தானாய்ச்சுழலும் இசைத் தட்டு
2 புனிதமலர்
“சங்கீத கலா ப்ரபூர்ணா” ஜாலீ ஆப்ரஹாம் கேரளத்தைச் சேர்ந்தவர்.பி.எஸ்.சி தாவரவியல் பட்டதாரியான ஜாலீ பாடற்பதிவுப் பொறியாளராகவும் செயல்பட்டவர். பாடகர். எம்.எஸ்.விஸ்வநாதன் எழுபதுகளில் தொடர்ந்து பாடல்வாய்ப்புகளை அளித்தார். “அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே” என்ற அந்தப் படத்தின் பெயர் தாங்கிப் பாடல் ஜாலீ ஆப்ரஹாமுக்குப் பெரும் புகழை வார்த்தது. மலைராணி முந்தானை சரியச்சரிய என்று தொடங்கும் ஒரே வானம் ஒரே பூமி படத்தின் பாடலை யாரும் மறந்துவிட வாய்ப்பில்லை. லாலா லலலா லலலா என்று பெருக்கெடுக்கும் ஹம்மிங் ஜாலீ பாடியது. பாடல் முழுவதையும் வாணி ஜெயராம் பாடியிருப்பார். அந்த ஆண்டின் சூப்பர் ஹிட்களில் ஒன்றானது.
டி.ராஜேந்தர் ஒருதலை ராகம் படத்தில் மீனா ரீனா கீதா சீதா என்ற பாட்டைப் பாட வைத்தார். அந்தப் பாடல் ரேடியோ புகழாரம். பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. துரை இயக்கிய கிளிஞ்சல்கள் படத்தில் நடிகராய்த் தோன்றியிருக்கிறார். இளையராஜா இசையில் கட்டப்பஞ்சாயத்து படத்துக்காக பவதாரணியோடு சேர்ந்து ஜாலீ பாடிய ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே பாடல் இவரை மறந்தவர்களுக்கெல்லாம் ஞாபக மீட்சியை ஏற்படுத்தித் தந்தது. மாயாபஜார் 1995 படத்தில் இளையராஜா இசையில் அடடா அங்கு விளையாடும் புள்ளி மானே புள்ளி மானே என்ற பாடலில் உருகிக் கரைந்தார் ஜாலீ. வைரமுத்து எழுதி வசந்த ராஜன் என்பவர் இசையமைப்பில் வெற்றி முகம் என்றொரு படம் 1996 ஆம் வருடம் வெளியானது.விக்னேஷ் கீர்த்தனா நடித்த படமிது. இதில் ஜாலீ பெண் என்றால் பேயும் இரங்கும் (to view the song click the underlined text ) ஒரு பாடல் பாடினார். தெய்வீகக் காதல் என்று ஏதும் கிடையாது என்று முதற்சரணம் முடியும். ஜாலீயின் குரலில் அழுத்தமும் திருத்தமுமான இன்னுமோர் ஸோலோ பாடல் இது
ஜாலீயின் குரல் தெளிவானது. பிசிறே இல்லாமல் ஒலிக்கும் வகை சார்ந்தது. கம்பீரமும் மிதமான மென்மையும் பொருந்திப் போகிற எழிலான கிறக்கத்தைப் பிறப்பிக்கும் குரல் அது. மெலிதான பிரார்த்தித்தலும் முடிவெடுத்து அதனைக் கடைப்பிடிக்கக் கூடிய மனவுறுதியும் ஒருங்கே கசியும் குரல் அது. காதலின் ஏக்க காலத்துக்கான குரலாக ஜாலியின் குரலை அடையாளம் கண்டுணர முடிகிறது. தனிப்பாடல்களுக்கான குரல்வகையில் ஜாலீயுடைய குரலை இருத்தலாம். அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடிடாத போதிலும் தமிழில் குறிப்பிடத் தகுந்த மறக்கவியலாத பாடல்களை நல்கியவர் ஜாலீ. மலையாளத்தில் அவர் பேர் சொல்லி ஒலிக்கும் நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்கள் உண்டு. பக்திப் பாடல் பேழைகளில் ஜாலீக்கென்று தனியோரிடம் கேரள ஆன்மீக வானில் என்றென்றும் உண்டு.
