“உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் எது? ஏன் என்பதைப் பற்றி அதிகபட்சம் 100 சொற்களுக்குள் கீழே கமெண்ட்டில் பதிவிடுங்கள். சிறப்பான 25 பதிவுகளுக்கு என்னுடைய புத்தகம் ஒன்றை பரிசாக அளிக்கிறேன்”
என்று எனது முகப்புத்தகப் பக்கத்தில் 22 ஜனவரி காலை 11.44 மணிக்கு பதிவிட்டிருந்தேன். அன்றிரவு 9 மணி வரை பதிலளித்தவர்களின் சிறந்த பதிவுகளை இங்கே தொகுத்து அளித்திருக்கிறேன்.
பரிசு பெற்றோர்க்கு என் அன்பான வாழ்த்துகள்.
வாழ்தல் இனிது.
Nithya
நித்யா
ரகசியம்… ரோண்டா பைரன் எழுதியது.
நிஜமாவே வாழ்க்கைய கொஞ்சமாவது நேர்மறை எண்ணங்களையும் நன்றியுணர்வையும் கொண்டு கையாள கற்றுத்தந்தது.
Vijay Mahindran
விஜய்மகேந்திரன்
ஜேஜே சில குறிப்புகள்
சுந்தரராமசாமியின் இந்த நாவல் தான் தீவிர இலக்கியத்தில் படித்த முதல் நாவல். அதன் அடர்த்தியான தீவிர மொழி, உவமைகள், இயங்குதளம், நாவலின் வடிவம் என பல கூறுகளில் என்னை வியக்க வைத்த நாவல். என்னை எழுத்தாளராக மாற்றியதில் பெரும்பங்கு அந்த நாவலுக்கு உண்டு.
M Boopathy Raja
எம்.பூபதிராஜா
ஜெமோவின் அறம் சிறுகதை தொகுப்பு தான் என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இயற்கையின் சமநிலை தன்மையை பேண வேண்டிய அவசியத்தை யானை டாக்டர் மூலமாகவும்,சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நூறு நாற்காலிகள் வழியாகவும்
அதே சாதியை பற்றி மேலே எழ ஒரு சமூகத்தால் முடியும் என்பதை வணங்கானும்
சோத்து கணக்கின் மூலம் பெறாமலே ஒருவர் தாயாகும் அற்புதத்தையும் இன்னும் ஏராளமான மாற்றத்தை என்னுள் விதைத்து சென்றது அறம் தொகுப்பு என்றால் மிகையில்லை…
ஜெயதேவன்
பொன் விலங்கு…நா.பார்த்த சாரதி எழுதிய நாவல்….அதில் வரும்
சத்தியமூர்ந்தி போல வாழ ஆசைப்பட்டேன்..கல்லூரி பேராசிரியாக அதாவது த்திய மூர்த்தி போல வர ஆசைப்பட்டேன்…பட்டப்படிப்பு முடித்து ஓராண்டில் இடைவெளி ஏற்பட்டது. இதனால் பட்டதாரி ஆசிரியராகவே ஆக முடிந்தது
ஷேக் முஹமது
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாசிப்புதான் ஒரு நிகழ்வை பிறர் ரசிக்கும்படி எப்படி எழுதுவது என சொல்லிதந்தது.
பாலகுமாரனின் தனிமை தவம் நாவல். ஒரு வாழ்வியல் சோதனையில் சகோதரர்களின் பலம் என்ன என்பதை நிறைய சொல்லித்தந்தது. இந்த கதையை மறுபடி மறுபடி வாசித்து நெகிழ்ந்திருக்கிறேன். எளிய கதை. ஒரு நாள் இரவில் கணிப்பொறி வகுப்பில் மின்சாரம் அற்றுப்போன முன் இரவின் பொழுதில் இந்த கதையை ஒரு திரைப்படத்தை விவரிப்பது போல் நண்பர்களிடம் விவரித்ததில் நீ சினிமாவுக்கு கதை சொல்ல போலாம்டா என எல்லோரும் பாராட்டினார்கள்.
அதில் அரசன் என்ற எஜமானனின் கீழ் எப்படி பணிபுரியவேண்டும் என ஓரிடத்தில்சொல்லியிருப்பார். நான் கடந்து வந்த பணி இடங்களில் எல்லாம் அதை பின்பற்றிதான் நடந்தேன். யாரேனும் வாசித்தவர் இதொன்றும் அவ்வளவு சிலாகிக்கும்படி இல்லையே என்பார்கள்.. இதெல்லாம் எச்சத்தால் உணரப்படும். அது அப்படித்தான்
Shahjahan R
ஷாஜஹான் ஆர்
மகாத்மா காந்தியின் சிந்தனைகள் (Mind of Mahatma)
1996இல் டிடிபி ஆரம்பித்தபோது, கையெழுத்துப் பிரதியை எடிட்டிங்குக்குப் பிறகு ரெவ்யூவுக்காக வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு டைப்செட்டிங் செய்து, ப்ரூப் படித்து, புத்தகமாக வெளிவருவதற்கு இடையிலான 20 ஆண்டுகளில் பலமுறை வாசித்தேன். அதற்கு முன்பே டைப்செட்டிங் செய்வதற்காக வந்த காந்தியின் நூல்கள் சிலவற்றைப் படித்து, சிந்திக்க ஆரம்பித்திருந்தவன், இதைப் படித்து மேலும் தெளிவடைந்தேன். அது ஏற்கெனவே மினிமலிசத்தில் நம்பிக்கை கொண்டிருந்த என்னை இன்னும் எளிமையைப் பின்பற்றுபவனாக ஆக்கியது. குறிப்பாக, “ஒரே விஷயத்தில் நான் சொன்ன கருத்துகளில் முரண்பாடு தெரியுமானால், கடைசியாக என்ன சொன்னேனோ அதுதான் என் கருத்தாகக் கொள்ள வேண்டும்” என்றார் காந்தி. அதுதான் சிந்தனையின் பரிணாம வளர்ச்சி. அதைப் படிக்கும்வரை காந்தியின் சில வாசகங்களை எடுத்துக்கொண்டு வசை பாடுபவர்களின் வாதங்களால் குழம்பிக் கொணடிருந்த நான், காலத்துடன் ஒப்பிட்டு காந்தியைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். என் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது அந்நூல்.
