ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்
   குறுங்கதை


“அவனுக்கென்ன தெரியும் சின்னக்குழந்தை” என்றாள் ராணி அத்தை.
ரொம்ப நல்லவள்.எனக்குப் பிடித்தமான சாக்லேட்டுக்களை எப்போதும் வாங்கிக்கொண்டு வருவாள்.
“அப்டியெல்லாம் விட்டுறக் கூடாது. இது..இது ஒருவகையிலான அடமண்ட் நேச்சருக்குக் கொண்டு போய் விட்டுறும்.டைல்யூஷன்,அப்செஷன்…அப்டி இப்டின்னு… குழந்தைகளை நாம தானே முழுசா வளர்த்தெடுக்கிறோம். இது நம்பளோட பொறுப்புத் தானே?” என்றார் சுப்புணி மாமா. ராணி அத்தையின் கணவர். ரெயில்வேஸில் வேலையில் இருந்தார். வாலண்டரி ரிடையர்ட். இப்படித் தான் புரியாமல் பேசுவார்.

அம்மாவும் அப்பாவும் எதுவுமே பேசவில்லை. அம்மாவின் கண்கள் லேசாய்க் கலங்கி இருந்தன. மதிய சாப்பாடு அடுப்படியில் தயாராகிக் கொண்டிருந்தது. அம்மாச்சி மேற்பார்வையில் சமையலை கவனிக்க பார்வதி என்றொரு அம்மாள் வேலைக்கு வருகிறார். அவர் இல்லாமல் சமீபத்தில் எதையும் சமாளிக்க முடிவதில்லை. அம்மா அப்பா ரெண்டு பேருக்குமே பன்னாட்டு நிறுவனங்களில் பெருத்த சம்பளத்தோடு வேலை. வீக் எண்டைப் பிரம்மாதமாய்க் கொண்டாடியே தீர்வது என எப்போதும் நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இரவில் வெகுநேரம் டீவீ பார்த்து விட்டு ஞாயிற்றுக் கிழமை லேட்டாக எழுந்திருப்பதில் தான் அவர்களுடைய பிரம்மாண்ட பிரமாதமெல்லாமும் அடங்கி இருக்கிறது. வெல்…என் பேர் ஷான்.நான் இந்த வீட்டின் இளவரசன். ராஜ்யமே இல்லாத ராஜவாரிசு. ஹ..!
Spiderman Toys - Buy Spiderman Toys Online at Best Prices in India |  Flipkart.com

“எப்பப் பார்த்தாலும் ஸ்பைடர்மேன். எதுல பார்த்தாலும் ஸ்பைடர் தான். மூணு வயசுல ஆரம்பிச்சது. இதோ..”அப்பாவைக் காட்டி “இவர் தான் அவனுக்குப் பிடிக்கிறதுன்னு ஸ்பைடர் ஸ்டிக்கர்ஸை வாங்கித் தந்தார். ஃப்ரிட்ஜோட சைடு சுவர் முழுக்க ஒட்டினான். ஒண்ணு ரெண்டுனு நிறுத்திருக்கலாம். அவனுக்கு ஒருவகையில லஞ்சம் மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் ப்ராடக்டா ஸ்பைடர் மீதான அவனோட ஆர்வத்தை நாங்க தான் தப்பா பயன்படுத்திக்கிட்டோம்னு இப்ப தோணுது. ஜெய்…நீ கொஞ்சம் பொறுப்பா இருந்திருக்கலாம்”. என்று மூக்கை உறிஞ்சியபடியே சொன்னாள் அம்மா.

“என்ன ஸ்வாதி என்மேல பழி போடுறே..? என் அண்ணன் மனோவோட பொண்குழந்தை ஜில்லு அதுக்கு டெடிபேர் வாங்கித் தர்றச்சே இவன் அழுது கேட்டான்னு இம்மாம் பெரிய ஸ்பைடர் துணிபொம்மையை வாங்கினது யாரு..? என் தப்புகள் எல்லாம் சேர்த்து சில நூறு ரூபாயின்னா நீ அதோட பத்து மடங்கு ஸ்வாதி. அந்த பொம்மை எவ்ளோ பெரிசு..? அப்பறம் டீவீடிஸ் வால் ஸ்டிக்கர்ஸ் தொடங்கி ஸ்கூல் நோட்டு பென்ஸில் பாக்ஸ் வரைக்கும் எங்க பார்த்தாலும் எதுல பார்த்தாலும் ஸ்பைடர் மயம் தான். நீயும் தானே அவனை என்கரேஜ் பண்ணே..?” வெடித்த ஜெய்யாகிய டாடியை சமாதானப் படுத்தினாள் ராணி அத்தை “இர்ரா இவனே எதுக்கெடுத்தாலும் ஜெமினிகணேஷ்க்கு மூக்கு மேல கோபம். சும்மா பேசிக்கிட்டு இருக்கும்போது ஏன் தவ்வுறே…?” என்றாள் ராணி அத்தை என்றால் அப்பாவுக்கு அத்தனை மரியாதை மற்றும் பாசம்.

