நட்சத்திரங்களை எண்ணுபவன்


நட்சத்திரங்களை எண்ணுபவன்

                        குறுங்கதை


அந்த மனிதன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வான் பார்த்தபடி படுத்துக் கிடந்தான். மூச்சிரைக்க நூற்றுக்கணக்கான படிகளை ஏறி வந்த அலுப்பும் ஆத்திரமும் ஒரு புள்ளியில் குவியத் தன் கையிலிருந்த பெரிய கம்பை அவனை நோக்கி எறிந்தான் திவா. அவனுக்கு அறுபத்தைந்து வயது. மனைவி காலமாகிப் பத்து வருடங்களாகிறது. கூடவே இருந்த ஒருத்தி இல்லாமற் போன பிறகு வேறென்னவெல்லாம் இருந்து என்ன பயன். அவளை நினைக்கையில் எல்லாம் அழுகை முட்டிக்கொண்டு வரும். இருக்கும் போது உற்று நோக்காமல் உடைத்த பிறகு எண்ணியேங்குகிறான். அவளொரு பொற்குடம். போயே விட்டாள். திவாவுக்குத் தன் ஒரே மகன் ஜிஷ்ணுவோடு வசிப்பதில் எந்தச்சிக்கலும் இல்லை. பிரச்சினை ஜிஷ்ணுவின் மனைவி. அவள் மனம் ஒரு மூடிய காடு. என்ன நினைக்கிறாள் என்பதைப் புரியத் தராத முகம். கணவனோடு பேசுவதற்கொரு குரல். மகனோடு கொஞ்சுவதற்கொரு தொனி. மற்றவர்களைப் பொருத்த மட்டில் அவளொரு சாந்த ஸ்வரூபி.

என்னவோ மனைவியற்ற மனிதனாகத் தன் மருமகளின் கையால் உணவும் தேநீரும் வாங்கி உண்ணுவது ஏற்பின்றிப் போனது திவாவுக்கு. அவருடைய சகலை தான் இந்த வேலையில் சேர்த்து விட்டார். நகரின் வளர்முகப் பகுதியில் ஒரு மாபெரும் அடுக்குமாடி வீட்டுத் திட்டம். பாதி முடிந்திருந்த வேலையில் வாட்சுமேனாகச் சேர்ந்தார் திவா. தொல்லையேதும் இல்லாத வேலை. பொருட்களுக்கு என்று தனி குடோன் அதற்குத் தனியாகப் பாதுகாவலர்கள். இவர் மொத்தமாக அந்தப் பகுதியைக் காப்பவர். வேலை எதும் கடினமே இல்லை. வேளாவேளைக்கு சாப்பாடு ஒரு மெஸ்ஸிலிருந்து வந்து விடும். வேலை நடக்கும் நாட்களில் தேநீருக்குப் பஞ்சமே இராது. வேலை இல்லாத விடுப்புக் காலத்தில் அவருக்கும் சேர்த்து குடோன் செக்யூரிட்டி சந்திரன் அவ்வப்போது தேநீர் பிஸ்கட் என எதையாவது தந்துகொண்டே இருப்பார். நல்ல மாதிரி. கிட்டத் தட்டத் தன் இல்லாள் இல்லாமற்போனதை மறந்தே விட்டிருந்தார். வேலையில் மும்முரமாகி விட்ட வேறொரு திவா அவர். விஸ்தாரமான முன்மனையில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு படுத்தாரென்றால் நேரே சொர்க்கவாசல் தான். ராவெல்லாம் நட்சத்திரங்களை எண்ணியபடியே நிலவைப் பார்த்து வானம் சொல்வதைப் புரிந்துகொள்ள முயலுவார்.

