யாக்கை 1

யாக்கை 1

பைத்தியப் பொழுது


தன் கையில் இருக்கும் பச்சை நிற ஃபைலை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் எம்.எஸ். தகவல்களை ஒவ்வொன்றாகப் படித்தார். கொலையில் ஈடுபட்டது மொத்தம் ஐந்து பேர்.

56 வயதுக்காரன் இருதயம் தான் தலைவன். இருப்பதில் இளையவன் பெயர் பழனிச்சாமி. 27 வயது. எம்.எஸ் முதலாளிக்கு நடந்தது என்ன என்று முழுவதையும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. ஏதோ பகை தொட்டடுத்து ஒரு கொலை என்று அவரால் அமைதிகொள்ள முடியாமல் தவித்தார். நாலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கப்பால் அவர் தற்காலிகப் பணியாட்களை சேர்த்துக் கொள்ள மறுத்தது திங்கட்கிழமை முன்னிரவு. செவ்வாய் போக புதன்கிழமை அதிகாலையில் எம்.எஸ்.முதலாளியின் மாப்பிள்ளை கலிவரதன் கொல்லப்படுகிறான் என்றால் இடை முப்பது மணி நேரத்தில் ஒரு கொலை அதுவும் கலிவரதன் போன்ற செல்வாக்கு மிகுந்த முக்கியஸ்தனை போகிறபோக்கில் எளிதாகக் கொன்றதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மாதவபுரத்தில் எம்.எஸ்.டெக்ஸ்டைல் மில்ஸ் முதலாளி ‘எம் எஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படும் எம் சந்தானம். தன் சாம்ராஜ்யத்தைத் தனக்குப் பிற்பாடு தன் மருமகன் கலிவரதன் ஆளப்போகிறான் என்பது தான் அவருக்கு வாழ்க்கையில் இருந்த மாபெரிய நிம்மதி. அதனாலேயே தனியாகக் கலிவரதன் எதை செய்ய நினைத்தாலும் “எதுக்கு மாப்ளை..நான் கொஞ்ச நாள்ல முழுசா ரிடையர் ஆகத் தானே போறேன். அப்பறம் இதெல்லாம் உங்களுக்குக் கூடுதலா சுமையாய்டக் கூடாது. கொஞ்சம் பொறுங்க” என்றே தடுத்துக் கொண்டிருந்தார். ஒருவேளை கலிவரதன் ஆசைப்பட்டாற் போல ஆஸ்திரேலியாவின் பால் பவுடர் தயாரிக்கிற நிறுவனம் ஒன்றில் பார்ட்னராகி இருந்தால் இன்னேரம் உயிருடனாவது இருந்திருப்பானோ என்ற எண்ணம் அவரது மனசைப் பல துண்டங்களாகக் கீறிற்று.

அவருக்கு அழுகை வராது. அழத் தெரியாது என்பதும் உண்மை. சின்ன வயதிலிருந்தே அவரால் மற்றவர்கள் அழுதிருக்கிறார்கள். அவர் அழுத நினைவே இல்லை. அப்படி ஒரு தேவையே ஏற்படவில்லை. அவரது வாழ்வில் அதுவரை சந்தித்த மரணங்களைக் கூட அவர் அழுகையின் துளிகள் ஏதுமின்றி சந்தித்துப் பழக்கமாகி இருந்தார். என்ன நேர்ந்தாலும் உறுதி குலையாமல் இருப்பது தான் செல்வலட்சணம் என்பது சின்னவயதிலிருந்தே அவரது நம்பிக்கை.