“இல்லக்கா…கொஞ்ச நாளாவே தனியா பேசிட்டிருக்கான் நாம க்ராஸ் பண்ணா நிறுத்திர்றான்னு ஒரு நாள் பர்ப்பஸாவே ஒளிஞ்சிண்டு பார்த்தேன். என்ன பண்றான்னு. அவன் அந்த ஸ்பைடர் பொம்மையோட பேசிட்டிருந்தான். அதை ஒரு பொம்மைன்னு டீல் பண்ணலை.அது நெஜம்னு ஃபீல் பண்ணிட்டிருக்கான். இதைப் பற்றி சைக்யாட்ரிஸ்ட் கிட்டே ஒபீனியன் கேட்கலாம்னு இவர்கிட்டே சொன்னா ஒரே பய்யனை உளவு பார்க்குறியா அப்டின்னு தாம் தூம்னு குதிக்க ஆரம்பிச்சுட்டார். தோதா நல்லவேளை நீங்க வந்தீங்க” என்று அவள் வருகையை இதோடு இணைத்தாள்.

“இதோ பார் ஸ்வாதி..நான் ரெண்டு பெத்தேன். இதோ…”ஜெய்யைக் காட்டி…”இவன் கூட எனக்குப் புள்ளை மாதிரி தான். ஏழு பேரை வளர்த்து விட்டுருக்கேன். நாங்க பார்க்காததா..? நான் ரெண்டு சைக்யாட்ரிஸ்டுக்கு சமம். நாஞ்சொல்றேன். பப்லுவை சின்னவன்னு தள்ளவும் முடியாது.பெரியவன்னு சரிக்கு சரியா கையாள்றதும் தப்பு. என்ன இப்போ பொம்மை வச்சி வெளையாட்றதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான். வயசு மாறும் போது அவனே கிரிக்கெட் புட்பால்னு கெளம்பிடுவான். இப்பத்திக்கி எதையுமே ரொம்ப சந்தேகக் கண்கொண்டு பாராம சும்மா இரு. போட்டும்” என்றாள். தெய்வம் மனுஷ்ய ரூபேணவாய் அதை ஏற்பதைத் தவிர அம்மாவுக்கு வேறு வழியில்லை.

பேச்சு வேறு திசைகளுக்குத் திரும்பிற்று.சாயந்திரம் வரை இருந்து விட்டுத் தான் கிளம்பினார்கள். ராணி அத்தை அம்மாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு தழுதழுத்தாள். “பப்லு அப்டியே அச்சு அசல் எங்கப்பா தான். அந்த மனுஷனே திரும்ப வந்து சேர்ந்துருக்கறாப்ல தான் தோண்றது. அவன் ரொம்பப் பிரம்மாதமா வருவான். கடிஞ்சுக்காதே..ப்ளீஸ்” என்றவள் என்னை அழைத்து நெற்றியில் தொடங்கிக் கன்னமிரண்டிலும் முத்தி விட்டுக் காரிலே ஏறிக் கொண்டாள். டாட்டா காட்டியபடியே ரிவர்ஸ் எடுத்துக் கிளம்பினார்கள்.

அன்றைக்கிரவு அம்மா அப்பா ரெண்டு பேரும் உறங்கிய பிறகு நான் எழுந்துகொண்டேன். பாத்ரூமுக்குப் போய் விட்டு ஃப்ரிட்ஜை நெருங்கினேன். தண்ணீர் பாட்டிலில் கை வைத்த நேரம் என் அறைவாசலில் நின்றுகொண்டிருந்த ஸ்பைடரின் கண்களில் கண்ணீர். அழுகின்றானா என்ன..?

“ஏ என்னாச்சு?” என்றேன் ரகசியங்களுக்கான குரலில்

“எனக்காக நீ கிறுக்குப் பட்டம் வாங்க வேண்டாம் பப்லு. நாளைக்கு நீ ஸ்கூலுக்குப் போறச்ச என்னைக் கூட்டிட்டு போயி ஓடைக்கரைப் பக்கம் விட்று. நான் வேற எங்கனாச்சும் போய்க்கிறேன்” என்றான்.

“நைட்டு நேரம் ரொம்பக் குழப்பிக்காதே…போயித் தூங்கு அப்பறம் பேசிக்கலாம்.யாராச்சும் பார்த்துட்டா எனக்குத் தான் பிரச்சினை புரிஞ்சுக்க” என்று அதட்டியபடியே படுக்கைக்குத் திரும்பி அப்பா அம்மா ரெண்டு பேர் நடுவில் படுத்துப் போர்வையை மூடிக் கொண்டேன்.