5 பொட்லம்
யாரோ சைக்கிளில் பெடலடித்துக் கொண்டே சென்றார்கள். ” வீட்டை அடமானம் வெக்கணுமா? விக்கணுமா?” என்ற எழுமலையை ஒரு ஞானப் பார்வை பார்த்தான் சின்னு. “வீட்ட வித்துட்டு உன் சுமோ கார்ல படுத்துக்கச் சொல்றியா? ” சாந்தமான குரலில் தான் சொன்னான் என்றாலும் வேண்டிய மட்டும் காயப்பட்டவனாக நகர்ந்து சென்றான் எழுமலை. அந்த நேரம் பார்த்து எங்கோ தூரத்தில் ரேடியோபெட்டி அலறலாக ஆரம்பித்தது ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு’ என்று பொருந்தாமல் ஒலித்தது.
வேக வேகமாய் எட்டு வைத்து வந்து சேர்ந்தான் பவுன்ராஜ். “தவக்ளை வந்திடுச்சி” கெக்கெக்கே எனச்சிரித்தான் முரளி. சின்னு அவனை விசிறிக் காம்பால் ஓங்கி அடித்தான். பவுன்ராஜ் சின்னுவின் பால்ய காலத் தோழன். உயரம் மூன்றரை அடி. தன் உருவத்தைக் கொண்டு இந்த உலகம் தன்னைப் பார்ப்பதை முற்றிலும் விரும்பாதவன் பவுன்ராஜ். இந்தப் பரந்த உலகத்தில் அவனுக்குப் பிடிக்காதது என இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் உண்டு. அவன் மேல் யாரும் பரிதாபப் படக் கூடாது. அவனை கேலி செய்யவும் கூடாது. இந்த இரண்டையும் சமமாக வெறுத்தான். சீறத் தெரியாதெனினும் பூநாகத்தின் விஷம் எந்த விதத்திலும் குறைவானதில்லையே அவன் தன் விஷத்தைத் துப்புவதற்காகக் காத்திருப்பதில் அயராதவன். கிருஷ்ணாபுர வாசிகள் பலருக்கும் தருவதற்கான விஷம் அவனிடம் உண்டு. அவன் உலகத்திலும் ஒரே ஒரு நல்லவன் தான் உண்டு. சின்னு. அவன் பவுன்ராஜை தனக்குச் சமமாக நடத்துவது அதற்குக் காரணம். அந்த ஒரு விஷயத்துக்காக சின்னுவுக்குப் பதிலாகத் தூக்கில் ஏறச் சொன்னாலும் செய்வது என்ற முடிவில் இருப்பவன் பவுன். மற்றவகையில் பவுன்ராஜ் யாரையும் எகத்தாளமாகப் பேசுவான், எள்ளுவான் வாயைத் திறந்தால் நக்கல் கிண்டல் நைய்யாண்டி தெறிக்கும். உலகத்தை முந்திக் கொண்டு தான் முதலாவதாக எள்ளிவிடுவதே அவன் கண்டறிந்த வாழும் வழி.
வாய்யா பவுனு என்ன ரொம்ப வேர்த்து வடியுது?” கேட்டுக் கொண்டே சிகரட்டை எடுத்து பெட்டியில் இரண்டு தட்டு தட்டி உதடுகளுக்கு நடுவே இருத்தினான். கையைக் கும்மாச்சியாக்கி தீக்குச்சியைப் பற்ற வைத்து அதைக் கொண்டு சிகரட்டைப் பற்ற வைத்தவன் பவுனைப் பார்த்து சினேகபாவமாய் சிரித்தான்.
அட அதை ஏன் கேக்குறே சின்னு..நேத்து ராவெல்லாம் உறங்கவே இல்லை. மார்ச்சுவரி வாசல்லியே கெடையாக் கெடந்தம்குறேன் என்று சலித்துக் கொண்டான்.
