“ஸ்கூட்டர்”

“ஸ்கூட்டர்”
குறுங்கதை
 

அப்போது லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது அவன் தோளைப் பற்றி அழுத்தியபடி இந்த வீடுதான் என்றாள் பாகீரதி. வேகத்தைக் குறைத்து வண்டியை அந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தி முதலில் அவள் இறங்குவதற்காக காத்திருந்து பிறகு தானும் இறங்கி வண்டியை ஸ்டாண்ட் போட்டான். அந்த வீடு மிகவும் பழையது. நூறு வருடங்களாவது ஆகியிருக்கும் போலத் தோன்றியது. உள்ளே லொட்டு லொட்டென்று உளிச்சப்தம் போல் கேட்டுக் கொண்டிருந்தது.

மாடியில் யாரோ இரண்டு பேர் இவர்களுக்கு முதுகைக் காட்டியபடி பேசிக் கொண்டிருந்தனர். பாகீரதி சன்னமான குரலில் பேசினாள். ” அடிக்கடி இங்க வந்துர்றார் இவனே, வீடு மாறிப் போனப்புறம் இங்க என்ன வேலைன்னு கேட்டா பதிலில்லை. எதுனால இந்த ஞாபக மாற்றம்னு புரியலை. அன்னைக்கு மது காலேஜ்ல இருந்து வரும் போது யாரு வேணும்னு கேட்டிருக்கார் அவ நாந்தாம்பா மதுன்னு சொன்னதுக்கு இவர் கொழந்தை ஸ்கூல்லேருந்து இன்னும் வர்லைன்னு பதில் சொல்றார். இன்னொரு நாள் பப்புவுக்குன்னு சொல்லி வெளாட்டு சாமான்லாம் வாங்கிண்டு வரார். அதும் என்ன தெரியுமா ப்ளாஸ்டிக் பேட்டு க்ரூப் ஒன் ஆபீஸருக்கு ப்ளாஸ்டிக் பேட்டு எதுக்குன்னு கேட்டா எங்கயோ வெறிக்கறார். எனக்கு ரொம்ப பயந்து வந்தது. அப்பறம் நம்ம பாணிக்குடி ஜோஸ்யர் ஞாபகம் வந்தது. போன் செய்து கேட்டேன். அவர் காலமாரீஸ்வரர் கோவிலுக்கு ஒரு தடவை கூட்டிண்டு போய்ட்டு வந்தா எல்லாம் சரியாய்டும்னு சொல்லிருக்கார். இவனே மனோகரா உனக்கு வேண்டுதலைன்னு அவர்ட்ட பொய் சொல்லி வர்ற ஞாயித்துக் கெழமை காலைல வந்துட்றியா நாம மூணு பேரும் போயிட்டு வந்துரலாம் ப்ளீஸ் ப்ளீஸ்” என்று சன்னமான குரலில் கெஞ்சியவளின் நெற்றியிலிருந்து வியர்வை ஒரு கோடு மாதிரித் தொடங்கிப் பாதியில் சரேலென்று வேகம் பெற்று நாசியைத் தாண்டிக் கீழே தெறித்த பிறகு அசூசையாகித் துடைத்துக் கொண்டாள். பெயர் தெரியாத ஓவியனின் ஆகச்சிறந்த ஓவியத்திலிருக்கிறாற் போல் தெரிந்தாள்.