(அப்பாடா… 97 சொற்களில் முடித்து விட்டேன்!)
Sathya GP
புத்தகம் அல்ல ஒரு சிறுகதை (இக்கதையின் தலைப்பிலேயே சிறுகதைத் தொகுப்பும் உண்டு) ஆராயாமல் ஒருவர் மீது பழி சுமத்தி அவரை தப்பானவராக சித்தரிப்பது நிரந்தர பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தும் என்பதை சொன்ன கதை. 3 மாவரைக்கும் மெஷின் கடைகள், பள்ளிக்கூடம், வாட்ச்மேன், இரு மாணவர்கள்… இவை கதையின் முக்கிய கதை மாந்தர்கள். சாகாவரம் பெற்ற எழுத்து. தலைப்பு : 1945ல் இப்படியெல்லாம் இருந்தது. எழுதியவர் : அசோகமித்ரன்
கிருத்திகா தரன்
சேபியன்ஸ் ,எரியும் பனிகாடு, சோளகர் தொட்டி.சேபியன்ஸ் ல் முக்கியமாய் நம் வேட்டை மக்களில் ஒருவனுக்கு ஒருத்தி கிடையாது. பொருளாதாரம், கம்பெனி ,சடட்டம் எல்லாம் கற்பனை டயட் என்பது மரபணுவில் இல்லை.எரியும் பனிக்காடு. மனதை உலுக்கியது. தேனீர் புதர்களின் பின் இருக்கும் மரணங்கள்.சோளகர் தொட்டி வீரப்பன், மலை மக்களின் மேல் உள்ள பார்வையை மாற்றியது,,ஏன் உலுக்கியது.அண்ட் காப்கா மேட்டமார்பாசிஸ் ..அதுதான் மேஜிக்கல் ரியலிசம் சொல்லி ததந்து,,பின் ஸ்பானிஷ் நாவல்களை படிக்க தூண்டி இலக்கியத்தின் இன்னொரு கதவை திறந்து வைத்தது… உணவில் எது சிறப்பு என்று கேட்டால் எதை சொல்வது. ஒவ்வொருவரும் ஒரு காலக்கட்டத்தில். சுஜாதாவின் ஒரு சிறு கதை பெண்ணிய சிந்தனையில் ஆழம் கொண்டு வந்தது. பின் கல்கி சோழர் பார்வை, பாலக்குமாரன் ஆண்கள் பற்றி, ஜெ மொ யானை டாக்டர், உரையாடும் காந்தி, நான் கடவுள் ..பெருமாள் முருகனின் அத்தனை புத்தகங்கள்..இரா.முருகவேள் புத்தகங்கள். முக்கியமாய் பொருளாதார அடியாளின் வாக்கு மூலம்..எதை விடுவது ?
Suresh Subramani
பாலகுமாரனின் ‘கை வீசம்மா கை வீசு’ என்ற நாவலைப் என் கல்லூரி காலத்தில் படித்தவுடன் பெண்களின் மீதான என் பார்வை அப்படியே மாறிவிட்டது. நாவலில் கதைநாயகி நாயகனால் கடும் அவமானப்படுத்தப்படும்போது அதிலிருந்து அவள் மீண்டெழுந்து வாழத்தலைப்படுவது எனக்கு பெண்கள் மீது கரிசனத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. பெண்ணின் மனதை பாலகுமாரன் துல்லியமாக படம்பிடித்து காட்டியிருப்பார்.அதுவரை சக கல்லூரி வகுப்பு தோழிகளை கேலி செய்யப்பட வேண்டிய பாலினம் மட்டுமே என நினைத்த என் நினைப்பும் அவர்கள் மீதான என் பார்வையும் முற்றிலும் மாறியது. தற்போது எத்தனை நாவல் படித்தாலும் அந்த நாவலை என்னால் மறக்கவே இயலாது…Thanks to Bala
அதிஷா வினோ
MANS SEARCH FOR MEANING – VIKTOR FRANKL – மீளவே முடியாத துன்பத்துலயும் கூட கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவை உணர்வை மிச்சம் வச்சுகிட்டு சிரிக்கவும் மத்தவங்கள சிரிக்க வைக்கவும் பழகிட்டா நம்ம துன்பத்துலருந்து மட்டும் மீண்டு வராம அடுத்தவங்களுக்கும் கணநேர ஆறுதலை நம்மாள தரமுடியும்ன்ற நம்பிக்கையை எனக்குள்ள உருவாக்கின நூல்னா அது இந்த நூல்தான். கிப்ட் குடுக்கறதுனா என்னோட முதல்சாய்ஸ் இதுதான். அவ்ளோ பிடிக்கும். எப்பல்லாம் வாழ்க்கை நம்மை தூக்கிப்போடு தூர்வாருதோ அப்பல்லாம் படிப்பேன். ஜாலியாருக்கும்.
