யாக்கை 6

 

6 மழை துணை பகை


அது மழைக்காலத்தின் நடுப்பகுதி. சென்ற வருடம் பார்த்தது முன்னர் எப்போதும் பார்க்காத பெருமழை. ஊரே வெள்ளக் காடாகிக் கிட்டத் தட்ட இரண்டரை மாதங்களைத் துண்டாடிச் சென்ற மழை. பல தொழில்களும் அடிபட்டன. ஊருக்குள் நிறையப் பேருக்கு கிருமித் தொற்றும் தொடர்ந்து காய்ச்சலும் வேறு படுத்தி எடுத்தது. மழை என நினைக்கும் போதே யய்யாடி என்று அலுத்துக் கொள்ளும்படி சேதாரக் கணக்கு. என்ன நடந்தாலும் மாறாத ஒரு சில விஷயங்களும் உலகத்தில் இருக்கத் தான் செய்கிறது.

சின்னு எந்த செயல்பாட்டிலும் ஒரு கட்டுப்பாடு ஒழுங்கோ வைத்துக் கொண்டதே இல்லை. கேட்பார் இல்லாத கதைகளில் உப்பு உரப்புக்கு இடம் எது?
அந்த மழைக்காலம் முழுவதும் எதற்கும் இருக்கட்டும் என்று கைக்காசு தீரும் வரை குவாட்டர் பாட்டில்களை வாங்கி மர பீரோவில் அடுக்கி வைத்து விட்டான். வேறு யாரும் புழங்கி விடக்கூடாது என்பதற்காக பால் கணக்கு எழுதுவது போல் பக்கவாட்டு சுவரில் தேதி போட்டு மிச்சம் இருக்கும் பாட்டில்களின் எண்ணிக்கையைக் குறித்து வைப்பான். யாரும் சின்னுவை ஏமாற்றி விடக் கூடாது. அந்த இடத்தை அவனைத் தவிர புழங்குவதற்கு ஆயிரம் பேரா வரப்போகிறார்கள்? பவுன்ராஜ் எடுக்க மாட்டான் ஏழுமலை எடுத்தால் தான் உண்டு என்றைக்காவது மாட்டிக்கொள்வோம் என்பது ஏழுமலைக்கு தெரியும் கூட, சேர்ந்து குடிக்கும் போதெல்லாம் மனசாக கவனிப்பது சின்னுவின் பழக்கம் இன்னும் கொஞ்சம் குடி இன்னும் கொஞ்சம் குடி என்று இஷ்டத்துக்கு ஊற்றி விடுவான். அவனுடன் சேர்ந்து எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கும் பாக்கியம் கிடைக்கும் போது திருடி என்ன ஆகப்போகிறது. இருந்தாலும் சின்ன குவாட்டர் கணக்கு எழுதுவதை அந்த மழைக்காலம் முழுவதிலும் செய்தான் மீண்டும் இயல்பு வாழ்க்கை வந்த பிறகும் சில நாள் மொத்தமாக வாங்கி வைத்தபடி இருந்தான். எல்லாமே அலுத்து போகும் அதுவும் தான். நாலு பேரை பார்க்காமல் வெளிக்காற்றை சுவாசிக்காமல் உண்டு உறங்கி உட்காரும் இடத்திலேயே குடிப்பது கொடுமை போதைக்கு என்று ஒரு சில இயல்புகள் உண்டு அது மரியாதை விதைத்து மரியாதை அறுவடை செய்ய வேண்டிய நிலம். இன்னமும் பக்கவாட்டு சுவரில் அந்த குவாட்டர் பாட்டில்களின் இருக்கும் கணக்கும் அப்படியே தான் இருக்கிறது எப்போதாவது போக வருகையில் அதை பார்த்து ஏளனமாக புன்னகைத்துக் கொள்வான் சின்னு.

