4 காணா விலங்கு
கிருஷ்ணாபுரத்தின் அடையாளமாகவே ஒரு காலத்தில் திகழ்ந்தது கோட்டை வீடு. எல்லாம் பழைய கதை. பராமரிப்பில்லாத அரண்மனை பட்டுப்போன மரமாய் வெளிறிப் போகும். காம்பவுண்டு சுவரில் ஆங்காங்கே கற்கள் உதிர்ந்திருந்தன. நுழையுமிடத்து விக்கெட் கதவு ஒன்றோடு மற்றது பொருந்தாமல் மூடிய பிற்பாடும் கொஞ்சம் திறந்தபடி இருந்தது. கோட்டை வீடு பெரிய தியாகராஜனுக்கு நாலைந்து நாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம். திடீரென்று ஒரு முடிவெடுத்தவராக சுற்றியது போதும் என்று இந்தியா வந்து சொந்த ஊரில் செட்டில் ஆனார். மத்திம வயதில் கை கொள்ளாக் காசோடு ஊருக்குத் திரும்புவது கூடை நிறையப் பாம்புகளுடன் உலா வருவதைப் போலத்தான் என அவரது அப்புச்சி சொல்வார். அப்புச்சி சொல்லி எதையுமே அவர் கேட்டதில்லை. அவரும் அப்படி ஒன்றும் நல்ல வாக்குகளை சொரிந்ததே இல்லை. மன்சொப்பி ஊதாரித் தனத்தை ஏற்றுக்கொண்டு புன்னகைக்க முடியாதவர் அப்புச்சி. அவர் போய்ச் சேர்ந்ததும் கேட்பாரற்றுத் திரியத் தொடங்கினார் பெரிய தியாகராஜன்.
தினமும் விடாமல் கஸரத்தெல்லாம் பண்ணிப் பண்ணி ஆசாமிக்கு நல்ல உடற்கட்டு. எப்போதும் பசியெடுக்கிறவனின் கலயம் அவர் உடம்பு. சம்போக நாட்டத்துடன் தெருவில் பணத்தை வாரி இறைத்தால் எத்தனை நாளுக்குக் காணும்? ஆரம்ப நாட்களின் ஊதாரித்தனம் பின் காலத்தின் தரித்திரமாகப் பெருக்கெடுத்தது. ஆட்டம் தனக்குத் தோல்விமுகம் என்று அறிந்த ஒரு நல்ல நாளில் இதற்கு மேல் ஆடவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். காலம் கடந்து விட்டிருந்தது. பெரிய தியாகராஜன் தன் வீட்டோடு முடங்கினார். இருளும் குறைவான ஒளியுமே அவர் கண் முன் காட்சிகளாக மாறின. பல தேசங்களிலும் அவருக்கிருந்த சினேகிதக்காரர்கள் இந்தியா சென்ற பிற்பாடும் பெரிய தியாகராஜன் மேலும் மேலும் சம்பாதிக்கிறார் என்றே நம்பினார்கள். அந்த நம்பகத்தின் நூலாம்படைச் சித்திரத்தைக் கலைத்து விடாமல் இருக்கத் தான் அவரும் ரொம்பவே மெனக்கெட்டார். பழைய மனிதர்கள் ஒருவரை என்றால் ஒரே ஒருவரைக் கூட அவர் தொடர்பு கொள்ளவே இல்லை. தன் கண்களை மூடிக் கொண்டாலே போதும் என்றானார். உள்ளூரில் அப்படி ஒரு தனவந்தர் இருந்ததே பெரும்பாலார்க்கு மறந்து போனது.