“ஒண்ணுமில்லாதவன் மாதிரி அழக் கூடாது” என்பது அவரது எண்ணம். என்னால ஆகாததா என்று எதையும் அணுகி எல்லாவற்றிலும் என்னவிலை தந்தாவது ஜெயித்து அதற்காகப் பழகி பகைத்து உருவாக்கி அழித்து வாழ்க்கை ஆட்டத்தில் தனியாக எதுவும் நடப்பதே இல்லை. கண் முன் மலரும் மலர் கூட பிஸினஸ்மேனின் வழியில் மலர்வது அவனது அன்றைய தினத்தை உற்சாகப் படுத்தி நல்ல விலை நல்ல லாபம் இவற்றை அடைவதற்கான உந்து சக்தியாய்த் தான். அவரைப் பொறுத்தவரை சம்போகம் கூட பிஸினஸின் உட்புற நடவடிக்கை தான். சர்வம் தொழில் மயம் என்பது அவர் கைக்கொண்ட மந்திரம். அழுவதால் என்ன கிடைக்கப் போகிறது? எல்லாவற்றையும் புரிந்துகொள்பவனுக்கு நேசம் வெறுப்பு இரண்டும் தேவையில்லை என்பார் எம்.எஸ். யாரையும் வெறுப்பதால் எனக்கென்ன லாபம் என்பார். பாம்பின் விஷத்துக்குக் கூட இந்த உலகத்தில் நல்ல விலை இருப்பது அவருக்குத் தெரியும்.

எது நிகழ்ந்தாலும் ‘சரி, அடுத்தது?’ என்று தான் பார்ப்பார். அவரது டைரி முழுவதும் வருங்காலத்தின் தாட்கள் தான்.

அப்படியான சந்தானம் தான் கலிவரதன் கொல்லப் பட்டபோது நொறுங்கிப் போய் அழுதார். தன்மீதே அவருக்கு லேசாய் வியந்து வந்தது ‘வாட் இஸ் திஸ் சந்தானம்’ என்று மனசுக்குள் சொல்லிப் பார்த்தார். நிகழ்ந்தது துக்கம் என்பதைத் தாண்டி கொலை என்பது உச்சரிக்கையில் தொடங்கிப் பேரதிர்வு ஒன்றினை எப்போதும் கொடுத்தபடி இருக்கிறது. சந்தானத்தின் மகள் பப்பி இன்னும் எழுந்து ஒருவாய் சாப்பிடக் கூட இல்லை. என்ன இப்ப அவசரம் எதிர்ப்பக்கம் ரெண்டு பேரையாச்சும் கறுவுனதுக்கு அப்புறம் மெல்ல எழுந்திரிக்கட்டும் என்று அவருக்குள் சொல்லிக் கொண்டார். யூனியன் நிர்வாகிகள் வந்து கெஞ்சினார்கள் ‘ஃபாக்டரியை முதலில் திறப்போம் எல்லாம் பேசிக்கிடலாம் கொஞ்சம் தயவு பண்ணுங்க’ என்றதும் ‘எனக்கென்ன உடனே திறக்கிறேன் என் மாப்ளையை மட்டும் உசுரோட திருப்பிட்டு வாங்க’ என்றார். பேசாமல் போய்விட்டார்கள்.எம் எஸ் பிடி கொடுக்கவில்லை.

மனிதனின் வெறி இரண்டு விதமானது ஒன்று ஆத்திரத்தில் ஏற்படுவது இரண்டு கோபத்தில் ஏற்படுகிற வெறி. ஆத்திரத்தில் ஏற்படுவது எப்போதுமே ஆரவாரமாய் இருக்கும் உடனடியாக அது தன் பசிக்கு தின்ன இரை கேட்கும். கோபத்தின் மீறி வேறு வகையானது அது நின்று நிதானமாக ஒவ்வொரு அடியாக பாதையில் எடுத்து வைத்து பிறகு நல்லதொரு உசித தினத்தில் வேண்டிய மட்டும் தனக்குத் தானே கேள்வி கேட்டுத் திருப்தி அடைந்த பிற்பாடு மெல்ல வேட்டையை தொடங்கும். இரை பிடிபட்ட பிற்பாடு வேட்டைக்கு அவசரம் இல்லை துரத்துகையில் தான் வேகம் அவசரம் வெறியெல்லாம். போனவன் திரும்பி வரப்போவதில்லை எம்எஸ் முதலாளிக்கு அது நன்றாகத் தெரியும் எல்லாவற்றுக்கும் இந்த உலகத்தில் ஒரு விலை ஒரு ஈடு இருக்கிறது. என்ன ஒன்று வழக்கமாக அவர் தரும் இடத்தில் இருப்பார் பெற்றுக்கொள்ளும் இடத்துக்கு முதல் முறையாக வந்திருக்கிறார்.

