ராதாரவி

(தினத்தந்தியில் வெளியான கட்டுரை)

  ரா  தா  ர  வி


அப்பா நடிகவேள். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை என ஊரே பாராட்டியது. எம்.ஆர்.ராதாவின் மகன் என்பது பெரிய பலம் தான் எனினும் இந்தப் பெருமிதமே அவர் கடக்க வேண்டிய தூரத்தில் சுமந்து செல்ல வேண்டிய பாரமாகவும் மாறியது.இளையவேள் ராதாரவி தன் அனாயாசமான நடிப்புத் திறன் அபரிமிதமான வெளிப்பாடு என தனித்துவத்தை நிலைநாட்டிய நல்ல நடிகர். குணாதிசயங்களை அப்படியே பிரதிபலிப்பது ஒரு முறை. அவற்றையே தொகுத்தும் கலந்தும் விரிவுபடுத்துவது இன்னும் சிறப்பு. இவற்றைத் தாண்டித் தனது ஆளுமையின் அனுபவ ஆழத்திலிருந்து அரிதான புதிய உணர்தல்களை அகழ்ந்தெடுப்பது பண்பட்ட நடிகர்களா மட்டுமே இயலுகிற காரியம். நடிகர் தயாரிப்பாளர் பின்னணிக் குரல் கலைஞர் நாடகநடிகர் அரசியல்வாதி எனப் பல முகங்கள் கொண்ட ராதாரவி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் எனத் தென்னகத் திரைகள் எல்லாவற்றிலும் மின்னுபவர்.

1952 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம்தேதி எம்.ஆர்.ராதா தனலக்ஷ்மி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் ராதாரவி. தீராத நடிப்பு வேட்கை உந்தித் தள்ள மேடை நாடகக் கலைஞராகவும் பிறகு கே.பாலச்சந்தரின் மன்மத லீலை படம் மூலம் பெரியதிரை நடிகராகவும் மாறினார்.எண்ணற்ற வேடங்களில் அனாயாசம் காட்டிய பன்முக நடிகர். அச்சமில்லை அச்சமில்லை தண்ணீர் தண்ணீர் நட்பு  பூவிலங்கு போன்ற படங்களில் கவனம் பெற்றார்.வில்லனாக அமரன் உயர்ந்த உள்ளம் வைதேகி காத்திருந்தாள் விக்னேஷ்வர் தொடங்கிப் பல படங்களில் மிளிர்ந்தவர் முற்றிலும் யூகிக்க முடியாத நடிப்பை வெற்றி விழா சொல்லத் துடிக்கிது மனசு போன்ற படங்களில் வழங்கினார். சிவாஜி ரஜினி கமல் விஜயகாந்த் என்று ராதாரவி இணையாத நடிகர்களே இல்லை எனலாம். நகைச்சுவை மிளிரும் பல வேடங்கள் ராதாரவியின் தனித்துவத்துக்கான சான்றாவணங்கள். குருசிஷ்யன் லக்கிமேன் சின்னமாப்ளே போன்ற படங்கள் அவற்றுள் சில.சாது என்ற படத்தில் கவுண்டமணியை அனாயாசமாகக் கையாண்டிருப்பார்.பணக்காரன் படத்தில் ராவ் பகதூர் என்ற தன் பட்டத்தை இழுத்து இடைவெளி விட்டு பேசுகிற ஸ்டைலை ரசிக்காதவர் இல்லை. அண்ணாமலை படத்தில் கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்வார்.தன் படங்களில் தனக்கென்று கிடைக்கிற சின்னச்சின்ன இடங்களைக் கூடத் தவற விடாத ஆட்டக்காரர் அவர். பிரபுவோடு அவர் நடித்த பாண்டித் துரை படம் ஒரு உதாரணம். எல்லோருக்கும் முன் மாதிரியாக வாழ்ந்த ஒரு மனிதர் சபலத்தால் அடைகிற சரிவைத் தன் உடல்மொழியாலும் முகபாவனைகளாலும் ஆணித்தரமாகத் தோற்றுவித்தார் ராதாரவி.

