யாக்கை 2

யாக்கை 2 செல்வச் சர்ப்பம்


“யாராலயும் நடந்த கொலையை மாத்த முடியாதின்னாலும் இனி நடக்கப் போறதையாச்சும் நல்லதாக்க முடியும்லண்ணே..? நாஞ்சொல்றதைக் கேளு. கர்த்தர் இன்னமும் உனக்கான வெளிச்சத்தை விட்டு வச்சிருக்கார். நீ மட்டும் கொஞ்சம் ஒத்து வந்தைன்னா மத்ததெல்லாம் நல்லா நடந்துறும்ணே…இதுக்கு மேல வெளிப்படையா என்னால எதுவும் சொல்ல முடியலைண்ணே. கொஞ்சம் மனசு வய்யி..”

எங்கோ பார்த்தபடி தான் ஒரு காவலாளி நின்றுகொண்டிருந்தார். ஆனாலும் ஜூலிக்கு மனசு விட்டுப் பேச முடியவில்லை. முதலில் ஜேம்ஸ் ஒத்து வரட்டும். முதலாளியால் எத்தனையோ நன்மைகள் வரக்கூடும்.

சுகுமாரும் தன் பங்குக்குப் பேசிப் பேசிக் கரைத்தான். இரண்டாவது நாள் அவர்கள் வந்த போது அதிகம் நேரம் எடுக்கவில்லை. பட்டென்று சொன்னான் ஜேம்ஸ். ” சரி ஜூலி நா ஒத்துவாறேன்.” அவன் அழுதான். இன்னமும் தன்னை மன்னிப்பதற்கான மனம் எம்.எஸ். முதலாளியிடம் இருப்பதை எண்ணிக் கதறினான். தன் உயிரையே தந்தாவது முதலாளிக்கு நன்மை செய்வதாக சத்தியம் செய்தான். அங்கே இருந்து செல்லுக்குத் திரும்பிச் செல்லாமல்
நேரே சூப்பிரண்டு அறைக்குச் சென்று தன் இருப்பிடத்தை மாற்றச் சொல்லி விண்ணப்பித்தான்.

எப்போதோ முதலாளியின் செல்வச் சர்ப்பம் சூப்பிரண்டு அறைக்குள் நுழைந்திருந்தது. ஜேம்ஸின் கோரிக்கை உடனே ஏற்கப் பட்டது. தங்கையை பார்த்து விட்டுத் திரும்ப வராமற் போன ஜேம்ஸின் செய்கை மற்ற நால்வருக்கும் அச்சத்தை ஏற்படுத்திற்று. காவலர்கள் கடிதங்களைப் போலச் செய்தி பகிர்வார்கள். அவனை அதன் பின் சந்திக்கவே முடியாமல் தவித்தார்கள். இரண்டாவது வாய்தாவில் மருத்துவக் காரணங்களுக்காக அக்யூஸ்ட் எண் 5 ஆன ஜேம்ஸூக்கு மட்டும் இடைப்பிணை தரப்பட்டு கண்ணன் நகர் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டான். அங்கேயும் பலத்த காவல் இருந்தது. ஜே.பி.முத்து ஜூலியின் வீடு தேடி ஆளனுப்பினார். குடும்பமே வீட்டைக் காலி செய்து விட்டு இரவோடிரவாக எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை.