Sudha Gurunathan
பழிவாங்குபவன் – சிறுகதை, ஆண்டன் செகாவ்
எந்தவொரு கோபமும் எதிராளியை மட்டுமல்ல கோபப் படுபவரையும் காயப் படுத்தும்…
மன்னிப்பை விட ஆற்றுப்படுத்தும் மருந்து எதுவும் இல்லை…
காலம் தாழ்த்தினால் எந்தக் கோபமும் குறையும்
Malarvannan K
To Kill a Mockingbird
– by Harper Lee
இந் நாவலை வாசிக்கும் வரை இருந்த அனுபவத்தை முற்றிலும் புரட்டிப் போட்டது. தொடர்ந்து சில நாட்கள் சரியான தூக்கமின்றி தவிக்க விட்ட நாவல். விவரிக்க வார்த்தைகளே இல்லை…
Firthouse Rajakumaaren Nazeer
ஒரு சில புத்தகங்களை சொல்லலாம்தான். என்னை எழுதத் தூண்டியது சுஜாதா எழுத்து.
ஆனாலும் மூடு மந்திரமாக இருந்த இஸ்லாமியர்களின் கலாசாரத்தை
அவர்களின் வாழ்வியலை யாரும் எழுத தயங்கிய நிலையில்
துணிச்சலாக வெளிப்படுத்தி
இலக்கியப் பதிவாக்கி இஸ்லாமியர்களின் வாழ்வியலையும் இலக்கியத்தில் நாவலாக்கி என்னையும் அந்த வழித்தடத்தில் எழுதத் தூண்டிய தோப்பில் முஹம்மது மீரானின் *ஒரு கடலோர கிராமத்தின் கதை * நாவல்.
Prabhu Dharmaraj
திருவிவிலியம் – நிறைய ஆதர்கள் எழுதினது… பாவங்களின் வகைகளைத் தரவாரியாகக் கற்றுத் தந்து என்னைச் செய்ய வைத்து வாராவாரம் தவறாமல் பாவமன்னிப்பு வழங்கியது… ஏற்கனவே அனுப்பறேன்னு சொன்ன புத்தகத்தையே இன்னும் ஆளக் காங்கல…
ரம்யா ரவிக்குமார்
மனதைப் பாதித்த, எண்ணத்தை விரிவடைய வைத்த புத்தகங்கள் என்றால், பதின் வயதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புத்தகம் உள்ளது. அதில் முதலாவது ஆனந்த விகடனில் வெளியான ஞானி கட்டுரைகள். அடுத்து பதின் வயதில் நான் வாழ்ந்த குறுகிய வட்டத்திற்குள் இருந்த சிந்தனா ஓட்டத்தை மாற்றி அமைத்தது ஜெயகாந்தன். மனிதர்களைப் படிக்க கற்றுக்கொடுத்தது பாலகுமாரன்.
ஆனால், உண்மையாகவே வாழ்வை மாற்றிய புத்தகம் ஒன்று உண்டு. அது முகில் அவர்களின் “உணவு சரித்திரம்”. உண்மைத் தரவுகளை சுவாரசியமாகவும் எழுதலாம் என்பதை அறிமுகப்படுத்தியதோடு, அந்த புத்தகத்தைப் பற்றி நான் பேசிய காணொலி, ஒரு அடையாளத்தையும் பெற்றுத்தந்தது. அந்தக் காணொலியைப் பார்த்துவிட்டுதான், அதுவரை அறிமுகமே இல்லாத ஒருவர், வாசிப்பு மற்றும் எழுத்து சார்ந்த வேலை வாய்ப்போடு அணுகி, இன்று நெருங்கிய நட்பானது. பிடித்தத் துறையில் நுழைய, எந்தக் கதவைத் தட்டுவது என்று தெரியாத சூழலில், ஒரு தொடக்கப்புள்ளியாய் அமைந்தது அந்தப் புத்தகமும், அதற்கான விமர்சனக் காணொலியும்தான்.
Elangovan Muthiah
பொன்னியின் செல்வன்
இது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியலாம். ஆனால், நான் மூன்றாம், நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் கல்கியில் தொடர்கதையாக வந்தபோதே இதைப் படித்துவிட்டேன். அம்மா ஒவ்வொரு மாதமும் அதைப் பைண்ட் செய்வதற்காகப் பிரித்துச் சேர்த்து வைப்பார்கள்.
என் வாழ்வில் வாசிப்புக்கான முதல் கதவைத் திறந்து வைத்த காரணத்தினாலும், இன்றும் நிறையப் பேருக்கு எட்டிக்காயாகக் கசக்கும் வரலாற்றுப் பாடத்தை, பள்ளிக்காலத்திலேயே கதை புத்தகத்தைப் போல, வாங்கிய முதல் நாளிலேயே என்னை அட்டை முதல் அட்டை வரை படிக்க வைத்த காரணத்தினாலும், ஐந்து பாகங்கள் கொண்ட அதைப் படித்த பின், எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் அதைப்பார்த்து மலைக்கும் எண்ணமில்லாமல் ஆக்கியதாலும், உண்மை வரலாற்றுக்கும், புனைவுக்கும் இடையேயான வேறுபாட்டைச் சின்ன வயதிலேயே எனக்கு அறியக் கொடுத்ததால் நிறைய மயக்கங்களிலிருந்து என்னைப் பிற்காலத்தில் காப்பாற்றியதாலும், என் வாழ்வை மாற்றிய புத்தகம் என நான் பொன்னியின் செல்வனையே சொல்லுவேன்.
இதையும் சேர்த்து, மிகச்சரியாக நூறு வார்த்தைகள்.