அங்க என்னய்யா என்றவனிடம் நம்ம சினேகிதக் காரன் சுகுமார்னுட்டு..நீ கூட பார்த்துருப்பயே கொஞ்சம் பூசுனாப்ல ரஜினி ஸ்டைல்ல நடு உச்சி எடுத்துருப்பான் மண்மலை மேட்டுக்காரன் என்றவன் தானொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அவசர இழுப்புகளுக்கப்பால் தொடர்ந்தான்.
அவனோட மச்சான் ஜேம்ஸூன்னு கேள்விப்பட்டுருப்பியே எம்.எஸ் மில்லு டைரக்டரைக் கொன்னாங்கியல்ல அதுல அவனும் ஒரு அக்யூஸ்டு. உள்ளாற இருந்தவன் மனசு உடைஞ்சி தற்கொலை செய்துக்கிட்டான்பா…சுகுமாருக்கு அவ்வளவா பழக்கவளக்கமில்லை நமக்குத் தான் சரகம் சரியா இருக்கும்னு கூப்டான். சரின்னு ஒரு உபகாரமாச் செய்யப் போனது நேத்து ஒரு நாள் முழுஸா ஓடிருச்சி…” என்றான்
அடிச்சி தொங்க விட்டுருப்பாங்கியப்பா ஜெயில்ல தற்கொலைன்னு சொன்னாலே அது முடிச்சி விட்டதாத் தான் இருக்கும் என்றான் முரளி
நீ எப்டிரா நேர்ல பாத்தாப்ல சொல்றே என்ற பவுன்ராஜூக்கு பதிலேதும் சொல்லாமல் அமைதியானான் முரளி. சின்னு இருக்கும் போது அவன் அதிகம் பேச மாட்டான். அவனில்லாத போது தான் முரளியின் சப்தம் ஓங்கும்.
*****
எழுமலையைப் போலவே பவுன்ராஜூக்கும் சின்னு தான் தலைக்கட்டு.
சொந்த ஊரில் தனக்கு ஒத்து வரவில்லை என்று கிருஷ்ணாபுரத்துக்கு இடம்பெயர்ந்த பவுன் ராஜுக்கு ஒரே சொந்தபந்தமாக சின்னு உருவானான். எப்போதோ சீட்டுக்கச்சேரியில் பார்த்துப் பழக்கமானவர்கள்.
“பொளப்புக்கு என்ன செய்யப் போற?” எனக் கேட்டபோது, “மூவாயிரம் ரூபாய் வாங்கிக் குடு நண்பனே யார்கிட்டயாவது” என்று கேட்டான். சின்னு யாருக்கும் உதவுகிற நிலைமையில் இல்லை, என்றாலும் அடகுக்கடை
வெயிலுமுத்துவிடம் மூவாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுக்க, ஆயிரத்தைத் தன் வலது பாக்கெட்டில், “இது தொழிலுக்கு” என்று வைத்துக் கொண்டான் பவுன். இன்னொரு ஆயிரத்தை அட்வான்ஸாகத் தந்து, கிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு நேர் எதிரே அகல்யா மேன்ஷனில் அறை ஒன்றை எடுத்துக் கொண்டான்.