கண் விழித்த பிறகும் சற்று நேரம் படுக்கையிலேயே கிடந்தான் சின்னு. மணி என்ன என்று தெரியவில்லை. எப்போது விடிந்தது என்பதே தெரியாமல் அதுவாக உறக்கம் கலைந்தால் மட்டும் எழுந்து கொள்வான் சின்னு. எட்டு மணிக்கு எழுந்ததாய் அவனுடைய சரித்திரத்தில் ஒரு தினம் கூட இருந்ததில்லை. தினமும் அவனுடைய காலை சாப்பாட்டை எழுமலை தான் கொண்டு வருவான். அவனுக்கு முடியாத தினங்களில் பவுன்ராஸிடம் அந்தப் பொறுப்பு மாற்றித் தரப்படும். பவுனும் வராவிட்டால் அன்றைய தினம் சின்னு பட்டினி தான் கிடப்பான் என்பதும் அவர்களுக்குத் தெரியும். நாள் முழுக்க எழத் தோன்றாமல் அப்படியே படுத்து கிடப்பான் சின்னு. சோம்பலென்றால் சக்கரையாய்த் தித்திக்கும் உடல்வாகு.

முந்தைய தினத்தின் இரவு எத்தனை நீண்டதாக இருந்ததோ அதற்கேற்ப மறு நாள் பள்ளி எழுச்சி தாமதமாகும். சில சமயம் மதியம் மூன்று மணிக்குக் கூட எழுந்திருக்கிறான். உறக்கம் கலைந்த பிறகு அப்படியே மூடிய கண்களைத் திறக்காமல் யோசித்தபடியே கிடப்பது ஒரு சுகம். இன்றைக்கு என்னவோ தலை வலித்தது. வலி என்றால் சாதாரணமாய்ச் சொல்ல முடியாது. தலையில் பாறாங்கல்லை வைத்து அழுத்தினாற் போல் கனத்தது. முந்தைய இரவு என்ன கருமத்தைக் குடித்தோம் என்று யோசித்தான். அவனைப் பொறுத்தவரை சரக்கு அதன் மிக்ஸிங் சோடா அல்லது கூடவே கொறித்த ஸ்னாக்ஸ் இவை எல்லாம் சுதி விலகாமல் இருப்பது தான் நியாயம். ஒன்று பிசகினாலும் உடம்புக்கு பிரச்சினை என்று எண்ணிக் கொள்வான். தலைவலியா சோடா சரியில்லை வயிற்று வலியா கோழி பீஸ் வயிற்றில் செருகிவிட்டது. நவாப்பழம் தின்றதால் தொண்டை வறண்டு இருமுகிறது என்று சதா கற்பிதம் செய்து கொண்ட காரணங்களைப் பிடித்துக் கொண்டு அலைவான். அதுவாக மறைந்து போகும் வரை மூஞ்சை உர்ரென்று வைத்துக் கொண்டு அதையே நினைத்துக் கொண்டிருப்பான். சோக்கென்று வந்தால் சேர்ந்து குடிப்பவர்கள் போதை கடுமையாய் ஏறிய கணத்தில் ஆளுக்கு ஒரு திசையாய்க் காணாமல் போய்விட தான் மட்டும் படுத்து உறங்குவது ஒருவகையில் சின்னு என்கிற தியாகராஜனுக்கு சந்தோசம் தான். அவனைப் பெற்றவர் கூட அவனை அதட்டியதில்லை. இப்போது அவரும் கண்மூடி விட்டபிற்பாடு கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாத பறவை போன்ற வாழ்க்கை அவனுடையது. ‘வா’ என்றபோது வருவதற்கும் வேலை முடியக் கிளம்புவதற்குமாக நண்பர்களும், எப்போதாவது எட்டிப் பார்க்க உறவுக்காரர்களும் போதுமாய்த் தான் இருந்தது.