Nallu R Lingam
பிரபஞ்சனின் மகாநதி. எங்கள் ஊர் நூலகத்தில் எடுத்து வாசித்த நூல். சிறார் இலக்கியத்திலிருந்து வழக்கம்போல ராஜேஷ்குமார், பிகேபி வாசித்துக்கொண்டிருந்தவனை தீவிர இலக்கியம் பக்கமாகத் திருப்பிய படைப்பு. அந்த எழுத்து நடை வாசித்துப் பல ஆண்டுகள் கழித்தும் மீண்டும் தேடிப்பிடித்து வாங்க வைத்தது. நான் வாசித்து நேசித்த பிரபஞ்சனை வாஞ்சையோடு கைகளைப் பற்றிக்கொள்ள வைத்தது. அவரின் நேரடியான அன்பெனும் மகாநதியில் நனைய வைத்தது
Lakshmi Narayanan Murugiah
எஸ்.ரா வின் புத்தகங்கள் பிடிக்கும். குறிப்பாகத் துணையெழுத்து மற்றும் கதாவிலாசம். மனித இயல்புகளை யதார்த்த நிலையிலேயே பதிவு செய்பவர். உலகத்தில் மிகச்சிறந்த மற்றும் அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடியது அன்பு மட்டுமே என்பதை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.பயணங்கள் மற்றும் அதில் நாம் சந்திக்கும் மனிதர்கள் போன்றவை அனுபவங்களைக் கற்றுத்தரும் என்பதை அவரின் எழுத்துக்கள் மூலமாக உணர்ந்து கொண்டேன்.
Pachaiyappan Ge
ஸ்ரீலால் சுக்ல..வின்தர்பாரி ராகம்..கட்டமைக்கப்பட்ட புனித பிம்பங்களைப்பற்றிய எள்ளலை முன்வைத் த தன்மூலம் வாழ்வை எளிதான ஒன்றாக கருதச் செய்த து..எல்லா தத்துவங்களைநும்,கொள்கைகளையும் குறித்து மறு சிந்தனை செய்யத்தூண்டியது..இலக்கிய உலகின் ஓஷோ ஸ்ரீலால் சுக்ல
Viji Muruganathan
.இந்துமதி அம்மாவின் தரையில் இறங்கும் விமானங்கள்..எல்லோரிடமும் அன்பை மட்டுமே கொடுத்து வாங்கணும் னு சொல்லிக் கொடுத்த புத்தகம்.யாரையும் எதையும் எப்பவும் கேள்வி கேட்காம அவங்கள அவங்கள மாதிரியே ஏத்துக்கணும்னு சொல்லிக் கொடுத்த புத்தகம்.பலமுறை படித்து மனதில் பதிய வைத்துக் கொண்ட வார்த்தைகள்..”அன்பைத் தவிர வேற என்ன வேணும்.அது எவ்வளவு பெரிய விஷயம்.மனித உறவுகளை விட வேறெதுவும் பெரிசா என்ன..?உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சு எல்லோரையும் துருவிப் பாக்களை நீங்க விட்டுடணும்.ஒவ்வொருத்தரையும் அப்படியே ஏத்துக்கணும்.ஏத்துண்டு சந்தோஷமா இருக்கத் தெரியணும்.மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தத் தெரியணும்”..
Lakshmi Gopinathan
“தரையில் இறங்கும் விமானங்கள்”, இந்துமதி. நான் சரியாக திருமண வயதில் இருக்கும்போது இந்த நாவலை வாசித்தேன். அதுவரை எனக்கு ஒருவன் கணவனாக இருப்பதற்கான தகுதிகள் என்னவெல்லாம் என கற்பனை செய்து வைத்திருந்தேனோ அதை சுக்குநூறாக நொறுக்கிப் போட்டது அந்த நாவல். எல்லாவற்றையும் புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து பார்க்கக் கூடாது. கொஞ்சம் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்பதையும். ஒருவனின் சிறந்த தகுதி என்பது நல்ல மனிதனாக இருப்பதுதான் என உணர்த்திய நாவல். அதன் பிறகு ஏற்பட்ட பக்குவம் இன்று வரை என்னை வழிநடத்துகிறது.
Ganesan Natarajan
எனக்கு மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் என்றால் அது பாலகுமாரன் எழுதிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்கிற கட்டுரைத் தொகுப்பு, அது புதுசா எந்த விஷயத்துக்கும் ரிஸ்க் எடுக்கணும் அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த,புது முயற்சிக்கு தயாராகணும் என்றால் ,இந்த புத்ததகத்தை எடுத்து படிப்பேன் . நமக்குள்ள ஒரு உத்வேகத்தை கொடுக்கும் நாம் எடுக்க போற ரிஸ்க்கு அதனால் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுக்கு நாம மட்டும் தான் பொறுப்பு என்கிற ஒரு கருத்து ஆக்கத்தை கொடுக்க கூடிய ஒரு கட்டுரைத் தொகுப்பு. புதிய முயற்சிக்கு நிறைய பேர் கிட்ட இருந்து ஆலோசனை கேட்கலாம் ஆனா எடுக்கப்போகும் முடிவு நமதா இருக்கணும் அந்த நல்லது கெட்டதுக்கு நாமதான் பொறுப்பு அப்படின்னு சொல்லி கொடுக்கிற புத்தகம் .
கனகா பாலன்
ஓஷோவின் “ஞானத்திற்கு ஏழு படிகள் ”
பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு, கண்ணீரோடு கழிந்த காலங்களில் ,நண்பரின் பரிசளிப்பாக கிடைக்கப்பெற்றேன்.
