சதுப்பு நிலங்கள்
அழகிய சாரமுள்ள வெளிப்பாடுகளால்
எனது தொடர்பு எல்லையை
அறிந்து விடுகிறாய்
நானோ குருடர்கள் தடவிய யானைபோன்றே
உன்னை மனங்கொள்கிறேன்
குறிப்பான சந்தர்ப்பங்களால்
உலகை நிறைக்காதே
எனது முட்டுச் சந்தில் திரும்பி
உனை நோக்கியே வருகிறேன்
பாடபேதங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன
தோணியிலோ இருவருக்கும் இடமிருக்கிறது
நான் நீரைப் பாடினால்
நீ நிலவைப் பாடுகிறாய்
கரையை நீ பாடினால்
நான் ஆழத்தில் மூழ்குகிறேன்
சிறு துரும்புகளால் வனம் அடர்கிறது
சாலைகள் நீளட்டும்
தொலைத்ததைத் தேடும் இப்பயணத்தில்
சந்தர்ப்பம் என்பது எவ்வளவு மலிவானது
எனினும் இம்முறை உன் கைகளை
தவற விடமாட்டேன்தேவேந்திர பூபதி
வாரணாசி
காலச்சுவடு வெளியீடு
இன்று கவிஞர் தேவேந்திர பூபதியின் பிறந்த நாள். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது இந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் என நினைவு. அப்போது அவர் மதுரையில் உயர்பணியில் இருந்தார். தமிழ்நாடு ஓட்டலின் புல்வெளியில் நூல்வெளியீட்டு விழா ஒன்றில் நான் பார்வையாளனாகக் கலந்து கொண்டேன்.அதில் சிறப்பு விருந்தினர் பூபதி கவிதைகள் குறித்து எழுத்தார்வம் குறித்தெல்லாம் இயல்பாகத் தனது உரையில் பேசியவர் எழுத்துன்றது தன்னோட நிழலைத் துரத்துறாப்ல. அடையவும் முடியாது விலகவும் முடியாது அது ஒரு பித்து என்றார். அது என் மனத்தில் அப்படியே பதிந்து போனது. நான் எழுத வந்த பிறகு தேவேந்திர பூபதியைப் பல கூட்டங்களில் சந்திக்கும் போதெல்லாம் இலக்கியத்தின் மீதான உற்சாகம் குன்றாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். என்னுடைய நிகழ்வுகள் உட்படப் பல இலக்கிய நிகழ்வுகளின் மீது அவர் காட்டுகிற பரிவு கூறத்தக்க ஒன்று. காலச்சுவடு பத்திரிக்கையும் தேவேந்திர பூபதியின் கடவு அமைப்பும் தொடர்ந்து முன்னெடுத்த இலக்கிய சந்திப்புகள் முக்கியமானவை. கடவு அமைப்பின் மூலமாகத் தொடர்ந்து கலை இலக்கிய இசை தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதோடன்றி முக்கியமான சில நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். நடுக்கடல் மௌனம், அந்தர மீன்,வாரணாசி உள்ளிட்ட அவரது கவிதை நூல்களைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. பழகுவதற்கு இனியவர் அண்ணன் தேவேந்திரபூபதியைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது