யாக்கை 3

பாம்பும் புலியும்


இன்று மழை வருமா எனத் தெரியவில்லை. மழை வந்தாலென்ன வராவிட்டாலென்ன..? மாபெரும் கூரைக்குக் கீழே மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தபடி வழக்கு நடத்துவதில் மழைக்கு என்ன பங்கு இருக்கப் போகிறது..? மழை வெவ்வேறு வேடங்கள் தரிக்கக் கூடியது தான். சில வழக்குகளில் மழை முக்கியமான ரோல் ப்ளே செய்யும். சீனியர் ஸ்ரீனிவாசமூர்த்தி சிரித்துக் கொண்டே சொல்வார் ” என்ன முத்து மழைக்கு வாயிருந்து அது வந்து சாட்சி சொன்னா உலகத்ல பாதி கேஸோட போக்கே மாறிட்டிருக்கும் தெரியுமா?”

எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை பார்த்துரு என்பார். அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடைய மாட்டார். எதையும் அலட்சியமாக எண்ணாதவர். அதனாலேயே அனேகமாக அவர் அப்பியர் ஆன அனைத்திலும் வென்றிருக்கிறார். அதெல்லாம் ஒரு காலம். நிசமாகவே சிங்கங்கள் உலாவிய சட்டக்காடு.

ஒரு டீ சாப்பிட்டால் நல்லா இருக்குமே என நினைத்த மாத்திரத்தில் மழை தொடங்கிற்று. எங்கிருந்தோ சப்தத்தையும் அழைத்து வந்திருந்தாற் போல் அப்படி ஒரு சரவெடிச் சப்தம். ஓங்கித் தொடங்கும் மழை வலுத்தால் பேயாட்டம் போடும் என்பாள் முத்துவின் அம்மா. இன்றைக்கென்ன மூத்தவர்களின் நினைவுகள் வந்து ததும்புகின்றன..? நினைத்த மாத்திரத்தில் சற்றே தனக்குள் அன்னியமாய் உணர்ந்தார். சொல்லி வைத்தாற் போல் டீக்கடையிலிருந்து சஜீவன் ஃப்ளாஸ்கோடு வந்து சேர்ந்தான். சங்கரன் சொல்லியிருப்பான். சீனியர் ஆபீஸ்ல இருக்கறப்ப டாண்ணு நாலு மணிக்கு ஒரு டீ ஏழு மணிக்கு ஒரு டீ குடுத்திரு..சரியா..?

சொல்லாமலே வேலை பார்ப்பவன் தான் காரியக்காரன். சங்கரன் அந்த வகை தான். டீயை முற்றிலுமாய் அருந்திய பிறகு சற்றே தளர்ந்தார் முத்து. அவருக்கு கலிவரதன் கொலை வழக்கு செல்லும் திசை நன்றாகப் புரிந்தது. செஷன்ஸ் கோர்ட்டில் அழுத்தமாக எழுதிவிட்டால் அதைப் பிறகு மேலே மாற்றுவது எளிதாக இருக்காது. நடந்த சம்பவம் கொலை. கொல்லப்பட்டவனின் மேல் தான் கருணை குவியும். அருகருகே இரண்டு நியாயங்கள் இருக்க வாய்த்தால் தான் அதில் எது சிறந்தது என்பதையே நோக்க முடியும். இறந்த உயிரைத் திரும்பத் தர முடியாதல்லவா என்கிற வினாவை அடுத்து கருணை கோரும் அத்தனை சொற்களின் மீதும் சிவப்பு மசிப் பேனாவால் குறுக்கே அடிக்கப் படும்.

ஜேபி முத்து சித்தாந்தவாதி. அவர் பேச்சை நம்புபவர். வெறும் பேச்சல்ல…உரையாடல் என்பது உறைவாளைக் காட்டிலும் பதமான ஆயுதம். உலகின் மாபெரிய சிக்கல்களைப் பேசித் தீர்க்க முடியும் என்று உறுதியாக நினைப்பவர். அவருக்குக் கற்றுத் தந்தவர்கள் மீண்டும் மீண்டும் அன்பையும் நேர்மையையும் போதித்துச் சென்றிருந்தார்கள். வன்முறையை எதற்காகவும் கைக்கொள்வதில் அவருக்கு விருப்பம் இருந்ததே இல்லை. வழக்கறிஞராவதற்கு முன்பே அவருடைய நம்பிக்கைகள் அப்படியானவை தான். தொழிலிலும் அவர் பல சிக்கல்களை முரண்பாடுகளைப் பேசித் தீர்த்து வைத்திருக்கிறார். எத்தனையோ சந்தர்ப்பங்கள் விதவிதமான மனிதர்கள். வன்முறை பொங்கும் எத்தனை சொற்கள் வாதப் பிரதிவாதங்களை எல்லாம் பார்த்தாயிற்று?