பெரிய தியாகராஜனுக்கு ஜோசியர் வாக்கே தெய்வ வாக்கு என்றிருந்தபோது பிறந்தவன் சின்னு. ஒரே மகன். “உன் பேரையே அவனுக்கும் வச்சிரு. வேற பேர் வச்சி அளச்சிக்கலாம்” என்றார் ஜோசியகுரு. ‘சின்ன தியாகராஜன்’ என்று பெயரிட்டு ‘சின்னு’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். முதுமையின் ஒவ்வாமை. கைகட்டி வாய்பொத்தி தூர நின்று பேசிய அதே மகன் தந்தையின் இயலாமையின் மீது தன் கரங்களைப் பாய்ச்சினான். முகம் நோக்கிப் பேசுவதே இல்லை. அவராக எதேனும் காரணங்களைச் சொல்லி அவனை அழைத்துப் பேச முற்பட்டாலும் ஓரிரு சொற்களோடு பதிலை வெட்டியெறிந்து விட்டுக் கிளம்பி விடுவான்.பெரிய பாத்திரம் தான். உள்ளே தானியம் எதுவும் இல்லாவிட்டால் குருவி கூடச் சீந்தாது. அவனுக்கு அப்படி ஒரு அப்பன் வேண்டாம்.
பெரிய தியாகராஜனைக் கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்வதற்காக வந்த பணிப்பெண் டெய்சி. காதல் என்றெல்லாம் சொல்ல முடியாத வாஞ்சையை இருவரும் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது அவரவர் சூழ்நிலைகள் வெட்டிக் கொண்ட காலக் கணக்கு. டெய்சி முழுவதுமாக தியாகராஜனின் நன்மதிப்புக்குப் பாத்திரமானாள். அவரும் தாராளமாய் அவளுக்குத் தன் மனையாள் கொணர்ந்த சீதனப் பண்ட பாத்திரங்கள் தான் சேர்த்தவை எனப் பலவற்றை அள்ளித் தந்தார். தன் நோய்மையை மீறித் தன் மீது பரிவு காட்டுபவளுக்குத் தன்னால் ஆன கைமாறாக அவற்றைத் தந்தார். கிருஷ்ணாபுரத்தில் மருந்துக் கடை நடத்தி வந்த நவநீதம் தான் டெய்சியை அந்த வீட்டு வேலைக்கு சிபாரிசு செய்தவன். காதலில் கரை கண்ட ஒருதினம் டெய்சியின் கைபற்றிக் கொண்டு ஊரை விட்டுக் கிளம்பிச் சென்றான் நவநீதம்.
டெய்சி வேலைக்கு வருவதில்லை என்று மட்டும் செய்தியை அறிந்த மகன் சின்னுவுக்கு மெல்லத் தான் அப்பனின் களியாட்டக் காதல் தோல்வி சேதி மொத்தமும் தெரியவந்தது. அவன் முற்றிலும் எரிச்சலானது டெய்சிக்கு வழங்கப் பட்ட பொற்கிழி இத்யாதிகளின் கணக்குகளை அறிந்த போது தான். அப்பன் அவ்வப்போது யாருமில்லாத வேளைகளில் கண்கள் கலங்குவதாகவும் துண்டைப் பொத்திக் கொண்டு சப்தமின்றி அழுவதாகவும் சொல்லப் பட்ட போது ஆத்திரத்தில் பன் மடங்கு பெருகியவன் ஆவேசமாய்த் தேடி வந்து ஈஸி சேரில் லேசான உறக்கத்தில் இருந்த அப்பனின் முன் நின்றான்.
நெஞ்சோடு சேர்த்து மிதித்தான். ஈஸி சேரோடு சேர்த்துத் தரையில் விழுந்தவருக்கு அதன் பின் நெடுநேரம் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. தந்தை மீது பல நாட்களாகக் கொண்ட வெறுப்பை மொத்தமாக்கி அவர் மீது காட்டினான் சின்னு. கடுகடுத்த சொற்களும் வெறுப்பை உமிழும் முகமும் தான் அவனது தோற்றம். தந்தை அழித்த செல்வம் எல்லாவற்றையும் யாராவது கொண்டு வந்து “இந்தாப்பா வச்சிக்க” என்று தந்துவிட மாட்டார்களா என்று இருண்ட வாசலைப் பார்த்தபடி சின்னுவின் வாழ்வு.
