சமீபத்துப் ப்ரியக்காரி
19 தனியளின் சம்பாஷணை
- 1
“இன்றைக்கும் நிலவு வரும்”
என்கிற எண்ணத்தில் தொடங்குகிறது
உறங்காமையின் இதிகாசம். - 2
நிலா பார்த்தல் என்பது
அடிமையைப் பழக்குவதற்கான
உத்தம உபாயங்களிலொன்று. - 3
எப்படி உறங்குவது என
ஒரு கண் வெடிக்கையில்
ஏன் உறங்க வேண்டும் என்று
மற்றது கெக்கலிக்கிறது. - 4
இதொரு பழக்கம்.
பிரித்தாளும் சூட்சுமம்.
கண்களை விடவும்
பிரிவினைவாதம்
இன்னொன்று இல்லை - 5
நிலவின் இன்மையைப் பரிதியென்பது அறிவீனம்.
முழுமையின்மையின் மிகப்பெரியது பரிதி.
அதனாலென்ன?
இரவில் அதற்குச் சிறிதும் இடமில்லை.
இல்லாமற் போவதன் மாபெரிய உதாரணம் பகல். - 6
இரவென்பது
கோடிச் சூரியன்களின் குழாம். - 7
நிலவுதிரும் தொட்டி இந்த மாடி.
நீர்மம் மெல்ல நிரம்புகிற கலயமும் அஃதே.
இரவின் முழுமையில் சாலையெல்லாம் வழிந்தோடுகிறது வெண் குருதி.
காதலும் காமமும் உன்மத்தமும் இன்னபிறவெல்லாமும் பிறைகள்.
ஒவ்வொரு பிறைக்கு உட்புறமும் ஆயிரம் வரலாறு. - 8
உறக்கமின்றித் தவிக்கிறேன்.
இன்றைக்கும்
சுயவணங்கித்
தன்போற்றித்
தான் போற்றிப் பாடுகின்றாய்
என் உறக்கத்துக்கு ஒருவழி சொல்லிவிட்டுப் போ! - 9
வழியாவது…
இருப்பது ஒரு பதில்.
“உறங்குவதற்கு ஒரு நாள் போதும்”
எந்த நாள்?
நிலவு வராத ஒற்றை ஒரு நிசி
அன்றைய உறக்கம் ஆயிரம் பூர்ணிமை - சாலச்சுகம்.