பேச்சின் நடுவே “தூக்கிடுவேன் குத்திருவேன்” என்றெல்லாம் சாதாரணமாய்ச் சொற்கள் தடிக்கும் போதே வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதைத் தான் வலுயுறுத்துவார் முத்து. அவருடைய முகத்துக்கும் குரலுக்கும் சொற்களுக்கும் கிடைக்கவல்ல மரியாதை அதீதமானது. அவர் சொல் செல்லுபடியாகாத இடம் எதுவுமே இல்லை.

இந்தக் கொலை நிகழ்ந்திருக்கக் கூடாத துன்பம் மட்டுமல்ல ஒரு நெடிய போராட்டத்தின் வெற்றிக்கான எல்லா வாய்ப்புகளையும் வேரறுக்கக் கூடிய உன்மத்தம். இனிமேல் பேசுவதற்கோ பெறுவதற்கோ என்ன மிஞ்சி விடப் போகிறது? நிர்வாகத்தின் அத்தனை அழுக்கும் தவறும் குற்றமும் எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் மூடி மறைப்பதற்கான மாபெரிய குற்றத்துணியாக இந்தக் கொலை அமைந்து விட்டது. கலிவரதன் சத்யசந்தனா ஞானவானா என்பதெல்லாம் இப்போது கேட்கத் தேவையற்றவை. கொல்லப்பட்டவன் இளம் கணவன். இரு சிறு பிஞ்சுகளின் தந்தை. பெரும் தனவந்தன். அய்யோ பாவம் என்று யாருக்குத் தான் தோன்றாது?
வழக்கின் சிக்கல்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தன. ஐந்து பேர் சென்றது முதல் பலவீனம். அதில் நாலு பேர் இருவேறு யூனியனில் உறுப்பினர்கள். ஜேம்ஸ் என்பவன் சமீபத்தில் தான் பெர்மனண்டு ஆகியிருக்கிறான். இன்னும் எந்த யூனியனிலும் சேரவில்லை என்பது விலக்கமாய்த் தெரிவது. இந்தக் கொலை திட்டமிடப் பட்டதல்ல யதார்த்தமாக நிகழ்ந்தது என்பதை நிறுவுவதற்கான வழிகள் மிகவும் குறுகலானவை. ஜேம்ஸ் என்கிற ஒருவன் சொல்லும் வார்த்தைகள் எல்லாமே இந்த வழக்கின் திசையை மட்டுமல்ல முடிவையும் தீர்மானிப்பவை.

இந்தக் கொலையில் ஐந்தில் மற்ற நாலு பேருமே கோபக்காரர்கள். இதெதுவும் போதையிலோ அல்லது எடுத்தாற் போன்ற ஆத்திரத்திலோ நிகழ்ந்து விடவில்லை. முதலாளியைக் கொன்றால் எந்த விதத்திலும் தங்கள் வாழ்வு செழிக்காது என்பது நன்றாகத் தெரிந்தவர்கள் தான். அறிவு அழிந்து போன கணமொன்றில் தன்னை அழிக்கும் எனத் தெரிந்து மேனியில் தீவைத்துக் கொண்டு எதிரியைக் கட்டி அணைக்கிறாற் போலத் தான் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஜேம்ஸ்.அவன் எப்படி இதில் கலந்தான்? நாகநாதனோடு தான் அந்த நால்வரும் எப்போதும் திரிவார்களாம். அன்றைக்கு நாகநாதன் சொந்தக் காரர் துஷ்டிக்காக வேதக்கோட்டைக்குச் சென்றுவிட்டிருக்கிறான். மதுக்கூடத்தில் யதார்த்தமாக வந்து சேர்ந்தவன் ஜேம்ஸ். “எங்க கூடவே வா” என்று இலக்கில்லாமல் அழைத்துப் போயிருக்கிறார்கள்.

“அந்தாளு செத்தாத் தாம் நமக்கு நிம்மதி” என்று இருதயம் தான் மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறான். வழியில் முதலாளியின் கார் வந்த அந்த ஒரு நிமிடம் தங்களுடைய கேவலை வெளிப்படுத்தும் முகமாகத் தான் நிறுத்தி இருக்கிறார்கள். காரில் இருந்த கலிவரதன் துப்பாக்கியைத் தேடவே அந்த ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது. இந்த ஜேம்ஸ் உறுதியாக நின்றால் தண்டனையைக் குறைத்துவிடலாம். அப்புறம் நடந்து காட்டி நன்மை கோரிப் பல வழிகளும் வாசல்களும் ஒவ்வொன்றாய்த் திறக்கும். இப்போது எதற்கும் வாய்ப்பில்லை போலத் தெரிகிறது.