விளக்கேற்றுவதற்கு வளைக்கரங்கள் இல்லாத வீடு இஷ்டத்துக்கு ஒளிர்ந்து ஏகத்துக்கு இருளும். ஒரு திசை மட்டும் திறந்தே கிடக்கிற வீட்டில் எலியென்ன, புலியே வந்து திரும்பினாலும் பாம்பு குடியிருந்தாலும் யாருக்கும் தெரியவராது. தன் தகப்பன் தொலைத்தது அத்தனையும் தனக்கு வந்திருக்க வேண்டியது என்று தெரிந்த மாத்திரத்தில் சின்ன தியாகராஜன் அவரை வெறுக்க ஆரம்பித்தான். கைகளைக் கட்டிக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு சொல்லையும் சவுக்காக்கினான். பெரிய தியாகராஜன் ஒருவகையில் அவனது வெறுப்பை ஏற்றுக் கொள்ளத் தான் முயற்சித்தார். பத்துக்கு ஒன்று கெடவும் வாய்ப்பிருக்கிறதல்லவா, எதோ ஒரு தினம் அவருக்குத் தனிமையும் தோல்வியும் இந்த ஜென்மத்தில் இதற்கு மேல் எதுவும் நிகழ்ந்து கதையை மாற்றவா போகிறது என்று அழுத்தியது. திடீரென்று தானே ஒரு புதிரை உருவாக்குகிற சுவாரசியத்தோடு மெல்ல நடந்து சென்றார். வீட்டுக்குப் பின்னாலிருந்த தோட்டத்தில், தென்னை மரத்துக்கு வைப்பதற்கான மாத்திரைகளை எடுத்துத் தன் வயிற்றில் புதைத்துக் கொண்டார். நிலைத்த கண்களில் விஷமேறி அவ்வுலகமேகினார் பெரிய தியாகராஜன்.
பெரியவர் இயற்கையாக மரித்ததாகவே ஊர் எண்ணியது. தான் ஒன்றும் தன் கையால் தகப்பனைக் கொல்லவில்லை என்ற நிம்மதி சின்னுவுக்கு இருந்தது. திடீரென்று தன் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கக் கூடிய அந்த நிகழ்வையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சின்னு இதனால் தனக்கு என்னவெல்லாம் லாபம் என்று மட்டும் யோசித்தான். சில நட்டங்களும் இருக்கக் கூடும். அதெல்லாம் பரவாயில்லை என்று உடனே மனம் மாறும் அளவுக்குத் தான் தேய்ந்த சித்திரத்தின் மீதக் கோடுகளாக அப்பனைக் குறித்த நினைவுகள் அவனுக்குள் மீந்திருந்தன. “எப்பவும் திட்டுறாப்ல தானே திட்டினேன். இன்னைக்கின்னு என்ன புதுசா ரோசம்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். புதிய நடிகனுக்குக் கிடைத்த வசனம் செறிந்த பாத்திரம் போல் அந்தத் தினத்தைக் கொண்டாட்டமாய்க் கடக்க முயற்சித்தான் சின்னு.
ஊர்க்கூட்டம் நாட்டுக் கூட்டம் என்று மறுபடி அந்தத் தெருவில் அன்றைக்குத் தான் அத்தனை வாகனப் புழக்கம். சின்னு சட்டென்று தகப்பன் இறப்பை ஒட்டி அவர் மீது அதுவரை இல்லாத பச்சாதாபம் ஒன்றை உருவாக்கிக் கொண்டான். “என்ன இருந்தாலும் நீ என் அப்பனல்லவா” என்று கலங்கிய முகத்தோடு காசை அள்ளி எறிந்து தகப்பனுக்கான இறுதி ஊர்வலத்தை நடத்தினான். வெளியே துக்கம் பொங்குவது போல் தோன்றினாலும் உண்மை அது மட்டுமல்ல. எதிர்பாராமல் மீண்டும் கோட்டை வீட்டின் மீது படிந்த வெளிச்சத்தைத் தனக்கு சாதகமாக எப்படிப் பயனாக்கிக் கொள்வது என்பது தான் சின்னுவின் யோசனை. தந்தையின் இறப்பில் மகனுக்கு எழவேண்டிய துக்கம் கிஞ்சித்தும் இல்லாமல் காரியமாற்றிக் கவனம் ஈர்த்தான்.