போர்வை, தலையாணி இத்யாதிகள், சோப்பு தேங்காண்ணை, சாமி படம், வில்ஸ் சிகரெட், தண்ணீர் செம்பு ஒன்று கொசுமேட் எல்லாம் வாங்கிவிட்டுத் தன் தனிக்குடித்தனத்தை ஆரம்பித்தான். எட்டு சதுக்கங்கள் தாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இருந்த ‘மாணிக்கம் டீ ஸ்டாலில்’ அமர்ந்து கொண்டான். அடுத்த இரண்டு மணி நேரம் தன் இழுப்புக்கு யார் சரியாக வருவார்கள் என்று பலவித அலசல்களுக்கு அப்பால் குணாளன் ஏட்டய்யாவை முடிவு செய்தான். ட்யூட்டி முடிந்து வீட்டுக்குச் செல்லும் முன் மாணிக்கம் கடையில் ஒரு டீ சிகரட் சகிதம் பேப்பர் படித்து விட்டுத் தான் வீட்டுக்குக் கிளம்பிப் போவார். அன்றைக்கு டீயை அவர் வசம் தந்த பவுன்ராஜை ‘யார் நீ’ என்றாற் போல் பார்த்தார். ‘உங்கள்ட்ட பேசணும்னு தான் காத்திட்டிருந்தேன் அய்யா’ என்று பவ்யம் காட்டினான். தன் உடம்புவாகு குடும்பச்சுமை எனப் பலவற்றையும் அடுக்கிக் கொண்டே வந்த பவுன்ராஜ் கடைசியாக “நாளையிலேருந்து ஏரியாவுக்குள்ளே பொட்லம் விக்கலாம்னு பாக்குறேன்” என்றான். நக்கல் செய்கிறானா என்று யோசித்த ஏட்டய்யா ‘மேற்கொண்டு பேசு’ என்றாற் போல் மௌனம் காத்தார். எதையாவது கேட்க வேண்டுமே என்று டீக்கடை மாணிக்கம் “எலே என்ன வெளாட்றியா” என்றான். அவனுக்குத் தன் இருப்புக் குறித்து பயமாயிற்று. இப்படியா நேராகக் கேட்பார்கள் என்று உள்ளே நடுங்கிற்று.
“கசகசன்னு பேச எதும் இல்லை. ஒளிச்சு மறைச்சு லாவகமா செய்துக்கிடுறது என் பிரச்சினை. சரகத்துக்கு எவ்ளோ பணம் கட்டணும்னு பேசிக்கிட்டா சொல் பிசகாமக் கட்டிருவேன். மாசக் காசும் தப்பாது, கேசும் நானே அப்பப்ப தர்றேன். எனக்காக ஆஜராக சம்பளத்துக்கு ஆள் பார்த்துக்கிடுவேன் எந்த வகையிலும் என்னால தொந்தரவு வராது. கொஞ்சம் உதவி பண்ணுங்க எசமான் புண்ணியமாப் போகும்” என்று அளவான குரலில் செறிவான சொற்களை அடுக்கினான்.
குணாளன் ஏட்டய்யா மறுக்க மாட்டார் என்பது அவரது தொடர்ந்த மௌனத்திலிருந்தே புரிந்து விட்டது. இருந்தாலும் விஷயத்தை வெளிச்சொல்வதில் குரலின் அளவு தான் முக்கியம் என்பதை அனுபவத்தில் கற்றவன் பவுன்ராஜ். ஓரத்தில் வைத்திருந்த மஞ்சள் பையை எடுத்து அவர் கையில் திணித்தான் ‘என்ன என்ன’ என்று பதறியவரிடம் “என்ன குண்டா வெடிக்க போவுது.? காஸாலட்டு மாம்பளம் வீட்ல மதினி பிள்ளைக சாப்டுவாங்கல்ல… ரெண்டு நாள் சென்று வர்றேன் ஐயாக்கமார்ட்ட பேசிட்டு சொல்லுங்க” என்று திரும்பிப் பார்க்காமல் விலகினான்.