ஏவிஎம்மின் உயர்ந்த உள்ளம் படத்தில் இன்னொரு நாயகனாகவே ராதாரவி தோன்றினார் என்றால் தகும். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி பணத்தை தண்ணீராக செலவழிக்கும் பணக்காரர் கமலுக்கு எதார்த்தமாக அறிமுகமாவார் ராதாரவி. மெல்ல கமலின்  நம்பிக்கைக்கு பாத்திரமாகும் அவர் ஒரு கண்ணீர் கதை கதையை கமலிடம் சொல்லி பணம் பெறுவார். உண்மை தெரிந்து உணர்ச்சிப் பிழம்பாக நியாயம் கேட்டு சட்டையை பிடிப்பார் கமல். அதுவரை காட்டிய பவ்யத்தை எல்லாம் ஒரு நொடியில் மாற்றிக்கொண்டு கடுகடுத்த முகத்தோடு “ஆனந்த் என் வரையில் நான் செஞ்சது சரிதான். தினமும் குடித்துவிட்டு நேரத்துக்கு நேரம் குணம் மாறுகிற உன்னிடம் எவன் தங்குவான்? என் பாதுகாப்புக்காக உன்கிட்ட பணம் வாங்கினேன் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் வேணும்னா கேளு அந்த பணத்தை திருப்பி தரேன்” என்று  கமலின் முகத்துக்கு நேரே சொடக்கு போடுவார் அதற்கு முந்தைய காட்சி வரை கமலை விட ராதாரவி பாத்திரத்தை ரொம்பவே விரும்பி பார்த்துக்கொண்டு இருந்திருப்போம். ஒரு கணத்தில் சுயநல உச்சத்தைக் குணமாற்றத்தை ஆர்ப்பாட்டமில்லாத  அண்டர் பிளே நடிப்பில் வழங்கி அசத்தினார் ராதாரவி.

எத்தனை முறை வில்லனாக, தகப்பனாக, அரசியல்வாதியாக, போலீஸ் அதிகாரியாக, வக்கீலாக நடிக்க நேரிட்டாலும் தான் அதற்கு முன்னால் அதே வேடத்தை ஏற்ற அனைத்து வேடகால ஞாபகத்தையும் தன்னிடமிருந்து அழிப்பது கடினம். முதல்முறை அந்த வேடத்தை ஏற்கிறாற் போல் நடிப்பது எளியதல்லவே. அதைவிடச் சிரமம் ரசிகர் மனங்களிலெல்லாம் முன்பு தான் ஏற்ற அதே பாத்திரம் குறித்த மொத்தக் கருத்துருவாக்கத்தையும் அழித்து இப்போதைய புதிய அனுபவத்தின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வது. இவற்றை எல்லாம் கச்சிதமாகச் செய்த தமிழ் நடிகர் ராதாரவி. ஒரு டஜன் படங்களில் அரசியல்வாதியாக நடித்த பிற்பாடு சூது கவ்வும் படத்தில் முதலமைச்சராக சின்னச்சின்ன வித்யாசங்களின் மூலம் ரசிக்க வைத்தார். உதயநிதி நடித்த மனிதன் படத்தில் நீதிபதியாக மிரட்டலான நடிப்பு தந்தார். 100 என்கிற படத்தில் ஓய்வு பெறப்போகும் காவலராக அசத்தினார்.இறைவி படத்தில் தாஸ் என்ற பாத்திரம் அவர் பேர் சொல்லிற்று.ஜில் ஜங் ஜக் படத்தில் ரோலக்ஸ் ராவுத்தர் என்ற வித்யாசமான பாத்திரத்தில் தோன்றினார்.பெரிய நடிகர் கூட்டமே நடித்திருந்த வடசென்னை படத்தில் முத்து என்ற அரசியல் பிரமுகராக அளவாகச் சிறப்பித்தார். அதே வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மையப்பாத்திரமான பேட்டைக்காரன் வேடம். அதனை ஏற்ற வ.ஐ.ச ஜெயபாலனுக்குக் குரல் தந்தவர் நம் ராதாரவி தான். குரலால் நடிக்கவில்லை அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார்.

இவை யாவுமே கடந்த பத்து வருடங்களில் மட்டும் ராதாரவி முத்திரை பதித்த சமீபப் படங்கள். நாற்பது வருடங்களாக எத்தனையோ வேடங்களை எவ்வளவோ முறை ஏற்று எதைத் தந்தாலும் சலிக்காத தோற்றமாக்கி மிளிரும் வண்ணம் ராதாரவியின் கலைப்பயணம் தொடர்கிறது.ஒரு புதிய நடிகர் மனசு முழுக்க தான் ஏற்கிற ஒரே ஒரு வேசத்தைப் பற்றியே எப்போதும் சிந்திப்பார்.ஏக்கமும் தவிப்புமாய் முதல் படம் நடிக்கிற அதே கலைத் தாகத்தோடு பல நூறு படங்களைக் கடந்து ஒரு நடிகரால் தனக்கு வழங்கப்படுகிற வேடத்தை கையாள முடியுமா..?

ஆசை ஆசையாய் வளர்த்த ஒரே மகள் வாகன விபத்தில் மரணமடைந்து விடுகிறாள். ஆறாத கொதி மனசோடு அவள் உடலைத் தன் ஐஸ்கட்டித் தொழிற்சாலையில் பெரிய ஐஸ் பாளத்தில் வைத்து கெடாமல் பராமரித்தபடி மனசு சிதைந்து பரிதவிக்கிற தகப்பனாக பிசாசு படத்தில் ராதாரவி ஏற்ற வேடம் அற்புதம். இறந்த பிற்பாடும் தன் மேல் அன்பு மழை பொழிகிற மகளின் அரூவம் கட்டு விதிர்விதிர்த்தபடி தரையில் மண்டியிட்டு அழுது தொழுது
“அய்யோ என்னைப் பெத்தவளே என் சாமி பவானி…அப்பாகிட்டே வாம்மா..என் சாமி”
என்று தன் மகள் மறுபடி தன்னிடம் வந்துவிட மாட்டாளா என்று ஏங்கிக் குழைந்து தரையில் மண்டியிட்டபடியே நகர்ந்து செல்வார் ராதாரவி.இல்லாமற் போன பிறகும்  “என்னை விட்டுப் போய்விடாதே மகளே” என்று கரைந்து உதிர்கிற காட்சி,
“நம்ம வீட்டுக்குப் போகலாம்மா வீட்ல யாருமே இல்லைம்மா நம்ம ஃபேக்டரிக்கு போயிடலாம்மா  இங்க வந்து என்னம்மா பண்றே” என்றவாறே தளர்ந்து அமர்ந்து புலம்பும் அந்த ஒரு காட்சியில் கரையாத மனமென்று எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்தில் நமக்கு பல நூறு படங்களைக் கடந்த  ராதாரவி தெரியமாட்டார். அதுதான் கலையின் உன்னதம், நடிப்பு என்பது மாயமாகிற புள்ளியில் நாமே ஓடிச்சென்று அவரது தோள் தொட்டு எழுப்பித் தேற்றிவிட மாட்டோமா என்று காண்பவர் ஏங்கும் அளவுக்கு இந்த உலகத்தின் அத்தனை உண்மைகளையும் தன் ரசவாத நடிப்பால் மயங்கச் செய்திருப்பார் ராதாரவி.

நடிப்பென்பது உண்மையை விஞ்சுவதோ போலி செய்வதோ அல்ல. அதை அப்படியே பிரதிபலிப்பது. உன்னதமான நடிகர் ராதாரவி