பல இடங்களிலிருந்தும் பெரிய தியாகராஜனின் சினேகிதர்கள் சிலபலர் வந்து நிசமாகவே கலங்கினார்கள். அவர்களுள் ஒருவர் சந்தன ராவுத்தர். அவருடைய இயற்பெயர் காஸிம். சந்தன ராவுத்தர் என்பது விளிப்பெயர். சின்னுவை உள்ளறைக்கு அழைத்துச் சென்று நாலைந்து கட்டுப் பணத்தைக் கொடுத்து “உங்கப்பனை எங்கூடவே இருந்திடச் சொன்னேன் கேக்கலை. இப்பிடிப் பாக்க ஒப்பலை. காலம் போனா வராதுப்பா…உனக்குன்னு ஒரு பொம்பளையைக் கட்டு. இல்லாட்டி ஒத்தை சீட்டா உதிந்து நாசமாய்ரும் வாழ்க்க…” என்றவர் தன் விஸிட்டிங் கார்டைத் தந்து ” எப்ப வேணாலும் வாய்யா.,..நாங்கள்லாம் இருக்கம்” என்று படகை விடப் பெரிய காரில் ஏறிச் சென்றார்.
ஏகாம்பர நாதன் என்று திருவலத்தில் பெரிய ரைஸ்மில்காரர் அவர் கூடவே இருந்து காரியங்களைக் கவனித்துக் கொண்டார். இரண்டு நாட்கள் கழித்து ஊரில் யாரோ “தற்கொலை” என்று புகைத்து விட்டதை பற்றிக் கொண்டு விசாரிக்க வந்த எஸ்.ஐ சமயராஜ் ஒருவகையில் சின்னுவின் தாய்வழி உறவு. ” அதெல்லாம் நான் பாத்துக்கிடுறேன். இந்த விசாரணையெல்லாம் வெறும் ஃபார்மாலிட்டிக்குத் தான்” என்று கூடத்தில் உட்கார்ந்து முக்கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தவரிடம் “எங்கய்யா எனக்குன்னு ஒண்ணுத்தையும் வெச்சிட்டுப் போகல சார்” என்று குமுறினான். “லச்சக்கணக்குல போகுமே அதான் இந்த பங்களா இருக்குல்ல? உங்க ஒருத்தருக்கு வசிக்கிறதுக்கு இம்மாம்பெரிய வீடு எதுக்கு? இதைக் கெட்டியாப் பிடிச்சிகிட்டு இனியாச்சும் எதுனா பிசினஸ் செய்து எழுந்திருக்கப் பாருங்க பிரதர்” நிசமாகவே மனசார சொன்னார் சமயராஜ். அதுகாறும் வீட்டில் ஒன்றுமில்லை என்றே சிந்தித்துக் கொண்டிருந்தவன், ‘அட இந்த வீடு இருக்கிறதே’ என்று எண்ண ஆரம்பித்தான்.
புதிய காதலியின் நினைப்பாகவே அல்லாடுகிற பதின்ம வயசுக்காதலனைப் போலவே வீடு வீடு என்று அதையே எண்ணிய வண்ணம் பத்து நாள் காரியங்களைப் பொறுப்பாகச் செய்து முடித்தவன் தன் கனவுத் தொழில் பற்றி டிஸ்கஸ் செய்து தெளிவு பெறுவதர்காக பல்ஸரை எடுத்துக் கொண்டு ஊருக்குள் வந்தான்.