இதற்கு முன்னதாக குமுதம், குங்குமம், விகடன் கூட எப்போதாவது வாசித்திருப்பேன் அவ்வளவே.
கிட்டத்தட்ட 425 பக்கங்களில் குட்டியாக கனத்திருக்கும் இந்த நூலினை வாசிக்க வாசிக்க,இதன் தடிமனான பொருள் எனக்கு புரிவதற்கு சிரமமாக இருந்தாலும், அந்தச் சொற்களோடு லயித்துக் கிடக்கும் சுகம், அடிக்கடி வேண்டுவதாக இருந்தது என் மனதிற்கு.
“இத்தனைக்கும் காரணம்
இன்னும் நாம் வாழ வேண்டியுள்ளது, சில கர்ம வினைகளைப் பூர்த்தி செய்யவும் ,சில கடன்களை தீர்க்க வேண்டியுமாய் இருந்தே ஆக வேண்டும் “என்ற புரிதலைத் தந்தது என்பேன்.
“அட பிறந்துட்டோம், அது எதுக்குன்னு தெரிஞ்சிட்டு போவோமே ன்னு “வாழ்வின் மீதான பிடிமானத்தைக் கொடுத்து பிடிக்கச் செய்திருக்கிறதுன்னு சொன்னால் தகும்தான்.
Thendral Sivakumar
‘நாபிக் கமலம்’ வண்ணதாசன் படைப்புகளில் நான் வாசித்த முதல் புத்தகம் 🙂 குறிப்பாக, ‘தரையோடு தரையாக’ என்ற சிறுகதை.. எழுத்தாளர் எதுவும் சொல்லாத இடங்களில் உணரக் கிடைத்த பெருஞ்சொற்கள்.. அதன் வழியாகத் திறந்த இலக்கிய வெளி.. மறக்கவே முடியாத புத்தகம்
தவிர, வாசித்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அசரவைத்த சிறுகதை சுஜாதாவின் ‘கறுப்பு குதிரைகள்’
Srinivasa Raghavan S
ஜெயகாந்தனின்
‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’.
ஊர், இனம், சாதி, பெற்றோர் என எதுவும் தெரியாத ஒரு உலகப் பொது மனிதனை அறிமுகப்படுத்திய ஜேகே அவன் மூலமாக நகரமயமாகும் ஆயத்தங்களில் இருக்கும் கிராமத்தை காட்டியிருப்பார்.
மலையின் உச்சியிலிருந்து ‘பப்…….பா’ என்று ஹென்றி கத்தும் போது திரும்ப ‘மகனே’ என்று செத்துப்போன அவனது பப்பா எதிரொலித்துக் கத்தக்கூடாதா என்ற ஏக்கத்தை நம்முள் பாய்ச்சுகிறது ஜேகேயின் எழுத்து.
ஹென்றி is a stranger to himself. ‘கண்ணா மூச்சி ரேரே’ -வின் ராகத்தை ரசிக்கும் ஹென்றியைப் போல, மாடுகளின் கழுத்து மணிச் சத்தத்தில் பியானோ இசையை உணர்கின்ற ஹென்றியைப் போல, ‘சோப்பெங்கப்பா, சோப்பெங்கப்பா’ என்று எதற்கும் கவலைப்படாதவனாக ஆடிப்பாடும் ஹென்றியைப் போல, flexible ஆக இருப்பதையே கொள்கை என்று வாழும் ஹென்றியைப் போல நாமும் இருக்க முடியாதா? என்று நம்மை ஏங்க வைக்கிறார் ஜேகே.
என்னைப் புதுப்பித்ததால் எனக்குப் பிடித்தது.
Saraswathy
யானை டாக்டர்
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு என் அணுகுமுறை நிறையவே மாறியிருக்கிறது. ‘புழுக்களைக் கவனியுங்கள். ஒரு ஏதுமறியாத குழந்தை போலத் தவழ்கிறது. அதன் வாழ்க்கையை அது வாழ்கிறது. அதைப் பார்த்து ஏன் அருவருப்படைய வேண்டும்’ என்ற ரீதியில் டாக்டரின் அறிவுரையைப் படித்தேன். இப்போதெல்லாம், எந்த உயிரினத்தின் மீதும் பேதம் காட்டுவதில்லை. காட்டைப் பற்றிய என் எண்ணமும் நிறைய மாற்றம் பெற்றிருக்கிறது.
வலியைக் கவனிக்கக் கற்றிருக்கிறேன். அதை அவதானித்து நிதானப்படுத்த ஓரளவு அறிந்திருக்கிறேன்.
கற்பதன் சிறப்பான நோக்கம் என்பதே நடத்தையில் ஏற்படும் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் தானே?
காட்டை அணுகும் ஒவ்வொருவரும் இயற்கைப் பேரனுபவம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டால், கடவுள் என்பது இயற்கைதான் என்ற அடிப்படை அறிவேனும் இருந்து விட்டால், எந்த உயிர்ச் சங்கிலியும் அழிந்து விடாமல் எவ்வளவு அழகான வாழ்வு
வரமாய்க் கிடைக்கும்?
