வயலின்

வயலின்

 

குறுங்கதை

 

அந்த வீட்டில் நெடு நாட்களாக ஒரு வயலின் இருந்தது. ஆசிரியரான வின்செண்டுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த மகள் லில்லி தான் ஆசையாய் வயலின் கற்றுக் கொண்டவள்.அப்போதெல்லாம் விடுமுறை தினங்களில் அந்த வீட்டின் நடுக்கூடத்தில் எல்லோரும் வட்டமாய் அமர்ந்து கொள்வார்கள். நடுவே  லில்லி அமர்ந்து  தான் கற்ற வயலின் பாடங்களை வாசித்துக் காட்டுவாள். தந்தைக்கு பெருமிதம் பிடிகொள்ளாதென்றாலும் தன் முகத்தில் காட்டிக் கொள்ளமாட்டார். அம்மா அடுத்த அறையில் ப்ரேயரில் இருந்தாலும் தன் மனத்தை இரண்டு பிரதிகளாக மாற்றிக் கொண்டு வழிபாட்டில் ஒன்றையும் வயலினுக்கு மற்றதையும் நிலைக்கச் செய்திருப்பாள். ஒவ்வொரு கோர்வையாய் வாசித்து முடிக்கையிலெல்லாம் பெரும் குரலில் ஆரவாரம் எழுப்பி அவளைப் பாராட்டுவார்கள். அத்தனை சப்தத்தையும் தன் மீதான மழையின் துளிகளாக மாற்றிக் கொண்டவளாய் வெட்கமும் மகிழ்வுமாய் இந்த உலகம் இதுவரை பார்த்தேயிராத முகமலர் ஒன்றைப் பூக்கச் செய்வாள்.

அவளுக்கு நேர் மூத்தவனான தாமஸூம் அவளுக்கு அடுத்தவளான ஃபெமியும் தான் ரொம்பவே அவளைக் கிண்டல் செய்வார்கள். “நான் வாசிக்கிறேன்” என்று அந்த வயலினை வாங்கி கம்பியையே தொடாமல் வெறும் வாயால் சப்தமேதும் இல்லாமல் கத்துகிறாற் போல் வாயை மட்டும் அசைத்துக் கொண்டே இருப்பான் தாமஸ். அதைப் பார்த்ததும் எல்லோருமே “ரொம்ப நல்லா வாசிக்கிறியே” என்று அவனைப் போற்றுவார்கள். அவனும் பெரிய மேதை போல் முகத்தை வைத்துக் கொண்டு ஆமோதிக்கும் பாவனையில் பார்வை பார்ப்பான். ஃபெமி இதைக் கண்டதும் தாமஸ் கிட்டே கத்துக்கோ லில்லிக்கா நீ இன்னும் நெறைய்ய கத்துக்கணுமில்லே என்பாள். இதைக் கேட்டதும் லில்லி மழை நேரத்துக் குவளைப்பூக்களில் ஒன்றைப் போல் சிலிர்த்துப் போவாள். இவற்றை எல்லாம் கண்ணுற்றபடியே தன் படுக்கையில் படுத்திருப்பார் தாத்தா எபினேஸர்.

தாமஸ் அவளுடைய பிறந்த தினத்தன்று சாம்பலும் பழுப்பும் உடலின் நிறங்களாய்த் தொனித்த வெள்ளைப் பூனை ஒன்றினை அவளுக்குப் பரிசளித்தான். அதற்கு அவள் ஜோஜோ எனப் பெயரிட்டாள். நேரம்  கிடைக்கும் போதெல்லாம் ஜோஜோவோடு தான் அவள் நேரம் செலவழிப்பாள். அவள் வயலின் வாசிப்பதை அந்தப் பூனை சற்றுத் தள்ளி நின்று நோக்கும். அவள் சாதகத்தை முடிக்கும் வரை அவளுக்கு அருகே செல்லாது.அவள் கையில் வயலின் இருக்கிறதா என்று பார்த்து விட்டுத் தான் அவளை நெருங்கவே செய்யும்.

லில்லி தொடர்ந்து சில வருடங்கள் கற்ற பிறகு வயலின் அவளுக்கு அத்துப்படியானது. பல சினிமாப் பாடல்களை முழுவதுமாகத் தன் கையை எடுக்காமல் வாசித்து விட்டு ஏறெடுப்பாள். அவளது குடும்பம் உறைந்து போய் கைதட்டக் கூட  மறந்து  பார்த்துக் கொண்டிருக்கும். ஃபெமி அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமொன்றைப் பதிப்பாள். லில்லி அதை இயல்பாகக் கடந்து போகிறவளாய்த் தன் கட்டிமுடியாத கூந்தலைப் பின் தள்ளிக் கொண்டே எழுந்து தனது அறை நோக்கிப் போவாள்.