ஸ்பீடு சங்கரனின் ஆளால் ஜேம்சை சந்திக்க முடியவில்லை என்று தெரிந்ததும் ஜேபி முத்து தானே காரை எடுத்துக் கொண்டு மூவரசபுரம் சென்றார். அங்கே தான் ஜெயில் உதவி சூப்பிரண்டு நாகராஜ் பாண்டியனின் வீடு இருந்தது. அவர் முத்துவுக்கு தூரத்து சொந்தம் இருவரும் ‘சகலை’ என்று தான் அழைத்துக் கொள்வார்கள்.முழுவதையும் ‘உம்’ ‘அம்’ என்று கேட்டுக் கொண்டிருந்து விட்டு

“இந்தாருங்க சகலை இது அரசியல் கொலையா பழிவாங்கச் செய்ததான்றதெல்லாம் வெளியில..ஜெயிலுக்குள்ள அந்த ஜேம்ஸூக்காகப் பணம் கடுமையா செலவழிக்கிறாங்க. அவன் சத்துக்கு இதெல்லாம் ஆவாது. எல்லாம் சந்தானம் தான் செய்றாப்டின்னு தோணுது.அவனை நெருங்கவே முடியாது. பேசணும்னாலே கஷ்டம் தான். மனுப்போட்டு பாக்குறதுக்கும் வழியில்லை. சூப்பிரண்டு கைகுலுக்கிட்டாப்லன்னு நல்லாத் தெரியுது. எங்கிட்ட வரமாட்டானுவ, என்னிக்காவது சூப்பிரண்டு லீவு போட்டா சட்டுன்னு சொல்லுதேன். ஆஃப் தி ரெகார்டா யாராச்சும் வந்து அவன் கிட்ட பேசிப்பாக்கலாம். அதுங்கூட அரட்டிப் பேசிடக் கூடாது. அப்பறம் கம்ப்ளைண்டாயிட்டா என் சோலிக்குப் பங்கமாய்டும். அன்பே அரசேன்னு பேசிட்டு வர்றதா இருந்தா சொல்லுங்க. எப்ப எப்டின்னெல்லாம் ஒண்ணும் வெளங்கலைன்னாலும் முயற்சிக்கலாம்” என அலுத்துக் கொண்டார்.

நெடு நேரம் எதுவும் பேசாமல் தரப்பட்ட தேநீரைச் சூட்டை ஊதிக் குடித்து கீழே தம்ளரை இருத்தியபடியே “சகலை ஒண்ணே ஒண்ணு செய்யுங்க…அந்த ஜேம்ஸை நீங்க சந்திக்கிறது எந்த பிரச்சினையும் இல்லைல்லா..?நீங்க அவனை பார்த்து சொல்லுங்க. அந்த நாலு பேரு தூக்குக்கே போனாலும் மத்த தொழிலாளிங்களுடைய கோபமெல்லாம் ஜேம்ஸ் மேலத் தான் திரும்பும்னு மாத்திரம் சொல்லுங்க. வெளில வந்தப்புறம் வாழ்றதைப் பற்றியும் அவன் யோசிப்பானில்லா, இப்பத்திக்கி இவ்ளவு சொன்னாப் போதும் ” என்றார்.

இங்கே தூதுவராக அனுப்பப் பட்ட நாகராஜ் பாண்டியனுக்கு யதேச்சையாக சூப்பிரண்டு பல்லி எச்சமிட்டு உதட்டுக்கு பக்கம் கொப்புளம் என்று லீவில் சென்றுவிட அன்றைக்கே சந்தர்ப்பம் வாய்த்தது. பரபரப்பில்லாத சமயம் பார்த்து செல்லுக்குச் சென்றார். ஜேம்ஸின் தோளில் கை போட்டு அரைமணி நேரம் பேசினார். அவன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “முதலாளி மருமகனை துள்ளத் துடிக்க போட்டுத் தள்ளுனது தப்பில்லையா ஸார். செய்ததுக்கு அனுபவிச்சுத் தானே ஆகணும்?” என்றான்.