முரளி கடைக்கு முன்பாக பெரிய ஈச்சர் வண்டி நின்று பிஸ்கட் லோட் ஏற்றிக் கொண்டிருந்தது. அந்தக் கடைக்கு அடுத்தாற் போல் பிஸ்கட் கம்பெனியின் குடோன் இருப்பதால் எப்போதுமே எதாவதொரு வண்டி வரும் போகும். முரளிக்கு அப்படி வண்டி தன் கடையை மறைப்பது கூட வசதியாய்த் தான் இருந்தது. சின்னுவைப் பார்த்ததும் முகம் விரிய “ஏய் என்னய்யா காலங்காத்தால?” என்றான் முரளி. சின்னுவுக்குப் பரபரவென்றிருந்தது. ‘எழுமலை இன்னம் வர்லியா’ இன்னொரு கேள்வியைத் தான் பதிலாக்கினான். தூரத்தில் எழுமலையின் ஏழாம் நம்பர் சுமோ வருவது தெரிந்து மலர்ந்தான் சின்னு.
எழுமலை முழுக் குடிகாரன் ஆனதன் பின்னே சின்னதாக ஒரு கதை உண்டு.
எழுமலையின் ஆர்.ஸி புக் பெரும் கடனில் இருக்கிறது. வண்டியின் மாற்றுச் சாவியை எதிர்வீட்டு குமரகுருவிடம் கொடுத்துவிட்டு நூறும் இருநூறும் கடனாய்ப் பெற்றுக் கொள்வான். பதிலுக்கு, இரண்டு மூன்று மாதங்களில் ஏழு வட்டியோடு அசலைத் திருப்பிவிட்டுச் சாவியை மீட்டுக் கொள்வான். சுமோ காரின் ஸ்டெப்னியைக் கூட நூறு ரூபாய்க்கு அடகு வைத்திருக்கிறான். ஒவ்வொரு நாளின் இரவிலும் எதாவது திரவத்தை குடிக்காவிட்டால் கை காலெல்லாம் நடுங்கும். அவனொரு குடிநோயாளி. திரவ அடிமை. எதிரே வருபவனைக் கண்டந்துண்டமாக வெட்டியாவது ஒரு மடக்கு சாராயம் குடித்தாக வேண்டும். நினைப்பதன் வன்முறை செயல்பாட்டில் இருப்பதில்லை. அவனொரு கோழை. மதுவென்பது காணா விலங்கு. அதன் பிடியிலிருக்கையில் யாராவது அதட்டினால் கூட அழுதே விடுவான். அவனுடைய உலகமே சின்னு தான். பேர் சொல்ல மாட்டான். வாய்யா போய்யா என்பானே தவிர வேறு சொல் உதிர்க்கத் தெரியாதவன்.
அவன் வாழ்வின் சகல ராசி நட்சத்திரங்களின் மொத்த அனுகூலமும் நிரம்பிச் சிறந்த நாள் ஒன்றில் பல்லாண்டு என்ற பட்டப்பெயருக்குரிய நாராயணனை அழைத்தான். “நீ என்ன பண்றே மூவரசபுரம் ஜெகன் ஜொல்லரிக்குப் போயி இந்த மோதரத்தை வித்துட்டு காசோட வர்ற” என்று அவனுக்கான அன்றை தினத்தின் முதல் சி.ஐடி வேலையை ஒப்படைத்து அனுப்பினான். அது அவனது சம்சாரம் ராக்கம்மாவின் கால் மிஞ்சி எனும் உண்மை எழுமலைக்கு மட்டும் தான் தெரியும். அதனால் என்ன..? இன்றைக்குக் குடிக்கு ஆகுமல்லவா..?”