இது ஏதோ எம்மார்மெண்டு வேலை என்பதை ஜே.பி.முத்து உணர்ந்து கொண்டார். அவர் என்றைக்கும் வன்முறைக்கு ஆதரவானவர் அல்ல. ஒரு போதும் கொலை எனும் பாதகத்தை ஆதரித்தது இல்லை. வர்க்கம் மேடுபள்ளம் கொண்டது என்பதை சித்தாந்த ரீதியாக புரிந்து கொண்டவர். வர்க்க பேத ஊசலாட்டங்களைப் பேச்சுவார்த்தைகளுக்கு அப்புறமான புரிதல்களைக் கொண்டு தான் சரி செய்ய முடியும் என்று நம்புபவர். உணர்ச்சிவயப்பட்டு சதா கொதிப்போடு இருக்கும் நண்பர்களை ஆற்றுப்படுத்துவது அவருக்கு கை வந்த கலை. எம்.எஸ் முதலாளியைக் கொலை செய்வதற்காக கிளம்பிப் போய் கைக்கு அகப்பட்ட கலிவரதனைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போய் இருக்கும் அந்த ஐந்து பேரைத் தாண்டி மொத்த தொழிலாளிகளுக்கும் வேலை கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. மில் எப்போது திறக்கும் எனத் தெரியாத பெரும்பூட்டுக் காலம் தொடங்கிய பிற்பாடு அவருக்கு எது நியாயம் என்பதை விட எங்கிருந்தாவது இந்தப் பிரச்சினைக்கான தீர்வைத் தொடங்கியாக வேண்டும் என்பதுதான் நினைப்பாக இருந்தது.

மேலோட்டமாகப் பார்த்தால் இது தொழிலாளிகள் பிரச்சினை முற்றி அதன் விளைவாக முதலாளியின் மருமகன் கொலை என்பதாகப் புரியும். அதைத் தாண்டிய இந்தப் பிரச்சினையின் திசைகளைக் குழப்பத் துடிக்கும் விஷ நாக்குகளை முத்து அறிவார். எம்எஸ் முதலாளியிடம் இருக்கும் பணத்திற்கு இந்த வழக்கு ஐந்து வருடங்களாவது நடக்கும். மெல்ல மெல்ல யூனியன்கள் இரண்டும் அவரிடம் சமரசம் பேசும். யாரும் வேலைக்கு போகாத ஒரு கதவடைப்பு இப்போது இருபுறமும் வெவ்வேறு பூட்டுகளை போட்ட நிலைக்கு வந்திருக்கிறது. ஆலையைத் தொழிலாளி வெளியிலிருந்து திறக்கப் பார்த்தாலும் முதலாளி உள்ளே விடப் போவதில்லை. அவர் பக்கம் திறந்தால் அது மிகப் பெரிய காம்ப்ரமைஸூக்கு அப்புறம் தான் நிகழும். நினைக்கும்போதே முத்துவுக்கு மனம் நடுங்கியது. ஜேம்ஸ் எப்படி விலை போய் இருக்கிறான் எனப் புரியவில்லை முதலில் அது விலைபோனது தானா அல்லது வெறும் மன ஊசலாட்டம் மட்டுமா என்பது தெரிய வேண்டும். ஒருவேளை சொல் பிறழ் சாட்சியமாகி அவன் அப்ரூவர் ஆகிவிட்டால் மற்ற நால்வரும் தொலைந்தார்கள்.

சம்பவத்தில் சாட்டப்பட்டிருக்கும் ஐந்து பேரும் ஒற்றுமையாக மறுத்தால் கொஞ்சம் தண்டனை குறைய வாய்ப்பு இருக்கிறது. இப்படி பிறழ்ந்தால் அத்தனை நன்மை விளையாது. இன்னொரு புறம் பணமில்லாமல் வேலையும் இல்லாத ஒவ்வொரு தினமும் சாவுக்கு அருகாமையில் சென்று வருகிறாற் போலத்தான். ஆலை திறக்கும்வரை அல்லது அரசு தலையிட்டு இடைக்கால நிவாரணத் தொகை ஏதேனும் வழங்கும் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் குடும்பம் அந்தர ஆட்டம் ஆடும். ஜே.பி முத்து ஒரே ஒரு கேள்வி அதற்கு மட்டும் பதில் அறிய விரும்பினார் அதாவது ஜேம்ஸ் மனம் நொந்து இருக்கிறானா அல்லது அப்ரூவர் ஆகிவிட்டானா இது மட்டும் தெரிந்தால் போதும். அந்த ஒரு கேள்விதான் இப்போது முக்கியமானது. ஸ்பீடு சங்கரன் தன் உறவுக்காரர் திரவியனூர் ஜெயிலில் காவலராகப் பணிபுரிகிறான் என்றான். அவனை விட்டு ஜேம்ஸிடம் பேசச் சொன்னார். சந்தர்ப்பம் கிடைப்பதே அரிதாக இருந்தது.