இது நன்றாக ட்யூன் செய்யப்பட்ட ரேடியோ என்பதைக் கண்ணுற்றதும் சர்ரென்று கோபம் தலைக்கேற தன் அளவைத் தாண்டிய எதோ ஒரு வெறுப்பா கோபமா எனத் தெரியாமல் “என்னடா படிச்சு படிச்சு சொல்றேன்.கூடவே நீயும் போயிருக்க. நீயும் சேர்ந்து தான் செய்திருக்க. அந்த நாலு பேரும் நீ தான் மெயினுன்னு சொல்லி கேஸ் நடத்துனா என்ன பண்ணுவ?.நீ என்ன கதி ஆவுறன்னு பாரு. செல்லுலேருந்து வெளியேறிட்டா தப்பிருவியோ? எத்தினி தொழிலாளி ஆத்திரமா இருக்குதான். எவனாச்சும் கழுத்தை திருகிட்டா உங்குடும்பத்தை அந்தப் பணக்காரனா வந்து காப்பான்..?அனுசரிச்சு போடா.காட்டிக் குடுத்த துரோகின்னு பேர்வாங்கிட்டு என்ன பெருசா வாழ்ந்துறப் போறே நீ?” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

ஏற்கனவே பிறழ்ந்த மனசுக்காரன் ஜேம்ஸ். அவனுடைய மனசாட்சி அவனைப் பலவிதங்களில் உறுத்திக் கொண்டிருந்தது. சிறையில் அவனுக்குப் பல தினங்கள் உறக்கமின்றியே கழிந்தன. இது தான் சரி என்று எப்போதுமே அவன் முடிவெடுத்தவனில்லை. சின்ன வயதிலிருந்தே மற்றவர்களை சார்ந்தே அவன் வாழ்க்கையின் பல முக்கியக் கட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறான். எது சரி எது தவறு என்பதில் எப்போதுமே குழப்பங்களைக் கொண்டவன் ஜேம்ஸ். யாரும் கல்லெறியாதவரை அவன் மனசு தெளிந்த நதியாய்த் ததும்பும். என்ன ஜேம்ஸூ உடம்பு சரியில்லையா என்று யாராவது கேட்டால் போதும் அடுத்த அரைமணி நேரத்தில் உடம்பு கொதிக்கும். தன் உடன்பிறந்த தங்கை என்ன சொன்னாலும் அது தனக்கு நல்லதாய்த் தான் இருக்கும் என்று நம்புவான். சுகுமார் கொஞ்சம் விவரமானவன். படித்தவன். அவனிடம் கேட்டுவிட்டுத் தான் சினிமா பார்க்கக் கூடக் கிளம்புவான்.

ஜேம்ஸின் ஒரே பலவீனம் குடி. குடித்த பிறகு அவனுடைய மனசு நெகிழ்ந்து போகும். ஒரு மாதிரி வலியற்ற உடலாகத் தோன்றும். பரவசமான அலைதல். கொஞ்ச நேரம் அப்படியே இருக்கலாம் என்று தோன்றும். அவனுக்கு அந்தக் கிறக்கம் அடுத்து வருகிற பல தினங்களுக்குப் போதுமான உற்சாகத்தை நல்கிவிடும். தன் வாழ்க்கைக்குத் தன்னால் ஆன அபிசேகமாகத் தான் அவன் மதுவை நாடுவான். திரவம் தனக்குள் நிகழ்த்துகிற வேடமாற்றம் அவனைப் பொருத்தமட்டில் பெரிய சாதனை. ஜேம்ஸூக்குள் பேய் புகுந்த தினமொன்றில் அந்தக் கொலைக்கு அவனும் உடந்தையாக இருக்க வேண்டியதாயிற்று. அது சாத்தானின் வேலை. தான் அப்படிச் செல்கிறவனில்லை. வா என்றார்கள் உடனிரு என்றார்கள் கூட்டிப் போய் ஒரு உயிரை எடுத்து விட்டார்கள். அந்தத் தினத்தை எப்படியாவது மாற்றிவிட முடியாதா என்று ஏக்கமாக இருந்தது. முடியாது என்பது தெரிந்த பிறகு இருளும் துக்கமும் பெருக எதிர்காலம் குறித்த பயம் மூச்சை அடைத்தது.

முதலாளி எத்தனை நல்லவர்..? நாம் தான் தப்பு செய்திட்டம் இனி திருந்துவோம் என்று இப்போதுதான் சின்னதாய் ஒரு வெளிச்சம் ஏற்படுகிறாற் போலத் தோன்றியது. அதற்கும் வேட்டு வைக்கிறாற் போல் இந்த டெபுடி வந்து குழப்பி விட்டுப் போய்விட்டார். எல்லாருமே என் கூட வா என்று அழைத்தால் ஒருத்தன் யாரோடு போவான்?

