யாக்கை 8
கண்மூடிக் குதிரை
திரவியனூர் பஸ் ஸ்டாண்டு பலகாலமாய் அந்த வட்டாரத்தின் ஒரே வாகன சங்கமமாக இருந்தது. ஐந்தாண்டுக்கு முன்பாக மங்களாபுரம் எம்பியாக இருந்த ராமகிருஷ்ண சம்பத் திரவியனூரில் பிறந்தவர். பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த பிறகு ‘ஊருக்கு எதுனா செய்துரணும்’ என்பதற்காகவே இந்த பேருந்து நிலையத் திட்டத்தை செயல்படுத்த முனைந்தார். அவருக்குப் பேர் சொல்லும் புகழ்மாலையாகவே அமைந்து போனது புதிய பஸ்ஸ்டாண்ட்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து இடது பக்கம் ஆறாவது விலாசத்தில் பத்துமாடிக் கட்டிடத்தில் “ஜீஜே சில்க்ஸ்” கிளை பரப்பியது. ஒவ்வொரு தினமும் பல முறை அந்தத் தெரு நெரிசலில் பிதுங்கியது. இடது புறம் காமாட்சி உயர்நிலைப்பள்ளி இருந்தது வேறு ஒவ்வொரு நாளும் நெருக்கடி முற்றியது. துணிக்கடை ஸ்கூல் இரண்டையும் தாண்டித் தான் பஸ் நிலையத்துக்கு வந்து மீள வேண்டிய கட்டாயத்தில் ஊரே அல்லாடியது. ஸ்கூலைத் தாண்டி அரை கிலோ மீட்டரில் இரயில்வே லெவல் கிராஸிங் வேறு கழுத்தைப் பிடித்தது. கண்ணன் நகருடைய ஒரு நுழைவும் காமாட்சிபுரம் மொத்தமும் தினமும் சிரமங்களைச் சந்தித்தன. எத்தனையோ மனுக் கொடுத்து போராடியபோதெல்லாம் எதுவும் நடக்காதிருந்தது ஊர்க்காரர் சம்பத் எம்.பி ஆனதும் ரயில்வே லெவல் க்ராஸிங் மீது பறக்கும் பாலத்தை முதலில் அறிவித்தார்.
யாருமே யூகிக்க முடியாத தீர்வாகவே புதிய பேருந்து நிலையத்தை காமாட்சி புரத்தைத் தாண்டி பவளத்திட்டு செல்லும் கடற்கரைச் சாலையின் முனையில் அமைக்கப் போவதாக பேப்பரில் செய்தி பார்த்த அத்தனை சனமும் எம்பியை மனதார வாழ்த்தினார்கள். ஒரு வருடம் கஷ்டப்பட்டு நெரிசலைத் தாங்கிக் கொண்டவர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பவளத்திட்டு சாலைக்கு மாறிய பிற்பாடு பழைய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி நகரப் பேருந்துகளின் சங்கமமாகவும் மற்றொரு பகுதியை மூன்று தளங்களுடனான வாகனக் காப்பகமாகவும் மாற்றப் பட்டதில் அந்தப் பிராந்தியமே நிம்மதியாயிற்று. கடைத் தெரு ஏற்கனவே அந்த ஊரின் உயிராகவே போற்றப் பட்டது. பாலத்துக்கு அப்புறம் உயிரினும் மேலான ஒன்றாக மாறியது.
கடைத்தெரு இன்னும் பரபரப்பாகவில்லை ஒரு டாணா போல வளையும் இடத்தில் கதிரின் “சேவற்கொடியோன் ஆட்டோ கன்ஸல்டன்ஸி” அமைந்திருந்தது. அவன் செய்கிற வேலைக்கு அப்படி ஒரு அலுவலகம் பெரிய உபயோகம் கொண்டிருக்கவில்லை என்றாலும் கதிருக்குத் தன்னை ப்ரொஜக்ட் செய்து காண்பித்துக் கொள்வதற்கு அப்படி இடமொன்று தேவைப்பட்டது. உண்மையில் அவன் என்ன செய்கிறான் என்று அந்த ஏரியாக்காரர்களுக்கே தெரியாது.