ஜேம்ஸ் முதலாளியின் ஈரமனம் அறிந்து கண்ணீர் உகுத்த பிறகுதான் ஏன் தன்னை விடுத்து கலிவரதனைக் கொன்றார்கள் என்கிற கேள்விக்கான பதில் எம் எஸ் முதலாளிக்கு தெரியவந்தது. காரில் வந்து கொண்டிருப்பது எம் எஸ் தான் என்று நம்பியே காரை நிறுத்தி இருக்கிறார்கள் அவர் தவிர யார் அதில் பயணித்திருந்தாலும் விட்டிருப்பார்கள் வண்டியை நிறுத்திய கலிவரதன் சற்றும் பயமில்லாமல் திட்டி எச்சரித்தபடியே டாஷ்போர்டில் இருக்கிற துப்பாக்கியை எடுத்திருக்கிறான். அடுத்த 3 நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. காரின் முன் பக்கக் கண்ணாடியில் உடை கல்லைத் தூக்கி இருதயமும் நாராயணனும் போட்டதில் கார் ஸ்ட்ரக் ஆகி நின்றுவிடுகிறது. உடனே பகவதியும் நாராயணனும்தான் கடப்பாரை கொண்டு கலிவரதனின் நெஞ்சில் இறக்கி இருக்கிறார்கள். நொடியில் அவன் இறந்து போகிறான். சாலை வழியைப் பார்த்துக் கொண்டு நின்றது மட்டும் தான் ஜேம்ஸ். பத்தே வினாடிகள் துப்பாக்கி முந்தி கலிவரதனின் கையில் கிடைத்திருந்தால் ஜேம்ஸ் உள்ளிட்ட 5 பேரும் இன்னேரம் கொல்லப்பட்டிருப்பார்கள்.

எம்எஸ் முதலாளிக்கு அது தனக்கு வைக்கப்பட்ட குறிதான் என்பது உறுதியானதும் உடம்பின் உள்ளே கனல் இன்னும் கூடியது. கலிவரதன் அப்பாவி அல்ல, தியாகி. நடந்தது படுகொலை. தனக்கான குறி. குறுக்கே வந்து அம்பைத் தன் நெஞ்சில் வாங்கிய க்லிவரதன் தன்னுயிரை ஈந்து சந்தானத்தின் உயிரைக் காத்திருக்கிறான். இந்த ஐந்து பேரும் கொல்லப் படுவது தான் கலிவரதனின் ஆன்மாவை சாந்தப் படுத்தும். சீக்கிரமா எல்லாத்தையும் கொல்லுங்க மாமா என்று சிரிப்பினூடே சன்னமான குரலில் கலிவரதன் சொல்வது போல் உள்ளொலித்தது சந்தானத்துக்கு. அவர் ஏற்கனவே மிருகம் தான். தற்போது உன்மத்தம் பிடித்தவரானார். என்னவெல்லாம் செய்யவேண்டும்,எவையெல்லாம் கூடாது, எது முன்பின் என ஒரு விரிவான வரை படத்தை வரைய ஆரம்பித்தார்.

எம்.எஸ். முதலாளி தூங்கி எழுந்ததும் தனது கைகளை முகத்துக்கு நெருக்கமாய் வைத்துப் பார்ப்பார். எப்போதோ ஒட்டிக் கொண்டு பழக்கமாயிற்று. விடாமல் பிடித்துக் கொண்ட செண்டிமெண்ட். அவருக்கு வாழ்க்கை சீராய்ப் போய்க் கொண்டிருந்தது. அப்படிச் செல்வது மட்டும் தான் அவருக்குப் பிடிக்கும்.இந்த 56 வயது வாழ்க்கையில் அவருக்கென்று பெரிய வீழ்ச்சியோ மாபெரும் வெற்றியோ இருந்ததில்லை. தன் கையை வீசினால் சிக்குவது மீனா மானா என்றெல்லாம் பார்க்க மாட்டார். வெறும் கையில் வந்து சிக்கிய வரை லாபம் என்று கிடைத்ததைப் போதும் என அடுத்ததை நோக்கிப் போகும் அவரது மனசு.