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த குணாளன் ஏட்டய்யா “எத்தினியோ பேர் என்னென்னமோ பாவம் செய்ற உலகத்துல இன்னொருத்தன் கூடினா என்ன..?” என்று நினைத்தார். அடுத்த தினத்திலிருந்து அரசாங்க தெய்வத்தின் பரிபூர்ண அனுக்ரகம் அவனுக்குக் கிட்டியது. எந்த தூரத்தில் தான் நிற்க வேண்டும் எந்த தூரத்தில் கச்சேரியை அணுக வேண்டும் என்பது அத்துப்படி ஆனது பவுனுக்கு. தொட்டதெல்லாம் தேவமூலிகை மணத்தது. லூசாக சட்டையை அணிந்து இன் செய்திருப்பான். உள்ளே பனியன். அதனுள்ளே உடம்பைத் தழுவியவாறு பிரவுன் பேப்பரில் மடித்த எட்டே எட்டுப் பொட்டலங்களைப் பால் பாக்கெட்டில் சுற்றி ரப்பர் பேண்டு போட்டு வைத்திருப்பான். இப்படி எட்டு எட்டாகப் பல இடங்களில் இருக்கும் பொட்டலங்கள் விற்க விற்க அடுத்த செட்டு அவன் உடம்பில் ஏறும். பந்தோபஸ்தை மீறி வேறு யாரிடமேனும் மாட்டிக் கொண்டாலும், பொருள் மொத்தமாய் அழியக்கூடாது அவனுக்கு.
எண்ணி ஏழே நாட்களில், “இந்தாய்யா” என்று வாங்கி வந்த ஸ்வீட்டுப் பொட்டலத்தை சின்னுவின் முன் நீட்டினான். “வெயிலான் கடன அடச்சிட்டேன்” என்றவனை அயர்ந்து பார்த்தான் சின்னு. வாழ்ந்து கெட்டழிந்த பெரிய தியாகராஜனின் ஒரே மகன் சின்னுவுக்கு இந்த உலகத்தின் இரண்டாம் நம்பர் கதவு, ஜன்னல்களை ஒரு சேரத் திறந்து வைத்து ஞானகுரு ஆனான் “பொட்லம்” என்று சரகத்தில் அன்போடு அழைக்கப்படுகிற பவுன் ராஜ்.
தூரத்துச் சொந்தம் என்றெல்லாம் சொன்னார்கள். எதுவும் உறுதிபடத் தெரியவில்லை பவுன்ராஜூக்கு. கோமஸ்புரத்தில் ஒரு பெண் இருக்கிறது. உன்னைக் கட்டிக் கொள்ள சம்மதமாம் என்று தரகர் ஊன்றி சொன்ன பிற்பாடும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கேட்டுக் கொண்டான் பவுனு…இந்தாருண்ணே…என் உடம்பு வாகு பத்தி நல்லா தெளிவா சொல்லிட்டியா..? அப்பறம் நேர்ல பாக்க வரச்சொல்லி எதுனா தெகட்டுச்சின்னா வெறியாய்டுவேன்…யாரைக் கிளிப்பேன் எங்க அறுப்பேன்னெல்லாம் தெரியாது. என்னைய நல்லவனா வாழ விடுங்க என்றான். அட வாப்பா பொண்ணு உன்னைய ஏற்கனவே பார்த்துருக்கிதாம். அதுக்கு ஓகே தானாம் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார்
பவுன் ராஜூக்கு உயரமாய்ப் பறப்பதை விட உறுதியாய் நடப்பது தான் லட்சியம். கலியாணத்துக்கு முன்பாக வடிவரசியிடம் தெளிவாகப் பேசினான். “இப்ப ஒரு வேகத்துல என்னையக் கட்டிக்கிடுற நாளைப்பின்ன வெறுத்துட்டா என்ன பண்றது நல்லா யோசிச்சிக்க நீ தான் வாழப்போறவ என்றான். அவன் அப்படிச் சொன்னதும் தன் கைகளுக்குள் பவுன்ராஜின் வலக்கரத்தை எடுத்து வைத்துக் கொண்டாள் வடிவு. ” இந்தாருய்யா குடும்ப வறுமைக்காக மட்டும் உன்னையக் கட்டிக்கிட சம்மதிக்கலை நானு. இந்த ஊருக்குள்ள ஒண்ணுமே இல்லாம நொழஞ்ச ஆளு இன்னைக்கு நாலு காசு சேர்த்து உன் கால்ல நிக்கிற. பேர் சொன்னா யாருன்னு தெரியுறாப்ல இருக்கிறே…உன்னையப் பிடிச்சித் தான்யா கட்டிக்கிட ஆசைப்படுறேன்.” தீர்க்கமான குரலில் சொன்னவவள் அப்பாலும் அந்தக் கைகளை விடவே இல்லை. பவுன்ராஜின் ஆட்சியில் அரசிக்குத் தான் அதிகாரம் எல்லாமே. வடிவரசியைத் தன் தலையில் கரகமாக்கித் தூக்கி வைத்து ஆடினான் பவுன்ராஜ்.