முதலாளியின் செல்வாக்கு ஜேம்சை அவன் வழக்கு தொடர்பான வேறு யாரிடமிருந்தும் விலக்கித் தனியே இருத்தியிருந்தது. ஒருவகையில் எந்த மனநிலைக் குழப்பமும் இல்லாமல் நிம்மதியாய்த் தான் இருந்தான். கோர்ட்டுக்குச் செல்லும் போது கூட அவனுக்கு அடுத்து ரெண்டு போலீஸ்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். அடுத்த அழைப்புக்கு அவன் ஆஸ்பத்திரியில் இருந்ததால் வாய்தா கிடைத்து விட்டது. இனி அடுத்த வாரம் மறு அழைப்பு வரும். அதைக் கூட சமாளித்து விடலாம். இந்த டெபுடி சொல்கிறாற் போல் தனக்கும் தன் குடும்பத்துக்கும் எல்லாத் தொழிலாளிகளிடமிருந்தும் யார் பாதுகாப்புத் தருவார்கள்?

அவன் தலைக்குள் நிரந்தரமாய் ஒரு கூச்சல் ஒட்டிக்கொண்டிருந்தது. யாருடைய குரல் எது என்றே கணிக்க முடியாத மொத்தம். ஆரவாரம். கருணையற்ற பெரும் சப்தம். எல்லோரும் துரத்துகிறார்கள். தன்னையும் குடும்பத்தோடு வெட்டிக் கொன்றுவிட்டால்..? ஐய்யோ…!

காட்டிக் கொடு என்று ஒரு திசை விரிகிறது. உன்னை விட்டேனா பார் என்று இன்னொன்று அச்சுறுத்துகிறது. ஜேம்ஸூக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. மரத்தின் உச்சியில் இருப்பவனை படமெடுத்தபடி ஒரு பாம்பு நெருங்குகிறது. தரையில் அவன் எப்போது விழுவான் என்று பசித்த புலியொன்று கண் அயராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாம்பா புலியா என்பதில் சலுகை எதுவுமில்லை.

அடுத்த தினமெல்லாம் திசையற்ற இருளை வெறித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ் நொடியில் ஒரு முடிவெடுத்து விட்டான். கக்கூஸ் சன்னலின் டயமண்ட் டிசைன் வலைக்கம்பியில் குளிர்கிறது என்று பெற்றுக் கொண்ட போர்வையை இரண்டாகக் கிழித்துக் கயிறு போலாக்கி அதன் உறுதியான பிடிக்குத் தன் கழுத்தைக் கொடுத்துத் தொங்கிய மாத்திரத்தில் செத்துப் போனான். லீவில் போயிருந்த சூப்பிரண்டும் உள்ளே வேலைக்கு வந்திருந்த உதவி சூப்பிரண்டு நாகராஜ பாண்டியனும் பாகுபாடின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு ஜேம்ஸின் கதை முடிந்துவிடவில்லை.

அவன் டவுசர் பையில் இருந்த காகிதத்தில்

“முதலாளி பாவம். அவருக்குப் பதிலாகக் கலிவரதனைக் கொன்றது பகவதியும் பழனிச்சாமியும் தான்.கல்லைப் போட்டுக் காரை நிறுத்தியது இருதயமும் நாராயணனும்.நான் வெறுமனே ஆள் யாரும் வராமல் இருப்பதைக் காவல் காத்தவன்.அதற்கு தெய்வம் எனக்குத் தந்த தண்டனை இது.என் சாவுக்கு நாங்கள் சேர்ந்து செய்த அந்தக் கொலை தான் காரணமே தவிர வேறு யாரும் காரணமில்லை.ஆண்டவர் என்னை மன்னிப்பாராக”

என்று முந்தைய கொலை வழக்கின் தீர்ப்பைத் தன் கையால் எழுதி அதை இன்னொரு தற்கொலை வழக்கோடு சேர்ப்பித்தபடி வாழ்வை முடித்துக் கொண்டிருந்தான்.

இனிச் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்று ஜேபி முத்து தலையில் கை வைத்துக் கொண்டார்.

எம்.எஸ் முதலாளி தன் வீட்டு மாடியில் செயற்கை தோட்டத்தில் பிரம்பு ஊஞ்சலில் ஆடியபடியே தன் மனசுக்குள் தெரிந்த வெண் திரயில் பெரிய எழுத்துருவில் தென்பட்ட ஜேம்ஸ் என்ற பெயரின் குறுக்கே சிவப்பு மசிப் பேனாவால் குறுக்கே அடித்தார்.

மற்ற பெயர்களை ஒவ்வொன்றாக எழுதத் தொடங்கினார்.

{வளரும்}