“சட்டம் பாதி விரோதம் பாதி ” என்பான் மூர்த்தி. சட்டப் பூர்வ சட்டவிரோதம் என்பது தான் சரி. ‘ஃபைனான்ஸ்’ என்பது இருப்பதிலேயே சின்னஞ்சிறிய சொல். ஆனால் உலகம் தோன்றிய கணத்திலிருந்து காசுபணம் கண்டறிவது வரைக்கும் இருந்த நல்லுலகம் இல்லை தற்போதிருப்பது. பணத்தின் வரலாறு நெடியது. மேலும் அதன் குருதிதாகம் அளப்பரியது. இதுவரைக்கும் பணம் என்ற வஸ்து கொன்று குவித்திருக்கக் கூடிய உயிர்களின் எண்ணிக்கை எண்கள் தாண்டியது. தன்னை நிறுத்திக் கொள்ளத் தெரியாத கண்மூடிக் குதிரை பணம்.
வடநாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பெத்த பெரிய வங்கிகள் இவர்களெல்லாம் ஒருவரை ஒருவர் முட்டிக் கொண்டு பிஸினஸ் செய்து இல்லியே எதுவுமே சீரா வர்லியே என்று ஆன ஒரு நற்தினம் வேறொரு முடிவை எடுத்தார்கள். வங்கி “நீ நிறைய தயாரி” என பைக் கம்பெனி காரர்களை பணித்தது. “தயாரிச்சு நானே வச்சுக்கிட்டு என்ன பண்றது” எனக் கேட்ட கம்பெனியிடம் “வெயிட் தம்பி நான் லோன் தந்து எத்தினி பேரை அமுக்குறேன்னு பார்:” என்றது “எனக்கு கிளையன்ட் கூடுனா உனக்கு விற்பனை கூடும் இன்ஷூரன்ஸ் தன்னால பெருகும் ஸ்பேர் பார்ட்ஸூம் சர்வீஸூம் தன்னால ஏறும். அது ஒரு பக்கம் சர்வீஸ் எல்லாருக்குமே இலாபம் வண்டிகள் அதிகரித்தால் தான் என்ன புரிஞ்சுதா?” என பெரியண்ணன் கேட்க குட்டி தம்பிகள் பவ்யம் காட்ட அமோகமாய் அந்தத் தொழில்கள் பெருகின.
வங்கி பெரிய எசமான். ஆனால் அது காட்சிக்குள் வரவே வராது. வாகனங்களை உற்பத்தி செய்து குவித்தன கம்பெனிகள். ‘ஒத்தை ரூவாயைக் கொடு. உன் இருப்பிட சான்று சம்பள சான்று இத்யாதிகளைத் தா. இதோ வண்டியை ஓட்டிக்கிட்டுக் கெளம்பு. அப்பறம் தம்பி உனக்குத் தெரிஞ்சு நல்லவங்களை எங்களுக்கே அறிமுகப் படுத்துப்பா..நல்லவங்க நடந்து போனா மனசு வலிக்கிது’ என்று ஆதுரம் காட்டினார்கள். “இது நல்லாருக்கே” என்று சப்புக் கொட்டிக் கொண்டு “ட்யூ சிஸ்டம்” என்ற ஆக்டோபஸின் அத்தனை கரங்களும் சுருட்டப் பட்டு வாய்பொத்தி புன்னகைத்துக் கொண்டிருந்த ஒரு தினம் நீட்டிய இடங்களை எல்லாம் எண்ணிப்பார்க்காமல் “நல்லவனுக்கு அடையாளம் எழுபத்தெட்டு இடங்களில் ஒரே போன்ற கையெழுத்து” என்று சளைக்காமல் கிறுக்கி ஒரு சாவியையும் ஒரிஜினல் பேப்பர்களையும் வங்கி வசம் ஒப்படைத்து விட்டு “ரொம்ப நல்லவன்ணே நீங்க “என்று கும்பிடு போட்டு கிளம்பினார்கள்.
கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கென்று கதைகள் வாய்ப்பதில்லை. எங்கே பிரச்சினை வந்ததென்றால் வாங்கிய கடனைத் திரும்பக் கட்டியவர்களிடமிருந்தோ அல்லது இழுத்தும் பறித்தும் எப்படியாவது கட்டி முடித்தவர்களிடமிருந்தோ அல்ல. மாறாக ஆளையும் காணம்.பேரையும் காணம் என்றாற் போல வாங்கிய வண்டியை எடுத்துக் கொண்டு ‘போனவன் போனாண்டி’ என்று சிலர் டேக்கா டிமிக்கி தரப் பார்க்க அவர்களைக் கையாள்வதில் சிக்கல் உருவாயிற்று. வங்கியின் பெரியண்ண மரியாதையைக் கம்மி செய்து கொண்டு வேட்டியை மடித்துக் கொண்டு மீசையை முறுக்கியபடி “வட்டியோட அசலக் கட்டுறியா இல்லியா?” என்று முஸ்தீபு காட்டுவதற்கு முடியவில்லை. மேலும் அதற்கெல்லாம் வேறொரு முகம் தேவைப்பட்டது. அதாவது ரெண்டாம் நம்பர் உலகத்தில் மரியாதைக்குரிய முகம். இல்லையில்லை அச்சத்திற்குரிய முகம். பேப்பர்களில் எழுதிய சட்ட திட்டங்களை சற்றே நெகிழ்த்திக் கொண்டாலொழிய இப்படி புறமுதுகு காட்டி வண்டியை நகர்த்திச் சென்றவர்களிடமிருந்து எதுவும் பெயராது என்பதை அறிந்து கொண்ட வங்கிகள் இதற்கான பாலிசியை உருவாக்கின. கொள்கையே தட்டி முட்டி செதுக்கப்பட்ட கொள்கை என்பதால் பிசிறே இல்லாமல் போனது. வங்கி வராக் கடனாளர்களின் பெயர் முகவரிகளைத் தன் வசூல் ஏஜன்ஸிக்குத் தரும். அத்தோடு வங்கி விலகிக் கொள்ளும். வெறும் முகவரிகளோடு இல்லாமல் அவர்களது லோன் டீடெய்ல்கள் மற்றும் அந்த வண்டிக்கான மாற்றுச் சாவி இவையும் வழங்கப்படும். அங்கே தான் சீஸிங்கின் கதை தொடங்கும்.
சீஸிங் ஏஜன்ஸி அத்தகைய வராக் கடன் வாடிக்கையாளர்களின் வண்டி நடமாட்டத்தைப் பின் தொடர்ந்து உசிதமானதொரு பொன் பொழுதில் வண்டியை லவட்டிக் கொண்டு வந்து விடும். எங்கே என்றால் ‘யார்ட்’ என்று அதற்கென்றே ஒரு பொது இடத்தை ஏற்படுத்தியிருந்தனர். கிட்டத் தட்ட நாலைந்து வங்கிகளுக்கு ஒரு யார்ட் தான் இருக்கும். பெரிய இடத்தை இதற்காக வளைத்து பக்கா செட் அப் பலமுனைப் பாதுகாவலுடன் வைத்திருக்கும். அங்கே கொண்டு போய் சேர்த்து விட்டால் போதும். அதற்குப் பிறகான வேலைகளை மறுபடி வங்கியே டீல் செய்து கொள்ளும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று பழமொழி உண்டல்லவா அப்படி யார் கையிலும் சிக்காமல் வண்டி எங்கே எனத் தெரியாமல் அசல் வட்டி எல்லாவற்றுக்கும் டிமிக்கி விட்டுக் கொண்டிருப்பவனை அவனை விடத் திறமையாக டீல் செய்து அவன் வசம் உள்ள வண்டியைத் தன் வசமாக்கும் வரை