ஒரே ஒரு கணம் தான் சந்தானம் அழுதார். மார்ச்சுவரி வாசலில் மூட்டையாய்க் கட்டப்பட்டு மருமகனின் பிணத்தைக் காண வாய்த்த போது வெடித்தார். யூனிபார்ம் மாட்டிய அத்தனை தொழிலாளிகளும் சின்னாபின்னமாகும் வரை விடப்போவதில்லை என்று மனதுக்குள் கறுவினார். நிதானம் தான் முக்கியம் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டார். தனக்கு ஆதரவான சில கைக்கூலிகளைத் திரட்டினார்.

மனிதனின் மனம் இருக்கிறதே அதை விடவும் அதிபயங்கரமான சதியூறும் நீர்மம் எதுவுமே இல்லை. பார்ப்பதற்கு சாந்தமாகவும் சோகமாகவும் காணப்பட்டாலும் அவருக்குள்ளே உலை அணையவே இல்லை. அவர் சதா சர்வகாலமும் பகையும் வெறியுமாய்த் தன்னுள் வார்த்தபடி இருந்தார். அவருடைய வாழ்க்கையின் பிடிமானமாகவே பழிவாங்குதல் மட்டுமே எஞ்சிற்று. அவருக்கு மீண்டும் வாழ்க்கை எனும் ஆட்டத்தின் மீது ஆர்வம் வந்தது அப்போது தான்.

கொஞ்ச நாளில் மில் திறக்கப்பட போகிறது என அவ்வப்போது செய்திகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார். கைக்கூலிகள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் சந்தோசமாக அதை உண்மை என நம்பி வெளியில் பேசினார்கள். வெளியூர் சென்றுவிட்டால் மில் திறக்கிற அன்றைக்கு பணிக்குத் திரும்ப முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தில் நெடிய தொலைவு சென்று மாற்று வேலைகளை ஏற்பாடு செய்துகொள்ள யாருமே பயந்தார்கள்.

ஒருவனை அழிப்பதற்கு பெரிய திட்டங்கள் எதுவும் தீட்டத் தேவையில்லை மாறாக அவன் வேலையைக் கெடுத்து ஒரே இடத்தில் அவனை முடக்கினால் போதும்.
தொழிலாளிகள் வீட்டில் அதுதான் நடந்தது போனால் போகட்டும் தைரியமான சிலர் மாத்திரம் வெளியூருக்குச் சென்றார்கள். மாதவபுரம் கண்ணன் நகர் காட்டுக் கோவில் பவளத்திட்டு திரவியனூர் மற்றும் கிருஷ்ணாபுரத்தின் பெரும்பகுதி என்று இத்தனை இடங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் ஒரே நேரத்தில் சிதைந்தது.வறுமை விதவிதமாய் வரும் அப்படித்தான் ஆனது. அந்தப் பகுதியில் வெப்பம் கூடியது கோபமும் நிம்மதியின்மையும் எதற்கெடுத்தாலும் சண்டையும் சச்சரவுகளுமாகித் திமிர வேண்டியதாயிற்று.

