சமீபத்து ப்ரியக்காரி
12 நிபந்தனைகளுக்கு உட்படுதல்
அவளென்பவள் சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். அந்தப் பழக்கம் எனக்கும் அவ்விடமிருந்தே வந்து சேர்ந்தது. ஒரு செல்லச்சொல்லை அடிக்கடி உபயோகிப்பாள்.அச் சொல்லை எப்போது கடக்க நேர்ந்தாலும் அவள் குறித்த ஞாபகமாகவும் அதுவே மாறிவிடுகிறது. சிதற்றிச் சிரிப்பதற்கான நகைச்சுவை என்னவோ செய்தி வாசிக்கும் தொனியில் சிரிக்காமல் சொல்வாள். அப்படி வேறாரும் என்னிடம் எதையும் சொன்னதே இல்லை. அதிகம் மனிதப் புழக்கமில்லாத நட்சத்திர விடுதியின் உணவுக்கூடத்தில் எதிரெதிரே நாங்கள் அமர்ந்திருக்கையில் கண்ணாடிக்கூரையின் பின்புலத்தில் முழு நிலவு தோன்ற இமைக்காமல் கண்கொண்டு பார்த்தபடி இருந்தாள். அந்தத் தோற்றத்தை என்னுள் நிரந்தரமாய் வரைந்துகொண்டிருக்கிறேன். எனக்கு சரியாக வரையத் தெரியாதெனினும் அவளின் திருமுகம் அத்தனை துல்லியமாக அப்படியே வந்திருக்கிறது. அந்த ஓவியத்தை நான் எனக்கே பரிசளித்துக் கொள்ளவிருக்கிறேன். தீண்ட மறுத்த ஓர் நாகத்தைப் போல், என் வாழ்க்கையை என்னிடமே அவள் தந்து சென்றாற் போல. இன்னமும் அந்த வருடத்தின் அத்தனை தினங்களையும் திறந்தால் அவள் மட்டுமே எல்லாமும் இருக்கிறாள். அது போதுமானதாயிருக்கிறது. அந்த வருடத்தினூடே நானெனும் மாயப்பூனை சென்று திரும்புகையில் எப்போதாவது தொலைந்துவிடுவதற்கான வரம் கிடைக்காதா என்றேங்கி அலைகிறது.
மேலுமொரு தகவல். அவள் என்னை ‘ப்ரின்ஸ்’ என அழைப்பாள். ஒரு போதும் அந்தப் பெயரில் வேறாரும் என்னை அழைக்காமலிருங்கள்.
போதும் அது . சாலச்சுகம்.