முனைவர் மதிப்பிரியா
எனக்குள் பாதிப்பை ஏற்படுத்திய புத்தகம் திரு. நக்கீரன் எழுதிய “நீர் எழுத்து ” அத்தனை செய்திகளும் ஆய்வு நோக்கில் இருந்தது. புத்தகம் படித்து முடித்து ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்றும் ஒரு சொட்டு நீர் வீணாகினாலும் மனம் பதறுகிறது. உடனே புத்தகம் நியாபகம் வருகிறது. பலரிடம் இப்புத்தகம் பற்றியே உரையாடுகிறேன். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இப்புத்தகத்தால் பாராட்டுக்கள் பெற்றேன். என்னுள் நிறைய தாக்கங்களை உண்டாக்கிய புத்தகம் அது. மேலும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்பதும் மிகையாகாது. ஆசிரியரை ஒரு முறையேனும் சந்தித்திட வேண்டும் என்று பல வேண்டும்களை என்னுள் ஏற்படுத்தியது. இது போதும் என்று நினைக்கிறேன். வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி
Shobana Narayanan
தோட்டியின் மகன். அந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பு வரை சாதி என்பது பற்றிய பிரக்ஞையே கிடையாது. அப்படி ஒரு சாபக்கேடு இருப்பதாகவோ அதனால் பாரபட்சங்கள் உண்டாகுகிறது என்றோ யோசித்தும் பார்த்ததில்லை. சமூகத்தின் மீதான ஒட்டு மொத்த பார்வையை மாற்றிய முதல் புத்தகம் இது. அதற்கடுத்து பாமாவின் கருக்கு. இவ்விரண்டையும் படித்த பிறகு சமூகத்தில் சாதியின் இயங்கியலை மெல்ல மெல்ல அறிய முடிந்தது. நிச்சயம் எனது சமூகப்பொறுப்புணர்வை மாற்றிய புத்தகங்கள் இவை. அடுத்ததாக அதிகார வர்க்கத்தின் அட்டூயிங்களை படம்படித்து காட்டிய சோளகர் தொட்டி. ஒரு அதிகாருயாக நான் எத்தனை பொறுப்புணர்வுடன் செயல்படணும் என உணர்த்திய புத்தகம் இது.
Latha Arunachalam
என் வாழ்க்கையில் பக்கச் சார்பான என் எண்ணத்தை மாற்றிய புத்தகம் என்று இதைச் சொல்வேன். Things Fall Apart – எழுதியவர் சீனுவா அச்பே. நைஜீரியாவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அதிகம் அறியாமல், அறிந்து கொள்ள நாட்டமில்லாமல் ஒருவிதமான விலகலான, வெளிநாட்டுக் குடியேறி மனநிலையில்தான் வாழ்ந்து வந்தேன். தற்செயலாக இந்தப் புத்தகத்தை வாசித்த போது அது எனக்கு அந்த நாட்டை, அவர்கள் பாரம்பர்யத்தை, அந்த மக்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. அந்த வாசிப்பு பல தேடல்களுக்கும் ஆய்வுக்கும் என்னை இட்டுச் சென்றது. .குறிப்பாக அவர்களது இலக்கியம் வளர்ந்த வரலாறு பற்றி அறிய ஆவலாக இருந்தது. பின் காலனித்துவ சூழல் ஒரு சமூகத்தில் எந்த அளவு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை நமக்குப் புரிய வைக்கும் நூல். வளமான மொழி,கதை சொல்லும் உத்தி, கதை மாந்தர்கள், அவர்கள் உணர்வுப் போராட்டங்கள், தோல்விகள், சொந்த நாட்டிலேயே ஏற்படும் அடையாளச் சிக்கல்கள், அதிர்வுகளையும் ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும் தொன்மச் சடங்குகள் எனப் பல்வேறு கூறுகளைக் கொண்டு நாம் காணாத ஆப்பிரிக்காவை நம் கண் முன் கொண்டு வந்து காட்டும் புத்தகம்.
அந்த நாட்டின் மீது, மக்கள் மீது அன்பையும் வாஞ்சையையும் புரிதலையும் அதிகரிக்க வைத்த புத்தகமாதலால் இன்று வரை இதைக் கொண்டாடுகிறேன்.
Vidhya Suresh
சோளகர் தொட்டி- சொல்லி முடியாத அதிர்வலைகளை ஏற்படுத்திய புத்தகம். கல்லூரி நாட்களில், இப்படியொரு வாழ்வு சபிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தப்பிறகு குற்றவுணர்வில் குமைந்த நாட்களை மறக்கவே முடியாது. அறம் சார்ந்த நிறைய கேள்விகளை அந்த வயதில. மனதுள் எழுப்பிய புத்தகம்
பாவலர் வையவன்
எனக்குப் பிடித்து என்னை மாற்றியதில் தொ.பரமசிவம் அவர்களின் ‘பண்பாட்டு அசைவுகள்’ மிக்கியமானது. பகுத்தறிவு என்னும் பெயரில் எல்லாவற்றையும் மறுப்பதிலிருந்து… தமிழரின் உண்மையான பண்பாட்டு அசைவுகள் அவர்களின் சடங்குகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கிறது என்பதைப் புரியவைத்தது. அதன்பிறகுதான் எதையும் அவ்வளவு அவசரமாகத் தூக்கி எறிந்துவிடக் கூடாது என்னும் விழிப்பு ஏற்பட்டது.
அம்மு ராகவ்
ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியல. தி.ஜா வின் அனைத்து நூல்களும். ஜெமோவின் காடு,அறம்.
இனவெறி அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக எழுதப்பட்ட
எஸ்.பொ வின் மாயினி. 2009 ஈழப்போர் நடந்து கொண்டிருந்த சூழலில் வாசித்தது. அதுவரை மனதில் தர்க்கங்களாக இருந்தவற்றிற்கான விடைகளையும், நல்ல அரசியல் பார்வையையும் கொடுத்த நூல்.