தினமும் ஒரு முறையாவது தன் எட்டு வருடக் கதையை ஆரம்பத்திலிருந்து அன்று வந்திருக்கிற புள்ளி வரைக்கும் எண்ணிப் பார்ப்பது பவுனுக்கு ரொம்பவே பிடிக்கும். தன் வாழ்க்கையை ஒரு சினிமாவாகத் தான் அவன் வாழ்ந்து வருகிறான். பவுனுக்கு சினிமா என்றால் கொள்ளை இஷ்டம். மூடிய கதவுகளின் பொதுவாய்ப் பொங்கும் இருளில் எல்லோருமே ராசா. யாரெல்லாம் உட்கார்ந்து படம் பார்க்கிறார்கள் என்பது முக்கியமே அல்ல. தெரிவது என்ன என்பது தான் முக்கியம். அங்கே படம் தான் மெயின் என்பதால் தன்னைத் திரைக்கு முந்தைய இருள்வெளியில் இருத்திக் கொண்டு திரையில் தோன்றும் விதவிதமான பாத்திரங்களாகக் கற்பனை செய்து கொள்வது பவுனுக்கு வழக்கம்.
***
முரளி அவனைத் தொட்டு எழுப்பப் போனான். பார்வையாலேயே தடுத்தான் சின்னு. சன்னமான குரலில் ‘தூங்கிட்டிருக்கான்யா’ என்று அதட்டினவன் ‘எலே பவுனு’ என்று இன்னும் சன்னமாய் அழைத்தான். சட்டென்று கனவைக் கலைத்துக் கொண்டு விழித்தான் பவுனு.
அவனைத் தேடி ஆள் வந்திருப்பதை செறுமிக் காட்டினான் சின்னு. எதிரே பவ்யமான தூரத்தில் கைகளைக் கட்டிக் கொண்டு இரண்டு பசங்கள் நின்றார்கள். சற்றுத் தள்ளி இன்னும் ரெண்டு பேர். பவுனுக்குத் தெரியும் எல்லோரும் ஒரே கூட்டம் தான் எங்கே எப்படி வரவேண்டும் என்ற புரிதல் அந்த விலகல். எத்தனை அடிமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவனுடைய முதலாளியின் பெயர் மூலிகை. அவருக்கு ஊரில் பல அடிமைகள். பவுன்ராஜூடைய நாக்கு உண்மையில் ஒரு சவுக்கு. பொட்டலம் வாங்க வருபவர்களில் தேர்ந்தெடுத்துத் தன் சொற்களால் குதறுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும் யாரோ தந்த காயங்களுக்கு வேறாரோ கவரி வீசுகிறாற் போல் பவுனு கஸ்டமர்களிடம் எரிந்து விழுவான். எதிர்த்து ஒரு சொல் கூட ஒலிக்காது.
அடிமைகள் !
பவுன்ராஜ் மெல்ல இறங்கினான்.தன் உடலுக்குப் பொருத்தமற்ற சின்னஞ்சிறு வேட்டியை அவிழ்த்தான். பொல பொலவென நாலைந்து பொட்டலங்கள் விழுந்தன. அவற்றை அலட்சியமாக எடுத்து மொத்தமாய் அதக்கி மடக்கி மந்தையில் வைத்தவன் மறுபடி இறுக்கமாக வேட்டியைக் கட்டினான். தூரத்தில் நின்று கொண்டிருந்த வயசுப்பசங்களில் நெடுநெடுவென்றிருந்தவன் மாத்திரம் நெருங்கி வந்தான்.