“விடிஞ்சா அடைஞ்சா ஒருத்தன் உசுரோட இருக்கானான்னு தேடுறதுக்கும் என்னாச்சு நாலஞ்சு நாளாக் காணம்னு ஒரு மனுசன பாக்குறதுக்கு கூட ஒரு உறவு இல்லாட்டி அது நாய் பொழப்பு. நாய் தான் திருவிழா எங்கன்னு திரியும். ஊரு ஓய்ந்த பிறகு நாய் பாடு நாறப்பொழப்புத் தானே. நாமல்லாம் மனுஷங்கடா. காலகாலத்துக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணுடா” என்று முன்பு அப்பார் சொன்னபோது எட்டிக்காயாய்க் கசந்தது. “சீக்கிரமா ஒரு கலியாணம் செய்துக்கயேன்” என்று யார் சொன்னாலும் ஒரே வசனத்தை மொழிவான் ” ஒரு பொம்பளைய கட்டி அவள் மூலமா கிடைக்கிற நாலு சந்தோசத்துக்காக அவளுக்கு வாழ்க்கை முழுக்க சேவகம் செய்யணும். அவளோட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்றது ஒரு பொழப்பா?” சின்னுவின் தாய்மாமன் செந்தாமரை அல்லியூரில் பெரிய ஜோக்கர் என்று பெயரெடுத்தவர் அவரது ஆளுமை தான் சின்னுவிடம் நிரம்பியிருப்பதாக சொந்தபந்தங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறான். செந்தாமரையின் பிரபல வசனம் “தேனைப் பத்துத் தரம் நக்குனானாம் பதிலுக்கு நூறு தவிட்டுமூட்டை தூக்குனானாம்” சின்னு தன் வாழ்வில் கண்டறிந்த தத்துவம் ஒன்றே ஒன்று தான். “பெண் வேண்டாப் பெருவாழ்வே சுகம்” என்பது தான.

எப்போதாவது சுய இரக்கம் அழுத்தும். நாம எதுக்கு இப்படி ஒத்தக்கட்டையா கெடக்கம்? நாமளும் ஊர்பேரைப் போல கல்யாணத்தைப் பண்ணி இருந்தா நமக்குன்னு ஒருத்தி வந்திருப்பாளே?

கனவுகளில் பெரிய நாக்கை நீட்டிக் கொண்டு ராட்சஸ உருவம் ஒன்று அவனைத் துரத்துகிறது. சின்னு மூச்சிரைக்க ஓடுகிறான். வாயோரம் எச்சிலொழுகக் கானகத் தரையில் வீழ்கிறான். தன் கையில் ஓங்கிய சூலாயுதத்தால் அவன் வயிற்றைக் கிழித்து விட்டு அந்த உருவம் மறைகிறது. பதறி எழுந்து தன்னையே நொந்தபடி மிச்சமிருக்கிற ராப்பொழுதுகளில் வயிறு முட்டக் குடித்துத் தன்னிலை மறப்பதை வழியின்றிச் செய்கிறான் சின்னு. குடி அவனுக்குக் கட்டில் துணை மட்டுமல்ல காவலும் கூட. “வேலையில்லாத குதிரை மெல்ல மெல்ல எருமை” என்பார் வாத்தி. ‘இந்த வீட்டை வச்சி என்னமாச்சும் செய்யணும். குடிச்சிட்டு போக்கில்லாமக் கெடந்தா சாக்காடு தான். கையில நாலு காசு பொழங்கணும் நல்லா காசு இருந்து செலவழிச்சு பழகிட்டு கையில காசு இல்லாம என்னவோ கழுத்தப் பிடிச்சி இறுக்குது கயிறாட்டம்’. சமயராஜ் ஊதிப் பெரிதாக்கிய எண்ணம் இது. ‘இந்த ஐடியா அட நல்லாருக்கே’ என்று ஆரம்பித்தது. “மனமகிழ் மன்றம் அப்டின்ற கான்செப்டே அசத்துதே. நம்ம மனசு மொதல்ல மகிழுதுல்ல” என சொல்லிக் கொண்டான்.குடிக்கலாமா என்றெழுந்த யோசனையை ரத்து செய்தவனுக்கு தற்போது எல்லாம் பளீரென்று துலங்கினாற் போலத் தோன்றியது. தன் எண்ணத்தின் திசையில் செல்லத் தலைப்பட்டான்.