சமீபத்தில் தொடர்ந்து வாசித்த மீரான் மைதீனின் நூல்கள் அனைத்தும் மனித மன உளவியலை அடிப்படையாகக் கொண்டவை. அவரின் புதினங்களை விட சிறுகதை தொகுப்புகள் அதிகம் ஈர்க்கின்றன.
அனைத்தும் நிறைய மனமாற்றத்தை கொடுத்த கதைகள்.
Saravanan K
கடவுள், ஜோசியம், ராசி இப்படி நீளும் பகுத்தறிவற்ற விசயங்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன் . காரணம் நம் வளர்ப்பு.பெற்றோர் அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்களாக இருந்தால் அவர்கள் குழந்தைகள் அந்தப் பாதையில் தான் நடை போடும்.எங்க அம்மா அவர்கள் அம்மா ,தாத்தா முன்னோர்களிடமிருந்து கற்றதை அவர்கள் வாழ்க்கையில் கடைபிடித்தார். +2 , நுழைவுத்தேர்வு இரண்டும் எழுதி விட்டு அம்மாவின் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தோம்.இரவு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள் சித்தப்பா,சித்தி ,அம்மா மூவரும்.அப்போது என் மேட்டர் வந்தது.அம்மா “எப்படியாவது பெரிய தம்பிக்கு (எங்க குடும்பத்தின் மூத்த பிள்ளை நான் )டாக்டர் சீட் கிடைக்கணும் “என்று சொல்லும் போது அருகில் படுத்திருந்த நாய் உடம்பை சிலிர்த்தது.உடனே அம்மா மிக சந்தோஷத்துடன் நாய் சிலிர்ச்சிடிச்சி நல்ல சகுனம் என்றார்.நானும் அதை நம்பி சந்தோஷப்பட்டேன்.அதன் பிறகு தினமணி கதிரில் வரும் பிறந்த நாள் பலனை கல்லூரி முடிக்கும் வரை பார்க்காத வாரம் இல்லை.ஏதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் , பரீட்சை ரிசல்ட் வந்தால் உடனே அனைத்து மதக் கடவுளுக்கும் வேண்டுதல் வைப்பேன்.இறுதி ஆண்டு பாஸ் செய்ததும் மொட்டை கூட போட்டேன்.இப்படியான காட்டுமிராண்டித் தனங்கள் என் 35 வயது வரை தொடர்ந்து கொண்டிருந்தது.வாசிப்பில் எனக்கு அலாதி ஆர்வம் உண்டு.அந்தப் பழக்கம் கூட அம்மாவிடம் இருந்து வந்தது தான்.வார நாளிதழ் ஆவி ஜுவி யை வாரம் தவறாமல் படிப்பேன்.என்னிடம் வேலை செய்த இளைஞன் அவருக்கு தெரிந்த பழைய புத்தகம் விற்கும் நபரிடமிருந்து காமராஜர் வாழ்க்கை வரலாறு புக்கை வாசித்து கொண்டிருந்தார்.நீங்க படிக்கிறீங்களா என்று கேட்டு என்னிடம் கொடுத்தார் . இப்படித் தான் வார இலக்கியத்தில் இருந்து நாவல் இலக்கியத்துக்குள் நுழைந்தேன்.ஏனோ தெரியவில்லை பெரியாரை படிக்க வேண்டும் என்று ஆசை.எங்கு வாங்குவது என்று தெரியாமல் திருச்சி பெரியார் மாளிகைக்கு போன் செய்து அய்யா புக்குகளை அனுப்புங்க என்று கேட்க அவர்கள் நீங்கள் வசிக்கும் ஊரிலேயே நமது விற்பனை நிலையம் உள்ளது என்று முகவரி கொடுத்தார்கள்.அங்கு சென்று பெரியார் புத்தகத்துடன் மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் இரண்டு பாகங்களையும் வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்தேன்.அதற்கும் முன்பே கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் 10பாகங்களையும் வாசித்திருந்தேன்.ஆனால் அ ம இ ம படித்த பிறகு தொடங்கியது இல்லை இல்லை மாறியது என் சிந்தனையின் போக்கு. .பகுத்தறிவாளனாக, நாத்திகனாக மாறினேன்.
Murugesan Akchaykumar
அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ ஒரு மஹாராஜாவின் ரயில் வண்டி”சிறுகதைகள் .இந்த புத்தகத்தில் இலங்கையில் சிறுவயதில் வாழ்ந்த வாழ்க்கை!.புலம் பெயர்ந்து வாழும் வாழ்க்கை மற்றும் ஐ. நா. பணியில் பல்வேறு கண்டங்களில் வாழ்ந்த அனுபவம் எல்லாவற்றையும் எழுதிஇருப்பார். எல்லா கதைகளையும் நகைச்சுவை அற்புதமான அவருடைய எழுத்துநடை எதிர்பாராத முடிவு என முடித்திருந்தாலும் இலங்கை வாழ்க்கை சம்பவங்களை எழுதும்போது நமக்கு தோன்றும் உணர்வு வர்ணிக்கவே முடியாது!
Jeyavalli
என் வாழ்க்கையின் திசையையே மாற்றியமைத்த ஒரு புத்தகம் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய – ‘மூன்றாம் உலகப் போர்’.அதில் ஒரு வரி ‘நெல்லுக்கு எரியும் இரசாயன உரம் நெல்லை வளர்க்கும் என்று நினைக்கிறீர்கள் ,ஆனால் மண்ணைக் கொல்லும் என்பதை மறந்துபோகிறீர்கள்’என்று.மண்ணைக் கொல்கிற இரசாயனம் மனிதனையும் கொல்கிறது என்பது பிந்தைய புரிதல்.என் பயணத்தை நீங்கள் அறிவீர்கள்.