உண்மையாகவே அவர் கொடுத்து வைத்தவர். அவர் கைகளை வீசும் போதெல்லாம் நீரிலிருந்து திமிங்கிலமும் காற்றினூடே யானைகளும் சிக்கிக் கொண்டன. அவரது அதிர்ஷ்டம் என்பதை விட அவருக்குக் கிடைத்தவற்றின் சேர்விடம் என்று அவர் கைகளைச் சொல்லும் அளவுக்குத் துல்லியமான வெற்றிகள் அவருடையவை. இந்த மாதவபுரம் மில் முதலில் ஒரு வெள்ளைக்காரனும் இரண்டு கன்னடர்களும் நடத்திக் கொண்டிருந்தது. வெள்ளையன் இறந்து போனது எதிர்பாராத சம்பவம். அதற்கப்பால் மாதவபுரத்தில் அந்தக் கன்னடர்கள் இருவராலும் மண் எடுக்க முடியவில்லை. தூரத்தில் அரசியல்வாதி ஒருவர் அந்த மில்லை வாங்குவதற்காக வருவது போலத் தெரிந்ததும் அதிர்ந்து போனார்கள். இனிப் பொறுமையாக நிதானமாக இதனைக் கையாண்டால் பெரிய நட்டம் வந்து சேருமோ எனக் கவலை கொண்டார்கள். உள்ளது உள்ளபடியே சொல்வதானால் அடிக்கிற காற்றுக்குத் தெரியாது தாம் யாருக்கு சாதகமாய் நிகழ்கிறோம் என்று. அந்தக் காற்று சந்தானத்தை முதலாளி ஆக்கிற்று. முன்பிருந்த பேரான பெர்ஃபெக்ட் ஸ்பின்னிங் மில் என்கிற பலகையைக் கழற்றி எம்.எஸ்.மில் என்று போர்ட் வைக்கப் பட்டது. நல்ல விதத்தில் டீல் முடித்து கன்னடர்கள் பெங்களூரு சென்று சேர்ந்தார்கள். தொட்டதெல்லாம் துலங்கிற்று. பணம் பெட்ரோல் பங்கில் திரவம் நிரம்புகையில் எண்கள் மேலேறுமல்லவா அதைக் காட்டிலும் விரைவாக அவரது பள்ளங்களில் நிரம்பியது. அவர் வாழ்வில் சந்தித்த முதல் சரிவு இது தான். இது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்..?

தினமும் காலையில் எழுந்ததும் வேறேதைப் பார்ப்பதை விடவும் தன் இரு கை ரேகைகளைப் பார்ப்பதை அவர் பப்பியிடமிருந்து தான் தொடங்கினார். பப்பி அப்படித் தான் செய்யும். பாகீரதி என்ற பேர் உலகத்தாருக்கு. அவருக்கு பப்பி தான். “அது என்ன நாய்க்குட்டியை கூப்புடுற மாதிரி?” என அவரது மனைவி கடிந்து கொள்வாள். அப்புறம் அவளும் பப்பி என்றே அழைத்தாள். ஆற அமர முடிவெடுப்பவர் சந்தானம். அதுவும் பப்பி அவருக்கு உயிர். அவள் விஷயத்தில் அப்படித்தான் பார்த்து பார்த்து செய்து வைக்கப்பட்ட திருமணம் அது. கலிவரதன் கொஞ்சம் அப்படி இப்படி போய்வருபவன் தான் ஆனாலும் மற்றவர்களை எல்லாம் பொதுவில் ஒப்பிடுகையில் அவன் தங்கம். பப்பியின் கால் விரல்களுக்குச் சொடக்கெடுப்பான். அவளைத் தன் உயிரருகே வைத்துப் போற்றினான். பேரனும் பேத்தியும் அப்படியே எம் எஸ் முதலாளியின் ஜாடை. அதில் அவருக்குப் பூரண திருப்தி.

