நன்னீர் நதிகள்

 

சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் எத்தனை பாடல்களுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சம் பேசினால் போதும் என்ற தப்பர்த்த முடிவோடு படங்கள் தயாரிக்கப் பட்டன கருப்பு வெள்ளைப் படங்களின் காலம் நெடியது. எல்லாக் காலமும் சினிமா பாடல்களின் பிடியில் தான் இருக்கப் போகிறதோ என்ற அச்சம் ஆரம்பகால ரசிகர்களில் சிலரிடமாவது இருந்திருக்கும் அல்லவா..? கண்மூடித் தனமான பிடிவாத முடிவாகவே நம்ம மக்கள் பாடல்களை ரசிப்பார்கள் என்று ஆரம்பித்து நாற்பது பாடல்களையும் நடுவாந்திர ஓரங்களில் வஜனங்களையும் பேச வைத்துக் கொண்டிருந்ததெல்லாம் அநியாயம் அல்லவா?
பாகவதர் ஸ்வாமிகள் தன் கையிலிருக்கும் நீளமலரால் அரை ஃபர்லாங் தள்ளி இருக்கும் நாயகி மீது லேசாக அடிப்பார். அந்த மலரோடு சேர்த்துக் காதலும் மலரும். கிட்டப்பா அங்கிள் அந்த அளவுக்குக் கூட ரிஸ்க் எடுக்க மாட்டார். ஜொமாட்டோ அல்லது ஸ்விகியில் பிடித்த பதார்த்தங்களை ஆர்டர் செய்து விட்டு யதார்த்தமாக வீட்டில் அமர்ந்திருக்கிறாற் போலவே வீற்றிருப்பார்.அவ்விடமே காதல் ட்ரான்ஸீவிங் முழுவதும் நடந்தேறும்.

தமிழ்த் திரையுலகில் யதார்த்தமான காதல் முதல் காலத்தின் முப்பெரும் நாயகர்கள் எம்ஜி.ஆர் சிவாஜி மற்றும் ஜெமினி. மூவரின் பிம்பவேற்றுமை வசீகரமானது.

என் பேரு விஜயா எங்கிட்டே ரொம்ப அன்பா இருக்கிறவங்க விஜின்னு கூப்டுவாங்க என்று லீட் தருகிறார் சரோஜாதேவி. உடனே கள்ளம் கபடம் என எதையுமே தன் எந்தப் பிறவியிலுமே அறிந்திடாத வெள்ளந்திப் பொன்மனச்செம்மல் நான் அப்படிக் கூப்பிடலாமா என்று கேட்கிறார். சரோஜாதேவி சரி என்றபிறகு தான் விஜி என விளிப்பார்.அதில் காதல் ரசம் சொட்டும் அவர் அப்படித் தான். தான் சூட்ட வேண்டிய மலரைக் கூட அனுமதி பெற்ற பிறகுதான் கூந்தலில் சூட்டுவார்.(தாய் சொல்லைத் தட்டாதே படத்தில்) சிரித்துச் சிரித்துச் சிறையிலே இட்டாலும் தலைவர் ரூல்ஸை மீறாதவர்.திருடாதே படத்தில் தன் மனதுக்கு நெருக்கமான சரோஜாதேவியை ஊரெல்லையில் மண்டபத்தில் சந்திக்க நேர்கையில்
ஒரே முறை தான் உன்னோடு பேசிப்பார்த்தேன் பாடலாகட்டும் விழியே விழியே உனக்கென்ன வேலை பாடலாகட்டும் நினைத்தேன் வந்தாய் நூறு வயது மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ பாடலாகட்டும் கன்னத்தில் என்னடி காயம் பாட்டாகட்டும் எம்ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து பல காதல் பாடல்கள் வரிசை கட்டினாலும் எம்ஜி.ஆருடன் காதல் காட்சிகளில் மின்னி மிளிர்ந்த முதலிட நடிகை என்று சரோஜாதேவியைத் தான் சொல்ல வேண்டும். மானல்லவோ கண்கள் தந்தது என்ற ஒரு பாடலுக்கு இன்றும் ஈடு இருக்கிறதா என்ன..?