வங்கி சாந்தமாக இருக்கும். “என் வண்டி எங்கன்னு தெரில” என்று அப்பாவித்தனமாகத் தேட ஆரம்பிக்கிறவன் நேரே ஸ்டேஷன் போவான். “வண்டி ட்யூ ஒழுங்கா கட்டலைன்னா சீஸ் பண்ணத் தான் செய்வாங்க” என்று திருப்பி அனுப்பப் படுவார்கள். தொங்கிய முகத்தோடு வங்கிக்குப் போனால் அப்போது தெரியும் அலைக்கழித்ததற்கெல்லாம் சேர்த்து ட்யூ பெனால்டி ரெகவரி சார்ஜ் லொட்டு லொசுக்கென்று இத்தனையும் கட்டினாலும் பாக்கி உள்ள ட்யூவையும் சேர்த்துக் கட்டி டீலிங்கை முடித்துக் கொள். உன்னைப்போல அலைக்கழிப்பவனுடன் எந்த ஒப்பந்தத்தையும் தொடர்வதற்கில்லை என்று சொல்லப்படும். ‘நீயும் வேண்டாம் உன் வண்டியும் வேண்டாம்’ என்று கிளம்பிச் செல்பவர்களும் உண்டு. இனிமே ஒழுங்கா நடந்துக்கிறேன் என்று பம்மிக் கேட்ட காசைக் கட்டி விட்டுத் தன் வண்டியை மீட்டுக் கொண்டு செல்பவர்களும் உண்டு. கடைசி வரைக்கும் வண்டியைத் தொடவே முடியாமல் புன்சிரிக்கும் கல்லுளிகளும் இருந்தார்கள்.
சீஸிங் ஏஜன்ஸிகள் தான் தனக்குப் பதிலாக செயலாற்றுவதற்காக உப தளபதியாக வங்கிகளால் நியமிக்கப்பட்டு ‘பார்த்துப்பா. முடிஞ்ச வரைக்கும் என் பேர் கெடாமப் பார்த்துக்க சரியா..?” என்று செல்லமான குரலில் அதட்டும். அதுவே ‘என்னாச்சு என்னாச்சு என்னாச்சு’ என டார்கெட் என்ற சவுக்கை நீட்டி அரற்றும்.
முதல் பக்கெட் ரெண்டாவது பக்கெட் மூன்றாம் பக்கெட் நாலாம் பக்கெட் என மாய வாளிகள் இருந்தன. முதல் பக்கெட் ஒரு மாசம் பிறழ்ந்த கடனாளி. அவனை ஃபோனில் அழைத்துக் கட்டச் செய். பெனால்டி போட்டுக்கொள்ளலாம். மறுபடி அவன் பிறழாமல் கட்டுகிறானா எனப் பார். இரண்டாம் பக்கெட் அடிக்கடி ஒன்றிரண்டு மாதங்கள் தாமதித்துக் கட்டுகிற அதே நேரம் கோட்டுக்கு உள்ளேயே ஊசலாடுகிறவன். அவனை இன்னும் கொஞ்சம் பயமுறுத்து. அதற்காக வெறுப்பேற்றி மூன்றாம் பக்கெட்டுக்கு அனுப்பி விடாதே. மூன்றாம் பக்கெட் என்பது வாடிக்கையாகவே தாமதமாக நாலு மாத ட்யூ வரை பாக்கி வைத்துக் கொண்டு கதை சொல்லிக் கொண்டே அவ்வப்போது கட்டுகிற அல்லது அதையும் டபாய்க்கிற கஷ்ட கஸ்டமர்கள். நாலாம் பக்கெட் நீண்ட தொகை பாக்கி மற்றும் ஆள் எங்கே என அடையாளம் காண்பதே சிரமம். கடன் காலம் தாண்டி விட்டது இன்னபிற காரணங்களால் கண்டதும் சுட உத்தரவு என்பார்களே அது போல வண்டியை தூக்கியே ஆகணும் என்ற நிர்ப்பந்தத்தைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இந்த வாளி நிறைய இருப்பவர்கள்.
கதிர் எத்திசை பறப்பதெனத் தெரியாமல் தத்திக் கொண்டிருந்த போது ஒயின் ஷாப் பாரில் ஸ்னேகிதமானார் ‘எஸ்.எம்.வர்மா’ என்ற அதிகாரி. அவரது பதவி தெரியாமல் ஜாலியாகப் பேசிய கதிரைத் தன் விஸிடிங் கார்டைத் தந்து ‘ஆஃபீஸ்ல வந்து பாருங்க’ என்றவர் அடுத்த தினமே பார்க்க வந்தவனை அரை மணி நேரம் காக்க வைத்து சந்தித்தார். முன் தின பரிச்சயம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் “என்ன விஷயம்,எதுக்கு வந்தீங்க?” என்றார். இவன் ‘நீங்க தானே ஸார் வரச்சொன்னீங்க?” என்று சொல்கிறானா எனப் பார்த்தார். கதிருக்கு அன்றைக்கு மூளை எக்ஸ்ட்ரா வேலை பார்த்தது
“ஸார், நீங்க எவ்ளோ பெரிய டெஸிக்னேஷன்ல இருக்கீங்கன்னு தெரியாம இருந்தனே ஸார், நேத்திக்கு எவ்ளோ கேஷூவலா பழகுனீங்க ஸார். நான் எதுனா முன்னப் பின்ன பேசிருந்தா மன்னிச்சிடுங்க ஸார். உங்க முன்னாடி உக்கார்ந்து பேசவே பயமா இருக்கு ஸார்” எனப் போலி பவ்யம் காட்டினான். பவ்யம் என்பது உண்மையில் நாய் . தன் வாயைத் திறந்து ‘பாரேன் என் பல்லெல்லாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறதென்று’ எனக் காட்டி விட்டு ‘ஆனா உங்கிட்ட நான் என் வாலை மட்டுந்தான் ஆட்டுவேன்’ என்று ஆட்டுவது. இரண்டு தரப்புக்கும் தெரியும் பற்களின் வலிமை. ஆனாலும் இருபுறமுமே வாலாட்டம் மட்டுந்தான் கணக்கில் கொள்ளப்படும். கதிரின் பவ்யம் வர்மாவுக்குப் பிடித்திருந்தது. ‘இவன் நமக்கு சரியாக வருவான்’. விஸ்வாசிகளுக்கென்று உடனே தருவதற்காகத் தான் ஆப்பிள் தொடங்கி ஏஜென்ஸி, ஃப்ரான்சைஸ் உள்ளிட்ட பல விசயங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.
கதிர் வாய்பிளந்தான். இது நிசமாகவே நடக்கிறதா எனத் தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். ஆமாம்ல என்று அதிசயித்துக் கொண்டவன் “மாசம் எத்தினி வண்டி தூக்குவே எத்தனை பசங்களை வேலைக்கு வைப்பே” என்ற இரண்டு கேள்விக்கும் சற்று யோசித்து தன்னால் என்ன இயலும் என்றதைச் சொன்னான். முதல் வருட முடிவில் அதே வர்மா ஸார் இன்னும் ஒரு பதவி உயர்வில் வட மாநிலத்துக்குச் சென்றவர் எழுதி அனுப்பிய கடிதத்தை அவரது இடத்துக்கு வந்து சேர்ந்த பாஸ்கர் ஸார் வாசித்துக் காட்டினார். ‘நூறு சதவீதம் உன் கமிட்மெண்டை நிறைவேற்றி இருக்கிறாய் மை டியர். உன் போன்றவர்களால் தான் தாமதமின்றிச் சுழல்கிறது இந்த உலகு’ என்று கைகொடுத்துப் புன்னகைத்தார். அந்தக் கடிதத்தை தன் அலுவலகத்தில் தங்க ஜிகினா வேலைப்பாடுகளோடு ஃப்ரேம் செய்து மாட்டினான் கதிர்.
வளரும்