திறந்திருந்த சன்னல் வழியாகச் சுள்ளென்ற வெய்யில் கீற்றுக்கப்பால் தூரத்தில் யாரோ ஒருவரோடு பேசியபடி பவுனு வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அந்த நபரை வாசலில் உட்காரவைத்துவிட்டு தான் மட்டும் உள்ளே வந்தான்.
“இந்தாய்யா சாப்பாடு” என அதைக் கையில் தராமல் மஞ்சள் பையை ஒரு ஆட்டு ஆட்டி குறிப்பால் உணர்த்தி சாப்பாட்டு மேசை மீது பார்ஸலை வைத்தான். “உப்புமாவா வாங்கிட்டு வந்த?” என்று சின்னு கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது பவுன் ராஜுக்கு.”எத்தனை நாளைக்கு உனக்கு உப்புமா வாங்கி கொடுத்து இருக்கேன்? எல்லாம் உனக்கு புடிச்ச ஐட்டம் தான்யா” சொடக்கு போட்டு “இடியாப்பம் பாயா தேங்காய் பாலு ஊறுகாய்னு பார்த்து பார்த்து கொண்டாந்துருக்கேன், என்னைய பார்த்து உப்புமாவான்ற?” அடிபட்ட பார்வையோடு இரண்டு எட்டு நகர்ந்தவன் “இந்தாய்யா சீக்கிரமா எடுத்து சாப்பிட்டுரு. அப்புறம் சூடு சரி இல்ல டேஸ்ட் சரி இல்லன்னு என்னத்தையாச்சும் சொல்லிட்டே இருப்ப எனக்கு டென்ஷன் ஆயிடும்” என்று நெற்றியை ஆள்காட்டி விரலை தலைகீழாக்கி வியர்வை வழித்து காற்றில் உதறினான்