அப்போது தான் அந்தப் பிரச்சினை.யாரோ ஒருவன் மாடிப் படிகளில் ஏறிப் போகிறான் என்பதாக சந்திரன் சொன்ன போதே பாதி மாடிகளைக் கடந்திருந்தான். மொட்டை மாடிக்குள் அவன் நுழையும் போது பத்தாவது மாடியைத் தான் கடக்க முடிந்தது திவாவுக்கு. எல்லாம் என் நேரம் என நொந்துகொண்டார். வேலை நடக்கும் தினம் என்றால் டெம்பரரி லிஃப்டை ஆன் செய்து அதில் ஜம்மென்று மொத்தத்திலிருக்கும் 27 மாடிகளையும் மூணே நிமிஷத்தில் ஏறிமொட்டை மாடியை அடைந்திருப்பார். இன்று விடுமுறை. அதுவும் அந்திசாயும் அகால நேரம். எவனோ ஒருத்தன் இத்தனை மாடிகளை ஏறி மொட்டை மாடிக்கு எதற்குப் போயிருக்கிறான் என்று சுத்தமாய்ப் புரியவில்லை. இன்னும் முடிவடையாத கட்டிடத்தின் மொட்டை மாடியில் என்ன தான் இருக்கப் போகிறது. தன் மீதே இரக்கம் வந்தது திவாவுக்கு. இப்போது தான் போய் என்ன செய்யப் போகிறோம் என்றும் தெரியவில்லை. குடிகாரப் பயலாக இருக்கலாம். அல்லது கஞ்சாக்காரன். நாலு சார்த்து சார்த்திக் கீழே கூட்டிப் போய்த் தொலைடா சனி என்று விரட்டினால் தான் ஆயிற்று,.தான் மட்டும் இருந்தால் கூட டேக்கா விட்டிருக்கலாம். கூடவே சந்திரன் இருக்கிறான். இது யார் வேலை என்பதில் குழப்பமே இல்லை இருவருக்குமே. மொட்டை மாடிக்கு ஒருத்தன் வந்தால் அவனை விரட்ட வேண்டியது திவா தான். அது அவருடைய ஏரியா. இதுவே குடோனுக்குள் எதாவது காணோம் என்றால் அது சந்திரனின் பொறுப்பு. எனக்குப் பதிலாக நீ 27 மாடிக்கான ஐனூற்று நாற்பது படிகளையும் ஏறிப் போய் யாரென்று பாரேன் என அவரால் எப்படிச் சொல்ல முடியும்..? உதவக் கூடியது என்றால் தானே அது உபகாரம்.

அந்த வெறுப்பில் தான் மூச்சிரைக்க மாடிகளைக் கடந்து மொட்டை மாடிக்கு வந்தவர் சுழற்றித் தன் கைக் கம்பை எறிந்தார். அந்த மனிதன் லட்சியமே செய்யவில்லை. வலக்கரத்தின் ஆட்காட்டி விரலை வான் நோக்கி இங்குமங்கும் அசைத்துக் கொண்டிருந்தானே ஒழிய திவாவை லட்சியம் செய்யவே இல்லை. அந்தக் கழி எங்கோ சுழன்று விலகிக் கீழே கிடந்தது. திவாவின் கால்கள் பின்னின. இப்போது அவர் மனத்தில் என்னவோ இனம்புரியாத அமைதி குழைந்தது. தான் எதற்காக அங்கே வந்திருக்கிறோம் என்பதேதும் புரியவில்லை.கால்கள் அப்படியே தரையோடு ஒட்டிக்கொண்டாற் போலத் தோன்றியது. திவா உறைந்து போய் நின்றுகொண்டிருந்தார்.

அந்த மனிதன் திவா வந்ததைக் கண்ணுறவேயில்லை. தொடர்ந்து தன் ஆட்காட்டி விரலை வான் நோக்கி அசைத்துக் கொண்டே இருந்தான். நீண்ட நேரம் கழித்து விரலை அசைப்பதை நிறுத்தி இரண்டு கரங்களையும் கோத்து சொடக்கிட்டபடியே துள்ளலோடு எழுந்து கொண்டான். திவாவை அப்போது தான் கவனித்தவன் லேசாய் செறுமிக் கொண்டே இந்தக் காலம் முழுவதற்குமாய் நான் தான் நட்சத்திரங்களை எண்ணுபவன் என்றான். திவா மகிழ்வோடு நெஞ்சில் கரம் வைத்து ஒரு புன் சிரிப்போடு அந்த மனிதன் தன்னைக் கடந்து போய் இரண்டிரண்டு படிகளாய்க் கீழிறங்கிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தபடி நின்றார்.