சட்டென்று அவர் வர்றார். “நீ கேஷூவலா இந்தப் பக்கம் வந்ததா சொல்லிடு என்ன?” என்றவள் அவரைப் பார்த்ததும் “எதிர்பார்க்கவே இல்லை டக்குன்னு நம்ம மனோ வந்து நிக்கறான். அதான் அவனோடயே ஸ்கூட்டர்ல வந்து இறங்கிட்டேன்” என்றவள் ஹ என்ற பெருஞ்சப்தத்தோடு பொருந்தாமல் சிரித்தாள். வினோதமான முகபாவங்களுக்கெல்லாம் அப்பால் சட்டென்று இயல்புக்குத் தன் முகத்தைத் திருப்பிய அவர் “சரி பாகீ நீ போய் பின்னாடி கிச்சன் கொழா மூடிருக்கான்னு பார்த்துட்டு பின்னங்கதவைத் தாழிட்டுட்டு வா” என்றார். அவள் உடனே அவ்ரைத் தாண்டி நின்று அவனிடம் “பார்த்துப் பேசு” என்றாற் போல் அபிநயித்து விட்டு உட்புறம் நடந்து மறைந்தாள்.

மூக்குக் கண்ணாடியைக் கழற்றி அதைத் தன் பனியனாலேயே துடைத்துக் கொண்டு “சோ…இன்னிக்கு நீங்க தான் அவ தம்பி மனோகர்” என்று சோகையாய் சிரித்தார். அவன் கடினமான புன்னகையோடு என் வண்டி முன்னாடி விழுறாப்ல வந்தாங்க ஸார். “அத்தனை இயல்பா அவங்க பேசிட்டே இங்க கூட்டிட்டு வரச்சொல்லிக் கேட்டாங்க. என் பேர் மனோகர் இல்லை. ஒருவேளை அவங்க தம்பி என்னை மாதிரியே இருந்திருப்பார்னு நினைச்சேன்” என்றான்.

அவளுக்குத் தேவை முகமில்லை மிஸ்டர். ஜஸ்ட் அவளுக்கு எதிரே வாகனத்துல எதிர்ப்படுற ஒரு மனசு. அவ்ளோ தான். எத்தனையோ மருந்து மாத்திரை காவல் கெடுபிடின்னு பண்றோம். இந்த வீட்டுக்கு நான் கெளம்பி வர்றப்ப இதோட நாலஞ்சு முறை அவளும் எஸ்கேப் ஆகி வந்துர்றா. ஒரே ஸ்டோரி எனக்கு புத்தி சரியில்லைன்னு ஒரு வாதம். என் மக வயிற்றுப் பேத்தி மகன் வழிப் பேரன்னு யாரையுமே அவளுக்கு அடையாளம் தெரியலை. ஒருமாதிரி மெல்ல மெல்ல அவளுக்குள்ளே ஞாபக நீக்கம் ஒண்ணு நடந்திட்டிருக்கு. மனோகர் அப்டின்ற ஒருத்தனுக்காகத் தன் உலகத்தோட நிசங்கள் ஒவ்வொண்ணா அழிச்சிட்டிருக்காளோன்னு தோணுது” என்றவரின் குரல் லேசாய் நனைந்திருந்தது.

கட்டி வச்சி எதும்” என்றவன் பாதியிலேயே தன் வாக்கியத்தை முடித்துக் கொண்டான்

எனக்கு அவளை ஹார்ஷா நடத்தத் தெரியலைங்க மிஸ்டர்…உங்க பேரென்ன?” என்றார்

அவன் தன் பேரைச் சொல்லிக் கொண்டே “எப்பிடி இறந்து போனாருங்க மனோகர்” என்றதற்கு “அதெதுவுமே தெரியலைங்க..அஃப்கோர்ஸ் இருக்கானா இல்லையான்னு கூடத் தெரியாது. காணாமப் போயிட்டாங்க.ஒரு புதங்கிழமை காலையில வீட்லேருந்து ஸ்கூட்டரை எடுத்துட்டுக் கெளம்பிப் போனவன் திரும்பலை. அந்த அபத்தம் மீதான வியப்புத் தான் அவ மனசைப் பிசைஞ்சிருச்சின்னு நினைக்கிறேன். சரி அவ வர்றதுக்குள்ளே கெளம்பிடுங்க தேங்க்ஸ்” என்றார்.

அவன் தன் பாஷன் ப்ளஸ் பைக்கிலேறி ஹெல்மெட்டை அணிந்து விர்ரென்று கிளம்பிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.