அதை லட்சியம் செய்யாமல் ‘யார் பவுனு அது வெளில’ எனக் கேட்டவனிடம் செயற்கையாய் வரவழைத்துக் கொண்ட சிரிப்போடு “மறந்திட்ட போல,நீ தானே கூட்டியாரச் சொன்னதே, அதான்யா பழைய பொருளெடுக்கிற வியாபாரி. தட்டுமுட்டு சாமான்லாம் வாங்குகிறவர் நீதானே கேரம் போர்டு பழைய புத்தகம் கொஞ்சம் பாத்திரம் அப்புறம் ரேடியோ எல்லாம் விக்கனும்னு சொன்னியே” எனக் கேட்க லட்சங்கோடி என்று கண்டு கொண்டிருந்த கனவின் படுதாவைப் பற்றி இழுத்து இப்படிக் கிழிக்கிறானே என ஒரு கணம் ஆத்திரமான சின்னு அடுத்த வினாடியே ‘இவனென்ன செய்வான் பாவம்’ என்று இரக்கத்தோடு கனிந்தான். மேற்கொண்டு எதும் கேட்காமல் தலையை ஆட்டிவிட்டு பல் தேய்க்க கிளம்பினான் சின்னு. அந்த வியாபாரி இவன் பார்ப்பதை உணர்ந்து ஒரு கும்பிடு போட்டான். மழை வருகிறாற் போல இருந்தது பேக்கரி வண்டி மணிச்சப்தத்துடன் கடப்பது தெரிந்தது. அவன் கும்பிட்டதை லட்சியம் செய்யாத சின்னு ஊருக்கே நான் தான் ராசா எனும் மோஸ்தரில் பல்லை தேய்த்தபடி பின் பக்கம் சென்றான். பாத்ரூம் சன்னலில் சிகரட் பாக்கெட் தீப்பெட்டி இரண்டுமிருப்பதை கையால் துழாவித் தேடி எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான். வியாபாரி அமர்ந்திருக்க அவன் முன்னால் பல சாமான்கள் பரப்பில் வைக்கப்பட்டிருந்தது ‘எல்லாத்தையும் ஒருக்கா நீ பார்த்துரு சின்னு’ என்றவன் ”ஏதாவது வேணுமான்னு சரி பாத்துக்க அப்புறம் அதக்காணம் இதக்காணம்ன்னு தேடிட்டிருப்ப” எனத் தானொன்றும் அந்த இடத்தின் சிப்பந்தி இல்லை நண்பனாக்கும் என வந்திருக்கும் யாபாரிக்குப் புரியவைக்கிறதற்காக அழுத்திச் சொன்னான் பவுனு.
“ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்கு இருக்கு” என வியாபாரி சொல்ல “நூறு சேர்த்துக் குடு” என வாங்கிக்கொண்டான் சின்னு. தான் ஏதோ ஏமாந்து போனாற் போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மூட்டையைக் கட்ட ஆரம்பித்தான் வியாபாரி  அந்தப் பணத்தை வாங்கி தனது அன்றாயர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டவன் பவுனுக்கு நூறு ரூபாயைத் தந்து “நீ வச்சிக்க” என்றபடியே கிளம்பி வெளியே போனான்.
வியாபாரி மூட்டையைக் கட்டிக் கிளம்புவதற்குள் “எனக்கெதுனா குடுய்யா.. மூவாயிரம் ரூவாயாச்சும் பெறத்தக்கத சல்லிசா ஆயிரத்திநானூறுக்கு அமுத்திட்டேல்ல” என்று அவனிடம் பேரம் பேசிக் கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கும் பவுனைப் பார்த்தும் பாராத தோரணையில் படியேறி மாடி முற்றத்தில் நின்றபடி சிகரட் புகைத்துக் கொண்டிருந்தான் சின்னு.
அவன் நின்ற இடத்திலிருந்து வெளியே பார்த்தான். செல்லையா தெரு முனையில் மாட்டு வண்டி ஒன்று பாரம் தாங்காமல் ஒரு சக்கரம் அச்சு முறிந்து பொருள் எல்லாம் ஒரு பக்கமாய் சிந்திக் கிடந்தது. ஆறேழு பேர் கூடி ஆளுக்கொன்றாய் எடுத்துத் தர வண்டியோட்டி முற்றிலும் எதிர்பாராத அந்தக் காட்சியின் வருகையில் அயர்ந்தவனாய் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தான். கூட்டத்திலொருவன் எதோவொரு பண்டத்தைத் தன் வேட்டியை விலக்கி டவுசருக்குள் செருகியதை வேறாரும் பார்க்கவில்லை என்பதையும் உறுதிப் படுத்திக் கொண்டு நிமிரும் போது சின்னுவைப் பார்த்தான். சின்னு காணாமுகமாய் உடனே வேறு திசைக்குத் திரும்பிக் கொண்டான். அடுத்த கணம் அந்த மனிதன் பக்கவாட்டில் விலகிக் காணாமற் போவதையும் பார்த்த சின்னுவின் முகத்தில் லேசாய்ப் புன்னகை அரும்பியது. “நாம் போயிட்டு ஒன்னவர்ல வந்திர்றேன்யா..முரளி கடையில ஒரு பார்வை பார்த்துட்டு இங்க வர்றேன்.ரைட்டா..?” என்று கிளம்பிப் போனான் பவுன்ராஜ். சிவப்பு நிற கைக்குட்டையைத் தன் பின் கழுத்திலிருந்து உருவி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டவன் அதை மீண்டும் எங்கே வைப்பதென்று ஒரு கணம் யோசித்து சைக்கிள் ஹேண்ட்பாரில் உலர்த்திவிட்டு வேகவேகமாய் அழுத்தலானான். உடம்பு லேசாய்ப் படபடத்தது. அன்றைய தினம் பவுனுக்கு லாபகரமான தினமாக விடிந்திருக்கிறது. எப்போதாவது தான் இப்படி அதிர்ஷ்டம் அடிக்கும். அவனுடைய வியாபாரத்தில் ஒன்றுக்குப் பத்தாக லாபம் கிடைத்தாலும் அது தராத இன்பம் இது. உழைக்காமல் மேல்வரும்படி வரும்போது தான் அந்த இன்பத்தை ருசிக்க முடியும். சின்னு அவனது உற்ற நண்பன். பவுன்ராஜின் வாழ்க்கையில் சில முக்கிய திருப்பங்களைத் தந்தவன். பவுனுக்கு அவன் செய்கிற செலவுகள் வேறாரும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பவுன்ராஜை அவன் யாரிடமும் விட்டுத் தர மாட்டான். அது தான் அவனது தரம். பவுன் ராஜின் தரம் வேறுவகையானது. ‘இரண்டு கைகள் எதற்கு உன் ஒரு கரத்தைக் கொடேன்’ என்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்கத் தயங்காதவன். ‘ தர்றதா இருந்தா ரெண்டு கையையும் கழட்டிக் குடேன்’ என்று கூடக் கேட்பான். அப்படியானவன் சின்னுவுக்குச் செய்கிற ஒவ்வொரு உபகாரத்தின் பின்னாலும் பல சுயநலங்கள் கலந்தே இருக்கும். அவனுக்கு வேறு யார் தருவார்கள்..?