கலிவரதனின் இறுதி நிகழ்வின் போது யாரோ சொல்லி வருத்தப்பட்டார்கள். சந்தானத்துக்கு இப்படி ஒரு துக்கம் வந்திருக்கக் கூடாது. பேசாமல் இதற்கு சந்தானத்தைக் கொன்றிருக்கலாம். வேப்ப மரத்துக்கு விழவேண்டிய வெட்டு வாழை மரத்துக்கு விழுந்தால் தாங்குமா? கண்ணன் நகர் சப் கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜரான சேதி தெரிந்த உடன் நூறு பேரையாவது கூட்டிக்கொண்டு போய் எல்லோரையும் அடித்து நொறுக்கி அந்த ஐந்து பேரையும் கூழாக்கிச் சுவைத்தால் என்ன என்று துடித்தது. அவர் கண் முன் பேரன் பேத்தியரது முகங்கள் நிழலாடின. ஏற்கனவே தந்தையற்ற பிள்ளைகள். தாத்தன் தான் ஒரே ஆண்துணை. தானும் ஜெயிலுக்குப் போய்விட்டால் எதுவும் சரிவராது. பப்பி அவர் கோபத்தை மாற்றி அமைத்தாள். “டாடி.. நமக்கு வேற எதுவும் வாணாம். அந்த ஃபாக்டரி மெல்ல சிதைஞ்சு அழியட்டும். அவரைத் தீர்த்துக் கட்டுனவங்க மட்டும் இல்லை. அங்க வேலை பார்க்குற அத்தனை பேரும் துள்றதையும் துடிக்கிறதையும் நான் பாக்கணும்..இதை எடுத்ததும் செய்திடக் கூடாதுப்பா. மெல்ல மெல்ல செய்யணும். இதுக்காக என்ன செலவானாலும் சரி” என்றாள். தன்னைப் போலவே சிந்திக்கும் பப்பியைத் தன் ஸீட்டில் அமரவைத்து அதிகாரத்தைக் கற்றுக் கொடுத்தால் என்ன என்று யோசித்தார் சந்தானம்.

அவரது வகுப்புத் தோழர் கேப்டன் மாடசாமி ஆர்மியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் சிஸ்டமேஜிக் செக்யூரிட்டி ஸர்வீஸ் என ஒன்றை ஆரம்பித்து பெரும் புள்ளிகளுக்கான பந்தோபஸ்து பாதுகாவல்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக விமானப் பயணமொன்றில் சந்தித்த போது சொல்லியிருந்தார். உடனே அவருக்குக் கடிதம் எழுதினார். ‘சந்தானத்துக்கு செய்யாமலா’ என்று அவர் நேரில் கிளம்பி வந்து விட்டார். மூன்று பிரிவுகளாக செக்யூரிட்டி. காரில் எப்போதும் ட்ரைவருக்குப் பக்கத்தில் ஆர்ம்ட் அதாவது துப்பாக்கி ஏந்திய ஒரு காவலர் இருப்பார். பின்னால் இன்னொரு காரில் ஐந்து பேர் ”ஷாடோ ஸ்க்வார்ட்” பப்பி சின்னதொரு கடைக்குச் சென்றாலும் ஆறு பேர் அவளுக்கு நிழல்களாய் வலம் வந்தார்கள். பூட்டிய ஆலைக்கு தினமும் சென்று அலுவலர்கள் சொல்லச் சொல்ல எது என்னென்ன எனப் பாடம் படிக்கிறாற் போல் சிரத்தையோடு படித்துக் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டாள் பப்பி. மேலும் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் உப விபரங்கள் எந்தெந்த ஏரியாக்களில் யாரெல்லாம் வசிக்கிறார்கள் எனப் பல விவரங்களைக் கம்யூட்டர் சகிதம் தானே தயாரித்தாள். ஒருத்தன் பேரைத் தட்டியதும் அவன் ஜாதகமே வந்தது. பப்பி இளவரசியல்ல. இனி அவள்தான் மாதவபுரம் எம்.எஸ். மில்லின் ராணி.