தாமசுக்குக் கல்யாணம் ஆவதை ஒட்டி அவர்கள் குடும்பம் மொத்தமும் அவர்களது பாலக்கரை புண்ணியாளன் ஹவுஸில் ஒன்று கூடினர். மொத்தம் நூற்றி நாற்பது பேர்கள் அவர்களில் குழந்தைகள் மாத்திரமே முப்பத்தைந்து பேர். கொண்டாட்ட கும்மாளத்தில் வட்டாரமே அவர்களைத் தான் கவனித்துப் பார்த்தது. அந்த இடத்தின் நாயகியாக லில்லி தான் இருந்தாள். அவளிடம் இந்தப் பாட்டை வாசியேன் அந்தப் பாட்டை வாசியேன் என்றெல்லாம் நேயர் விருப்பங்களைக் கேட்டார்கள். ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் வாசித்து முடித்தவள் எல்லோரும் கைதட்டிக் கொண்டிருக்கும் போதே செல்ஃபோனில் யாரோ அழைத்தமைக்குப் பதிலளித்தவளாய் அந்த இடத்தை விட்டு அகன்று போய்விட்டாள்.  மீண்டும் அவள் அங்கே வந்த போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் இரண்டொருவர் நல்லா வாசிச்சே என்று சொன்னதை அலட்சியமாகத் தான் கேட்டுக் கொண்டாள்.

திருமணம் முடிந்ததும் வீடு திரும்பினார்கள். அப்போது வந்து வயலினை தனது அறைச்சுவரில் அதற்குரிய ஆணியில் மாட்டியதோடு சரி. அதன் பிறகு லில்லி வயலினை எடுக்கவே இல்லை.  ஜோஜோவுக்கு இப்போதெல்லாம் லில்லியை அணுகுவதில் பிரச்சினையே இருக்கவில்லை. அவளது மடியில் வயலின் இருந்தால் தானே ஜோஜோ தள்ளி நிற்கும் சூழல் ஏற்படும்..? அவள் தான் வயலினைத் தொடவே இல்லையே தன் இஷ்டத்துக்கு அந்த வீட்டில் நடமாடத் தொடங்கிற்று. இனி அவள் வயலினை எடுக்கவே மாட்டாள் என்று அதுவாகவே முடிவு செய்துகொண்ட பிறகு முன்பு ஏக்கமும் பொறாமையுமாய்ப் பார்த்த அதே வயலினைத் தற்போது ஏளனமாய்ப் பார்த்தது. அதன் முகத்தில் அத்தனை எள்ளல் தொனித்தது.

எல்லோரும் வெளியே சென்றிருந்த ஒருநாள் ஜோஜோ அந்த வயலினுக்கு முன்பாகப் போய் நின்றது.

“உன் மீது நான் அனுதாபப் படுகிறேன். எத்தனை செல்வாக்கோடு இருந்தாய். இப்போது உன் நிலையை நினைத்தால்…”
என்று பொய்க்கண்ணீர் வடித்தது. அந்த வயலின் எதுவுமே சொல்லாமல் அமைதிகாத்தது.
நான் வேண்டுமானால் உன்னை வாசிக்கவா…? என்று கேட்ட ஜோஜோவின் குரலில் எள்ளல் தெறித்தது.

சரி…உனக்கு இஷ்டமில்லை என்றால் நான் போகிறேன் என்று போலியாய் வருத்தியவாறே தன் மெல்லிய காலடிகளால் அந்த அறையைத் தாண்டி வெளியேறப் பார்த்தது.

“நில்…!” என்ற வயலினைத் திரும்பிப் பார்த்தது ஜோஜோ

“ஒரு வயலினைக் கைவிடுவதை விடவும் வளர்ப்புப் பூனையைக் கைவிடுவது தான் எளியது என்பதை நீ அறியவில்லையா..? லில்லி உன்னைப் பெயர் சொல்லி அழைத்து எவ்வளவு காலமாயிற்று? நீயும் நானும் ஒரே வருத்தத்தைத் தான் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உன் அறியாமையை எண்ணி நான் மேலும் வருந்துகிறேன்” என்றது.

ஜோஜோ  இருளில் சென்று அமர்ந்துகொண்டது. அதன் பிறகு சுவரில் மாட்டியிருந்த வயலினை அது நிமிர்ந்து பார்க்கவேயில்லை.