‘எத்தினி’ என்றதும் ‘எத்தினி இருக்குணே’ என்றான் இவன் அலட்சியமாகச் சிரித்தபடி “இந்த உலகமே ஒரு கஞ்சாத் தோட்டம் தான். ஏக்கர் கணக்குல இருக்கு. வாங்கிக்கிறியா?” என்றதும் அவன் பயந்து போய் “நாலு பொட்லம் போதும்ணே” என பவ்யம் காட்டி இவன் தந்ததும் வாங்கிக் கொண்டு விலகினான்.
மறுபடி முரளி கடைக்குத் திரும்பிப் படிகளில் ஏறி முன்புற பெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டான் . சற்று தூரத்தில் அப்படி ஒரு சட்டவிரோத பரிமாற்றம் நடக்கவே இல்லாதது போல் இயல்பாகவே தோற்றமளித்த சக முகங்களை ரசித்தபடி ” ஏன்யா சின்னு வீட்டை அடமானம் வக்கிறது பெரிசில்ல. வட்டி ஒழுங்கா கட்டணும் மறுபடி அடமானச் சொத்தை மூட்டுற வரைக்கும் கக்கத்துல கையைக் கட்டினாப்ல தான் இருந்தாகணும். ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சி செய்யி. என்ன பிசினஸ் செய்யப் போறே?அதை சொல்லு முதல்ல” அவன் பேசப்பேச சின்னு முகம் மலர்ந்தான். பவுன்ராஜைத் தவிர தன் மீது அக்கறையாக இப்படிப் பேச இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்.
“அதான் பவுனு நல்லா டெகரேசன் செய்து மனமகிழ் மன்றம்னு ஆரம்பிக்கலாம்னு பார்க்குறேன். நமக்குத் தேவை வருமானம். உள் குத்தகைக்கு சிலதை விடலாம். வேற சிலதை நாமளே பண்ணலாம். மொத்தமா ஒரு வருசத்துல அடமானத்தை மூட்றலாம்யா… “என்றான். அவன் சொன்னதைக் கணக்குப் போட ஆரம்பித்தான் பவுன்ராஜ்.
“செய்யலாம் செய்யலாம் சின்னு. எனக்குத் தெரிஞ்சவன் மில்டன்னு ஐசிபிசி பேங்க்ல லோன் செக்சன்ல இருக்கான். அவங்கிட்ட ஒரு ஐடியா கேட்டுக்கலாம். அப்பறம் இதைப் பத்தி அலசுவோம். சரிய்யா நா கெளம்பவா” என்றவாறே எழுந்து கொண்டான்.
சரி பவுனு நாளைக்கி காலையில வீட்டுக்கு பழைய பேப்பர் எடுக்கிறவனைக் கூட்டிட்டு வாய்யா…ஒரு கேரம் போர்டு கொஞ்சம் பழைய பாத்திரம்லாம் இருக்கு. நாலைஞ்சி பட்டு சேலைங்களும் இருக்கும்யா…எல்லாம் வாங்குற ஆளா நல்ல வெவரமானவனா கூட்டியா…வந்தவன் இது வேணாம் அது வேணாம்னு சொதப்பிட்டிருக்கக் கூடாது சரியா
நான் கூட்டி வர்றவன் தெளிவானவனாத் தான் இருப்பான்யா… நாளைக்கி காலையில வந்துர்றேன். டீல் என்றவாறே கிளம்பினான் பவுன்ராஜ். அவன் மனசுக்குள் இந்த டீலிங்கில் தனக்கென்னவெல்லாம் கிடைக்கச் செய்யலாம் என்பதைப் பற்றிய யோசனை ஓடத் தொடங்கியது.
(வளரும்)