வெங்கடாச்சலம் அரசுத் தரப்பு வக்கீல் இன்னும் நாலு மாசத்தில் ஜட்ஜாகப் போகிறவர். அதகளம் செய்தார். ஏன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கேட்ட நீதிபதியிடம் 12 நிமிடங்கள் அவர் எடுத்து வைத்த வாதம் எத்தனை தலைகீழ் ஆட்டம் நடந்தாலும் ‘வெளிக்காற்றா…? நோ நெவர்’ என்று சொன்னாற் போல அவர்களைக் கதறடித்தது. கோர்ட்டுக்கு வெளியே தொழிலாளிகள் ஊர்மக்கள் எனப் பலரும் அவர்களைச் சார்ந்தோரும் வேடிக்கை பார்க்கும் ஜனங்களுமாய் பெரும் கூட்டம் கூடிற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஜாமீன் இல்லை என்கிற முடிவுக்கு எதிர்த்தரப்பை வரவைத்தது.

ஜே.பி.முத்து சார்ந்திருக்கும் யூனியன் என்றால் சுற்றுப்பட்டு மூன்று மாநிலங்களில் செல்வாக்கு. அவர் தேசியக்குழு உறுப்பினர். தேசிய அளவில் அவரது கொடி பறந்தது. ஆனால் முத்துவுக்கு தலைவலியாக இருந்தது எம் எஸ் மில் மாத்திரம் தான் அதற்கு காரணம் மற்ற ஆலைகளின் முதலாளிகளை விட எம்.எஸ்.முதலாளி பெரும் தனவந்தர். பத்துக்கும் மேற்பட்ட தொழில்கள். எதையும் வாங்குவார். எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உண்டு. ஏன் இந்தக் கொலை சம்பவம் நடந்து செய்தவர்கள் தலைமறைவாகி இருந்த சமயம் முத்துவின் அலுவலகத்திற்கு மேலிடத்திலிருந்து ஃபோன் அழைப்பு வந்தது. யூனியன் விதிமுறைகளின் பிரகாரம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் உறுப்பினர்கள் நீக்கப்படுவது வழக்கம். வழக்கு நடக்கும் போது சம்மந்தப்பட்டவர்களை யூனியனிலிருந்து சஸ்பெண்ட் செய்வதைப் பற்றி ஆலோசித்தது. வெளிப்படையாக அவர்களைக் கைவிட்டாற் போலாகிவிடும் என்று முத்து கேட்டுக் கொண்ட பிறகு அரைமனதோடு அழைப்பு துண்டிக்கப் பட்டது. தலைமை கன்வின்ஸ் ஆனாற்போல் தெரியவில்லை.

சங்கரனும் மாத்துக்குட்டியும் நுழைந்தார்கள். முத்து கவிழ்ந்த தலையை நிமிர்த்தி என்ன என்றாற் போல் பார்த்தார். ” ஜேம்ஸோட தங்கச்சி குடும்பம் எங்கருக்காங்கன்னே தெரியலை. ஊருக்குப் போறதா சொல்லிட்டு செல்லம் கடையில நாலு மாசமா இருந்த கடன் பாக்கியெல்லாத்தையும் மொத்தமாக் குடுத்துட்டு போச்சாம் ஜூலி. கை நெறையப் புதுத் தாளாப் புரளுதுன்னு நெனச்சாப்லயாம். செல்லம் அண்ணாச்சி சொன்னாவ.”

ஜேம்ஸின் உருவம் நிழலாட அவன் தலைமீது புதுக் கரன்ஸி தாட்கள் எங்கிருந்தோ அள்ளி சொரியப்பட்டாற் போல் ஒரு கணம் தோன்றியது முத்துவுக்கு.

முத்துவின் தலை பாரமாயிற்று.

(வளரும்)