அது ஒரு வியாழக்கிழமை. எதற்கு உகந்திருந்தது என்றால், தன் ஆருயிர் கணவனுக்குப் பிடித்த வஞ்சிர மீனை வாங்குவதற்காக, பெரிய வயர் கூடையை எடுத்துக் கொண்டு, மார்க்கெட்டை நோக்கி ‘தஸ்கு புஸ்கு’ என்று வந்து கொண்டிருந்த ராக்கம்மா, மற்றும் குமரகுருவின் சம்சாரம் அன்னம்மா ஆகியோர் முன் தோன்றிய பல்லாண்டு, “எங்கப்பா போற?” என்று கேட்கப்பட, “அண்ணந்தான் தன்னோட மோதிரத்த கெடச்ச காசுக்கு வித்துட்டு வரச் சொன்னார்” எனச் சொல்ல, ‘விக்கிறதாவது, மொதல்ல அவருக்கு மோதிரம் ஏது?’ என “எங்க கொஞ்சம் காட்டு?” எனக் கேட்க, அந்த அசட்டுத் தூதன் கணையாழியை ஒப்படைத்துவிட்டுத் தன் காதைக் காப்பாற்றிக் கொண்டான். மன்னர் பிரான் தனியாக வனவாசமேக வேண்டியிருந்தது. ‘இனி அந்த வீட்டுக்குள் வரமாட்டேன்’ என்று வீதி முக்கில் நின்றவாறே, தன் சொந்த பந்தங்கள் அனைத்தையும் வரவழைத்து, கண்ணெல்லாம் பொங்கி, கேவிக்கேவி அழுது, “கட்டுன சம்சாரத்தோட கால் மிஞ்சியக் கூடக் காப்பாத்த வக்கில்லாத தரங்கெட்ட ஜென்மம், தூ” என்று துப்பித் தன் தாலியைக் கழற்றி எழுமலையின் முகத்தில் விசிறிவிட்டுப் போனாள் ராக்கம்மா.
அன்று முதல், அன்னபோஸ்டாக கிருஷ்ணாபுரத்தின் நம்பர் ஒன் குடிகாரனானான் எழுமலை. தொடர்ந்து ஹாரன் சத்தத்தோடு அலைந்து அலைந்து வரும் ஏழாம் நம்பர் சுமோ கார் மாத்திரம் அவனது சொத்து. நிறைபோதையில் கண்ணாடி பார்க்க நேர்ந்தால், ஏழேழும் பதினான்கு மலைகளும் ஒருவரை ஒருவர் “போடா மொட்டப் பயலே வெறும் பயலே” என்றெல்லாம் ஏசிக் கொள்ளுவார்கள். “வாய மூட்றா” என்றும் சொல்லிக் கொள்வார்கள்.
“ராக்கு எனக்கு ஒன்னய எவ்ளோ புடிக்கும் தெரியுமா?” என்று எப்போதாவது வெறும் காற்றின் கன்னத்தைப் பற்றிக் கொஞ்ச முற்படுவான். பதில் வராத சற்றைக்கெல்லாம் சப்தத்தோடு மூக்கொழுக அழுதுகொண்டே உறக்கத்தில் ஆழ்வான். குடிக்காத நேரங்களில் தன்னை இந்த உலகமே சேர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்று மூஞ்சை உர்ரென்று வைத்தபடி அலைபவனுக்கு சின்னு மட்டும்தான் நல்லவன். எழுமலையின் வாழ்க்கை நோக்கமற்றது. திடீரென்று கடவுள் அவன் முன்னால் தோன்றி “என்னப்பா வேணும்?” எனக் கேட்டால் கூட ” இருங்களேன் சின்னு வந்துரட்டும் கேட்டு சொல்றேன்” என்றுதான் சொல்வான்.
ஈச்சரைத் தாண்டிச் சென்று வலது புறம் காலிமனையில் ஏற்றித் தன் சுமோ காரை பார்க் செய்து விட்டு முரளி கடையின் படிகளில் ஏறிக்கொண்டே சிகரட்டைப் பற்ற வைத்த எழுமலை சின்னுவின் முகத்தை ஏறிட்டு ” என்ன முதலாளி பலத்த யோசனை?” என்றான். ‘உள்ளாற வாய்யா, சொல்றேன்’ என்று மட்டும் பதில் சொன்னான் சின்னு.
எப்போதோ துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் மறுபடியும் வந்து சேர உடனே எல்லா விளக்குகளும் ஒருங்கே ஒளிரத் தொடங்கின. அட நல்ல சகுனம் என்று வாய்விட்டுச் சொன்னான் முரளி.
(வளரும்)