எம்.எஸ் முதலாளிக்குத் தெளிவாய்த் தெரிந்தது. நெடு நாட்களாகவே பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடத்திக் கொண்டே வேறு வழியின்றிப் போனால் கலிவரதனைக் கொல்வது என்று பக்கவாட்டில் ஒரு திட்டத்தோடு அவர்கள் இருந்திருக்க வேண்டும் அன்று அந்த “வேறுவழியில்லை” என்று ஆகியிருக்க வேண்டும் வெறி உச்சத்துக்கு ஏறி அவர்கள் கலிவரதனைக் கொன்றிருக்க வேண்டும் அவருக்கு புரியாத அடுத்த விஷயம் ஏன் கலிவரதனைக் கொல்ல வேண்டும் நியாயமாக அவர்கள் எம்.எஸ் முதலாளியைத் தானே கொன்றிருக்க வேண்டும்?. தன் வாழ்வின் மறக்க முடியாத அந்தக் கொலைச் சம்பவத்தை ஒரு ஒளிப்பதிவாளனைப் போல் தன் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார் எம்.எஸ். யார் வந்து தங்களுக்குத் தெரிந்ததென்று எதைச் சொன்னாலும் மறுபடி ஒரு முறை அதே மனப்பதிவை ஓடவிட்டு அதனைத் திருத்திக் கொள்வார். மீண்டும் மீண்டும் அந்த இடத்திலேயே மனம் ஆறாமல் அலைந்துகொண்டிருந்தார். எங்கே இருந்தாலும் கொதிக்கும் அவர் நெஞ்சம் மாப்பிள்ளை கொல்லப்பட்ட இடத்திலிருந்து வெளியேற மறுத்தது. அதிகம் ஆழ்வது தான் விடுதலைக்கு வழி என்று அதனை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தார்.

மேனேஜர் உக்கிரபாண்டியிடம் கொலையாளிகள் சரணடைந்த செய்தி கிடைத்ததும் காரியத்தைச் செய்த 5 பேரின் வயது குடும்ப பின்புலம் இத்யாதிகள் அனைத்தையும் விசாரித்து வரச் செய்தார். எந்த ஒரு செயலாக இருந்தாலும் கூட்டுச் சேர்கிற பலரில் ஒருவனாவது ஈரெட்டாக இருப்பான், உள்ளேயும் வெளியேயுமாக ஊசலாடியபடி இருப்பான். குற்றப் பொழுது மன சஞ்சலம் மனித சுபாவம். விசயம் எதுவானாலும் அப்படி யார் ஈரெட்டாக இருந்தது என்பதை அறிந்து கொள்வது காரியத்தில் பாதி வெற்றியைத் தந்தாற் போல். சரண்டர் செய்தி கிடைத்ததுமே அடுத்தடுத்த விபரங்கள் வரத் தொடங்கின. பகவதி, நாராயணன், ஜேம்ஸ் ,இருதயம்,பழனிச்சாமி இந்த ஐவரில் இறுதியாக சேர்த்து கொள்ளப்பட்டவன் ஜேம்ஸ் என்பவன் தான். அவனுக்கு பணக்கஷ்டம் அதிகம்- அவன் குடிக்கு அடிமை- இன்னும் ஒவ்வொருவரைப் பற்றியும் குணாம்ச விபரங்களைக் கொட்டினார்கள்.

கொலை வழக்குகளில் ஜே பி முத்து ஆஜராவதில்லை அவரது உதவியாளராக இருந்து தனியே ப்ராக்டீஸ் செய்கிற ‘ஸ்பீடு’ சங்கரன் என்பவர் ஐந்து பேருக்குமான இடைக்காலப் பிணைக்காக ஜாமீன் பேப்பர்களை தயாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வக்கீலை சரிசெய்யும் பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவாகத் தெரிந்ததும் முதலாளி மற்ற வழிகளைப் பார்க்க முனைந்தார். நள்ளிரவு தன் வீட்டு வேலைக்காரி மஞ்சுளாவை அனுப்பி ஜேம்ஸின் உடன்பிறந்த தங்கை ஜூலியையும் அவள் கணவன் சுகுமாரையும் தன் கெஸ்ட் அவுஸூக்கு அழைத்து வரச்செய்தார் எம்எஸ் முதலாளி.

நடு நிசி மனிதனின் தைரியத்தை நாலில் ஒரு பங்காகக் குறையச்செய்யும். ‘எதுக்கு இந்த நடுராத்திரில’ என்று தான் மனம் அலைந்து தவிக்கும். நள்ளிரவு என்பது பெரிய திருப்பங்களுக்கானதல்ல. அந்தப் பொழுது உலகத்தின் பெரும்பான்மை உடல்களும் மனங்களும் நிம்மதியாக உறங்குவதற்கானது. எல்லோரும் அதே நிம்மதியைப் பகிர்ந்து கொண்டிருப்பதாகத் தான் எந்தத் தனி மனமும் நம்ப விரும்பும். ‘என்ன சவுக்கியமா’ என்று கேட்டால் கூட “இதை ஏன் இந்த நேரம் வந்து கேட்கிறாய்?” என்று மனசு குழம்பும். நள்ளிரவு என்பது ஒரு நாளின் பைத்தியப் பொழுது. அது சின்னதோர் சப்தத்தையும் பெருக்கிக் காட்டிப் பயமுறுத்தும்.

ஜூலியின் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. சுகுமார் பயமில்லாதது போல் காட்டிக் கொள்ள விரும்பினாலும் அவர்கள் மிகவும் பயந்திருந்தது கண்களில் தெரிந்தது. என்ன நடக்குமோ என்ற பயம் மட்டுமல்ல. அது ஒருவகையில் குற்றத்துக்கு முந்திய மன அச்சம். எம்.எஸ் முதலாளி இயல்பாக இருந்தார். அவர்களை சோஃபாவில் அமர வைத்து குடிப்பதற்கு ஹார்லிக்ஸ் தந்தார். உறக்கம் கலைந்து எழுந்த சிறு பெண் குழந்தையின் கைகளில் சாக்லேட் பாளங்களைத் திணித்தார். இன்னும் அச்சம் அதிகரிக்க சுகுமாருக்கு நாக்கு ஈரம் உலர்ந்து ஒட்டிக் கொண்டது. ‘முதலாளி’ என ஆரம்பித்ததுமே அவனை அமர்த்திய எம்.எஸ்.முதலாளி சிகரட்டை இழுத்து புகையை வெளியிட்டு விட்டு

“இந்தபார் தம்பி எனக்கு நல்லாத் தெரியும் ஜேம்ஸ் நல்லவன். அப்பாவி. அவன் மனசை கலைச்சிருக்கானுங்க. என்ன செய்யப் போறானுங்கன்னு தெரியாம ஊத்திவிட்டுக் கூட்டியாந்து கோத்து விட்டிருக்கானுங்க. அவன் எந்த யூனியன்லயுமே சேராதவங்குற வரைக்கும் எல்லா டீடெய்லும் எனக்குத் தெரியும். ஜேம்ஸ் மேல எனக்கு கோவமில்லை. மத்த நாலு பேரையும் துள்ளத் துடிக்க நான் செய்வேன். ஆனா ஜேம்ஸ் பாவம். இதுல தேவையில்லாம மாட்டிருக்கான். அது தான் மனசு கேக்காம உங்கள்ட்ட பேசத் தோணுச்சி. பகையும் பழியும் மாறாது. அது அப்பறம்… முதல்ல இந்த கேஸ், அதை முடிக்கணும்ல..?” என்று நிறுத்தியவர் தன் கையில் இருந்த சிகரட்டை ஆஷ் ட்ரேயில் தேய்த்து அணைத்தார்.

தங்களுக்கு எந்த வழியும் இல்லை என்பதை உணர்ந்த ஜூலி “அய்யா நாங்க என்ன செய்யணும் அந்தப் பாழாப் போனவன் புத்தி கெட்டு இப்படி பண்ணிருக்கக் கூடாது. எங்களை விட நீங்க தான் வெவரமானவங்க. சொல்லுங்கய்யா என்ன சொன்னாலும் செய்யிறம்” என்று கதறினாள்.