ஷ்யாம் மாஷே இசையளிப்பில் புனித மலர் என்றொரு திரைப்படம் 1982 ஆமாண்டு வெளியானது. ஷங்கர் மற்றும் பூர்ணிமா ஜெயராம் இணைந்து தோன்றியது.இதில் ஜாலீ ஆப்ரஹாம் அற்புதமான தனிப்பாடல் ஒன்றைப் பாடினார். கேட்பவரைத் தனக்குள் இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்கிற மாயச்சுழல் அந்தப் பாடல். புலவர் புலமைப்பித்தனைப் பொருத்தமட்டிலும் பாடல் இயற்றும் துறையின் உச்சத்தில் சொல்லப்படத் தகுந்தவர். ஒரு சொல்லைக் கூட சமரசமாய் வடித்திடாத பெருங்கவி. துல்லியமும் கச்சிதமும் தமிழொழுங்கும் ததும்புகிற கவித்துவச் சாரல்களைத் தன் பாடல்களாக இயற்றியவர் புலவர். எண்ணற்ற பாடல்களுக்காகப் பாடலுள்ள வரை இசையுள்ள வரை நினைக்கப் படக் கூடிய மேதமை புலமைப்பித்தனுடையது.
அவர் இயற்றிய இந்தப் பாடல் தனிப்பாடல் உலகத்தில் தன்னிகரற்று விளங்கத் தக்கது. மேற்கத்திய மற்றும் சாஸ்திரிய இசைக்கூட்டில் பல பாடல்களை மிளிரத் தந்தவர் ஷ்யாம். அவருடைய மேதாவிலாசத்தை அழகுற எடுத்தியம்புகிற இன்னொரு நற்பாடல் இது
ஒரு பார்வை பார்த்தால் என்ன
உனக்கின்னும் கோபம் என்ன..?
கலைவண்ணம் கண்ணில் கொண்டாய்
சிலை என்று நீயே நின்றாய்
இளமை முழுதும் எழுதிய அழகே(ஒரு பார்வை)
ரவிவர்மன் இன்று இல்லை அவன் நாளில் நீயும் இல்லை
காணும் உன்னழகை எழுதிட எவன் வருவான்
காதல் உள்ளமதை என்ன என்று எவன் தருவான்
இரவில் மலரும் தாமரை மலரே(ஒரு பார்வை )
மகரந்தத் தாது கொண்டு இளம்பாவை தேகம் என்று
காமன் செய்தயெழு திரையினில் மறைகிறதே
காற்றும் என்னுடலை நெருப்பெனச்சுடுகிறதே
ரசிகன் கவிஞன் துடிப்பது சரியோ
(ஒரு பார்வை)
ஒரு சொல் கூடச் சூழலுக்குக் கூடுதலாய் ஒலிக்காத பாடல் இது. ஒரு துளி கூடப் பாடலுக்குத் தேவையற்றுத் தொனிக்காத குரல் ஜாலீஆப்ரஹாமுடையது. பெரிதும் ஒலித்திருக்க வேண்டிய பாடல். படவுலகில் எல்லா வைரங்களுக்கும் மின்னுவதற்கான முதல் ஒளித்தெறல் வாய்த்துவிடும் என்று உறுதியில்லை அல்லவா? அதனால் காலத்தின் அடியாழத்தில் சென்று உறைந்திருக்கிற மற்றோர் கானவைரம் இது. நம் மனமென்பது தானாய்ச் சுழலுகிற இசைத்தட்டு அல்லவா அப்படிச் சுழலச் செய்வதற்கான தகுதிமிகுந்த பாட்டுக்களில் ஒன்று புனித மலருக்காக ஷ்யாம் இசையில் ஜாலீ ஆப்ரஹாம் பாடிய ஒரு பார்வை பார்த்தாலென்ன (to view the song click the underlined text ) என்கிற இந்தப் பாடல். இன்றெல்லாம் கேட்கலாம்!
இசை வாழ்க