ராஜா ராணி வியட்நாம் வீடு தேனும் பாலும் தில்லானா மோகனாம்பாள் போன்ற ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்த பெருமை சிவாஜி பத்மினி இருவருக்கும் உண்டு. மலையாளத்தில் ஷீலாவும் ப்ரேம் நஸீரும் 130 படங்கள் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தமிழில் அதிகம் சேர்ந்த இணைகளுள் சிவாஜியையும் பத்மினியையும் சொல்லலாம்.புதையல் படத்தில் இடம்பெறுகிற விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே என்ற பாடலை எத்தனை முறை பார்த்தாலும் அதில் கையாளப்பட்டிருக்கும் காதலின் அபூர்வம் இன்னும் இன்னும் பார்க்கத் தூண்டும். காதல் கைகூடுகிற கணம் ஒரு விதமான பித்து நிலையில் ஆடவனை ஆழ்த்தும். அதுவே பெண்ணுக்கு அதீத கவனத்தோடு தனக்கு நிகழ்வதையும் தான் நிகழ்த்துவதையும் உற்றுக் கவனித்தபடி வாழ்காலம் எல்லாம் நினைத்து நினைத்து அசை போடுவதற்காகத் தன் மனதையே ஆல்பமாக்கி ஒவ்வொரு கணத்தையும் மூடித் திறக்கும் இமைகளால் படம் பிடித்தாற் போல் பதிந்துகொண்டிருப்பாள். இந்த இடைவித்யாசம் தான் காதலின் பேரழகாய்த் ததும்புவதும். தன்னை மறந்த காதலன் பித்துக்குளியாகி ஆட்டம் போடுகிறான். அவளைச்சுற்றிச் சுற்றி வருகிறான்.காதல் கனிந்த கணம் உலகமே தன் காலடியில் வந்தாற் போல் கொண்டாடிக் கூத்தாடுகிறான். அவளோ தன்னையே கடிவாளமாக்கி அவனைக் கட்டுப்படுத்துகிறாள். தன் காதல் நதியைக் காலமெல்லாம் அணைத்துப் பயணிக்கிற கரைகளாய் அவன் காதலை இரண்டால் வகுத்துவிடும் ஒரே தீர்மானத்தோடு அவனது உற்சாகத்தைப் பற்றிக் கொண்டு உடன் வருகிறாள். இன்னும் ஆயிரம் வருடம் கழிந்தாலும் காதல் கூறலில்.அந்தப் பத்மினி சிவாஜி இணைக்கு இணையே இல்லை அதிலும் வியட்நாம் வீடு படத்தில் வயது முதிர்ந்த காலத்தில் ஒருவரை ஒருவர் மனம் முழுக்க சுமக்கும் இணையாக பத்மினி சிவாஜிக்கு ஈடு கொடுத்து தன் ஒப்புமை இல்லாத நடிப்பாற்றலைக் கொட்டினார்.பக்கம் பக்கமாய் வசனம் பேசுகிற காட்சிகளைக் காட்டிலும் சின்னச்சின்ன கண் அசைவுகளின் வழி தன் காதலத்தனையையும் கொட்டுவது அசாதாரணமான பேராற்றல் எல்லோர்க்கும் வாய்த்துவிடாது.பத்மினியின் தனித்துவம் அது.

கல்யாணப் பரிசு படத்தில் காதலின் வதங்கலைத் தன் சின்னஞ்சிறு முகபாவங்களின் மூலமாக தத்ரூபமாகத் தோற்றுவித்தார் ஜெமினிகணேசன்.அவர் அளவுக்கு சாமான்ய மனிதனின் சுய இரக்கத்தை செய்வதற்கேதுமின்றித் தத்தளிக்கும் இயலாமையை திரையில் மிளிரச்செய்த இன்னொரு நடிகரைக் காண்பது அரிது. வேலைக்காகப் பொய் சொல்லப் போய் மெல்ல மெல்லக் கல் மனம் கனிந்து காதலாய் மாறும் மிஸ்ஸியம்மா படத்தில் அவருடன் இணைந்தவர் வாழ்க்கையிலும் கரம் கோர்த்த சாவித்ரி. தேன் நிலவு படத்தில் ஜெமினியுடன் இணைந்து நடித்தவர் வைஜயந்திமாலா. முன் கோபமும் துடுக்குத் தனமும் கொண்ட நாயகியை மலரினும் மெல்லிய தன் குணத்தால் கவர்ந்து மனம் மாற்றும் நல் நாயகனாக ஜெமினி காதல் மன்னன் என்ற பேருக்குப் பொருத்தம் செய்தவர் தான். எல்லாவற்றுக்கும் மேலாக யாராலும் யூகிக்க முடியாத எதிர் நாயகனாக நான் அவனில்லை படத்தில் ஒன்று இரண்டல்ல பலரையும் தன் காதல்மோசடியால் வீழ்த்துகிற வஞ்சகனாகவும் பிரகாசித்தார் ஜெமினி கணேசன்.

நிஜத்திலும் இணையான லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் விஜயகுமாரி தம்பதியர் சினிமாக்கள் பலவற்றில் ஒன்று சேர்ந்து நடித்திருந்தாலும் குமுதம் படம் அவற்றுள் தனித்து ஒளிர்வது. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா என்ற ஒரு பாடல் பதம். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நிழலன்றி வேறேதும் வளையாத கம்பீரம் அவரது பாத்திர ஏற்புக்களிலும் தெரியவே செய்தது. எளிமையின் கூச்சமும் மத்யவர்க்கத்தின் கனவு மீதான பிடிவாதமும் ஒருங்கே மிளிர என்னை விட்டு ஓடிப்போக முடியுமா பாடலில் தன்னிடம் குழைந்து சரணடையும் விஜயகுமாரியிடம் ஒரு சிட்டிகை விலகி நின்றபடியே காதலை ஏற்றும் ஏற்காமலுமாக இன்னும் கனிதல் மீதமிருக்கும் செவ்வாழை போலொரு மதுரகுணம் மிளிரக் காதலிப்பார் எஸ்.எஸ்.ஆர்.