“எழுந்திரும்மா,எழுந்திரு முதல்ல. யாரும் யார் கால்லயும் விழக் கூடாது. தப்பு. நான் உங்களுக்கு விரோதி இல்லை. இந்தபார் எனக்கு நீங்க உதவுறதா இருந்தா ஜேம்ஸ் எனக்கு உதவுறதா இருந்தா பதிலுக்கு நா அவனை மன்னிச்சுர்றேன். அவன் கேஸை நான் நடத்தி வெளிய எடுத்துர்றேன். உங்க குடும்பத்தை யாரும் அறியாத இடத்துல ஸெட்டில் செய்ற வரைக்கும் என் பொறுப்பு அதுக்கு. எங்கிட்ட இல்லாத பணமா சொல்லு. அவன் ஆயுசுக்கும் வேலையே பார்க்கத் தேவையில்ல. நடந்ததை மறக்கணும்னா ஜேம்ஸ் என் பேச்சைக் கேட்கணும்”

அவர்கள் முகத்தையே உற்றுப் பார்த்தார். ஜூலியின் முகத்தில் தெரிந்த நிம்மதியும் சுகுமாரின் வெளிப்படையான மகிழ்ச்சியும் ‘இவ்ளோதானா’ என்றாற் போல் இருந்ததை மனதில் குறித்துக் கொண்டவராய்த் தொடர்ந்து “இந்த பார் சுகுமார், ராஜநல்லூர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே சட்ட அலுவலகம் இருக்கும். அதுல “சிவானந்த சேகர்”னு ஒரு லாயர். அவரைப் பார்க்குறே. நான் எதுவா இருந்தாலும் சேகர் கிட்ட தான் சொல்லுவேன். உனக்கு என்ன குடுக்கணும்னாலும் மஞ்சுளா மூலமாத் தந்து விடுவேன். நீங்க எனக்கு எதும் சொல்றதா இருந்தா சேகர் மூலமாவே சொல்லு. எதுவா இருந்தாலும் நேரடியா வரக் கூடாது. இப்பத்தில இருந்து நீங்க என் ஆளுங்க. இதுக்கு ஒத்துக்குறதா இருந்தா உன் புள்ள மேல சத்தியம் பண்ணிட்டு இந்தப் பணத்தை எடுத்துக்க”

அப்படியே உறைந்து அமர்ந்திருந்த சுகுமாரின் முகத்தில் சலனமே இல்லை. சட்டென்று துடிப்போடு அவன் கையைப் பற்றிக் கொண்டார் எம்.எஸ். முதலாளி ” நான் நம்புறேன்யா. மனப்பூர்வமா நான் நம்புறேன். எங்கிட்ட வேலைபார்த்தவங்க என் உப்பைத் தின்னவனுங்க தான் என் பொம்பள புள்ளையோட தாலியை வாங்கிட்டானுங்க. ஆனாலும் இன்னமும் நான் சக மனுஷனை நம்புறேன். ஜேம்ஸ் நல்லவன். அவனுக்கும் எங்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. அவனை இதுல சிக்க வச்சிட்டானுங்க. என் கோபம் அந்த நாலு பேர் மேலத் தான். ஜேம்ஸ் மேல இல்ல. உதவுங்கய்யா ” அவர் குரலின் தழுதழுப்பு நல்ல முறையில் வேலை பார்த்தது.

அண்ணனைக் காப்பதற்காக ஜூலியும் மைத்துனனுக்காக சுகுமாரும் தன் உயிரினும் மேலான ஜெனிதா மேரி என்கிற குட்டி வாண்டு தலையில் அடித்து சத்தியம் செய்தார்கள். கண்ணீர் வழிய பணத்தை எடுத்து கும்பிட்டு விட்டு சென்றார்கள்.

நள்ளிரவாவது? நடுப்பகலாவது? எம்.எஸ். முதலாளி நீச்சல் குளத்துக்குச் சென்றார். குவளையில் காத்திருந்த திரவத்தைத் தனக்குள் செலுத்திக் கொண்டு நீரில் கவிழ்ந்தார். நீந்தத் தொடங்கினார்.

 

{வளரும்}