யதார்த்தா ராஜன்
வந்து கலந்த நதி
ராஜன் ஸாரை முதன்முதலாக மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹால் வாசலில் சந்தித்த போது இரவு எட்டு மணி இருக்கும், உள்ளே சர்வதேசப் படங்களின் திரையிடல் ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்க பக்கவாட்டுப் பிரதேசத்தில்
நின்று கொண்டு இருந்தார்.
யாரிடம் என நினைவில்லை சன்னமான குரலில் எதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் பக்கம் திரும்புவதற்காக நானும் அதீதன் சுரேனும் காத்திருந்தோம்.
பேசி முடித்தவர் எங்கள் பக்கம் பார்க்கையில் அவருடைய முகபாவங்கள் சட்டென்று மாறிவிடவில்லை. மிக மெல்லிய சருகின் சரசரப்புக்கு ஒப்பான விரிதல் அது.
என்னை சுரேன் அவரிடம் அறிமுகம் செய்து வைத்த போது அதை ஆமோதிக்கிற வகையில் லேசான புன்னகைக்கு முந்தைய இதழ்முறுவலோடு சரி உள்ளே போயி படம் பாருங்க என்றவர் பார்க்குறீங்கள்ல என்றார். அந்த தினம் குழந்தைகள் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். திறந்தவெளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் இந்த தசாப்தத்தில் மதுரை மாதிரி நடுநிலை நகரத்தில்
வாய்ப்பதெல்லாம் அரிதும் அபூர்வமும் தான். அதை எனக்கு மட்டுமல்ல இந்த ஊருக்கு
அடிக்கடி வாய்க்கச் செய்தவர் ராஜன் ஸார்.
அவருடைய சினிமா பற்றுதல் பற்றி என்னை விட அதிகம் எழுதுவதற்கான ஆளுமைகள் இருப்பதை அறிவேன். எனக்குத் தெரிந்த வரை சென்னை மாதிரி ஒரு மகாநகரத்திற்கு மனரீதியாக மாறுதல் அடைந்து வாழ்விடமாற்றம் உள்ளிட்டவற்றை
அனுசரித்துக் கொண்டிருந்தால் அவர் கொண்ட கனவில் கடலாக விரிந்திருப்பாராயிருக்கும் ஆனால் சேர்ந்த இடத்தில் வந்து கலந்த நதியாகவே கடைசி வரைக்கும் கரைபுரண்டவர் ராஜன்ஸார். திரைப்பட ரசனை குறித்த தீர்க்கமான கொள்கைகளும் தீர்மானங்களும் உடையவராக ராஜன் இருந்தார். ஒருபோதும் அவர் தன் முடிவுகளை யார் மீதும் திணித்ததே இல்லை. கற்றுத் தருவது என்பதன் ப்ராஸஸில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராக அவர் அமைந்திருந்தார்.
அவரிடம் ஒருபோதும் முஸ்தீபுகளும் தடைவேலிகளும் இருந்ததே இல்லை. ஒரு நேர்பேச்சினூடாக தன்னிடம் முன் வைக்கப்படுகிற எந்த வினவுதலுக்கும் தன்னால் ஆனமட்டிலும் தேர்ந்த செறிவான பதிலை அளிப்பது அவர் பழக்கம். அவரிடமிருந்து கிளம்பியவர்களும் அதிகம் அவரிடம் வந்து கடந்தவர்களும் அனேகம் பேர் உளர். யாரையும் பற்றிச்சுற்றிக் கொள்ளக் கூடிய மனவாதம் அவரிடம் இருந்ததே இல்லை.
எந்தக் காலத்திலும் உலர்ந்து கொண்டே இருப்பதன் மூலமாக எத்தனை பெரிய மழையீரத்தையும் கொள்வதும் தள்ளுவதுமான இயல்பு அவருக்கு வாய்த்திருந்தது.
பொதுவாக தீவிர சினிமா மீதான பற்றுதல் கொண்ட யாரும் வெகுசனக் கலையாக அதனை உணர்வதிலிருந்து மெல்ல மெல்ல விலகிப் போவது வழக்கம். இதற்குப் பின்னால் பல காரணிகள் இருக்கக் கூடும். குழு ஒன்றில் சென்று திரும்புகையில் அதிலிருந்து வேறாவதும் அதனுள் ஒன்றாவதுமான இரண்டு மனோபாவங்கள் எளிதில் நிகழவல்லவை. எந்தக் கலையின் தீவிரதிசையை நோக்கிச் செல்லும் போதும் ஆரவாரமும் கொண்டாட்டமுமாகக் காணவாய்க்கிற அதன் பக்கவாட்டுத் திசைகளின் மீதான ஒவ்வாமையாக அது வளர்ந்தேறிவிடும். மெல்ல மெல்ல யாவரிலிருந்தும் விலகித் தனிக்கிற தன் வேறுபாடாகவே தனது ரசனையைக் குறிப்பிட்ட தீவிரத் தன்மையோடு இயைந்து அமைத்துக் கொள்வதும் இன்னும் வளரும். வெகுசன சினிமாக்களின் மீதான அபிப்ராய பேதங்கள் கொள்வதும் அவற்றை மறுதலிப்பதும் எல்லாமும் தாண்டி அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகிப் போவதும் அதனுடன் சின்னஞ்சிறிய பந்தமும் கொள்ளாமல் கடந்து விடுவதும் பலரும் விரும்பிக் கைக்கொள்ளக் கூடிய ரசனாமுறை. இப்படி இருப்பதிலிருந்து தனிப்பது தான் ஆகக் கஷ்டம். ராஜன் ஸார் நாஸ்டால்ஜியாவின் மனிதர். அவரிடம் பழைய காலத்தின் தமிழ் சினிமா அவற்றின் வருகை கலைதல் தொடங்கி ஆளுமைகள் அவர்தம் நேர் வாழ்க்கை ரகசிய ஹேசிய இத்யாதிகள் பற்றியெல்லாம் ஆர்வமோ ஈடுபாடோ இல்லை என்ற போதும் அவர் ஞாபகங்களின் பேரூற்றாகத் திகழ்ந்தார். அவரது ஞானம் காலம் சார்ந்த சேகரம். மதுரை என்ற நகரத்தின் வரலாற்றைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஊடுபாவுகளைக் கொண்டு கட்டமைக்கக் கூடிய நினைவாற்றல் அவரிடம் இருந்தது.
அடுத்த சந்திப்புக்கு முன்பாக யதார்த்தா ராஜன் என்ற அவரது பேரின் பின்னணி பற்றிய எனது அறிதல் அவரது மதிப்பை எனக்குள் வரைந்து தந்தது. நெடிய காலம் திரைப்பட ரசனை திரையிடல் திரையாக்கம் எனப் பல தளங்களிலும் அவரது அயராத முன்னெடுப்புக்களும் அவற்றின் ஊடாக அவர் தொடர்ந்து ஒலிக்க விரும்பிய குரலாகத் திகழ்ந்ததன் தகவல்களை அறிந்து கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.மதுரையை மையக்களனாகக் கொண்டு எதையாவது எழுதிவிட வேண்டும் என்கிற ஆவல் மதுரையிலிருந்து எழுதக் கிளம்பிய யார்க்கும் வருகிற ஒன்று தான் இல்லையா என்னுடைய முதல் நாவலை மதுரையின் நான்கு பேர் பெற்ற திரையரங்கங்களை மையப்படுத்தி எழுத விழைந்த போது அதற்கான தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தேன். நான் பிறந்த இடம் சம்மந்தமூர்த்தித் தெரு என்று சொன்னதும் என் தகப்பனார் பேரைக் கேட்டார் ராஜன் ஸார். தன் ஞாபகங்களில் இருந்து அந்தத் தெரு மட்டுமல்ல வடக்குமாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பு பழைய சாந்தி தியேட்டர் இம்பீரியல் சினிமா ந்யூ சினிமா எனப் பிரவாகமாகப் பேச ஆரம்பித்தார். அவருக்கும் எனக்கும் பொதுவாக இருந்தது எது என இன்னமும் வியக்கிறேன்.ஒரு தேநீர்க் கடையின் வாசலில் இருந்து அந்தத் தெருவைத் தாண்டுவதற்கு இரண்டு மணி நேரமானது. தானப்பர் முதலித் தெருவின் முகங்கள் காலேஜ் ஹவுஸ் பழைய நாராயணா காஃபி செண்டிரல் சினிமா என அவருடைய ஞாபகத்தைத் தொடங்குவதிலிருந்து நாங்கள் நின்றுகொண்டிருந்தது வரைக்குமான மதுரையின் பல்வேறு குறுக்கு வெட்டுத் தோற்றங்களைப் பற்றியெல்லாம் உற்சாகமாகப் பேசினார். அவர் பேசப் பேச என்னால் ஆனமட்டிலும் மனதுக்குள் அவற்றைத் தேக்கி வைத்துக் கொள்ள எத்தனித்தேன். மதுரையின் மனிதர்களுக்கென்று இருந்த வினோத குணங்கள் எதாவது உண்டா எனக் கேட்டேன். அவர் என்னை ஒரே ஒரு நொடி உற்றுப் பார்த்துவிட்டு எந்த ஊரிலும் அங்கேயே பிறந்து வாழ்ந்து மறைகிற பெரிய கூட்டம் இருக்கும். அதில் எந்த வினோதத்தைத் தேடமுடியும்..? எல்லா ஊர்களுக்கும் முகம் போல் தலைவாசல் போல் இருக்கும் இடங்களில் வந்து புழங்கித் திரும்புகிற மனிதர்கள் வேறாக இருப்பார்கள். அவர்கள் அந்த ஊரின் சகலத்திலும் சம்மந்தப்பட மாட்டார்கள். அப்படியானவர்களுக்கு ஒரு மதுரையைத் தெரிய வாய்க்கும் தானே என்று கேட்டார். நான் அந்த இடத்திலிருந்து தான் என் கதையை கதைகளைத் தொடங்க அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் முயன்று கொண்டே இருக்கிறேன்.
ராஜன் ஸாருக்கும் எல்லா மனிதர்களைப் போலவும் வேறுபட்ட குணாம்சங்கள் இருந்திருக்கக் கூடும். அவரிடம் காலத்தின் கனிதலை எப்போதும் உணர முடிந்திருக்கிறது. ஒரே ஒரு கபடமற்ற புன்னகை அதன் பின்னால் பேசத் துடிக்கும் கண் கணங்கள். சந்திக்கும் முதற்கணத்திலேயே பெயர் சொல்லி