெக்ஸ்டில் பால்பளிங்குப் பிரதியாக விரிந்தோடுகிறது. இந்தப் படத்தின் திரைக்கதைக்கும் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்ட கருடன் திரைக்கதைக்கும் இடையிலான நுட்பமான ஒற்றுமைகள் ஈர்க்கின்றது. இரண்டு படங்களுக்கும் இடையிலான வினோத ஒற்றுமையாக விளங்கும் எம்.சசிக்குமார் நடிகர் என்பதை விடவும் இயக்குனராக இன்னும் சிறப்பான படங்களை எடுக்க வல்லவர் என்பது என் நம்பிக்கை. சுப்ரமணியபுரம் மட்டுமல்ல ஈசனும் எனக்கு மிகவும் பிடித்தது. கிடாரியைப் பற்றி மேலும் சொல்ல ஒன்று உண்டு. அது தர்புகா சிவாவின் பின்னணி இசை. சாம்.சி.எஸ் மற்றும் தர்புகா சிவா இருவரும் இந்த நூற்றாண்டில் விளைந்த இரு நல்லிசை முத்துக்கள். இன்னமும் ஓங்கி ஒலிக்க வேண்டியவர்கள். புரிதலும் முழுமையும் ஊடாடும் தர்புகா சிவாவின் இசைக்கோர்வைகள் உணர்வுகளாக மனதுள் பரவ வல்லவை. கிடாரிக்கு அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை உலகத் தரம்.