அன்றைக்குக் காலையிலிருந்தே அவன் கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தான். சின்னுவுக்கு செலவுக்குக் காசு வேண்டும் என்று தோன்றும் போது அவன் என்ன வேண்டுமானாலும் விற்பான். அடகு வைக்க எதுவுமில்லாத ஒரு தினம் அடகு நகையை மீட்டு அதை விற்க வேண்டும் என்று கட்டளையிடுவான். வடிவு பெயரில் அதை அடகு பிடித்தவனே பவுனு தான். அந்த நகை தனக்கு என்றைக்காவது வந்து சேரும் என்பதை முன்பே கணித்து அதற்காக மேல்தொகையை ரப்பர் பாண்டு போட்டு சுற்றி வைத்திருப்பான். வீட்டுக்குப் போய் ‘டாண்’ என்று அதை எடுத்துக் கொண்டு வந்து தொங்கிய முகத்தோடு திரும்புவான். ‘அடப்போய்யா மனுசங்களா அவனுங்க வட்டிக்கு வட்டி தீட்டிட்டாங்கிய தெரியுமா?’ என்று அலுத்துக் கொண்டே பணத்தை நீட்டுவான். சின்னுவுக்குக் கணக்கே தெரியாது. ஆனாலும் அந்தக் காசை வாங்கி எண்ணி எண்ணிப் பார்ப்பது போல் அபிநயித்து விட்டு சட்டைப் பையில் செருகிக் கொள்வான். ‘கூட நானும் வரேன்’ என்று ஒரு தடவை கூட சொன்னதேயில்லை. அவனுடைய பகுமானம் இவனுடைய வருமானமாய் மாறிவிடும். பவுன்ராஜைத் தான் தன் சகல வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வான் சின்னு. கோட்டை வீட்டுப் பய்யன் கடன் வாங்கலாம். ஆனால் காசுக்காக யார் முன்பாகவும் கை கட்டக் கூடாது. பிறகு அவன் கெத்து என்னாவது..?பெயரளவு ஜமீனாக அவனும் போலி பவ்யம் காட்டுகிற சேவகனாக பவுனும் நடித்தார்கள். ஒருவருக்கொருவர் வெவ்வேறு லாபங்கள் விளைவித்தனர்.

பவுன் ராஜின் அன்றைய அதிர்ஷ்டம் சின்னு தந்த நூறோ அல்லது வியாபாரி தந்த நூறோ அல்ல. அது வெறும் கொசுறு. விற்பதற்காக வைத்திருக்கிற பண்டங்களில் தனக்கு ஆகும் என்பதை எல்லாம் ஒரு சின்ன கோணிச்சாக்கில் போட்டு கோட்டை வீட்டின் பின்புறமே ஒரு உகந்த இடம் கண்டு அங்கே ஒதுக்கி வைத்திருக்கிறான். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அதைத் தன் வசமாக்கிக் கொள்ளவேண்டும். சின்னு வந்து பார்த்து விடுவதற்கான சந்தர்ப்பம் ஆயிரத்தில் ஒன்று கூட இல்லை. ஆனாலும் வேறு யார் கண்ணிலாவது பட்டுவிட்டால்..? கஷ்டப்பட்டது வீணாகிவிடுமல்லவா? பவுன் ராஜின் மூளை விரைவாகக் கணக்குப் போட்டது. இந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும்? வடிவு ஊரில் இல்லை. இருந்தாலும் அவள் பேச்சும் சத்தம் நடையும் ஆரவாரம். இதற்கெல்லாம் அவள் சரிப்பட மாட்டாள். சிந்தாமணி, வடிவின் தங்கை அவள் தான் இதற்கு சரிப்படுவாள். அவளை ஒரு ஆட்டோவில் வரச்செய்தால் பின் கதவைத் திறந்து மூட்டையை ஏற்றி விடலாம். அதான் சரி.

நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மேகம் சற்று முன்பை விடச் சுரீரென்று கூடிக் கறுத்தாற் போல் தோன்றியது. மழை எப்போதும் களவுக்குத் துணையும் நிற்கும் பகையும் செய்யும். இன்றைக்கு மழையின் போக்கு என்னவாயிருக்கும்..?

பவுன் ராஜ் தன் சைக்கிளின் பெடலை இன்னும் ஆனமட்டும் வேகமாய் மிதித்தான்.

வளரும்