Kalai Mani
பாலகுமாரனின் பந்தயப்புறா. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணை மிக லாவகமாக வெளியில் அழைத்து வந்திருப்பார். அதனால் குடும்பத்தில் எழும் பிரச்சினைகள் எதிர்ப்புகள் தாண்டி அவள் பக்கத்து நியாயத்தை முதலில் அப்பெண்ணை உணரவைத்த வரிகள். டீக்கடைகளில், பொது இடங்களில் எங்கும் ஆண்கள் நிறைந்திருக்க அது குறித்த உணர்வுகளற்று தான் தன் வீடு குடும்பம் புருஷன் என்று உழன்று கொண்டிருக்கும் பெண்களில் ஓரிருவராவது அத்தளைகளை மீறி எட்டிப் பார்க்கும் உணர்வு வந்திருக்கும் இந்த கதை படித்த பிறகு. எனக்கு அப்படித்தான். உலகமே ஆண்களுக்கானது என்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது சமூகம். டீக்கடையிலோ பொது இடத்திலோ பெண் ஏன் நிற்க வேண்டும், அதுவா புரட்சி என்ற வினா பொருளற்றது. வீட்டுக்கு வெளியே உலகம் பெண்களுக்கும் இருக்கிறது என்பதை பதின் வயதுகளில் உணர்த்திய எழுத்து அவருடையது. வாசிப்பு விரிய விரிய பாலகுமாரனின் எழுத்துகளை விரும்பவில்லை என்றாலும் பந்தயப்புறா என்னை பாதித்ததும் சிந்திக்கத் தூண்டியதையும் மறுக்கவியலாது
Subathra L
ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. வெறுமனே வார மாத இதழ்கள் கையில் கிடைக்கிற புத்தகங்கள் என வாசித்துக் கொண்டிருந்தவளை தீவீரமாக, புத்தகங்களைத் கேடித்தேடி தேர்ந்தெடுத்து வாசிக்க வைத்தது அது. போலவே, தனி மனித (குறிப்பாக ஒரு பெண்ணின்) வாழ்க்கையை சமூகத்தில் வைத்துப் பார்த்து யோசிக்க வைத்த அந்நாவல் அந்தப்பதின் வயதில் பெரும் கிளர்ச்சியைத் தந்தது.
Ramachandran Subramanian
பாலாவின் உடையார்.
தலைமை பொறுப்பில் உள்ளவர் கை கொள்ள வேண்டிய strategic management skills , team building & crisis management, பெண்கள் குறித்து எண்ணத்தை மாற்றியது ( எல்லா பாலா நாவல்களையும் சொல்லலாம்), தேவாரம், திருவாசகம் பற்றி படிக்க தூண்டியது..
கண்டிப்பாக இராஜராஜத்தேவர் – The CEO என்ற புத்தகத்தை எழுதுவேன்… வாத்தியாருக்கு சமர்ப்பிக்க..
Uma Ganesh
நிறைய புத்தகங்கள் வாசித்திருந்தாலும் 96 ஆம் வருடம் முதன்முதலில் ஆசிரியராக பள்ளியில் பணியாற்றும் போது சொல்லிக் கொடுத்த ராபின்சன் குரூசோ என்ற கதையின் சிறுபகுதி ,முழுக்க தையையும் படிக்கத் தூண்டியது.இப்போதும் சங்கடங்கள் கவலைகள் மிகும் போது துணை இந்தப் புத்தகம்.இன்னொரு புத்தகம் ஆப்பிரகாம் லிங்கனின் கதை *அழிவற்ற காதல்* இர்வின் வாலஸ் எழுதி “மாயாவியின்” மொழிப் பெயர்ப்பில் படித்தது.கநாசுவின் “கோதை சிரித்தாள்” ஒரு பள்ளிக்கூட ஆசையைத் தூண்டிவிட்டது.மற்றும் ப.சிங்காரம் அவர்களின் “புயலிலே ஒரு தோணி” புத்தகம் அதில் வரும் இந்த வரிகள்”மனதை இழக்காத வரையில் எதையும் இழப்பதற்கில்லை”. இந்த வரிகள் தான் இன்று வரை வாழ்வை நகர்த்துகிறது.
Thanappan Kathir
இவ்வாண்டின் முதல் புத்தகமாக வாசித்த மருத்துவர் சசித்ரா தாமோதரனின் மார்கழி உற்சவத்தைக் கூறலாம்.
மருத்துவர் தம் தொழிலை விஞ்சி எழுதிய எழுத்துகளினால் வசீகரிக்க முடிகிறதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் ஆண்டாள் என்பேன். ஆண்டாள் பாசுரத்தின் சாராம்சங்களை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் அரைப்பக்க பொருள் விளக்கத்தோடு தந்து அதன் தொடர்ச்சியாக இரண்டு பக்கம் அறிவியல், மருத்துவம், சூழலியல் சார்ந்த விளக்கம் தந்திருக்கிறார். ஆண்டாளின் காதலை விட அவரின் விசாலமான சிந்தனை மற்றும் அவரது தமிழ் நம்மை அவர் பாலும் தமிழ் பாலும் அதீத ஈர்ப்பைத்தந்துவிடுகிறது 29 பாடல்களில் உலகையே சுருக்கியவள் ஆண்டாள்..அவளே உண்மையான தமிழ்த்தெய்வம்.
சத்யா மருதாணி
சோளகர் தொட்டி
எரியும் பனிக்காடு