சர்வர் சுந்தரம் படத்தில் முத்துராமனுக்கும் கே.ஆர் விஜயாவுக்கும் இடையே வெளித் தெரியாத முகடொன்றின் பின்னே மறைந்திருக்கும் தூரமலர் போன்றதொரு உலர்ந்த காதலைக் காட்சிப் படுத்தி இருப்பார்கள் இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். தன் மீது சர்வராக இருந்து மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் சுந்தரத்தின் இன்னும் மாறாத தாழ்வு மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு அவன் மனம் வலிக்காமல் எப்படித் தங்கள் காதலை அவனுக்கு உணர்த்துவது என்று உத்தம நண்பன் ராகவனாக முத்துராமனும் ராதாவாக கே.ஆர்.விஜயாவும் அந்தந்தப் பாத்திரங்களில் குறையும் மிகையுமற்று நிறைந்தார்கள்.கருணையும் அன்பும் ஒருபோதும் காதலாகாது என்பதை விளக்கிய வகையில் ராகவனுக்கும் ராதாவுக்கும் இடையே மலர்ந்தது தான் தருணம் தப்பாத நல்மலர் என்பதை சுந்தரம் உள்ளிட்ட யாவரும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் சர்வர் சுந்தரம் முன்வைத்த காதல் மின்னிப் பொன்னாய் ஒளிர்ந்தது.
ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் தோற்றுவித்த காதல் நெடுங்கால நன்மழையாகத் தொடர்கிறது. காதலின் ஞாபகத்தில் காலமெல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் டாக்டர் முரளி. கொடுநோயின் பிடியில் வாழ்வின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வேணு குடும்ப நிர்ப்பந்தத்தால் வேணுவைக் கரம்பிடித்த கணம் தொட்டுக் கணவனே திசையும் தெய்வமும் என்று வாழ்கிற குணவதி சீதா இந்த மூன்று பாத்திரங்களுக்கிடையே தென்படுகிற தீராமுரணை அடுத்தடுத்த நகர்வுகளாக்கி தோட்டத்தில் எங்கு திரும்பினாலும் பூக்கள் தெரிவது போல் மனிதம் பேரன்பு பரிவு நம்பிக்கை விசுவாசம் கைவிடாமை உறுதி எனத் ததும்புகிற உணர்வுகளை மாலையாக்கிய படம் நெஞ்சில் ஓர் ஆலயம். ஒரு ஸாம்பிள் காட்சியாக மருத்துவமனையில் டாக்டர் முரளியின் பழைய காதலைப் பற்றி அவரிடம் கேட்கத் தொடங்குவார் வேணு அப்போது அவரது வினாக்களுக்கெல்லாம் சமாளித்து பதில் சொல்வார் டாக்டர். வேணுவின் மனைவி சீதாதான் அந்தப் பழைய காதலின் நாயகி என்பதால் அவரும் பதைப்போடும் துடிப்போடும் நடப்பதை கவனித்தபடி இருப்பார். அப்போது வேணு அவளும் உங்களை மனப்பூர்வமா காதலிச்சாளா எனக் கேட்க ஆமா என்று பதில் சொல்வார் டாக்டர் இல்லைன்னு நா சொல்றேன் அவ காதலைப் பவித்ரமா நினைக்கலை காதலிக்கிறது நாகரீகம்னு நினைச்சிருக்கா என்றதும் இல்ல வேணு என மறுப்பார் டாக்டர் அந்தப் பக்கம் கண்கள் கலங்க நிற்கும் சீதா தான் சூழ்நிலையின் கைதியாக முழுவதுமாகச் சிறைப்பட்டிருப்பதை எண்ணி அழுதபடியே அங்கேயிருந்து வெளியேறுவார். பக்கம் பக்கமாகப் பேசுவதற்குப் பதில் எந்த ஒரு வசனமும் இன்றித் தன் முகமொழி மூலமாகவே காண்பவர் மனம் நெகிழ நடித்திருப்பார் தேவிகா.ஒப்பில்லா நடிப்பின் உயர விதானம் அந்தக் காட்சி.

காதலைத் தியாகத்தின் வழியாகவும் அடுத்த காலத்திற்கான கல்வெட்டுக்களைப் போலப் பதித்த படங்கள் கருப்பு வெள்ளைக் காவியங்கள் என்றால் தகும்.வாழ்க சினிமா